18 November 2024

ஆவணக்குரிசில் விருது

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகமும், வாசகர் வட்டமும் இணைந்து தஞ்சாவூரில் 17 நவம்பர் 2024இல் நடத்திய 57ஆவது தேசிய நூலக வார விழாவில் ஆவணக்குரிசில் என்ற விருதினைப் பெற்றதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன். விழாப் பொறுப்பாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.  

நிகழ்ச்சி நிரலில் கண்டவாறு நடைபெற்ற இவ்விழாவின் ஒரு பகுதியாக வாழ்நாள் சாதனையாளர், ஆவணக்குரிசில், எழுத்துலகின் இளம்பரிதி ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.







முந்தைய விருதுகள்


நிகரிலி சோழன் விருது, 2022


தகைசால் தமிழர் விருது, 2023

மும்முடிச்சோழர் விருது, 2023


08 November 2024

சிற்பக்கலை : முனைவர் க. மணிவண்ணன்


முனைவர் க.மணிவண்ணன் எழுதியுள்ள சிற்பக்கலை என்னும் நூலுக்கான என்னுடைய அணிந்துரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவருக்கு நன்றியுடன். நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

**********************************************

அணிந்துரை

முனைவர் க. மணிவண்ணன் எழுதியுள்ள சிற்பக்கலை என்னும் நூல் சிற்பக்கலை என்ற தலைப்பில் தொடங்கி, புது ஆயக்குடி சோழீஸ்வரர், பழைய ஆயக்குடி அகோபில வரதராஜப்பெருமாள், பாலசமுத்திரம் வரதராஜப்பெருமாள், பழனி லட்சுமிநாராயணப்பெருமாள், வேலாயுதசுவாமி, பெரியநாயகியம்மன், மாரியம்மன், ஒட்டன்சத்திரம் காமாட்சியம்மன், திண்டுக்கல் அபிராமியம்மன், மலைக்கோட்டை அபிராமியம்மன், கோட்டை மாரியம்மன் ஆகிய கோயில்களைப் பற்றிய கட்டுரைகளைக் கொண்டுள்ளது. நூலின் நிறைவில் துணைநூற்பட்டியல் இடம்பெற்றுள்ளது.

8 நவம்பர் 2024இல் நூலாசிரியர் நூலின் படியை வழங்கல் 






தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம் என்ற பல்வேறு பிரிவுகளில் அமைந்த இக்கோயில்களுக்கு நேரில் சென்று விமானம், சிகரம், கோபுரம், தூண்கள், வாயில் நிலைகள், கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், வாகன மண்டபம் போன்ற மண்டபங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்ற சிற்பங்களைப் பற்றி நூலாசிரியர் விவாதித்துள்ளார். “தமிழ்நாட்டுக் கோயில்களில் சிற்பக்கலை பெரிதும் இடம்பெற்றிருக்கிறது. அதில் தெய்வ உருவங்கள் முதன்மை வகிக்கின்றன. இவை குறிப்பொருளைப் புலப்படுத்துகின்றன....தமிழகச் சிற்பிகள் தம் உள்ளத்தில் எழுகின்ற கருத்துகளைப் பொருளுருவில் அமைக்கும் திறமையுடையவர்கள். அவர்களுடைய மனதில் எழுகின்ற அழகுணர்ச்சியானது உரிய வடிவம் தரும்போது கலையாகப் பரிணமிக்கிறது. படைக்கப்படுகின்ற கலைப்பொருள்கள் பயன்பட வேண்டுமாயின் அதில் பொருந்திய வடிவமும், ஒத்திசைவும் அமையவேண்டியது மிகவும் முக்கியமானதாகும். இவ்வாறாக அமைந்த பொருள் அழகுடையதாகிறது. அழகே இறைவன், இறைவனின் அழகே ஆன்மா, ஆன்மாவின் அழகே சிற்பத்தின் வாயிலாக வெளிப்படுகிறது. கலைகளின் அழகைக் காண்பவர் தம் ஆன்மாவின் அழகைக் காண்கிறார்.” என்று நூலாசிரியர் தன்னுடைய உரையில் கூறுகிறார்.

தமிழகத்தில், குறிப்பாக பாண்டிய நாடு சேர, சோழ, பாண்டிய, விஜயநகர, மற்றும் மதுரை நாயக்கர்களின் ஆளுகையின் கீழ் இருந்த பகுதிகளில் உள்ள கோயில்களில் சிற்பங்கள் செதுக்கி வைக்கும் மரபு பின்பற்றப்பட்டது தொடங்கி விவாதிக்கின்ற நூலாசிரியர் தமிழகத்தின் போற்றத்தக்க கலைகளில் சிறப்பான இடத்தைப் பெறுகின்ற சிற்பக்கலையைப் பற்றி பொதுவாகவும், சிறப்பாகவும் சிந்திக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் முன்வைக்கிறார். இக்கலையின் தோற்றம், நோக்கம், கற்பனை, புராணப்பின்னணி ஆகிய கூறுகளையும், சங்க காலம் தொடங்கி பல்லவர், சோழர், மதுரை நாயக்கர் காலங்கள் அது பெற்ற பல்வேறு மாற்றங்களையும், செப்புத்திருமேனி, கருங்கல், சலவைக்கல், சுதை, தந்தம், மரம் ஆகியவற்றால் ஆன சிற்பங்களை அமைப்பையும் வடிக்கும் விதத்தையும் நுணுகி ஆராய்கிறார். சிற்பங்களைப் பாதுகாக்கவேண்டிய முறையை நன்கு ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்போது அவை இன்னும் சிறப்பாக அமையும் என்று கூறி அதற்கான அதற்கான பாதுகாப்பு முறைகளையும் விவாதிக்கிறார்.

குறிப்பிட்ட ஒரு கோயிலைப் பற்றி விவாதிக்கும்போது அக்கோயில் அமைவிடம், பல்வேறு காலகட்டங்களில் மன்னர்களின் பங்களிப்பு, கோயிலின் அமைப்பு, அதன் பகுதிகளில் காணப்படுகின்ற சிற்பங்களின் உருவ அமைப்பு, அதில் காணப்படுகின்ற வேலைப்பாடுகள் ஆகியவற்றை எடுத்துரைக்கிறார். உதாரணமாக சிவன் கோயில் என்று எடுத்துக்கொண்டால் மூலவர், இறைவி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் போன்ற இறை சிற்பங்களையும், இயற்கை, மனிதன், அலங்கார வேலைப்பாடுகள், இலக்கிய, வரலாற்றுப் புராணப்பின்னணியின் அடிப்படையில் அமைந்துள்ள சிற்பங்களை உள்ளிட்டவற்றையும் விவாதிக்கிறார்.

ஒரு கட்டுரையில் இறைவியின் சிற்பத்தைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். “சுமார் மூன்று அடி உயரமுள்ள இறைவியின் சிற்பம் சுஹாசனத்தில் தெற்கு நோக்கி உள்ளது. அவரது வலது கையில் பத்மும், இடது கை டோல முத்திரையுடனும் உள்ளது. அழகிய மகுடம், சரப்பள்ளி, கண்டிகை, ஆரம், கை வளை, பல்வேறு அணிகலன்கள், பாதம் வரையிலான ஆடை அமைப்புகள், மார்புக்கச்சை, உதரபந்தம் போன்ற கலைக்கூறுகள் சிற்பத்திற்கு அழகூட்டுகின்றன. விஜயநகர, நாயக்கர் காலத்தைச் சேர்ந்த, முற்றுப்பெறாத இச்சிற்பம் பல்வேறு அணிகலன்களையும், ஆடைகளையும் கொண்டுள்ளது…தேவகோஷ்ட தோரணப்பகுதியில் இறைவியின் புடைப்புச்சிற்பங்கள் உள்ளன. அவை சிற்பக்கலையின் வளர்ச்சியினை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. மேற்குப்புறக் கருவறையின் வெளிப்புறத் தேவகோஷ்டத்தில் இறைவியின் நின்ற கோல சிறிய புடைப்புச்சிற்பம் திரிபங்க நிலையில் உள்ளது. அணிகலன்களும், ஆடை அமைப்பும் நிறைவாக உள்ளன. இரண்டு கைகளில் ஒன்றில் பத்மம் உள்ளது. மற்றொரு கை அபய முத்திரையில் உள்ளது. வடக்குப்புறக் கருவறையின் வெளிப்புறத் தேவகோஷ்டத்தில் இதேபோன்ற கோலத்தில் சமபங்கத்தில் நான்கு கைகளுடன் ஒரு சிற்பம் உள்ளது. மேல் இரு கைகளில் பத்மங்களும், கீழ் இரு கைககளில் அபய, வரத முத்திரைகளும் இடம் பெற்றுள்ளன. அலங்காரத்திற்கு தேவையான அனைத்துக் கோட்பாடுகளும் இச்சிற்பத்தில் காட்டப்பட்டுள்ளன. கிழக்குப்புறக் கருவறையின் வெளிப்புறத் தேவகோஷ்டத்தில் இறைவியின் அமர்ந்த கோல சிற்பம் நான்கு கைகளுடன் உள்ளது. மேலிரு கைகளில் சிவனுக்குரிய ஆயுதங்கள் உள்ளன. அபய, வரத முத்திரைகள் உள்ளன. ஒரு சில சிற்பங்களில் விஷ்ணுவிற்குரிய ஆயுதங்களான சங்கு சக்கரமும், அபய வரத முத்திரைகளும் உள்ளன.”

ஒவ்வொரு சிற்பத்தையும் பார்க்கவேண்டிய உத்திகளை அவருடைய எழுத்து மூலமாக அறியமுடிகிறது. சிற்பங்களைப் பற்றிய அடிப்படையான செய்திகள் மட்டுமன்றி, முக்கியமான செய்திகளையும் அவர் முன்வைக்கும் விதம் படிக்கும் வாசகரையும், பக்தரையும் மிக நெருக்கமாக அழைத்துச்செல்வதைப் படிக்கும்போது உணரமுடிகிறது. ஆங்காங்கே கட்டடக்கலையின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறார்.

நூல்: சிற்பக்கலை
ஆசிரியர்: முனைவர் க. மணிவண்ணன் (அலைபேசி 99654 93171)
பதிப்பகம்: ஜி.எம்.அமுதன் பதிப்பகம், நாயக்கர்பேட்டை, பாரதி நகர், இளங்கார்குடி, பாபநாசம், தமிழ்நாடு 614 203 (அலைபேசி 94882 21817)
பதிப்பாண்டு:  செப்டம்பர் 2023
விலை ரூ.300