23 December 2022

சமர்ப்பணம் : இந்திரா அத்தை

"எப்படியும் வாழலாம்னு இருக்கு. இப்படித்தான் வாழலாம்னு இருக்கு. இவன் இப்படித்தான் வாழணும்னு இருக்கான். வாழ்க்கைல எப்படி பொழைக்கப்போறானோ?" என்று என் அத்தை திருமதி இந்திரா (அப்பாவின் தங்கை) என்னைப்பற்றி அடிக்கடிக் கூறிய வார்த்தைகள் என்னை பள்ளிக்காலம் முதல் பக்குவப்படுத்தியதோடு மன உறுதியையும், நம்பிக்கையையும் தந்துவரும் வார்த்தைகளாகும். என் பெற்றோரும் என்னை வளர்த்த என் தாத்தாவும், ஆத்தாவும் என் மீது அன்பு காட்டியபோதிலும் அத்தை வைத்திருந்த பாசமானது சற்றே அதீதமானது.

    பல வருடங்கள் அத்தை குழந்தையின்றி இருந்ததால் தன் அண்ணனின் குழந்தைகளான எங்கள்மீது இயல்பாகப் பற்று ஏற்பட்டது. குழந்தை வேண்டி வேண்டுதல்களை மேற்கொண்டபோது அவருடன் சக்கரபாணி கோயிலுக்கும், வடக்குத்தெரு நந்தவனத்து மாரியம்மன் கோயிலுக்கும் பல முறை சென்றுள்ளேன். கோயிலுக்குச் செல்வதற்காக என்னை அழைக்க வரும்போது "பெரியவனே...." என்று வாசலிலிருந்து அழைப்பார். அடுத்த சில நொடிகளில் அவருடன் கோயிலுக்குக் கிளம்பிவிடுவேன். கோயிலுக்குச் செல்லும்போதும், பிரகாரத்தைச் சுற்றிவரும்போதும் புத்திமதி கூறுவதும் உண்டு. அவருடைய பிரார்த்தனைக்கு விடை கிடைத்தது. அத்தைக்கு மகள் பிறந்த (1972) பின்னர்கூட என்மீது காட்டிய  அன்பு குறையவில்லை.

    1960களின் நிறைவு முதல் 1970களின் நிறைவு வரை அவர் என்மீது அதிக தாக்கத்தை உண்டாக்கியிருந்தார். கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஒரு அவுன்ஸ் அளவு இங்க் பிடிக்கும் அளவிலான பெரிய இங்க் பேனாவை வாங்கித் தந்தது, எட்டாம் வகுப்புத் தேர்வு ஈ.எஸ்.எல்.சி. தேர்வின்போது ஆங்கில அகர வரிசையான, ஏ முதல் இசட் வரையுள்ள எழுத்துக்களைப் பதிந்த இங்க் கண்ணாடிப் பேனாவை வாங்கித் தந்தது, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றதும் வீட்டிலுள்ள பலர் நான் கல்லூரியில் சேரக்கூடாது, சேர்ந்தால் கெட்டுவிடுவேன் என்று கூறியபோது எனக்கு பக்கபலமாக இருந்தது, இடைவெளிக் காலத்தில் மிளகாய் மண்டிக்கு வேலைக்குப் போன போது முதன்முதலாக எனக்கு வேஷ்டி எடுத்துத் தந்தது, கல்லூரிக்காலத்தில் தட்டச்சுக் கற்றுக்கொள்ள மாதாமாதம் பணமும், பின்னர் தேர்வுகளுக்குப் பணமும் கட்டியது...இவ்வாறாக சொல்லிக்கொண்டே போகலாம். என் வயதையொத்தவர்களை ஒப்புநோக்கி என்னைப்பற்றிப் பெருமையாகப் பேசும்போது அவருடைய சொற்களைக் காப்பாற்றவேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தேன்.           

    மாமா இறந்தபின்னர் தன் மாமியார் வீட்டிலிருந்து அத்தையும், அத்தை மகளும் எங்கள் வீட்டிற்கு வந்தனர். அவருடைய பெற்றோர் (என் ஆத்தா, தாத்தா), அண்ணன், அண்ணி (என் அப்பா, அப்பா) அவருக்கு ஆதரவாக இருந்தனர். அத்தையும், அத்தை மகளும் நம்முடனே இருக்கப்போகிறார் என்றதும் எங்கள் வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி. 

    ஆயுள் காப்பீட்டுக்கழகம், வங்கிப்பணிகள் தொடர்பாக ஆங்கிலப்பயன்பாடு தேவை என்று கூறி, சில ஆங்கில வார்த்தைகளையும், சொற்றொடர்களையும் கற்றுக்கொடுக்க என்னிடம் கேட்டார். ஒவ்வொரு நாளும் எங்கள் வீட்டில் பெரிய கூடத்தில் நாங்கள் எதிரெதிராக அமர்ந்துகொள்வோம். சில முக்கிய ஆங்கிலச்சொற்களை நான் கூறியபோது அவற்றை எழுதவும், படிக்கவும் பழகினார். நான் படிக்க ஆசைப்பட்டவருக்கு, சொல்லித்தந்ததைப் பெருமையாக நினைத்தேன்.. 

    சில நாள்களில் தாத்தா இறந்தார். சில உறவினர்களும், நண்பர்களும் அத்தையின் மனதை  மாற்றி, பிறிதொரு ஊருக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். மகளுக்காக அம்மாவும் (என் ஆத்தா) உடன் சென்றுவிட்டார். எங்களைவிட்டுச் சென்றது எங்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது.  

    என் பெற்றோரிடம் அவர் கடிதத்தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை. என் கல்லூரி முகவரிக்குக் கடிதங்கள் எழுதினார்.  அவருடைய கடிதங்களில் பல அறிவுரைகள் இருந்தன. ஒரு கடிதத்தில், "நான் செத்தபின்னர் எனக்குப் பிறந்த இடத்துக்கோடி போட வேண்டாம். நீ நல்லா படி. உன் படிப்புக்கு ஏதாவது பணம் வேணும்னா எனக்கு எழுது". என்று அவர் எழுதிய வரிகள் என் மனதில் ஆழப்பதிந்துவிட்டன. பிறந்த இடத்துக்கோடி என்றால் எனக்கு அப்போது தெரியாது. ஆனால் எங்கள் குடும்பத்தின்மீது வெறுப்பு தோன்றுமளவு அவர் மனதை சிலர் மாற்றியதை அறியமுடிந்தது. 

    இதற்கிடையில் என் கல்லூரிப்படிப்பு நிறைவடைந்தது. கல்லூரித்தேர்வுக்கு சில மாதங்களுக்கு முன்னர், அவர் சென்ற ஒரு வருடத்திற்குள் அவர் நினைவாகவே என் தந்தை இயற்கையெய்தினார். இறக்கும் முன்பாக எக்காரணம் கொண்டும் அத்தையைப் பார்க்கப் போய்விடாதீர்கள் என்று எங்களிடம் கூறினார். அத்தையை பாப்பா என்றே எங்கள் அப்பா, தாத்தா, ஆத்தா அனைவரும் அழைப்பர்.

    படிப்பு முடிந்து சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தேன். நான் வேலைக்குச் சேர காரணமான படிப்புக்கு அடித்தளமிட்ட அவரை நினைத்து, பணியில் சேர்ந்த முதல் விடுமுறையில் வட பழனி முருகன் கோயிலுக்குச் சென்று அத்தையின் பெயரில் அர்ச்சனை செய்தேன். 

    அத்தையைப் பார்க்கவேண்டாம் என்ற அப்பாவின் அறிவுரை, அத்தையைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை இரண்டிற்கும் நடுவில் பெற்ற பாசத்திற்கும், வளர்த்த பாசத்திற்கும் இடையில் சுமார் 40 ஆண்டுகளாக சிக்கித் தவித்தேன். ஒரு முறை உறவினரின் மரண நிகழ்வில் சந்தித்தேன். மனம் என்னென்னவோ பேச நினைத்தது. வார்த்தைகள் வெளிவரத் தவித்தன. சில நிமிடங்கள் என்னை மறந்தேன். அவரைப் பற்றியும், அத்தை மகளைப்பற்றியும் நலம் விசாரித்தேன். அதற்குப் பின்னர் அவரைப் பார்க்கவேயில்லை. 2021இல் என் உறவினர் மகள் திருமணத்திற்காகச் சென்னை சென்றபோது, அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்ததை அறிந்தேன். அப்போது என் மனம் பட்ட பாடு சொல்லி மாளாது. 

    அத்தை மாறக் காரணம் என்ன? அப்பாவிற்குத் தன் தங்கைமீது வெறுப்புவரக் காரணம் என்ன? எந்நிலையிலும் எங்கள் குடும்பத்தை விட்டுக்கொடுக்காமல் இருந்தவர் தன் நிலையை மாற்றிக்கொள்ளக் காரணம் என்ன? நாளடைவில் அவர் எங்களை மறந்துவிட்டாரா? நாங்கள் ஏதும் தவறு செய்துவிட்டோமா? என்பன போன்ற விடை காணமுடியாத கேள்விகள் என் மனதை இன்னும் உறுத்துகின்றன. அப்பாவின் வார்த்தைக்கு மதிப்பளித்து கடைசி வரை அவரைப் பார்க்காமலேயே இருந்துவிட்டேன். எந்த ஒரு காரியத்தை ஆரம்பித்தாலும் அவர்களை நினைக்கிறேன். அவர் என்னருகில் இருப்பது போன்ற ஓர் உணர்வு இன்னும் இருந்துகொண்டே இருக்கிறது. என் வாழ்விற்கு அடித்தளமிட்ட  அவரைப் பற்றிய நினைவுகள் என்னை வாழவைக்கும், வாழவைக்கிறது.

    என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் என்ற ஆய்வேட்டை 2002இல் புதுதில்லி நேரு டிரஸ்ட் அமைப்பிற்காக ஆங்கிலத்தில் எழுதியபோது அவருக்குச் சமர்ப்பணம் செய்தேன். பல வருடங்களாகப் பார்க்காத அத்தைக்கு சமர்ப்பணமாம் என்று என் மகன்கள் கூறியது நினைவுக்கு வருகிறது.

    அண்மையில் வெளியான சோழ நாட்டில் பௌத்தம் (புது எழுத்து, அலைபேசி 9842647101) என்ற என் நூலினை என் வாழ்வில், ஆய்வில், எழுத்துப்பணியில் துணைநிற்கும் என் மனைவிக்கு சமர்ப்பணம் செய்ய விரும்பினேன். ஆனால் என் மனைவியோ, புதுதில்லி நேரு டிரஸ்ட் திட்டத்தினை அத்தைக்கு முன்னரே சமர்ப்பணம் செய்ததால்  பெற்றவர்களுக்கும், வளர்த்தவர்களுக்கும் நூலை சமர்ப்பிக்கும்படி கூற, அவ்வாறே செய்தேன். அத்தையின் மனதைப் போலவே என் நலனில் அக்கரை செலுத்தும் என் மனைவியின் மனதும் பெரிதுதான். 



    இன்றும் கோயில்களுக்குப் போகும்போது அத்தையுடன் கோயிலுக்குச் சென்ற நாள்கள் நினைவிற்கு வந்துவிடும். அவர் என்னுடன் பேசிக்கொண்டே, புத்திமதி கூறிக்கொண்டே வருவது போலிருக்கும். அந்த நினைவுகள் ஒரு பலத்தைத் தருவதை உணர்வேன். உண்மையான அன்பு என்பது இதுதானோ? 

    தொடர்புடைய பதிவு:

    12 comments:

    1. நான்மிகுந்த உணர்ச்சியுடனே இந்தப் பதிவைப் படித்தேன்.

      என்னுடைய வாழ்வையும் சிறிது பிரதிபலித்ததால், அந்த உணர்வை என்னால் மிக நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

      சிறு வயதில் நாம் எல்லா உறவினர்களிடமும் நன்றாகப் பழகுவோம். குடும்ப அரசியல் எதுவும் நமக்குத் தெரியாது. ஆனால் ஏதோ காரணத்துக்காகப் பெரியவர்கள் மனவருத்தமடைந்து, சில நேரங்களில் அளவுக்கு அதிகமாகச் சென்று, குடும்ப அரசியலினால் விரிசல் அடையும்போது, பதின்ம வயதில் இருப்பவர்கள், நாம் தொடர்ந்து அதே பாசத்துடன் இருப்போமா, அப்பா ஏதாவது நினைத்துக்கொள்வார்களோ என்ற குழப்பமும், மற்ற உறவினர்கள் நம்முடன் பேசும்போது, ஆடு பகை, குட்டி உறவு என்ற நிலைமையா என்று மனதில் தோன்றி, நாம் ஏதோ அப்பாவிற்கு எதிராக நடந்துகொள்கிறோமோ என்ற மனமோதல் தோன்றி, உறவினர்களுடனான உறவு கெட்டுப்போய்விடுகிறது. இதனால் நாம் இழப்பவை ஏராளம். ஆனால் பெரியவர்கள் இதனைப் புரிந்துகொள்வதில்லை. அப்படி நான் மிகவும் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறேன்.

      பிற்காலத்தில் அப்பாவின் காலத்திற்கு அப்புறமும் அந்தப் பழைய உணர்வு துளிர்ப்பதே இல்லை.

      என்னுடைய உணர்வை, உறவினர்களிடத்திலான என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்பை, எந்தக் காரணம் கொண்டும் அடுத்த தலைமுறைக்குக் கடத்திவிடக்கூடாது என்று நான் உறுதியாக இருக்கிறேன். அவ்வாறே நடந்துகொள்கிறேன். மற்றவர்கள் (உறவினர்கள்) என்னுடன் நடந்துகொள்வதையும் நான் இயல்பாகக் கடந்துசெல்லக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

      நாம் நம் உறவினர்களிடம் மனதளவில் நெருங்கியிருந்த (சிறிய வயதில்) உணர்வு, எப்போதுமே மாறாது. அவர்கள் நம்மிடம் அன்புடன் நடந்துகொண்ட காலங்களை நாம் மறந்துவிட, நம் மனமென்ன, கரும்பலகையா? நிறைய எண்ணங்களை ஏற்படுத்துகின்ற பதிவு.

      தங்கள் உணர்வு நன்றாகப் புரிகிறது. நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

      ReplyDelete
    2. உங்களின் பதிவும் அதற்கு நெல்லை தமிழனின் கருத்து அருமை..இவைகள் இரண்டும் பழைய நினைவுகளை உறவுகளை ஞாபகப்படுத்தி மந்தில் ஒரு நெகிழ்வை ஏற்படுத்திவிட்டது.. இதே போல அனுபவமும் எனக்கும் உண்டு

      ReplyDelete
    3. அத்தையை சந்தித்திருக்கலாம் என்று தோன்றுகிறது.  உங்கள் மனதில் மேலும் குற்ற உணர்ச்சியைத் தூண்டும் கமெண்ட் என்பதற்கு மன்னியுங்கள்.  புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துகள்.

      ReplyDelete
      Replies
      1. இதெல்லாம் சொல்வது சுலபம். இன்றைக்கு நன்றாகப் பழகும் உறவினர்கள் முன்பு எப்படி நடந்துகொண்டார்கள் என்ற நினைவும், வெளிக்காட்ட முடியாத கசப்புணர்வையும் எப்படி மறக்க முடியும்?

        நம்மிடம் பாசம் இருந்திருந்தால் அந்த உறவு தொடர்ந்திருக்குமே. நம்மிடம் அன்பாக ஆனால் பெற்றோரை அல்லது அதில் ஒரிவரை மதியாது இருக்கும் சூழலை நம் மனம் எப்படி ஏற்றுக்கொள்ளும்? நமக்கு மிக முக்கியபானவர்கள் உடன்பிறந்தவர்கள் இல்லை. நம் பெற்றோரே.

        இந்த மாதிரி டாபிக்குகளைப் பொது வெளியில் எழுத முடியாது, பெரியவர்களுன் மனவருத்தத்திற்கான உண்மைக் காரணமும் நமக்குத் தெரியாது.

        Delete
    4. வணக்கம் சகோதரரே

      மனதை கனக்க வைக்கும் கதை போன்ற தங்கள் வாழ்வின் உண்மை நிகழ்வுகளை தந்துள்ளீர்கள். இறுதி வரை தங்களின் அத்தை அவர்களை பார்க்காத / பார்க்க முடியாத உங்களின் தவிப்பை என்னாலும் உணர முடிகிறது. அவர்களின் பாசம் விலைமதிப்பற்றது. தங்கள் பதிவை படிக்கையில் மிகவும் நெகிழ்ந்து போனேன். இது போல் சந்திக்க முடியாத சில இழப்பை நானும் சந்தித்துள்ளேன். தங்கள் மனதை தைரியபடுத்திக் கொள்ள இறைவன் அருளட்டும்.

      தங்களது புத்தக வெளியீட்டுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      ReplyDelete
    5. அத்தையை சந்தித்து இருக்கலாம் மனதை என்னவோ செய்து விட்டது பதிவு.

      காரணம் இப்படி அனுபவம் எனக்கும் உண்டு.

      கடந்த வாரம் மைத்துனர் அழைத்தார் அம்மா (எனக்கு அத்தை, அப்பாவின் தங்கை) உடல்நிலை சரியில்லாமல் உங்களை பார்க்க ஆசைப்படுகிறார் என்றார்.

      உடன் போனேன் அம்மாவைப் பார்த்தது போல இருக்கிறது என்று கூறி அழுதார்.

      பிறகு காலைத் தொட்டு வணங்கி விபூதி பூசிக் கொண்டேன்.

      ReplyDelete
    6. மனதார உண்மையை ஏற்றுக் கொண்டால், மனம் ஆறுதல் தரும்...

      ReplyDelete
    7. மலரும் நினைவுகள் என்றாலும் மனதை மிகவும் கனமாக்கி விட்டது..

      பாசமும் கனிவும் நிறைந்து விளங்கும் அத்தையின் நினைவுகளை அவ்வளவு எளிதில் மறந்து விடவும் கூடுமோ..

      என் மனமும் ஏனோ சோகத்தில் ஆழ்கின்றது..

      ReplyDelete
    8. ஆழ்ந்து வாசித்தேன். அத்தையின் நினைவுகள் உங்கள் மனதைப் புரிந்து கொள்ள முடிகிற்து.

      காரணம் இதே போன்றுதான் எங்கள் குடும்பத்திலும். என் சிறு வயதில் பெரியவர்களுக்கான மனக்கசப்பு குழந்தைகளாகிய எங்களுக்கும் கடத்தப்பட்டது. நான் என் அம்மா பக்கமும் அப்பா பக்கத்துக்கான உறவுகளுடன் அதே அன்புடன் பழகி வந்தேன், பெரியவர்களின் அரசியல் அவர்களோடு போகட்டும் என்று. அது நம் மனதைத் தாக்கக் கூடாது, நம் மனதில் விஷம் வேண்டாம் என்று பெரும்பாலும் இரு உறவினர்களுக்கும் இடையில் பக்குவமாகப் பேசி ஒரு பாலம் அமைக்கப் பல முயற்சிகள் எடுத்தும் வந்தேன். பிற்காலத்தில் புரிந்து கொண்டனர் என்னையும் என் கருத்தையும் என்பது எனக்கு மிகவும் சந்தோஷம் அளித்தது. வெறுப்பை விதைத்தவர் மறைந்ததும், பெரியவர்கள் சகஜமாகப் பழகியதோடு எனக்கும் இன்னும் எளிதாக இருந்தது.

      ஆனால் அவர்கள் செய்த தவறு, வேறு ரூபத்தில் அவர்கள் குழந்தைகளுக்கும் நடக்கும் என்பது என் தலைமுறையில் நடந்திருக்கிறது. அவர்களைக் கூட என்னால் மாற்ற முடிந்தது. அவர்களை உணற வைக்க முடிந்தது. ஆனால் இப்போது அது முடியவில்லை. வெறுப்பும் பழி வாங்கும் குணமும் குடும்பத்திற்கு ஆதாக ஒன்று.

      மனம் மிகவும் வேதனை அடைகிறது.

      கீதா

      ReplyDelete
    9. புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள் ஐயா

      கீதா

      ReplyDelete
    10. உங்கள் பதிவு மிகவும் யோசனையில் ஆழ்த்தியது. இது எல்லோர் வீட்டிலும் நடப்பது தான். சில விஷயங்களை மறக்க முடியும். சில விஷயங்களை மன்னிக்கவும் முடியும். ஆனாலும் சில மன்னிக்கவே இயலாத தவறுகளை வாழ்க்கையிலிருந்து அப்படியே ஒதுக்குவது தானே சரி? அதைத்தான் உங்கள் தந்தையும் செய்திருக்கிறார்கள். ஒவ்வொருத்தருக்கும் அவரவர் மனதின் நியாங்கள் தானே தீர்ப்பாகிறது? இதை தப்பென்று அடுத்தவர் எப்படி சொல்ல முடியும்?
      அப்பாவுக்கு நீங்கள் காட்டியிருக்கும் மரியாதையும் நேர்மையும் ஒரு உண்மையான மகனாய் உங்களை கெளரவிக்கிறது. அப்புறம் அந்த குற்ற உணர்ச்சி தேவையேயில்லாதது.

      ReplyDelete
    11. உண்மையான அன்பைப் பற்றிய பதிவு நெகிழ்வு. நன்றி .

      ReplyDelete