18 February 2026

முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம்: சில நினைவுகள்

தனியார் நிறுவனங்களில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றிவிட்டு, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தட்டச்சுச்சுருக்கெழுத்தராக 16.8.1982இல் பணியில் சேர்ந்து, பல பொறுப்புகளில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி உதவிப்பதிவாளராக 30.4.2017இல் பணி நிறைவு பெற்றேன். 


நான் பணியில் சேர்ந்தபோது முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்கள் முதல் துணைவேந்தராகப் பொறுப்பில் இருந்தார். அவருடைய காலகட்டத்தில் பணியாற்றும்போது பெற்ற அனுபவங்கள் என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்களாகும். அப்போது பல்கலைக்கழகம், அரண்மனை வளாகத்தில் இயங்கிக்கொண்டிருந்தது.


தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்த காலத்தில் பதிவாளர் பிரிவிலும் பதிப்புத்துறையிலும் பணியாற்றினேன். துறைக்கு வரும்போது சில சமயங்களில் திடீரென தட்டச்சுப்பொறிமீதோ, மேசைமீதோ ஆட்காட்டி விரலை வைத்து லேசாகத் தேய்த்துப் பார்ப்பார். பணியாற்றும் இடமும், பயன்படுத்தும் பொருள்களும் சுத்தமாக இருக்கவேண்டும் என்பது அவர் எண்ணம். அவர் வருவதற்குள் நாங்கள் இடம் சுத்தமாக இருப்பதை உறுதி செய்துகொள்வோம். அனைவருடைய பணியிலும் ஒழுங்கு கடைபிடிக்கப்படும். ஒவ்வொரு பணியாளரும் தத்தம் பணிகளைக் கண்ணும் கருத்துமாக மேற்கொள்வோம். நேரந்தவறாமை, திட்டமிடல் போன்றவற்றில் கவனமாக இருப்பார்.  

பணியில் சேர்ந்த ஒரு வாரத்தில், தமிழ் சிவிலிசேசன் காலாண்டிதழை அனுப்பிவைக்கும்படி வட இந்தியாவிலிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அப்போதிருந்த பதிவாளர் முனைவர் சு.செல்லப்பன் அவர்கள், அதற்கான  மறுமொழியைத் தமிழில் கூறி அதனைத் தட்டச்சிட்டுக் கொண்டுவரும்படி கூறினார். எவ்விதத் தவறுமின்றி அதனை நான் ஆங்கிலத்தில் தட்டச்சிட்டு அவரிடம் கொடுத்தேன். சுமார் 50 சொற்களைக்கொண்ட ஒரே வாக்கியத்தில் அந்த மறுமொழி இருந்தது. இப்பொழுது நினைத்தாலும் எனக்கு வியப்பாகவும் உள்ளது. அவர், அந்த ஆங்கிலக் கடிதத்தை சக பணியாளர்களிடம் காண்பித்து என்னுடைய மொழிபெயர்ப்பையும், ஆங்கில வரைவு எழுதும் முறையையும்  பாராட்டினார். தொடர்ந்து ஆஙகில வரைவுகள் எழுதும் பணிகளை மேற்கொண்டேன்.


சேர்ந்த ஒரு மாதத்திற்குள் நான் உள்ளிட்ட ஒன்பது சுருக்கெழுத்தர்களுக்கும் தரப்பட்ட ஒரு கடிதத்தில் (25.8.1982) “அலுவலர்களும், கல்விநிலைப்பணியாளர்களும் தம்கீழ் பணியாற்றும் சுருக்கெழுத்தர்களின் சேவையை வெளிநாட்டில் உள்ளதுபோல நல்லமுறையில் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அலுவலர்களோ, கல்விநிலைப் பணியாளர்களோ இல்லாத சமயத்தில் அவர்கள்கீழ் பணியாற்றும் சுருக்கெழுத்தர்கள் அந்தந்தப் பிரிவினை செயலாளர்கள் போலக் கவனித்துக்கொள்ளவேண்டும்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. பணியின்மீதான பொறுப்பும் அதற்கான எங்களுடைய மதிப்பும் உயர்ந்ததாக நாங்கள் உணர்ந்தோம்.

அலுவலகக்குறிப்பினை துணைவேந்தரின் இசைவுக்காக அனுப்பும்போது அலுவலர்களின் பெயர்களை வரிசையாகத் தட்டச்சிட்டுவிட்டு, மாண்புமிகு துணைவேந்தரவர்கள் என்று தட்டச்சிடுவோம். அவர் எங்களுக்கு அனுப்பிய 1.10.1984 நாளிட்ட சுற்றறிக்கையில்  “துணைவேந்தர் பதவிக்கு முன் ‘மாண்புமிகு’ என்றும் ஆங்கிலத்தில் ‘ஆணரபிள்’ என்றும் அச்சடிப்பதையும், தட்டச்சு செய்வதையும், மேடையில் கூறுவதையும் அருள்கூர்ந்து நிறுத்திவிடுமாறு, கலைமகள் விழா தொடங்குவதற்குமுன் தமிழ்ப் பல்கலைக்கழகப் பணியாளர்கள் ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.” பின்னர் நாங்கள் அலுவலகக்குறிப்பு தட்டச்சிடும்போது துணைவேந்தரவர்கள் என்றே குறிப்பிட ஆரம்பித்தோம்.  

பல பணிகளை மேற்கொண்டபோதிலும் எனக்குக் கிடைத்த பேறாக நான் நினைப்பது நான் மேற்கொண்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைச்சட்ட விதிகளைத் தட்டச்சு செய்யும் பணியாகும். அந்த கிடைத்தற்கரிய பொறுப்பினை என்னிடம் தந்து, “மிகவும் கவனம். இதைப் பற்றி யாரிடமும் விவாதிக்கக்கூடாது. நுணுக்கமாகத் தவறின்றிச் செய்யவேண்டும்” என்று கூறினார்.  அப்போதிருந்த துணைப்பதிவாளர் முனைவர் முத்துக்குமாரசுவாமி அவர்களின் வழிகாட்டலில் தட்டச்சுப்பணியை மேற்கொண்டேன்.   பூல்ஸ்கேப் வடிவ தாளில் சுமார் 120 பக்கங்கள் ஸ்டென்சில் தட்டச்சிட்டு, படியெடுக்கப்பட்டது. நூற்கட்டு செய்து அனைத்துத் துறைகளுக்கும் அப்போது அனுப்பப்பட்டன. வழக்கமான இருக்கைப்பணிகளோடு அப்பணியை அவருடைய ஆணைப்படி நிறைவு செய்தேன். ஆரம்ப காலப்பணிகளில் எனக்குக் கிடைத்த அபூர்வமான வாய்ப்பாகவும், மறக்கமுடியாத பணியாகவும் இப்பணி அமைந்தது. இதற்காக அனைவரின் பாராட்டையும் பெற்றேன்.

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுடைய  தமிழில் இலக்கிய வரலாறு என்ற ஆங்கில நூலின் வரைவை சக பணியாளர்களுடன் தட்டச்சு செய்யும் பணியினை மேற்கொண்டேன். அவ்வப்போது அவரே வந்து அருகில் அமர்ந்திருந்து தட்டச்சில் ஆங்கில மொழி தொடர்பாக எழும் ஐயங்களைத் தெளிவுபடுத்துவார். சில சமயங்களில் அவர் சொல்லச்சொல்ல நான் தட்டச்சு செய்ததும் உண்டு. ஆங்கிலத்தட்டச்சுப் பணியை பாராட்டியதோடு அலுவலர்களிடமும் இதைப் பற்றி அவர் கூறினார். 

சற்றொப்ப அதே காலகட்டத்தில் கல்வெட்டுத்துறை சார்பாக நடைபெற்ற சிந்து வெளி எழுத்துக் கருத்தரங்கு (Indus Script Seminar) தொடர்பான பணிகளை சக உதவியாளர் திரு மகேந்திரராவ் உடன் மேற்கொள்ளும்படி பணிக்கப்பட்டேன். ஒருங்கிணைப்பாளர் அறிஞர் ஐராவதம் மகாதேவனுக்கும், ஆய்வுறிக்கைகள் அளிக்கும் ஆய்வாளர்களுக்கும் நிகழ்வு நடைபெறும் நாள்களில் உரிய வசதிகள் செய்துகொடுப்பதும் எங்கள் பணியாக இருந்தது. கருத்தரங்கு, ஆய்வாளர் என்பதற்கெல்லாம் பொருள் தெரியாத அந்தச்சூழலில் ஒரு பெரிய பொறுப்பை ஏற்று முடித்தது வித்தியாசமான அனுபவம்.  லண்டனிலிருந்து வந்திருந்த அறிஞர் முனைவர் கீனியர் வில்சன் என்பவருடைய கடவுச்சீட்டை அலுவலக நண்பர் இடம் மாற்றிவைத்துவிட்டு அதனை நாங்கள் தேடிக் கண்டுபிடிப்பதற்குள் பட்ட மன உளைச்சல் ஒரு தனிக்கதை. நிகழ்விற்குப் பின் ஒருங்கிணைப்பாளர் எங்களைப் பாராட்டினார். 

தமிழில் ஒரு காலாண்டிதழ் வரவேண்டும் என்று துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய்.சுப்ரமணியம் அவர்களால் முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது அதற்கான அலுவலகக்குறிப்பினைத் தட்டச்சு செய்யும் வாய்ப்பினைப் பெற்றேன். Tamil Civilization என்பதற்கு இணையாக தமிழ் சிவிலிசேசன் (ஆங்கிலத்தில் உள்ளபடியே தமிழில்), தமிழ்ப்பண்பாடு, தமிழ்க்கலை என்ற பெயர்கள் (தலைப்புகள்) பரிந்துரைக்கப்பட்டன. இறுதியாக தமிழ்க்கலை என்ற பெயர்  தெரிவு செய்யப்பட்டது.

ஆங்கிலக் காலாண்டிதழின் முகப்பட்டை வடிவமைக்கப்படும்போது என்னால் மேற்கொள்ளப்பட்ட ப்ளாக் தயாரிப்பு, அட்டை வடிவமைப்பு உள்ளிட்ட பல ஆயத்தப் பணிகள் மறக்கமுடியாதவை.  வடிவமைப்பில் நேர்த்தி, எழுத்துருவில் தெளிவு, உள்ளடக்கத்தில் உலகளாவிய தரம், ஆடம்பரமற்ற அதே சமயம் பார்வைக்கு உயர்ந்த தரம் என்ற நிலையிலும், திருவனந்தபுரத்திலிருந்து வெளிவரும் ISDL இதழின் அமைப்பிலும் அமையவேண்டும் என்று பதிவாளர் வழியாக ஆணையிட்டிருந்தார். முதல் இதழ் வெளியானதும் கட்டுரையாளர்களுக்கு இதழின் படியும், கட்டுரைப்படிகளும் (offprints) அனுப்பும்போது பெற்ற அனுபவமும்கூட மறக்கமுடியாதனவாகும். கீழ ராஜ வீதியில் ப்ளாக் தயாரிக்கும் கடையில் பல்கலைக்கழக எம்ப்ளம் தயாரித்து வாங்கி வந்தது நினைவில் உள்ளது. 

வாசிப்பினை ஊக்குவிக்கவும், பிற இதழ்களுக்கு ஆதரவு தரவும் தமிழ் சிவிலிசேசன் மற்றும் தமிழ்க்கலை இதழ்களுக்கு உறுப்பினர் கட்டணம் செலுத்தியவர்களுக்கு செந்தமிழ்ச்செல்வி, தமிழ்ப்பொழில், செந்தமிழ், கலைக்கதிர், விஞ்ஞானச்சுடர் ஆகிய ஐந்து மாத இதழ்கள் 200 எண்ணிக்கை பெறப்பட்டு அன்பளிப்பாக அனுப்பிவைக்கப்பட்டன. பெயர்ப்பட்டியலைத் தயாரித்து, உள்நாடு, வெளிநாடு என பிரித்து விடுபாடின்றி அனுப்பும் பணியானது சற்றே சிரமமாக இருந்தாலும் குறையின்றி அப்பணி மேற்கொள்ளப்பட்டது.

அவ்வாறே ஒவ்வொரு மாதமும் வெளிவருகின்ற தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவருகின்ற செய்தி மலருக்காக (தமிழ்ப் பல்கலைக்கழகச் செய்தி மலர், Tamil University News Bulletin) செய்திகளைத் திரட்டுவதும், தட்டச்சு செய்வதும், விடுபாடின்றி உறுப்பினர்களுக்கும், முக்கிய நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் அனுப்பிவைக்கும் பணியை சக பணியாளர்களுடன் இணைந்து மேற்கொண்டேன். சில மாதங்கள் ஒவ்வொரு துறையிலிருந்தும் மலருக்கான செய்தியைப் பெறும் பணியையும், அதனைத் தட்டச்சிடும் பணியையும் செய்தேன். விழா நிகழ்வுகளை வடிவமைக்கவேண்டிய முறை, புகைப்படங்களை வெளியாரிடமிருந்து பெறும்போது நன்றி கூறும் முறை உள்ளிட்ட பலவற்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. உரிய காலத்திற்குள் அவை அனுப்பப்படவேண்டும் என்று துணைவேந்தர் ஆணையிட்ட நிலையில் அப்பணியை பிற பணியாளர்களுடன் சேர்ந்து மேற்கொண்டேன். முதலில் அஞ்சல் வில்லையை ஒட்டி அனுப்பிக்கொண்டிருந்தோம். பின்னர் தலைமை அஞ்சலகத்தில் குறிப்பிட்ட தொகைக்கான காசோலையைத் தந்து அஞ்சல் வில்லை மதிப்பிற்கு ஈடாக ஃப்ராங்கிங் மிஷினில் பதிவு செய்துகொண்டு வந்து, அதனை அலுவலகத்திற்கு எடுத்துவந்து ஒவ்வொரு செய்தி மலரையும் அதில் வைப்போம். உரிய அஞ்சல் வில்லை மதிப்புக்குரிய அச்சு அதில் விழுந்துவிடும். பின்னர் மொத்தமாக அதனை அனுப்புவோம். விடுபாடின்றி செய்தி மலர் உரிய நேரத்திற்குள் அனுப்பப்படவேண்டும் என்பது எங்கள் பணியாக இருந்தது. 

செய்தி மலருக்கான செய்திகள் சில சமயங்களில் தமிழில் மட்டுமே வரும்போது அதனை ஆங்கிலச் செய்தி மலருக்காக மொழிபெயர்க்கும் பணி மேற்கொள்ளப்படும். அப்பணியில் நானும் ஆர்வமாக இணைந்துகொள்வேன். அவ்வாறே ஆங்கிலச் செய்தி மலர் இறுதி மெய்ப்புத்திருத்தப்பணியை மேற்கொண்ட அனுபவமும் உண்டு. இளநிலை உதவியாளர் என்ற பணிநிலைக்கு அப்பாற்பட்டு ஆர்வத்துடன் செய்ய ஆரம்பித்தது பிற்காலத்தில் எனக்கு பல வகையில் உதவியது. 

வேலூர், மத்திய சிறையிலிருந்த ஆயுள் தண்டனைக்கைதி ஒருவர் பல்கலைக்கழக வெளியீடுகள் மீது ஆர்வம் கொண்டு தனக்கு அனுப்பும்படி கடிதம் அனுப்பியிருந்தார். துணைவேந்தர் ஆணைப்படி தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்தி மலர் கட்டணம் பெறப்படாமல் அன்பளிப்பாக அவருடைய எண் குறிப்பிடப்பட்டு வேலூர் சிறை முகவரிக்கு தமிழ்ப்பல்கலைக்கழக தொடர்ந்து அனுப்பிவைக்கப்பட்டது.

ஒவ்வொரு நூலும் அச்சான பின்னர் அதன் இரு படிகளை துணைவேந்தருக்கு அனுப்பும் நடைமுறை இருந்தது. அன்றோ, மறுநாளோ அதன் மற்றொரு படி பதிப்புத்துறைக்கு அவருடைய குறிப்போடு திரும்பிவரும். அதை முற்றிலும் வாசித்து அவர் எழுதியுள்ள கருத்துகள் அதில் இடம்பெற்றிருக்கும். அதில் எதிர்மறைக் கருத்து எதுவும் இருக்கக்கூடாது என்று துறையினர் உள்ளிட்ட அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருப்போம். அதற்காக நூல் வடிவம் பெறும் வரை துறையினர் எடுக்கும் முயற்சிகள் ஏராளம். அவ்வாறாக ஏதேனும் குறை சுட்டப்பட்டிருந்தால் அடுத்தடுத்த நூல்களில் அது இடம்பெறாதவாறு பதிப்புத்துறையினர் பார்த்துக்கொள்வர்.

அலுவலகம் சாராத ஒரு நிகழ்வு. 1.9.1985இல் தஞ்சாவூர், கீழ ராஜ வீதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் எனக்குத் திருமணம் நடைபெற்றது. மாப்பிள்ளை அழைப்பு நிகழ்வாக கொண்டிராஜபாளையத்தைக் கடந்துகொண்டிருந்தபோது துணைவேந்தர் வந்து காத்துக் கொண்டிருப்பதாகக் கூறினர். ஆமை வேகத்தில் வந்த மாப்பிள்ளை ஊர்வலம் திருமண மண்டபத்தை அடையும்போது தாமதமாகிவிட்டது. "வந்து, காத்திருந்ததாகச் சொல்லுங்கள்" என்று அங்கிருந்தவர்களிடம் கூறிவிட்டு அவர் திரும்பிச்சென்றதாக அறிந்தேன். அவரிடம் நேரில் வாழ்த்து பெறமுடியவில்லை. விடுப்பு முடிந்து பணியில் சேர்ந்தபின்னர் துணைவேந்தர் செயலகத்தில் சென்று தாமதத்திற்கான காரணத்தைத் தெரிவித்துவிட்டு வந்தேன்.

சில வருடங்களுக்குப் பிறகு நான் எழுதிய படியாக்கம் நூலை அவருக்கு அனுப்பியிருந்தேன். அதைப் பாராட்டி எழுதியதோடு கண் சிகிச்சை செய்திருந்ததைத் தன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். 


அவர் இயற்கையெய்தியபோது தினமணி நாளிதழில் வெளியான கட்டுரையைப் பற்றி நான் எழுதிய கருத்து அவ்விதழில் இடம்பெற்றிருந்தது


முதல் துணைவேந்தர் காலத்தில் நான் மேற்கொண்ட பணியானது பிற்காலத்தில் என்னை ஓர் ஆய்வாளனாக உருவெடுக்கவைக்க உதவிய நிலையில் அவரையும்,  தமிழ்ப் பல்கலைக்கழகத்தையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

தொடர்புடைய பதிவு:

-----------------------------------------------------------------------------------
முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் நூற்றாண்டு (18.2.1926-29.6.2009)
-----------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment