வே. பார்த்திபன் எழுதியுள்ள சோழநாட்டு நடுகற்கள் (முன்னு பெரும் முன்னோர் மரபு) என்னும் நூல் திருச்சிராப்பள்ளி மாவட்ட நடுகற்கள் மற்றும் தொல்லியல் சின்னங்கள், பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட நடுகற்கள், தஞ்சாவூர்-திருவாரூர்-நாகப்பட்டினம்-கடலூர்-மயிலாடுதுறை மாவட்ட நடுகற்கள், கரூர்-புதுக்கோட்டை எல்லைப்பகுதி நடுகற்கள், சேலம்-நாமக்கல் எல்லைப்பகுதி நடுகற்கள் என்னும் உட்தலைப்புகளையும், உரிய ஒளிப்படங்களையும் கொண்டு அமைந்துள்ளது.
நூலாசிரியர், ஜி.பி.எஸ்.தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியவிதம்
இந்நூலின் சிறப்புக்கூறாக உள்ளது. நூலிலிருந்து சில நடுகற்களைப் பற்றிக்காண்போம்.
….பொதுவாக நடுகல் போர்க்குடிகளும், வனவிலங்கிலிருந்து
ஊரைக் காத்த வேட்டுவ, வேளாண் குடிகளும் எழுப்புவர். முதன்முதலாய் பிராமணர்
ஒருவரக்கு இந்நடுகல் (நன்னிமங்கலம் நடுகல்) எழுப்பப்பட்டுள்ளது. அவ்வகையில் இது
முக்கியத்துவம் பெறுகிறது. (ப.59)
…திருச்சி மாவட்டம் இரட்டமலையில் வேட்டை கருப்பர்
நடுகல் உள்ளது. குதிரையைக் காவு கொடுத்த
வேட்டன் மதிரை இன்று வேட்டைக்கருப்பாக வணங்குவதைக் காணமுடிகிறது.…இதுபோன்ற
போர்க்கருவிகள் சூழ குதிரையுடன் கூடிய நடுகல் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை.
(ப.65)
…வீரனின் முழு உருவமும், முழுக்கச் சிதைந்துள்ளதால்
நீண்ட நேரம் உற்றுப் பார்த்தே அடையாளம் காண வேண்டியுள்ளது. அப்பகுதி மக்கள்
இவ்வீரனின் உருவமும், பெயரும் அறியாததால் இவரை பெண் தெய்வம் எனக் கருதி
செல்லாண்டியம்மன் என்ற பெயரில் வழிபடுகின்றனர். (ப.70)
….தமிழகத்தின் பல இடங்களில் கேட்பாரற்றும,
புறக்கணிக்கப்பட்டும், தெருவில் வீசியும், குப்பைக்கூளங்கள் மத்தியில் கிடக்கும்
நடுகல் சிலைகளைப் பார்த்ததுண்டு. ஆனால் ஒரு நடுகல்லிற்கு கோவிலெழுப்பி வழிபாடு
செய்யும் இவ்வூரார் (ஸ்ரீராமசமுத்திரம்) போற்றத்தக்கவராவர். (ப.107)
….அவ்வூரில் (நத்தம்) ஒரு நம்பிக்கை. அங்கு ஒரு
கற்சிலை உண்டு. என்ன சிலையென்று ஊரார் அறிந்திருக்கவில்லை. இச்சிலை எப்போதும்
கவிழ்ந்தே கிடக்கும். ஊரில் தண்ணீர் பஞ்சம் வரும்போது இச்சிலையை பிரட்டி விடுவர்.
அன்று மழை பெய்யுமாம். மறுபடியும் வெள்ளக்காடாய் ஆனதும், மீண்டும் அச்சிலையைக்
கவிழ்த்துவிடுவார்கள்….(ப.113)
…குத்துக்கற்கள் நட்டு வைக்கப்பட்ட திறந்த வெளியே
அவ்வா தாத்தா கோயில் எனப்படுகிறது. பெரும் குத்துக்கல் தாத்தா எனவும், ஒன்றரை அடி
உயரத்துடன் வணங்கிய நிலையில் உள்ள பெண் சிற்பம் அவ்வா (பாட்டி) எனவும்
வழங்கப்படுகின்றன. பிற குத்துக்கற்கள் முன்னோர்களாகக் கருதப்பட்டு
வணங்கப்படுகின்றன. (ப.145)
…கும்பகோணம், சார்ங்கபாணி கோவிலின் தேர்முட்டியில்
உள்ள அரிகண்ட சிற்பம், தேரினை வலம் வர செய்ய தன்னுயிரை நீத்தவரைக் குறிக்கிறது.
தேர் நின்று போகாமலும், நல்லபடியாக வலம் வரவும், அவ்வாறு நகர்ந்து வரும்போது
நேர்த்திக்கடனாகச் சிலர் தம் இன்னுயிரை பலியிட்டுக் கொண்ட சம்பவம்
நிகழ்ந்ததுண்டு. (ப.170)
களப்பணியின்போது பதிவு செய்யப்படாத புதிய நடுகற்கள் சுமார் 25க்கு மேல் கண்டறிந்துள்ளதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். முழு ஈடுபாட்டோடு குறிப்பிட்ட ஒரு துறையில் பயணித்து வரலாற்றுக்குப் பெரும் பங்களித்துள்ள முயற்சி போற்றத்தக்கது. சோழ நாட்டில் உள்ள நடுகற்கள் குறித்து தனித்துவமான நூலை உருவாக்கிய நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
தலைப்பு : சோழநாட்டு நடுகற்கள் (மன்னு பெரும் முன்னோர்
மரபு)
ஆசிரியர் : வே.பார்த்திபன்
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை 600 050 தொலைபேசி 044-26251968/26258410
பதிப்பாண்டு : முதல் பதிப்பு, ஏப்ரல் 2025
விலை : ரூ.180
வாழ்த்துகள் நண்பரே
ReplyDelete