09 January 2022

பைண்டிங் பிரஸ் அனுபவம் (1972 பள்ளி விடுமுறை)

கும்பகோணம் நினைவுகளில் முக்கியமான இடத்தைப் பெறுவது பள்ளிவிடுமுறையின்போது நான் பார்த்த பைண்டிங் பிரஸ் வேலை. அந்த அனுபவத்தைக் காண 50 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வோம்.

1972. கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று விடுமுறையில் இருந்தபோது என் தாத்தா (திரு ரெத்தினசாமி) என்னை பெரிய கடை வீதியின் அருகில் உள்ள பாபுநாயக்கன் தெருவில் உள்ள, அவருடைய நண்பரின் கடையான கணேஷ் பைண்டிங் பிரஸுக்கு வேலைக்கு அனுப்பிவைத்தார். விடுமுறையை வீணாக்காமல் இருப்பதற்காகவும், நண்பர்களுடன் வெளியே சுற்றாமலிருக்கவும் இவ்வாறு செய்தார். காலை 10.00 மணி முதல் இரவு சுமார் 8.00 மணி வரை வேலை. மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்துவிடுவேன்.  

அங்கு தாள் வெட்டும் பொறி (கட்டிங் மெஷின்), கோடிடும் பொறி (ரூலிங் மெஷின்) உள்ளிட்டவை இருந்தன. அலுவலகங்களுக்கான கணக்குப்பதிவேடுகள் (அக்கவுண்ட் லெட்ஜர்ஸ்), கல்வி நிறுவனங்களுக்கான மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய நோட்டுகள் (பெரும்பாலும் சிறிய அளவிலான ஒரு குயர் நோட்டுகள்) போன்றவை தயாரிக்கப்பட்டு, நூற்கட்டு செய்யப்படும்.

தாத்தா சொல்லி நான் பிரஸில் வேலைக்குச் சேர்ந்தேன்.  அவர்களுக்கு தாத்தாமீது அளவு கடந்த மரியாதை. அதனடிப்படையில் எனக்கு வேலை இலகுவாக இருக்கும் என நான் நினைத்தேன். சேர்ந்து சில நாட்கள் எளிதான பணிகளே இருந்தன. 

பின்னர் ஒரு நாள் "தாத்தாவின் பெயரைக் காப்பாற்ற வேண்டும். கவனமாக வேலை பார்க்கவேண்டும்" என்று கூறி சிறு சிறு வேலைகளைக் கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால் அவை எனக்கு பெரிய வேலைகளாகத் தெரிந்தன.  வேலை பார்க்கும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுதல், தேநீர் வாங்குதல், பேப்பர் கடைக்குச் சென்று பேப்பரை வாங்கி வரல் போன்ற வேலைகள்.  தேநீர்க்கடையில் ஐந்து அல்லது ஆறு 'கிளாஸ்' தேநீரை  இரும்புக்கம்பியாலான 'ஸ்டான்ட்'டில் தருவார்கள். பிடியைப் பிடித்து அதனைத்  தூக்கிக்கொண்டு வரும்போது என்னவோ போல் இருக்கும். அனைவருக்கும் அதனைக் கொடுத்துவிட்டு, நானும் குடிப்பேன். அவர்கள் குடிக்கும்வரை நின்று, கிளாஸ்களை கடையில் திருப்பிக்கொடுப்பேன். என்னுடைய தினசரி வேலைகளில் ஒன்று. 

அடுத்த வேலை தாள் வெட்டல். தாள் வாங்க கரிக்காரத்தெருவில் (ஆஞ்சநேயர் கோயில் அருகில்) இருந்த ஒரு பேப்பர் கடைக்குச் செல்வேன்.பெரும்பாலும் ஒரு தடவைக்கு ஒரு ரீம் என்ற அளவில் வாங்கி அங்கிருந்து தலையில் பேப்பரைத் தூக்கிவைத்துக் கொண்டு வரவேண்டும். அவ்வாறு வரும்போது (எங்கள் ஆத்தாவின் தம்பி திரு பெரியசாமி அவர்களின்) ஷண்முக விலாஸ் மளிகைக்கடை, ஷண்முக விலாஸ் காப்பித்தூள் கடைகளைக் கடந்துவரும் சூழல் ஏற்படும். அக்கடைகளைக் கடக்கும்போது யாரும் பார்க்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக வேகமாக விடுவிடுவென நடப்பேன். இவ்வகையான வேலைகளைச் செய்யும்போது நான் ஒரு வேலைக்காரனைப் போல உணர்ந்தேன். அவ்வப்போது அவமான உணர்வு மேலிடும்.

நாளடைவில் தாள் வெட்ட உதவுதல், வெட்டும்போது வருகின்ற ஜல்லி எனப்படுகின்ற உதிரித்தாள்களை ஒதுக்கி ஓரிடத்தில் கொட்டுதல், ரூலீங் மிஷினில் மை போடல், தாள் சரியாக வெளியே வருகிறதா எனப் பார்த்தல், தவறாகவோ முழுமையான பதிவின்றியோ வரும் தாளைத் தனியாக எடுத்துவிடல், ரூல் போட்ட தாளை மடித்தல், (நம்பர் மெஷினை வைத்து) எண்ணிடல், தைத்தல், பதிவேட்டின் அட்டைக்கு வண்ணத்தாள் ஒட்டுதல்,  மூலைக் காலிகோ அல்லது முழு காலிகோ அட்டைகளுக்கு உரிய அளவில் பசை தடவித் தரல், நூற்கட்டு வேலைகள், நோட்டின் முதுகிலும் பிற பக்கங்களிலும் வண்ணத்தில் தோய்த்த நூலைக்கொண்டு டிசைன் போடுதல் என பட்டியல் நீளும்.    

அடுத்து, பைண்டிங் தொடர்பான வேலைகளில்  உதவுதல் என்ற நிலையில் அமைந்தது.   கட்டிங் மிஷினில் பெரிய அளவு தாளினை அடுக்கிவைத்து, தேவையான அளவிற்கு வெட்டுவர். ஒருவர் கீழே நின்று தாளை அளவு பார்த்து வைத்து, கைப்பிடியைச் சுற்றுவார். மற்றொருவர் தாளின் அழுத்தம் உறுதியாக இருக்க மேலே நின்றுகொண்டு ஒருவர் உருண்டையாக இருக்கின்ற அழுத்தம் தருகின்ற பகுதி மூலமாக மேலே நின்று அழுத்துவார். அதனைச் சுற்றச்சுற்ற தாள் இறுக ஆரம்பிக்கும்.  பின்னர் வலதுபுறத்தில் இருக்கின்ற கைப்பிடியோடு கூடிய உருண்டை வடிவப் பகுதியைச் சுற்றினால் பிளேடு கீழே இறங்கி தாளை வெட்டும். அவ்வாறு சுற்றும்போது மிகவும் வேகமாகவும் கவனமாகவும் சுற்றவேண்டும். அப்போதுதான் பிளேடு இறங்கி  தாளை வெட்டிவிட்டு திரும்பி ஏற வசதியாக இருக்கும்.  மேலே நின்று சுற்றும் வேலையையும், சில சமயங்களில் கீழே நின்று சுற்றும் வேலையையும் நான் செய்துள்ளேன்.  பிளேடு நம் பக்கம் வந்து காலை வெட்டிவிடுமோ என்று ஏறி நிற்க பயந்தேன். கவனக்குறைவால் திட்டு வாங்கியுள்ளேன். கீழிருந்து கைப்பிடியைச் சுற்றும்போதும், மேலிருந்து அழுத்தும்போதும் சில சமயங்களில் நெஞ்சு வலிக்கும். பின்னர் பழகிப்போனது.  

புகைப்படம் நன்றி: ஜான் செபஸ்டியன்

ரூலிங் மிஷின் சற்றே வித்தியாசமானது. அது சற்றொப்ப தறிபோடுவதைப் போலக் காணப்படும். இப்போது இது அருகிவிட்டது. சிறிய வடிவிலான பெட்டி போன்ற அமைப்பில் வண்ண மையை ஊற்றுவர். அதனை அடுத்துள்ள வளைவு போன்ற அமைப்பின் மூலமாக மை வெளிவந்து தாளில் கோடாக விழும். ஒரே சமயத்தில் பல வண்ணங்களில் கோடிட முடியும். அவ்வாறு செய்யும்போது ஒரு முறை வட்ட வடிவ, மை வரும் இடத்தில் கையைவிட்டு விரலில் ரத்தம் வந்துவிட்டது. பின்னர் என்னை எச்சரித்து கவனமாக இருக்கும்படி கூறினர். அதனையும் கற்றுக்கொண்டேன். பள்ளி மாணவர்களுக்கான ஒரு குயர் கணக்கு நோட்டு, வியாச (கட்டுரை) நோட்டு, இரண்டு கோடு மற்றும் நான்கு கோடு காப்பி நோட்டு அனைத்தும் அங்கு கோடிடப்பட்டு நூற்கட்டு (பைண்டிங்)  செய்யப்படுவதைப் பார்த்துள்ளேன்.  

அங்கு வேலை பார்த்த காலத்தில்தான் முதன்முதலாக தாளை வீணாக்கக்கூடாது என்பதை உணர்ந்தேன். தாளைத் தட்டி அடுக்குதல், எண்ணுதல், குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்கங்களை ஒன்று சேர்த்தல்,  மடித்தல், தலைப்பு மாற்றி அடுக்குதல், மேலட்டை மற்றும் காலிகோவிற்காக (பசை தடவி) ஊறப்போடுதல் உள்ளிட்ட பல வேலைகளைக் கற்றுக்கொண்டேன். டீ வாங்கப்போவது, தாளைத் தலையில் தூக்கிகொண்டுவருவது, ஜல்லிகளை (வெட்டப்பட்ட தாள்களின் துண்டுகள்) விளக்குமாற்றால் கூட்டி ஒதுக்குவது போன்ற வேலைகளைச் செய்தேன். ஆரம்பத்தில் இவ்வேலைகளைச் செய்ய கௌரவம் பார்த்த நான் நாளடைவில் பார்க்கும் வேலையில்  கௌரவக்குறைவு இல்லை, நேர்மையும் ஈடுபாடும் முக்கியம் என்பதை உணர்ந்தேன். 

கிட்டத்தட்ட ஒரு மாதம் அங்கு பணியாற்றினேன். எவ்வித ஊதியமும் பெறவில்லை. ஆனால் பல வேலைகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றேன். 

திம்மி 1க்கு 8 அளவினைவிட சற்றுச் சிறிய அளவில் (கிட்டத்தட்ட சுருக்கெழுத்து நோட்டைப் போன்ற) ஒரு சிறிய நோட்டை நானே நூற்கட்டு செய்யும் அனுபவத்தைப் பெற்றேன். அதனைத் தயாரிக்க எனக்கு மூன்று நாள்களாயின. ஒவ்வொரு நாளும் மதியத்தில் அனைவரும் சாப்பிடச் சென்றபின் நானே யாருடைய துணையுமின்றி தாளை எடுத்து கட்டிங் மிஷினில் வெட்டி, அட்டையையும் உரிய அளவு வெட்டி வடிவமாக்கி பின்னர் தைத்து, முதுகுப்பகுதியில் காலிகோ ஒட்டி முன் அட்டையிலும், பின் அட்டையிலும் வண்ணத்தாளையும் ஒட்டி உருவாக்கினேன். என் பெருமையைக் கூறுவதாக நினைத்து ஒருவரிடம் அதனைக் காண்பிக்க, அவர் அதனை எடுத்து அனைவரிடமும் காட்டிவிட்டார். பின்னர் நான் "யாரும் இல்லாதபோது இவ்வாறாக தனியாகச் செய்யக்கூடாது" என்று எச்சரித்தனர். அதே சமயம் அவ்வாறாக நான் செய்ததை எண்ணி என்னைப் பாராட்டினர்.

அறிஞர் அண்ணா அரசினர் பள்ளியில் சேர்வதற்காக அனைவரிடமும் நன்றிகூறிக் கிளம்பியபோது அனைவரும் என் பணியைப் பாராட்டினர். நன்றாகப் படிக்கவேண்டும் என்று வாழ்த்தி அனுப்பினர். இவ்வகையில் என்னுடைய எட்டாம் வகுப்பின் விடுமுறை நாட்கள் கழிந்தன.

இப்போது பைண்டிங் பிரஸ், தாள் வாங்கச் சென்ற கடை, சண்முக விலாஸ் கடை, தேநீர்க்கடை எதுவுமே இல்லை....ஆனால் நினைவுகள் மட்டும் தொடர்கின்றன.

19 comments:

  1. மிக அருமையான பதிவு அன்பு முனைவர் ஐயா.

    ReplyDelete
  2. சிறுவயது நினைவுகளை சொன்ன விதம் மிகவும் அருமை.

    ReplyDelete
  3. உங்களின் அனுபவங்கள் படிக்கப் படிக்க இனிமையாக இருந்தன! நானும் ஒரு காலத்தில் கற்றுக்கொள்ள ஆசைப்பட்ட தொழில்!அப்போதெல்லாம் பெரியவர்கள் எப்படியெல்லாம் யோசித்து நல்ல நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுக்க முனைந்திருக்கிறார்கள்! உண்மையில் அவர்களுக்குத்தான் இந்த பெருமை போய் சேர வேண்டும்!

    ReplyDelete
  4. பதிவு முழுவதும் கொடுத்திருக்கும் விவரங்கள்.
    உண்மையிலேயே ப்ரஸ்ஸில் நிற்பது போன்ற உணர்வைக் கொடுத்தது. நன்றி.

    ReplyDelete
  5. உங்கள் தாத்தா போன்ற பெரியவர்கள் இப்போதைய குடும்ப அமைப்பில் குறைவு. அப்படியே இருந்தாலும் பேருங்க அவர்கள் வார்த்தைகளை எந்த அளவு கேட்பார்களோ... இனிமையான, சுவாரஸ்யமான, உபயோகமான அனுபவம்..

    ReplyDelete
    Replies
    1. //அப்படியே இருந்தாலும் பேருங்க அவர்கள் வார்த்தைகளை//

      * பேரன்கள்

      Delete
  6. அனுபவ செயல்கள் சிறப்பு ஐயா...

    ReplyDelete
  7. உங்கள் அருமையான அனுபவம் எவ்வளவு பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கின்றது.! தாத்தாக்கள் வழிநடத்திய காலம் போயே போச்சு!

    கீதா

    ReplyDelete
  8. வணக்கம் சகோதரரே

    உங்கள் அனுபவ பதிவை நினைவாக கோர்த்து தந்தமைக்கு மிக்க நன்றி. உங்கள் பள்ளி விடுமுறை வீணாகாமல் உபயோகமான பயனுள்ள பைண்டிங் தொழில் சம்பந்தபட்ட வேலைக்கு அனுப்பிய உங்கள் தாத்தாவின் நல்ல செயல் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  9. உங்களின் அனுபவம் மிகவும் ரசிக்கவைத்தது. கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் என்று நினைத்த உங்கள் தாத்தாவைப் பாராட்ட வார்த்தையில்லை. பசங்களுக்கு உரிய கூச்ச உணர்வையும் எழுத்தில் நன்றாக வடித்திருக்கிறீர்கள்

    ReplyDelete
  10. இப்படி பத்தாம் வகுப்பு விடுமுறையை கழிக்க அச்சு கோர்க்கும் பணியில் என்னை சேர்த்து விட்டார் என் தாய்மாமன்... பின்னாளில் அத்தொழிலே எங்கள் வாழ்க்கையின் அத்திவாரமாக மாறிப்போனது....

    கிட்டத்தட்ட 25 வருடங்கள் என்னை பக்குவப்படுத்தி அனுப்பி வைத்தது அச்சு தொழில்....

    1995-2012 வரை அதிகம் இல்லை என்றாலும் எனக்கும் என் குடும்பத்திற்கும் சோறு போட்ட தொழிலாக இருந்தது...

    MA,(His), M.A.,(political science) B.Ed., M.Phil. M.Com, படிக்கவும், கவிதை கதைகள் எழுத களமாகவும், இரண்டு கவிதை நூல்கள் வெளியிட களமாகவும் அமைந்தது. பணத்தை தவிர அனைத்தையும் சேர்த்தேன்...

    தற்போது அரசு ஆசிரியர் பணி....

    நினைவுகள் என்னுள்ளும் மலர்ந்தது

    ReplyDelete
  11. இன்று உங்கள் எழுத்து The Hindu news paper ல் வெளிவருகிறது. இதுவே உயர்ந்த சாதனை.

    ReplyDelete
  12. இனிமையான நினைவுகள். பேப்பர் கட்டிங் மெஷின் நானும் பயன்படுத்தி இருக்கிறேன். பள்ளிநாட்களில் நோட்டு புத்தகங்களுக்கு அட்டை போடுவது, பைண்டிங் செய்வது, அதிலும் குறிப்பாக செக்ஷன் பைண்டிங் எனும் நோட்டு புத்தக பைண்டிங் வேலையும் செய்திருக்கிறேன். வீட்டுக்கு எதிரே இருந்த கடையில் கற்றுக்கொண்டு அங்கேயே இந்த வேலைகளை ஊதியம் எதுவும் இன்றி செய்ததுண்டு. உங்கள் பதிவு அந்த நினைவுகளை மீட்டெடுக்க உதவியது.

    ReplyDelete
  13. அழகாக நினைவுகளை பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள் ஐயா.
    அப்புறம் கட்டுரையின் கடைசி 4-5 வரிகளை கனத்த மனதுடன் தான் எழுதி இருப்பீர்கள் என்று நம்புகிறேன்

    ReplyDelete
  14. அருமையான அனுபவங்களை அழகாக எழுதியுள்ளீர்கள்.. எனக்கு பள்ளிப்பருவத்தில் விடுமுறை
    காலங்களில் இம்மாதிரி பைண்டிங் பிரஸ் வேலை பார்த்த அனுபவம் உண்டு..சனிக் கிழமை இரவு சம்பளம் கைக்குக் கிடைக்கும்போது என்னவோ பெரிதாக சாதித்து சம்பாதித்த அனுபவம் கிடைக்கும். கொஞ்ச பணத்தை என் செலவுக்கு வைத்துக்கொண்டு மீதிப் பணத்தை அம்மாவிடம் தந்துவிடுவேன்.. அந்த அனுபவங்கள் உங்கள் பதிவைப் படிக்கும்போது வந்து போயின..

    பாராட்டுக்கள் நண்பரே..

    ReplyDelete
  15. பைண்டிங் பிரஸ் அனுபவம் (1972 பள்ளி விடுமுறை) - இவ்வகையான வேலைகளைச் செய்யும்போது நான் ஒரு வேலைக்காரனைப் போல உணர்ந்தேன். அவ்வப்போது அவமான உணர்வு மேலிடும். - ஆரம்பத்தில் இவ்வேலைகளைச் செய்ய கௌரவம் பார்த்த நான் நாளடைவில் பார்க்கும் வேலையில் கௌரவக்குறைவு இல்லை, நேர்மையும் ஈடுபாடும் முக்கியம் என்பதை உணர்ந்தேன். - அற்புதம். எங்கள் அப்பா சிறு வயதில் கற்ற பைண்டிங் வேலை. அவரது இறுதி நாள் வரை வீட்டிலிருந்தே செய்து வந்தார். - எந்த வேலையும் கௌரவக்குறைச்சல் இல்லை. - அற்புதமான கட்டுரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். மகிழ்ச்சி சார் முனைவர் ஜம்புலிங்கம்

    ReplyDelete
  16. உங்கள் பைண்டிங்க் ப்ரெஸ் அனுபவம் ரசனையாக இருக்கிறது. உங்களுக்கு நிறைய கற்றும் கொடுத்திருக்கிறது அந்த அனுவம். குறிப்பாகக் கூச்ச சுபாவத்தை மாற்றியிருப்பது. எந்த வேலையும் கௌரவம் குறைந்தது அல்ல என்பது. உங்கள் தாத்தா உங்களை அனுப்பி வைத்தது மிகவும் சிறப்பிற்குரியது. நல்ல பதிவு ஐயா.

    துளசிதரன்

    ReplyDelete
  17. அருமையான அனுபவம்....நீங்கள் ஒரு மாதம் செய்த வேலைக்கு கிடைத்த ஊதியமே இந்த நல்ல அனுபவங்கள்தானே

    ReplyDelete
  18. பழைய நினைவுகளை பகிரும்போதும் அவற்றை வாசிக்கும்போதும் ஏற்படுகின்ற மகிழ்ச்சி அலாதிதான்.
    ஆறாம் வகுப்பு கோடை விடுமுறையின்போது அருகிலுள்ள இங்க் (ink) தொழிற்சாலைக்கு என் பெரியப்பா மகனுடன் சென்றிருந்தேன், அப்போது எனக்கு வயசு பத்தாது ரொம்ப "பச்ச"புள்ள என கூறி என்னை நிராகரித்து விட்டனர். அந்த நினைவை தங்கள் பதிவு வெளிக்கொணர்ந்தது.
    ஆரம்பம் அச்சுவேலை என்பதால்தான் என்னமோ பின்னர் அந்த அச்சுகளுக்கு வேலை கொடுக்கும் எழுத்துப்பணியை மேற்கொண்டீர்களோ?
    ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள்.

    ReplyDelete