12 May 2025

வேலைக்கு முதல் விண்ணப்பம் 12 மே 1976

“படிக்காட்டி முச்சந்தியில்தான் நிப்பே, படி” என்று கும்பகோணத்தில் வீட்டில் எங்கள் தாத்தா அடிக்கடி கூறுவார். எப்போதாவது அன்பாகவும் அறிவுரை சொல்வார். இவை சொந்தக்காலில் நிற்கவேண்டும், நேர்மையாக நடக்கவேண்டும், நல்ல பழக்கவழக்கங்களைக் கடைபிடிக்கவேண்டும் என்பன போன்ற எண்ணங்களை பள்ளிக்காலத்தில் விதைத்தது. 


மார்ச் 1975இல், கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவினை எதிர்பார்த்த நேரத்தில் வீட்டுச்சூழல் காரணமாக வேலையில் சேரவேண்டிய கட்டாயம் இருந்தது.  எந்நேரத்திலும் வேலையில் சேரத் தயாராக வேண்டும் என்ற இலக்கினை மனதில் கொண்டேன்.

2017இல், நான் படித்த பள்ளியின் நுழைவாயிலில்

அதற்காக என்னை ஆயத்தப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தேன். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வின் விடுமுறையில் கும்பகோணம், ஈஸ்வரன் தட்டச்சுப் பயிற்சி நிலையத்திலும், தொடர்ந்து பாரத் தட்டச்சுப் பயிற்சி நிலையத்திலும் ஆங்கிலத் தட்டச்சுக் கற்க ஆரம்பித்தேன். அதற்கு சற்று முன்பாக இந்தி பிராத்மிக் சேர்ந்து கற்க ஆரம்பித்திருந்தேன். கல்லூரிப் படிப்பைவிட இவை போன்ற கூடுதல் தகுதிகள் பணியில் சேருவதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நண்பர்கள் கூறினர்.  அவ்வாறு நான் கற்ற ஆங்கிலமும், இந்தியும் பின்னாளில் நான் பணியில் சேர்ந்தபோது மிகவும் உதவின. அதே காலகட்டத்தில் நான் ஆங்கில இந்து நாளிதழ் வாசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

ஏப்ரல் 1975இல் நடைபெற்ற தேர்வில் 600க்கு 311 மதிப்பெண்கள் பெற்று எஸ்.எஸ்.எல்.சி.யில் தேர்ச்சி பெற்றேன். கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் பி.யு.சி. சேர்ந்துபடிக்கவேண்டும் என்ற ஆசை என் மனதுள் ஓடிக்கொண்டிருந்தது.  படிக்க வசதியில்லை என்று கூறி, எங்கள் வீட்டில் என்னை கும்பகோணம், பெரிய தெருவிலுள்ள இருளப்பன் மிளகாய் மண்டியில் சேர்த்துவிட்டார்கள். என்னுடன் பள்ளியில் படித்த பல மாணவர்கள் கல்லூரியில் பி.யு.சி. சேர்ந்து படிக்கவிட்டார்கள்.  தொடர்ந்து மிளகாய் மண்டியில் வேலை பார்த்துவந்தேன். கல்லூரிக்குச் சென்ற நண்பர்களைப் பார்த்ததும் படிக்கும் ஆசை அதிகமானது. வீட்டைவிட்டு ஓடிவிடுவேன், காவிரியாற்றில் விழுந்துவிடுவேன் என்றெல்லாம் வீட்டிலுள்ளோருக்குப் பலவகையில் தொந்தரவு கொடுத்து பி.யு.சி.யில் சேர்ந்தேன். 

சேர்வதற்கு முன்பாக சிலர் தஞ்சாவூர் வேலை வாய்ப்பகத்தில்  பதிந்துவிட்டால் வேலை கிடைக்கு வாய்ப்புண்டு என்று கூறினர். அதன்படி வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்தேன். 1975இல் பதிவு செய்தபின்னர் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நேரில் சென்று புதுப்பித்துக்கொண்டேயிருந்தேன்.

கும்பகோணம் கல்லூரியில் பி.யு.சி. சேர்ந்து, மார்ச் 1976இல் நடைபெற்ற தேர்வில் மூன்றாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். பின்னர் பி.ஏ. பொருளாதாரம் படித்ததும், வேலைக்குச் சேர்ந்ததும் தனிக்கதை.


பி.யு.சி. தேர்வெழுதி, தேர்வு முடிவிற்காகக் காத்திருந்தபோது வேலைக்கு விண்ணப்பங்கள் அனுப்ப ஆரம்பித்தேன்.  அவ்வாறாக முதன்முதலாக நான் தட்டச்சு செய்து அனுப்பிய விண்ணப்பத்தின் நகல் (கார்பன் காப்பி) இன்னும் என் கோப்பில் இருந்துகொண்டு, அந்நாள்களை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது. எதிர்பார்ப்பு, ஏக்கம் என்ற பல நிலைகளில் எப்படியும் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை தொடர்ந்தது. சுமார்  50 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் நான் எதிர்கொண்ட முதல் தட்டச்சு அனுபவம் வித்தியாசமானது. 17 வயதில் நான் தட்டச்சிட்ட கடிதம் இன்னும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. ஃபூல்ஸ்கேப் அளவுள்ள இரு தாள்களுக்கு இடையே அதே அளவு கார்பன் பேப்பரை ஆங்கிலத் தட்டச்சுப்பொறியில் வைத்து 1+1 தட்டச்சு செய்தேன். ஆசிரியர்களிடமும், சக நண்பர்களிடமும் கடிதத்திற்கான வரைவினைப் பற்றி அறிந்தேன். ஆங்கிலத்தட்டச்சுத் தேர்விற்காக நான் தட்டச்சிட்ட இரண்டாம் தாள் (I Paper Speed, Second Paper: Letters & Others) மூலமாக கடித அமைப்பைத் தெரிந்துகொண்டேன். அப்போதெல்லாம் ஏ4 அளவு தாள் பயன்பாடு கிடையாது.  கூகுளும் கிடையாது. 

பத்தியின் முதல் வாக்கியத்திற்கு அதிக இடைவெளிவிட்டது (ஐந்து எழுத்து இடைவெளி அல்லது ஒரு டேப் போதும்), எழுதிய சொற்கள் (“Having come to understand…”, “…abovesaid Factory, “…your Honour’s control”, ”Dear” என்பதற்குப் பதிலாக ”Respected”), வேலை வாய்ப்பக எண்ணைத் தந்தால் உடன் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அந்த எண்ணைப் பதிவு செய்தல் போன்ற உத்திகளைக் கடிதத்தில் பயன்படுத்தியதைப் பார்க்கும்போது எனக்கு வியப்பாக உள்ளது. எந்த பதவிக்கு விண்ணப்பிக்கிறேன் என்றோ, முடித்திருந்த பி.யு.சி. தேர்ச்சி, தட்டச்சு அறிவு போன்ற தகுதிகளையோகூட நான் குறிப்பிடவில்லை. அப்படியிருந்தும், முதன்முதலாக நண்பன் வேலைக்காக தட்டச்சிட்ட கடிதம் என்ற வகையில் நண்பர்களும், தட்டச்சு நிறுவனத்தினரும் அதிகம் பாராட்டினர்.  அன்று முதல் இன்றுவரை தட்டச்சினை நான் ஒரு கலையாகவே கருதி வருகிறேன்.

தாத்தா, ஆத்தா, பெற்றோர், வளர்த்தவர்கள் ஆரம்ப காலத்தில் போட்ட வித்தானது படித்து முடித்து வேலையில் சேர்ந்தது முதல் என்னை பல வழிகளில் நன்னெறியில் நடத்திச்சென்றதை உணர ஆரம்பித்தேன். நான் பெற்ற இந்தப் பாடமே பின்னர் என் மகன்களை வாழ்வில் மூன்று Dக்கள் (Discipline, Decency மற்றும் Decorum) இருக்கவேண்டும் என்று கூறி வளர்க்க உதவியாக இருந்தது. வளரும் காலத்தில் தரப்படுகின்ற முக்கியத்துவம் வளர்ப்பவர்களுக்கு பெருமை சேர்ப்பதோடு, பிள்ளைகளை நன்னெறிக்கு இட்டுச்செல்லும்.

இன்னும் பாதுகாத்து வருகின்ற அதன் நகலைப் பார்க்கும்போதெல்லாம் நண்பர்களுடன்  அரட்டையடித்த நாள்களும்,  அதனை அனுப்பிவிட்டு பணி ஆணைக்காக தபால்காரரை எதிர்பார்த்த நாள்களும், கும்பகோணம், கே.ஜி.கே.தெருவின் அழகான எங்கள் வீடும் நினைவிற்கு வந்துவிடும்.  

1 comment:

  1. உங்கள் நினைவு, இப்போது நீங்கள் இருக்கும் நிலையை மற்றும் முனைவராகி நல்ல நிலையில் வேலை செய்தது போன்றவற்றை ஒப்பீடு செய்யும்போது உங்களுக்குத் திருப்தியை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete