12 December 2022

கும்பேஸ்வரர் கோயில் பிரகாரம்

பள்ளிக்காலம் தொடங்கி நாங்கள் படித்த, விளையாண்ட, பொழுதுபோக்கிய இடங்களில் ஒன்று கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் நானும் என் நண்பர்களும் இக்கோயிலின் பிரகாரங்களை கிட்டத்தட்ட எங்களின் மற்றொரு வீட்டைப் போல நினைத்தோம். எட்டாம் வகுப்பு படிக்கும்போது இங்கு வர ஆரம்பித்து, பி.யு.சி.வரை தொடர்ந்தோம். நண்பர்கள் ஒவ்வொரு பக்கம் பிரிந்து சென்ற நிலையில் கல்லூரிக்காலத்தில் என் படிப்பு பிரகாரத்தில் தொடர்ந்தது. 

கும்பேஸ்வரர் கோயிலின் மேலவீதி அருகில் சம்பிரதிவைத்தியநாதன் தெருவில் (தற்போது கே.ஜி.கே.தெரு) எங்கள் வீடு இருந்தது.  என் பள்ளி நண்பர்களின் வீடுகள் பெரும்பாலும் கும்பேஸ்வரர் கோயிலைச்சுற்றி  வடக்கு வீதி (கோவிந்தராஜன், பிச்சை, மாசிலாமணி, அசோகன், லலிதா), மேல வீதி (சாருஹாசன், காளிதாசன்), தெற்கு வீதி (முன்பிருந்த பாவஸார ஷத்திரிய மண்டலியை அடுத்து),  வடம்போக்கி (விட்டல்ராவ், தாரா) ஆகிய தெருக்களிலும், அருகிலுள்ள குட்டியாம்பாளையத்தெரு (ராஜு), சிங்காரம் செட்டித்தெரு (மோகன்,  சுரேஷ்தாஸ், விஜயகுமார், கோபாலகிருஷ்ணன், ரேவதி, பிருந்தா, நிர்மலா), பழைய அரண்மனைத்தெரு (செல்வம், நாகராஜன், ராஜு), மதகடித்தெரு (திருமலை), கும்பேஸ்வரர் திருமஞ்சனவீதி 16 கட்டு (ராஜசேகரன், மதியழகன்), கும்பேஸ்வரர் திருமஞ்சனவீதி சின்னகாளப்பேட்டை (மோகன், பொன்னையா, ராஜா, ஜெயராஜ்),  சாத்தாரத்தெரு (பாலு, பெரியய்யா. தேசிகாச்சாரி), மூர்த்திச்செட்டித்தெரு (சந்திரசேகர்), மௌனசாமி மடத்துத்தெரு (ஓமலிங்கம்),  வியாசராவ் அக்ரஹாரம் (சந்தானகிருஷ்ணன்) ஆகிய தெருக்களிலும் இருந்தன.


கோயிலின் இரு பிரகாரங்களிலும், சில சமயங்களில் ராஜகோபுரத்தை அடுத்துள்ள மண்டபத்திலும் அமர்வோம். போட்டி போட்டுக்கொண்டு பாடங்களைப் படித்து எங்களுக்குள் ஒப்பித்துக்கொள்வோம். நாம் படிப்பதைவிட பிறரை படிக்கவைத்து நாம் உள்வாங்கிக்கொண்டால் எளிதில் மனதில் பதிந்துவிடும். அந்த உத்தியையும் பயன்படுத்திக்கொள்வோம். முதலில் எங்களுக்காகவும், பிறகு மற்ற நண்பர்களுக்காகவும் மாறி மாறி படித்துக்கொள்வோம்.


பெரியவர்களிடம் வாங்கிய திட்டு, ஆசிரியரிடம் வாங்கிய அடி தொடங்கி அனைத்தையும் மனம்விட்டுப் பேசுவோம்.  சுமை குறைந்ததுபோல இருக்கும். அவரவர் குடும்பச் சூழ்நிலை, பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்வது, கல்வித்தகுதியை பெருக்கிக்கொள்வது,  பெற்றோருக்கு சுமையாக இருக்காமல் நம் காலில் நிற்பது, படித்தபின்னர் வேலைக்குச் செல்வது அல்லது வியாபாரத்தைத் தொடர்வது என்ற வகையில் ஒவ்வொருவரும் எங்களின் எதிர்காலத் திட்டங்களைப் பரிமாறிக்கொள்வோம்.  ஒளிவு மறைவின்றி  அனைத்தையும் வெளிப்படையாகப் பேசுவோம். 

நடுப்பகல் கோயிலின் நடை சாத்தும்போது வீட்டுக்குச் சென்றுவிட்டு, மறுபடியும் மாலை நடை திறக்கும்போது திரும்புவோம். இருட்டும்வரை படித்துக்கொண்டே இருப்போம். தேர்வு நேரங்களில் பெரும்பாலும் இங்குதான் இருப்போம். 

பள்ளிப்படிப்பு முடிந்ததும் சிலரே கல்லூரிப்படிப்பினைத் தொடரும் நிலை அமைந்தது. அடுத்தடுத்து பலர் வியாபாரத்தில்  ஈடுபட, என்னைப் போன்ற சிலர் வெளியூரில் பணியில் சேர்ந்தோம். வாய்ப்பு கிடைக்கும்போது அந்நாள்களை நினைவுகூர்வோம். எங்கள் வாழ்விற்கு அடித்தளமிட்ட வகையிலும், எங்களை நெறிப்படுத்திய வகையிலும் இக்கோயில் எங்கள் மனதில் பதிந்துவிட்டது.

அண்மையில் கும்பகோணம் சென்றபோது, பல வருடங்கள் கழித்து அந்தப் பிரகாரங்களைச் சுற்றிவந்தேன். பழைய பேச்சுகள், உரையாடல்கள், வாசிப்புகள்  மனதில் வந்துசென்றன. ஒவ்வொரு இடத்திலும் சிறிது நேரம் தனியாக, அமைதியாக அமர்ந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். அப்போது யாரோ என்னை "டேய்....ஜம்பு" என்றழைப்பதைப் போல இருந்தது. திரும்பிப்பார்த்தேன். ஒருவருமில்லை. அது என் நினைவே என்று சுதாரித்து, தொடர்ந்து நடக்க ஆரம்பித்தேன். 

அன்றுமுதல் இன்றுவரை கும்பேஸ்வரரையும், மங்களாம்பிகையையும் தரிசிக்கும் பாக்கியம் தொடர்கிறது. எல்லாம் அவன் அருள்.  


ஒளிப்படங்கள் : ஜுலை 2022இல் கும்பகோணம் சென்றபோது எடுக்கப்பட்டவை. (வெளிப்பிரகாரம், முன்மண்டபம்)  

13 டிசம்பர் 2022இல் மேம்படுத்தப்பட்டது.

10 comments:

  1. கோடை விடுமுறையில் கும்பகோணத்திற்கு வரும்போது இங்கெல்லாம் சுற்றித் திரிந்தது உண்டு..

    பழைய நினைவுகள் மனதில் வந்து மோதுகின்றன..

    வாழ்க கும்பகோணம்..

    ReplyDelete
  2. அன்பு நண்பனே எத்தனை இனிமையான நினைவுகள், சுற்றி சுற்றிப் பார்த்து ஏங்கத்தான் முடிகிறது. வருமா என்றேனும் ஒருநாள் இதுபோல். ஒருமுறையேனும் அங்கெல்லாம் சென்று வரவேண்டும் நமது நண்பர்களுடன் குழுவாக, நன்றி ஜம்பு...

    ReplyDelete
  3. நான் கும்பகோணத்தை நெருங்குகிறேன். நீங்கள் கும்பகோணத்தில் இல்லையா? இந்தமுறை கும்பேசுவரர் கோயில் போகணும்

    ReplyDelete
    Replies
    1. தற்போது தஞ்சாவூரில் உள்ளேன். வாய்ப்பிருப்பின் சந்திப்போம்.

      Delete
    2. இந்தத் தடவை சாத்தியமில்லாமல் போயிற்று. அடுத்த முறை நிச்சயம் சந்திப்போம் முனைவர் ஐயா. உங்களிடம் பேசினாலே, தந்தையுடன், பெரிய அண்ணனிடம் பேசும் உணர்வு வரும்.

      Delete
  4. சுவாரஸ்யமான நினைவுகளை அதே சுவாரஸ்யத்துடன் வெளிப்படுத்தி உள்ளீர்கள்.

    ReplyDelete
  5. அருமை... இனிய நினைவுகள் ஐயா...

    ReplyDelete
  6. நாங்களும் ஒரு சுற்று உலா வந்தோம். அருமை ஜம்பு சார் :)

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. கோவிலைப் பற்றிய அழகான புகைப்படங்களுடன், தங்களது இளமை கால படிப்புக்களையும் ஸ்வாரஸ்யமாக பகிர்ந்து கொண்டது நன்றாக உள்ளது. தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  8. இந்த முறை, கும்பகோணம் ஆராவமுதன் கோவில் பிராகாரங்களில் நிறையபேர் தமிழக அரசுத் தேர்வுகளுக்காகப் படித்துக்கொண்டிருந்ததைப் பார்த்தேன் (சில புகைப்படங்களும் எடுத்தேன்). இதற்கு முன்பும் இந்தக் கோவில் பிராகாரத்தில் மாணவர்கள், கல்லூரிக்காரர்கள் வேலை தேடுபவர்கள் க்ரூப் ஸ்டடி பண்ணுவதைப் பார்த்திருக்கிறேன். அவங்க நல்லா இருக்கணும், தேர்வில் தேர்ச்சி பெறணும் என்று வேண்டிக்கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete