கும்பகோணத்தில் வீட்டிற்கு வரும் கடிதங்கள், வீட்டு வரி, மின்சார வரி ரசீதுகள், திருமண அழைப்புகள் போன்றவற்றை எங்கள் தாத்தா கம்பியில் குத்தி வைத்திருப்பார். சில சமயங்களில் முக்கியமான கடிதங்களை அதில் தேடிக் கண்டுபிடித்துவிடுவார். அந்த கடிதக் கம்பியில் எங்கள் தாத்தாவிற்கு பெருந்தலைவர் காமராஜர் எழுதிய கடிதத்தையும் நான் பார்த்துள்ளேன். தற்போது அது எதுவுமே இல்லை. நினைவில் மட்டுமே.
1976இல் வேலை வேண்டி விண்ணப்பித்த கடிதத்தின் நகலிலிருந்து என்னுடைய ஆவணக்கோப்பு தொடங்குகிறது. பின்னர் இலக்கியம் (1983 முதல்), மொழிபெயர்ப்பு (1999 முதல்), ஆய்வு (1994 முதல்) என்று பல தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டது. ஆய்வு தொடர்பானவற்றை களப்பணி, ஆதாரங்கள், கண்டுபிடிப்புகள், கட்டுரைகள், நாளிதழ் செய்திகள் என்ற வகையில் பிரித்துள்ளேன்.
அவ்வப்போதைய நிகழ்வுகளைப் பதிவதோடு, அந்தந்த பகுப்பில் சேர்த்துவிடுவதால், எளிதில் கண்டுபிடித்துவிடலாம். நேரத்தை பயனுள்ள பிற பணிகளில் பயன்படுத்தலாம். இந்த அடிப்படை ஒழுங்கு பல நிலைகளில் நம்மை மேம்படுத்திக்கொள்ள உதவும். என் குடும்பத்தாருக்கும் இதனைப் பழக்கப்படுத்தி உள்ளேன். அவர்களும், என்னைப் பார்த்து சில நண்பர்களும் இந்தமுறையைக் கடைபிடித்து வருகின்றார்கள்.
வேலைக்கு அனுப்பிய முதல் விண்ணப்பம், எனக்கு வேலை கிடைத்ததாக வந்த முதல் தந்தி, பல்வேறு நிறுவனங்களுக்கு நான் வேலைக்காக அனுப்பிய விண்ணப்பங்கள், அதற்கான பணியாணைகள், முதன்முதலாக சைக்கிள் வாங்கியது, என் திருமண அழைப்பு தொடங்கி இல்லத்தின் முக்கிய நிகழ்வுகள் தொடர்பான அழைப்பிதழ்கள், நாளிதழ் வார இதழ்கள், முக்கியப் பிரமுகர்களுடனான கடிதப்போக்குவரத்து என்ற வகையில் இவற்றில் ஆவணங்கள் உள்ளன. ஆரம்ப காலத்தில் பொருளடக்கம் அமைக்காமல் இருந்தேன். பின்னர் எளிதில் கண்டுபிடிக்க வசதியாக அந்தந்த ஆண்டிற்கான பொருளடக்கத்தை பொருண்மைவாரியாக அமைக்க ஆரம்பித்தேன்.
ஃபூல்ஸ்கேப் அளவு தாளில் ஆரம்பித்த அக்கோப்புகள் நாளடைவில் ஏ4 அளவிற்கு மாறின. அவ்வாறே சாதா அட்டை நூற்கட்டில் (wrapper binding) இருந்து தற்போது ஸ்பைரலுக்கு (spiral binding) மாறிவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கடிதத்தையோ, குறிப்பிட்ட ஆவணத்தையோ பார்க்கும்போது அடைகின்ற மன நிறைவு அளவிடமுடியாதாதது. அது நம்மை அக்காலகட்டத்திற்கு அழைத்துச் சென்றுவிடும். ஒவ்வொரு முறை நூற்கட்டு செய்தபின்னர் அதனை ஒரு முறை முழுமையாகப் புரட்டிப் பார்த்துவிட்டு பாதுகாப்பாக வைக்கும்போது ஒரு பெரிய சாதனையைப் படைத்த நினைவு மனதில் தோன்றும். எழுத்து, வாசிப்பு, ஆய்வு என்ற பல நிலைகளில் என்னைத் திரும்பிப் பார்த்துக்கொள்ளவும், சுய மதிப்பீடு செய்துகொள்ளவும் இந்த முறை உதவுகிறது. 50 ஆண்டுகளாக மேற்கொள்ளும் இப்பணியை இனியும் தொடர்வேன்.
அருமையான சிறப்பான செயல் ஐயா...
ReplyDeleteவித்தியாசமான ஒழுங்குமுறை... சில நேரங்களில் வாழ்க்கையின் சில பகுதிகளைத் திரும்பிப்பார்க்க விழையமாட்டோம்.
ReplyDeleteஎன் அப்பா கொஞ்ச காலம் இதை கடைப்பிடித்து வந்தார். நாங்கள் அரசாங்கத் குடியிருப்புகளில் வசித்ததால் இது தொடர சாத்தியமில்லாது போயிற்று. உண்மையிலேயே நல்ல வழக்கம். இந்தக் காலத்தில் யார் கடிதம் எல்லாம் போடுகிறார்கள்!
ReplyDelete