பள்ளிக் காலத்தில் கும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூலகத்தில் 'பொன்னியின் செல்வன்' நாவலைப் படித்தபோது, அந்த வரலாற்றுக் காலகட்டத்துக்கே கல்கி என்னை அழைத்துச்சென்றதைப் போல உணர்ந்தேன். சற்றொப்ப அதே மனநிலையைப் பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் உணர்ந்தேன்; 'சோழர்கள் இன்று' நூலை வாசித்தபோது!
வாசகரைக் காலவெளியில் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னோக்கி அழைத்துச் சென்றுவிட்டு, அங்கிருந்து அதே வேகத்தில் இக்காலத்திற்கு அழைத்துவரும் உத்தியை இந்நூலில் கண்டேன். மிகத் தரமான ஒரு நூல். ஆனால், சாமானியரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் கட்டுரைகள் வகைபடுத்தித் தரப்பட்டுள்ள விதம் சிறப்பாக உள்ளது.
நாமும் நூலின் ஊடாக ஒரு சிறு பயணம் மேற்கொள்வோம்.
வரவேற்கிறது வரலாறு (பக்.12-27), தமிழகத்தின் ஆட்சியாளர்கள் (28-47), தெற்கின் ஒளி (48-59), சோழர்கள் கதை (60-91), தமிழக வரலாறும் சோழர் காலமும் (92-187), இன்றைய தமிழ் வாழ்வில் சோழர்கள் (188-255), சோழர் களங்கள் (256-273), சோழ தூதர்கள் (274-291), என்றும் சோழர்கள் (292-304) என்னும் பெருந்தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது சோழர்கள் இன்று (தொகுப்பாசிரியர் சமஸ்) என்னும் நூல்.
அந்தந்த தலைப்பின்கீழ் பொருத்தமான உட்தலைப்புகளில் பல துறைகளைச் சார்ந்த பெருமக்களின் கட்டுரைகள், பேட்டிகள் உள்ளன. அவை வரலாற்றை அறத்துடன் அணுக வேண்டிய தேவை, வரலாற்றின் முக்கியத்துவம், ஒவ்வொரு தமிழருக்கும் முக்கியமானதான சங்க காலம், மூவேந்தர்கள் மற்றும் தமிழகச் சிற்றசர்களைப் பற்றிய அறிமுகம், பேரரசுகளைப் பற்றி பேசுவதற்கான காரணம், சோழர்கள் தொடர்பான கதைகள் மற்றும் பேராளுமைகள், சோழர்களின் மகத்தான பங்களிப்பான கல்லணை, அவர்களின் கடல் வெற்றி சொல்லுகின்ற செய்தி, சோழர்களின் கலை முதலீடு, சோழர் கால ஓவியங்கள், இன்றைய இசையில் சோழர்கள், என்ற பல வகைகளில் அமைந்துள்ளன. அனைத்திற்கும் மேலாக சோழ நாட்டின் முக்கியமான நகரங்களான உறையூர், புகார், பழையாறை, தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், திருபுவனம், நாகப்பட்டினம் போன்ற நகரங்களின் அண்மைக்கால நிலையை பேசும் பதிவுகள் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. நீராலான கல்லணையின் வரலாறும் அதில் உள்ளது. சோழ தூதர்களாக ஆர்தர் காட்டன், நீலகண்ட சாஸ்திரி தொடங்கி இன்றுள்ள குடவாயில் பாலசுப்ரமணியம், மணி ரத்னம் வரையுள்ளோர் விவாதிக்கப்படுகின்றனர். தமிழ் வெகுஜன பண்பாட்டில் சோழர்களின் தாக்கமாக உள்ளவற்றையும் இந்நூலில் காணலாம். சோழர்கள் என்றால் தம் நினைவிற்கு வருவதாக பல துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் கூறுகின்ற கருத்துகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
"...ஆனால், பிற்பாடு இங்கே நடந்த ஆய்வுகளில் கிடைத்த சான்றுகள் நம்முடைய தமிழி எழுத்து வடிவம் அசோகன் காலத்துக்கும் முந்தையது என்று யோசிக்கும் சாத்தியத்தைத் தந்தன." (கா ராஜன், ப.22)
"இன்றைய வரலாற்றின் கண்ணாடியை அணிந்துகொண்டு நேற்றைய வரலாற்றை பார்க்கவே கூடாது." (இரா.கலைக்கோவன், ப.44)
"...தெற்கின் வரலாற்றை மறுகண்டுபிடிப்பு செய்து வடக்கின் வரலாற்றுக்கு இணையாக முன்வைக்கும் வரலாற்று இயக்கத்தின் ஒரு பகுதியாக இருப்பது உண்மையிலேயே பரவசம் ஊட்டுகிறது." (அநிருத் கனிசெட்டி, ப.57)
"...ராஜராஜன் காலம் வரை போரில் தோற்ற அரசரிடமிருந்து வென்ற அரசர் திறை அதாவது கப்பம் வாங்கும் நிலையே இருந்தது. எதிரியின் நாடுகளை வென்ற அரசர் அங்கே ஆட்சி செய்ய முற்படுவதில்லை. ராஜராஜன் காலத்தில் இந்த நிலை மாறுகிறது." (எ.சுப்பராயலு, ப.102)
"கடந்த காலத்தின் பங்களிப்பு என்பது ஒரு நீண்ட தொகுப்பு. காமராஜரும் அதில் இருக்கிறார். கரிகாலனும் அதில் இருக்கிறார்." (எஸ்.நீலகண்டன், ப.120)
"முற்கால அரசர்கள், பிராமணிய அரசியல் வழக்கங்களைப் பின்பற்றினர் என்றாலும், சங்க கால, பின் சங்க காலங்களில் (ஆரம்ப பல்லவர்), தமிழ்நாட்டில் பாரம்பரியமான உள்ளூர்க் கடவுள்கள் தொடர்ந்து வழிபாட்டில் இருந்துள்ளன." (ப.146)
"....ராஜராஜனைக் கொஞ்சம் விஞ்சும் அளவுக்கு ஆட்சிப்பரப்பைக்கூட ஏனையோர் ஆண்டிருக்கலாம். ஆனால் சோழப்பேரரசை உலகளாவிய அரசுகளுடன் ஒப்பிடத்தக்க அளவுக்கு ராஜராஜனுடைய ஆட்சிக்காலமே நமக்குச் சான்றுகளைப் பகர்கின்றன. தவிர, அவரே ஒரு புதிய பண்பாட்டை உருவாக்குகிறார்." (குடவாயில் பாலசுப்ரமணியன், ப.168)
"தமிழ்நாட்டில் ஒரு தொன்மமாகவே நீடிக்கும் மனுநீதிச் சோழன் கதையை இந்த மக்கள் தங்களுக்கான விழுமியமாகக் கொண்டிருப்பதுடன் அதைச் சமகாலப்படுத்தவும் முற்படுகிறார்கள்." (அஷோக் வர்தன், ப.184)
"நம்முடைய ஆதி நடன மரபு என்பது வெறியாட்டங்களில் இருக்கிறது. ஆனால் சிலப்பதிகாரக் காலகட்டத்திலேயே நாட்டியத்துக்கு என்று துல்லியமான இலக்கணம் உருவாகிவிட்டிருப்பதைப் பார்க்கிறோம்." (நர்த்தகி நடராஜ், ப.227)
செப்பேட்டின் கண்ணைக்கவரும் வகையிலான ஒளிப்படத்துடனுடம் தேர்ந்தெடுக்கப்பட்ட அழகான எழுத்துருவுடன் நூலின் தலைப்பினைக் கொண்ட மேலட்டை, மனதில் பதியும் வகையில் ஆங்காங்கே முக்கியமான நறுக்குகள், பெட்டிச்செய்தகள், பேட்டியில் கேள்விக்கு தடித்த எழுத்துகள், தேவையான இடத்தில் படங்கள், வரைபடங்கள், ஓவியங்கள் என்ற அமைப்பு முறை, பங்களிப்பாளர்களைப் பற்றிய சிறு அறிமுகம், ஒவ்வொரு பதிவிலும் அந்தந்தப் பொருளை எளிதாக உணரும் வகையில் தடித்த எழுத்தில் குறுந்தலைப்புகள், அந்தந்த கட்டுரையின் ஆரம்பப்பத்தியாக அதன் சுருக்கம், வித்தியாசமான அதே சமயம் தடித்த எழுத்துருவில் இரட்டை மேற்கோளுடன் கட்டுரையின் முக்கியமான கருத்து என்ற வகையில் கலையியல் ரசனையோடு நூல் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சில அறிஞர்களின் நூல்களில் காணப்படுகின்ற கருத்துகள் வாசகனுக்குப் புரிவதற்காக பேட்டி வடிவில் அளித்துள்ள விதம் ஒரு வித்தியாசமான முயற்சியாகும். நெடிய வரலாற்றை ஆவணப்படுத்தி வரலாற்றுலகிற்குப் பெரும் பங்களிப்பினைச் செய்துள்ள தொகுப்பாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் குழுவினரின் முயற்சி போற்றத்தக்கதாகும். தொகுப்பு நூல்களில் கூறியது கூறல் என்பது தவிர்க்கமுடியாததாகும். அதனைப் பல இடங்களில் காணமுடிந்தது.
"குறைந்தது 2500 ஆண்டுகள் தொன்மையான தமிழ் வரலாற்றின் எச்சங்கள் நம் கண்களில் புலப்படுகின்றன என்றாலும், இளையோருக்கு ஏற்றபடி நம் வரலாற்றைச் சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லும் நூல்கள் இல்லை. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யவே இந்நூல் உருவாக்கப்பட்டது" (ப.5) என்கிறார் நூலின் தொகுப்பாசிரியர். நூலைப் படித்து முடிந்ததும் அந்தத் தேவை பெரிதும் பூர்த்தியடைந்துள்ளதை ஒரு வாசகனாக என்னால் உணர முடிந்தது.
மத நல்லிணக்கத்திற்கு புத்தர் ஒரு சான்று என்ற என்னுடைய கட்டுரை இந்நூலில் வெளியாகியுள்ளது. அதனைப் பற்றி பிறிதொரு பதிவில் காண்போம்.
நூல் :
சோழர்கள் இன்றுதொகுப்பாசிரியர் : சமஸ் (அருஞ்சொல் ஆசிரியர் குழு எண்: 63801 53325)
பதிப்பகம்: தினமலர்
பதிப்பாண்டு: மே 2023
விலை : ரூ.500
நூல் தேவைக்கு : 75500 09565
4 ஜூலை 2024இல் மேம்படுத்தப்பட்டது.