20 January 2022

மிளகாய் மண்டி அனுபவம் (1975 பள்ளி விடுமுறை)

1975. கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு உயர்நிலைப் பள்ளியில் (தற்போது அறிஞர் அண்ணா  அரசு மேல்நிலைப்பள்ளி என்றழைக்கப்படுகிறது) படிப்பு நிறைவுற்ற பின்னர் எனக்குக் கல்லூரியில் சென்று படிக்கவேண்டும் என்று ஆசை. 

புகைப்படம் 2017இல் பள்ளிக்குச் சென்றபோது எடுத்தது 

கல்லூரிக்குச் சென்றால் வீணாகிவிடுவான் என்று கூறி சேர்க்கப் பயந்தனர். எப்படியும் தேர்ச்சி பெற்றுவிடுவோம், கல்லூரிக்குச் செல்வோம் என்ற கனவுகளில் நாள்கள் கழிந்தன.

இருளப்பன் மிளகாய் மண்டி 

எங்கள் தாத்தா பெரிய கடை வீதியில் அவர் கணக்கப்பிள்ளையாக வேலை பார்த்து வந்த ஷண்முக விலாஸ் மளிகைக்கடைக்கு அருகில் இருந்த அவருடைய நண்பரின் கடையான இருளப்பன் மிளகாய் மண்டியில் சேர்த்துவிட்டார்.  

எங்கள் வீடு இருந்த கே.ஜி.கே.தெருவிலிருந்து மேட்டுத்தெரு,  (சர்.சி.பி.ராமஸ்வாமி ஐயர் துவக்கப்பள்ளியைக் கடந்து), திருமஞ்சன வீதியில் நான் ஐந்தாவது வரை படித்த பள்ளி, கலியுக கிருஷ்ணன் கோயில், பாட்ராச்சாரியார் தெரு வழியாகச் சென்றால் பெரிய கடை வீதி வரும். இடது புறத்தில் முதலில் லோகநாதன் மிளகாய் மண்டியும், அடுத்து இருளப்பன் மிளகாய் மண்டியும் அடுத்தடுத்து இருக்கும். தினமும் நான் கடைக்கு இவ்வழியாகச் செல்வேன்.   

கடையின் முதலாளியை அனைவரும் அண்ணாச்சி என்பர். சேர்ந்த புதிதில் அவரை அவ்வாறு அழைக்க சிரமப்பட்டேன். அக்கடையில்  பணியாற்றிய என் சித்தப்பா அங்கு செய்யவேண்டிய வேலைகளைக் கூறினார். 

மிளகாய் மூட்டைகள் கிட்டத்தட்ட இரண்டு ஆள் உயரத்திற்கு அடுக்கிவைக்கப்பட்டிருக்கும். வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கேட்கும் அளவிலும், தரத்திற்கேற்பவும் மிளகாயை மூட்டையாக எடை போட்டுத் தருவதற்குத் துணைபுரிவது, மூட்டைகளில் பெயர் எழுதுவது, லாரியில் ஏற்றப்படும்போது உரியவர்களுக்கு உரிய மூட்டைகள் செல்கிறதா எனக் கண்காணித்தல் போன்றவை என் வேலைகள். 

என் பணியிடம் பெரும்பாலும் எடை போடும் கருவியான தராசின்  அருகில்தான். தராசின் இரு புறமும் மேலிருந்து தொங்குகின்ற நான்கு இரும்புச் சங்கிலிகளால் சதுர வடிவிலான தட்டுகள் கீழே பிணைக்கப்பட்டிருக்கும். நடுவில் முள் இருக்கும். கிட்டத்தட்ட ஆறு அடிக்கு மேல் உயரமுள்ள இதைப்போன்ற தராசைக் கும்பகோணத்தில் எங்கள் வீட்டிற்கு எதிரில் இருந்த விறகுக்கடையில் எடை போடுவதற்காகப் பயன்படுத்தும்போது பார்த்துள்ளேன். இதனை இப்போது காண்பது அரிதாக உள்ளது. கோயில்களில் தற்போது துலாபாரக் காணிக்கைக்காக இதுபோன்ற தராசினை கோயில்களில்  பயன்படுத்துகின்றனர். 

சில சமயங்களில் உயரத்தில் இருக்கும் மூட்டையைக் கீழே இறக்க உதவ வேண்டும். சேர்ந்த சில நாள்கள் மிளகாய் நெடி தாங்க முடியாமல் தவித்தேன். நாளடைவில் பழகிப்போனது. மூட்டையை அங்கு மூடை என்றார்கள். எடை போடும்போது கவனமாக இருக்கவேண்டும்.  வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப மூட்டைகள் போடப்படும். அதில் வாடிக்கையாளரின் பெயரையும், ஊரையும் மையால் எழுதுவது என் வேலை.  முதலில் எழுத சிரமப்பட்டேன். பின்னர் எவ்வளவு மூட்டையானாலும் அனாயாசமாக எழுத ஆரம்பித்தேன். ஒன்றுக்கு மேல் மூட்டை இருந்தால் (உதாரணமாக ஐந்து மூட்டைகள் இருந்தால் 1/5, 2/5, 3/5, 4/5, 5/5) அதனைக் குறிக்கும் வகையில் மூட்டையில் எழுத வேண்டும். இந்த ஒரு உத்தியை அங்குதான் கற்றுக்கொண்டேன். 

ஒரு முறை முதலாளி இல்லாத நேரத்தில் அவருடைய இருக்கையில் அமர்ந்துவிட்டேன். எதிர்க்கடையிலிருந்து பார்த்த ஒருவர் அதனை முதலாளியிடம் சொல்லிவிட்டார். அதனையறிந்த முதலாளி என்னிடம் "இவ்வாறாக நீ நடந்துகொள்ளக்கூடாது. கஷ்டப்பட்டு உழைத்து அவ்விடத்திற்கு வர  நன்கு உழைக்க வேண்டும்." என்று புத்திமதி கூறினார்.  

காலை 11.00 மணி வாக்கில் முதலாளி வீட்டிற்குச் சென்று ஆரஞ்சு ஜுஸை (ஒரு லிட்டர் அளவுள்ள கண்ணாடி பாட்டிலில்)  வாங்கி வருவதும், அவ்வப்போது மளிகைப்பொருள்கள்  வாங்கி வீட்டில் கொண்டுபோய் கொடுப்பதும் என் வேலை. ஒரு சமயம் இரண்டு கிலோ ஜீனியை துணிப்பையில் வாங்கி மிதிவண்டியின் முன்புறம் தொங்கவிட்டு வரும்போது பையின் காது அறுந்து ஜீனி அனைத்தும் கொட்டிவிட்டது. அதை அப்படியே அள்ளி மறுபடியும் பையில் சுற்றி பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டு வீட்டில் சென்று கொடுத்துவிட்டேன். ஏதும் சொல்லாமல் கடைக்குத் திரும்பிவிட்டேன். மறுநாள் வீட்டிற்குப் போகும்போது முதலாளியம்மாள் என்னிடம் "ஜீனி மண்ணாக இருந்ததே?" என்று கேட்க டந்ததைச் சொன்னேன். "நேற்றே நீ சொல்லியிருக்கலாமே? இவ்வாறு நடப்பது இயல்புதான். எதையும் மறைக்கக்கூடாது. அது ஒரு வகையில் ஏமாற்றுவதுதானே?" என்றார்களே தவிர என்னிடம் கோபப்படவில்லை. திட்டவும் இல்லை. முதலாளிக்கு அது பற்றித் தெரிந்தபோதும் அவரும் ஒன்றும் சொல்லவில்லை. அடுத்தடுத்து வேலை செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க ஆரம்பித்தேன்.

அதே ஆண்டில் தட்டச்சு, இந்தி கற்றல்

அப்போது காலை நேரத்தில் இந்தி வகுப்புக்கும், தட்டச்சுக்கும் சென்றுவந்தேன். வாடிக்கையாளர் வராத நிலையிலோ, வேலை இல்லாமல் இருக்கும்போதோ இந்தி எழுத்துகளையும், தட்டச்சுப் பயிற்சிக்கான எழுத்துக்களையும் குறித்து வைத்துப்பார்ப்பேன். எழுதிய  தாள்களை மூட்டைகளின் இடுக்கில் யாருக்கும் தெரியாதவாறு ஒளித்துவைத்திருப்பேன். மூட்டைகளைப் புரட்டும்போது  முதலாளி ஒரு முறை அதனைப் பார்த்துவிட்டார். இவ்வாறு படிப்பதில் தவறில்லை. இருந்தாலும் வேலை நேரத்திலோ, யாரும் வரும்போதோ இவ்வாறு செய்யக்கூடாது என்றார். பின்னர் அவர் கூறியபடியே செய்ய ஆரம்பித்தேன். 

வேலை வாய்ப்பகம்

முதலாளியும், அவரது குடும்பத்தாரும் என்னை நன்றாக நடத்தினர். இருந்தாலும் என் நினைவு கல்லூரிப்பக்கமே இருந்தது. சுமார் மூன்று மாதங்கள் அங்கு வேலை பார்த்தேன். வேலை முடிந்து வெளியே வரும்போது ரூ.100 கொடுத்தார். அதனை வைத்துக்கொண்டு தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பகத்தில் என் பெயரைப் பதிவு (பதிவெண்.4937/75) செய்தேன், வேலை தேடலின் ஒரு பகுதியாக. தொடர்ந்து அதனைப் புதுப்பித்துக் கொண்டிருந்தேன். 

திடீரென்று ஒரு நாள் என் நண்பர்கள் என்னிடம் வந்து அந்த ஆண்டு சிறப்பாக மறுபடியும் புகுமுக வகுப்புக்கான சேர்க்கை கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் நடைபெறுவதாகவும், சான்றிதழ்களுடன் வந்தால் உடனே சேர்ந்துகொள்ளலாம் என்றும் கூறினர். வீட்டில் தாத்தா உள்ளிட்டோர் நான் கல்லூரியில் சேர மறுப்பு தெரிவித்தபோது, எனக்காகப் பரிந்து பேசி என் விருப்பத்தைப் பூர்த்தி செய்தவர் என் அத்தை இந்திரா. கல்லூரியில் சேர்ந்த நாள் அனுபவத்தைப் பிறிதொரு பதிவில் காண்போம்.

13 comments:

 1. தங்களது இளவயது நினைவலைகள் சுவாரஸ்யமாக செல்கிறது தொடர்ந்து வருகிறேன்...

  ReplyDelete
 2. அனுபவம் மிகவும் சுவாரசியம்.

  உங்கள் வீட்டுப் பெரியவர்கள், முனைவர் பட்டம் பெறுவான் என நினைத்திருக்கவே மாட்டார்கள். வாழ்க்கைதீன் எப்படி உங்களை வளர்த்தெடுத்திருக்கிறது.

  ReplyDelete
 3. பொழுதை வீணாக்காமல் பயனுள்ள முறையில் எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள் உங்கள் பெரியவர்கள்.

  ReplyDelete
 4. அருமை ஐயா. நல்ல அனுபவங்கள். உங்களின் அத்தை வாழ்க. அவரால் இன்று நீங்கள் முனைவர் பட்டம் பெற்று சிறப்பாக இருப்பத்து எத்தனை பெரிய விஷயம்! பெரியவர்கள் அன்று கல்லூரிக்கு அனுப்புவதை விரும்பவில்லை என்றாலும் வாழ்க்கைப் பாடத்தை நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

  எனக்கும் என் சிறு வயது நினைவுகள் நிறைய வந்தன.

  கீதா

  ReplyDelete
 5. நல்ல அனுபவங்கள். பெரியவர்களின் அறிவுறுத்தல்கள் வீணாகாது. ஏதேனும் ஒருவகையில் அவை நமக்கு அவை நன்மை பயக்கும்

  துளசிதரன்

  ReplyDelete
 6. வேலை, இந்தி கற்றல், தட்டச்சு என ஒரு விநாடி கூட வீணாக்காமல் இருந்துள்ளதை படிக்கும் போது உங்கள் மீதான மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது.

  ReplyDelete
 7. மிளகாய் மண்டி அனுபவம் (1975 பள்ளி விடுமுறை) - அருமை. பால்ய கால பணி அனுப்வங்கள். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் முனைவர் ஜம்புலிங்கம்

  ReplyDelete
 8. இனிமையான நினைவுகள் நண்பா, நன்றி பகிர்வுக்கு, உனக்கு ஞாபகம் இருக்கா என்று தெரியவில்லை, நானும் ரங்கராஜன் மளிகை கடையில் சில காலம் வேலை பார்த்த அனுபவம் இன்றும் மனதில் நிழலாடுகிறது

  ReplyDelete
 9. இளமைக்கால அனுபவங்கள் அருமை

  ReplyDelete
 10. உங்களது இளமை கால அனுபவங்கள் படிக்க சுவாரஸ்யம். இத்தனை அனுபவங்களைக் கடந்து முனைவர் பட்டம் பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. 1. ஒன்றுக்கு மேல் மூட்டை இருந்தால் (உதாரணமாக ஐந்து மூட்டைகள் இருந்தால் 1/5, 2/5, 3/5, 4/5, 5/5) அதனைக் குறிக்கும் வகையில் மூட்டையில் எழுத வேண்டும்.
  2. "கஷ்டப்பட்டு உழைத்து அவ்விடத்திற்கு வர நன்கு உழைக்க வேண்டும்."

  3. "நேற்றே நீ சொல்லியிருக்கலாமே? இவ்வாறு நடப்பது இயல்புதான். எதையும் மறைக்கக்கூடாது. அது ஒரு வகையில் ஏமாற்றுவதுதானே?"

  இதுபோன்ற பாடங்கள் அடிமனதில் தளமிட்டதினால் தங்கள் தரத்தின் தளங்கள் உயர்ந்த சிகரமாய் திகழ்கின்றது.
  சுவாரசியமான பாலபாடங்கள். அருமை ஐயா.

  ReplyDelete
 12. படிப்பதில் ஆர்வத்துடன் இருந்தது, மிளகாய்மண்டி அனுபவம், அத்தையால் கல்லூரி சேர்ந்தது- அதனால் அருமையான முனைவர் உருவாகி அவரால் நாங்கள் பல தகவல்களை அறிவது, அருமை. பகிர்விற்கு நன்றி ஐயா

  ReplyDelete