16 March 2026

வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார் நினைவு தமிழ்ப்பரிதி விருது: ஏடகம்

தஞ்சாவூரில் ஏடகம் சார்பாக அரித்துவாரமங்கலம் பெரும்புலவர், புரவலர் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார் நினைவு தமிழ்ப்பரிதி விருது வழங்கும் விழா 5.1.2025இல் நடைபெற்றது.  

இவ்விழாவில் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன், முனைவர் கி.தங்கவேல், கவிஞர் ப.திருநாவுக்கரசு ஆகியோர் இவ்விருதினைப் பெற்றனர். இவ்விழாவில் வாழ்த்துரை வழங்குவோரில் ஒருவராக விருதாளர்களை வாழ்த்தும் வாய்ப்பினைப் பெற்றேன். 













-------------------------------------------------------------------------------------------
நன்றி: ஏடகம், நாளிதழ்கள்
-------------------------------------------------------------------------------------------

13 March 2026

கங்கை கொண்ட சோழீச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதியுள்ள கங்கை கொண்ட சோழீச்சரம் என்னும் நூல் கங்கை கொண்ட சோழீச்சரம்-திருக்கோயிலமைப்பும் வரலாறும், கட்டடக் கலைச் சிறப்புகள், எழில்மிகு சிற்பங்கள், செப்புத்திருமேனிகள், கருவூர்த் தேவரும் கங்கைகொண்ட சோழீச்சரத்துப் (திருவிசைப்பா) பதிகமும், கல்வெட்டுச் சாசனங்கள் என்னும் ஆறு தலைப்புகளையும், பின்னிணைப்புகளாக கங்கை கொண்ட இராஜேந்திர சோழன் பிறந்தநாள் ஆடிமாதத்து ஆதிரை நாளே, கல்வெட்டில் கங்கை கொண்ட சோழப்பேராறு என்னும் இரு பின்னிணைப்புகளையும் கொண்டுள்ளது.


திருக்கோபுரம் தொடங்கி கோயிலின் ஸ்ரீவிமானம், மகாமண்டபம் ஆகியவை உள்ளிட்ட கட்டடக்கூறுகளின் உரிய தரை வரைபட அமைப்புகள், 19ஆம் நூற்றாண்டில் அழிக்கப்பட்ட இரண்டாம் இராஜகோபுரத்தின் படம் உள்ளிட்ட படங்கள் நூலில் இடம்பெற்றுள்ளன. துவாரபாலகர் தொடங்கி கோயிலில் காணப்படும் சிற்பங்கள், பிற நாடுகளிலிருந்து கொணரப்பட்ட சிற்பங்கள் ஆகியவற்றின் கலைப்பாணி ரசனையுடன் விளக்கப்பட்டுள்ளது. பன்னிரு திருமுறை உள்ளிட்ட இலக்கியங்களிலிருந்து எடுத்தாளப்படுகின்ற மேற்கோள்கள் விவாதிக்கப்படுகின்ற பொருண்மைக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரும் வகையில் அமைந்துள்ளன. உரிய இடங்களில் அக்காலத்திய சோழர்காலப் பெருங்கோயில்களுடன் ஒப்பு நோக்கி நூலாசிரியர் நுணுக்கமாகத் தந்துள்ள விதம் அக்கோயில்களை நம் மனக்கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது. அவருடைய நூலின் துணையுடன் கங்கை கொண்ட சோழீச்சரம் செல்வோம்.



“…இக்கோயிலிலுள்ள இப்பெருவேந்தனின் மூன்றாம் மகனான வீரராஜேந்திரனின் கல்வெட்டுச் சாசனம் அப்பேரரசனின் தந்தை இராஜேந்திர சோழன் தன் 23ஆம் ஆட்சியாண்டில் (கி.பி.1035இல்) கங்கை கொண்ட சோழீச்சரம் எனும் இத்திருக்கோயிலுக்கென கொடுத்த நிவந்தங்களைப் பட்டியலிட்டுக் குறிப்பிடுகிறது. அதனால் இத்திருக்கோயில் முதலாம் இராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலந்தொட்டுத் திகழ்கின்றது என்பது உறுதியாகின்றது…” (பக்கம் 9)

“…கங்கை கொண்ட சோழீச்சரம் எனும் இப்பெருங்கோயில் மாமன்னன் முதலாம் இராஜேந்திர சோழனால்தான் எடுக்கப்பெற்றது என்பதை 1987ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் எசாலம் என்னும் ஊரிலுள்ள இராமநாதேசுவர சுவாமி கோயில் வளாகத்துள் புதையுண்டிருந்து வெளிப்பட்ட இராஜேந்திர சோழனின் 25ஆம் ஆண்டு (கி.பி.1037) செப்பேட்டுத் தொகுதியில் குறிக்கப்பெற்றுள்ள செய்தி இதனை உறுதி செய்கின்றது….” (ப.9)

“தஞ்சாவூர் இராஜராஜேச்சரம், தாராசுரம் ஐராவதீஸ்வரம், திருபுவனம் கம்பகரேஸ்வரம் போன்ற சோழர்காலப் பெருங்கோயில்களின் கட்டுமான அமைப்பை நோக்கும்போது எல்லா ஆலயங்களிலும் கிழக்கு நோக்கிய பிரதான வாயிலில் இரண்டு இராஜகோபுரங்கள் இருப்பதைக் காணலாம்….இக்கோயில்களுடன் கங்கை கொண்ட சோழீஸ்வரமாம் இவ்வாலயத்தை ஒப்பிட்டு நோக்கும்போது பண்டு திருச்சுற்று மாளிகையுடன் இணைந்த திருமதிலில் ஒரு இராஜகோபுரமும், அதற்கு வெளியே அதனினும் உயர்ந்ததோர் கோபுரம் ஒன்றும் இருந்ததற்கான தடங்களைக் காணமுடிகின்றது.” (ப.13)

“திருவையாறு ஐயாறப்பர் திருக்கோயில் வளாகத்தின் உள்ளேயே தென்கயிலாயம் என்ற கற்றளியும், வடகயிலாயம் என்ற கற்றளியும் இருப்பதுபோன்றே கங்கை கொண்ட சோழீச்சரத்திலும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.” (ப.15)

“புறத்தோற்றத்தில் ஒன்பது அடுக்குடைய கட்டுமானமுடையதாக ஸ்ரீவிமானம் காணப்பெற்றாலும் உள்கட்டுமான அமைப்பு அவ்வாறு அமைந்தது அன்று.” (ப.18)

“கங்கை கொண்ட சோழீச்சரத்து சிற்பப் படைப்புகளுக்கும் தஞ்சை இராஜராஜேச்சரத்துப் படைப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தஞ்சைப் பெருங்கோயிலை வடிவமைக்கும்போது அப்பெரும்பணியில் மாமன்னன் இராஜராஜனோடு இணைந்து பணியாற்றியவன் இராஜேந்திர சோழனாவான்.” (ப.35)

“எப்படி இருப்பினும் மேல்பாடி கல்வெட்டு இராஜேந்திர சோழனின் பிறந்த நாள் ஆடிமாதத்து ஆதிரையே என்று கூறுவதோடு, அங்கு அவ்விழா எவ்வாறு கொண்டாடப் பெற்றது என்பதை விவரிக்கும் ஓர் அரிய ஆவணம் என்பதில் ஐயமில்லை. ” (ப.194)

“கங்கை கொண்ட சோழீஸ்வரர் திருக்கோயிலுக்கு உரியனவாகத் தற்போது 23 செப்புத்திருமேனிகள் உள்ளன….. இவற்றில் ஆறு திருமேனிகள் மட்டும் இராஜேந்திர சோழன் காலத்தில் வடிக்கப்பெற்றவையாகும்.” (ப.117)

“சோழ நாட்டில் காவிரியிலிருந்து சோழப் பெருமன்னர்களால் தோற்றுவிக்கப்பெற்ற ஆறுகளுக்கு முடிகொண்ட சோழப் பேராறு, விக்கிரம சோழப் பேராறு, வீரசோழப் பேராறு, கீர்த்திமான் ஆறு, சூடாமணியாறு போன்ற பெயர்களைச் சூட்டினர் என்பதைக் கல்வெட்டுகள் வாயிலாக அறியமுடிகிறது. இன்றளவும் அப்பெயர்கள் மக்கள் வழக்கில் இருப்பது போற்றுதற்குரியதாகும்.” (ப.196)

“பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தியாகி, திருச்சி மாவட்டத்திற்கும், அரியலூர் மாவட்டத்திற்கும் பாசனம் தந்து கொள்ளிடப் பேராற்றின் உபநதியாகத் திகழும் கங்கைகொண்ட சோழப்பேராறு எனும் உப்பாற்றினை மீண்டும் பழைய பெயராலேயே அரசு தன் ஆவணங்களில் பதிவு செய்து அழைக்குமானால் நம் பழைய வரலாற்றினை மீண்டும் மக்கள் அறிந்திட உதவியாய் இருக்கும்.” (ப.197)

பெருமுயற்சி மேற்கொண்டு நூலாசிரியர் ஆவணப்படுத்தியுள்ள அரிய புகைப்படங்கள் நூலுக்கு அழகுசேர்ப்பதோடு, நம் முன்னோர்களின் கலைப்படைப்புகளை ரசித்து உணரும் வகையில் அமைந்துள்ளன. பல குறிப்பிடத்தக்க நூல்களின் மூலமாக ஆய்வாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் அறிமுகமானவர் நூலாசிரியர். அவருடைய ஒவ்வொரு நூலும் பல முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொள்ளும் அளவிற்குத் தரவுகளுடன் உள்ளவையாகும். தொடர்ந்து, இந்நூலின் மூலமாக வரலாற்றுக்குப் பெரும் பங்களித்துள்ள நூலாசிரியரின் முயற்சி போற்றத்தக்கதாகும். அவருடைய எழுத்துப்பணி தொடர எல்லாம்வல்ல இறையருளை வேண்டுகிறேன்.

தலைப்பு : கங்கை கொண்ட சோழீச்சரம்
ஆசிரியர் : குடவாயில் பாலசுப்ரமணியன்
பதிப்பகம் : அன்னம், மனை எண்.1, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613 007, கைபேசி 7598306030
பதிப்பாண்டு : முதல் பதிப்பு, 2026
விலை : ரூ.400
-----------------------------------------------------------
-----------------------------------------------------------


நூலாசிரியரிடம் நூலைப் பெற்ற இனிய தருணம் (22.2.2026)

05 March 2026

சைவ சித்தாந்த நன்னெறி: ச.சௌரிராசன்

சித்தாந்தச் செம்மணி, சிவத் தமிழ்ச் செல்வர் ச.சௌரிராஜன் எழுதியுள்ள சைவ சித்தாந்த நன்னெறி என்னும் நூல் அருளாசியுரை, வாழ்த்துரை, அணிந்துரை, முன்னுரை ஆகியவற்றுடன் சைவ சித்தாந்தம், அடிப்படைச் செய்திகள், குரு மரபு, சைவ சித்தாந்த சாத்திரங்கள், பதி உண்மை-இயல்பு, பசு உண்மை-இயல்பு, ஆணவ மல உண்மை-இயல்பு, கன்ம மல உண்மை-இயல்பு, மாயா மல உண்மை-இயல்பு, இறைவன்-சிவசத்து, குருநாதர் ஞானத்தை உணர்த்தும் முறை, சீவன் முத்தரின் வாழ்வும் சாதனைகளும், பாச நீக்கம், சிவப்பேறு, அணைந்தோர் தன்மை என்னும் 15 தலைப்புகளையும் கொண்டு அமைந்துள்ளது.


திருவாவடுதுறை ஆதீனம் நடத்துகின்ற சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பின் ஆசிரியராக நூலாசிரியர் சைவ அன்பர்களுக்கு மிகவும் அறிமுகமானவர். இந்தப் பயிற்சி வகுப்பில் மாணவராக நானும் இருந்தது எனக்குக் கிடைத்தப் பெரும் பேறாகும். சைவ சித்தாந்தக் கருத்துகளை சரியான உதாரணங்களோடு மிகவும் நிதானமாக மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் வகுப்பில் அவர் கூறுவதைக் கேட்ட அனுபவம் எனக்கு உண்டு. தொடர்ந்து சைவப்பணியாற்றிவருகின்ற அவர், தன்னுடைய பல்லாண்டு அனுபவத்தை அனைவருக்கும் சென்று சேரும் வகையில் நூலாக்கித் தந்துள்ளவிதம் போற்றத்தக்கதாகும். ஒரு பறவைப்பார்வையாக நூலைக் காண்போம்.

“….பதி, பசு, பாசம் ஆகிய மூன்று பொருள்களும் என்றும் உள்ள அனாதி நித்தியப் பொருள்கள் என்று சைவ சித்தாந்தம் ஆய்ந்து கூறுகிறது. இந்தக் கருத்தைத் திருமூலதேவ நாயனாரும் ‘பதியினைப் போல் பசு பாசம் அனாதி’ என்று அருளிச் செய்துள்ளார்.” (பக்கம்.9)

“தண்ணீரின் சிறப்பு இயல்பு குளிர்ச்சி. தண்ணீர் நெருப்போடு தொடர்பு கொள்வதன் காரணமாகச் சுடு நீர் ஆகிறது. குளிர்ந்த நீர் நெருப்போடு தொடர்பு கொண்டு சுடுநீர் ஆகிய நிலை நீரின் பொது இயல்பு. அந்தத் தன்மை நீண்ட நேரம் நிலைப்பது இல்லை. சிறிது நேரம் கழித்துத் தனது இயற்கை இயல்பான குளிர்ச்சி நிலையை அடைந்துவிடுகிறது. ஆகவே நீருக்குக் குளிர்ச்சி, சிறப்பு இயல்பாகவும், சூடு பொது இயல்பாகவும் அமைகிறது. இதுவே சைவ சித்தாந்தம் சிறப்பு, பொது இயல்புகளுக்குக் கூறும் இலக்கணம் ஆகும்.” (ப.17)

“காட்டில் மானைப் பிடிக்கச் செல்பவர்கள், தங்கள் வீட்டில் பழக்கிய மானைக் காட்டிற்குத் தங்களுடன் அழைத்துச் செல்வார்கள். அந்த மானைக் காட்டி, காட்டில் உள்ள மான்களைப் பிடிப்பார்கள். இவ்வாறு மானைக் காட்டி மானைப் பிடிப்பார் போல, உயிர்களை உய்விக்கச் சிவபெருமானே மானுடச் சட்டை தாங்கிக் குருநாதனாக வருகிறான்.” (ப.20)

“மானிடப் பிறவியின் பயன் சிவ வழிபாடே ஆகும். வழிபாட்டிற்காக அமைந்துள்ள மகேசுவரத் திருமேனிகளின் மேன்மையை அறிந்து வழிபடுவது அளவில்லாத நன்மைகளைத் தரும்.” (ப.104)

“உடம்பைத் தனக்கு இடமாகக் கொண்டு, உடம்பிற்கு வேறாய், இன்ப துன்பங்களை அறிந்து அனுபவித்து வருகின்ற அறிவுப்பொருளே உயிர் அல்லது ஆன்மா என்று சைவ சித்தாந்தம் தெளிவாகக் கூறுகிறது.” (ப.151)

“சித்தாந்த சைவம் பேச்சுக்குரிய தத்துவங்களைக் கொண்டது அல்ல; வாழ்வுக்குரிய நெறிகளைப் போதித்து, வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவது ஆகும். எனவேதான் வழிபாட்டிற்கு அடிப்படையாக ஒழுக்க நெறி நிற்றலைச் சைவம் வலியுறுத்துகிறது.” (ப.236)

“சைவ சாதனங்களில் நாம ஜபம் மிகச் சுலபமானது. அம்மையப்பரின் திருப்பெயரைச் சொல்லக் குழந்தைகளாகிய நம் எல்லோருக்கும் உரிமை உண்டு. அம்மையப்பரின் திருப்பெயரைச் சொல்வது குழந்தைகளாகிய நமக்குக் கடமையாகிறது.….சிவாயநம சிவாயநம என்று அவனது திருப்பெயரைச் சொல்லிக்கொண்டே இருந்தால் ‘இவன் என்னைப் பெயர் சொல்லி அழைத்துக் கொண்டே இருக்கிறான். நாம் தரிசனம் தரும் வரை அழைப்பதை நிறுத்தமாட்டான். இவனுக்குத் தரிசனம் தந்து அருள் புரிய வேண்டும்’ என்று நினைத்துச் சிவபெருமான் நேரே வந்து தரிசனம் தருவார்…” (ப.458)

“…திருநீறு அணிந்து கொள்பவர்களை வினைகள் அணுகாது; உடல் சுத்தமாகும்; நெற்றியிலே சிவபெருமான் சக்தியோடு இருந்தருள்வார்; முகத்திலே திருமகள் (லட்சுமி) தாண்டவம் செய்வாள். மனத்திலே சஞ்சலம் வராது; நித்தியமான பேரானந்தப் பெருவாழ்வு கிடைக்கும். மேலும், திருநீறை அணிபவரைச் சிவசக்தி வடிவம் என்றே கூறலாம்…..” (ப.500)

சித்தாந்தத்தைக் கற்று அதன்படி நடந்தால் முத்திப்பேறு மட்டுமல்லாமல் இவ்வுலக வாழ்வும் கூட அமைதி நிறைந்ததாக அமையும் என்று முன்னுரையில் கூறும் நூலாசிரியர், சைவ சித்தாந்தக் கருத்துகள் அனைவருக்கும் சென்றுசேரவேண்டும் என்ற நன்னோக்கில் மிக எளிமையாக நூலைப் படைத்துள்ளார். அவருடைய எழுத்துப்பணியும், சைவப்பணியும் தொடர்ந்து சிறக்க எல்லாம்வல்ல சிவபெருமானை வேண்டுகிறேன்.

தலைப்பு : சைவ சித்தாந்த நன்னெறி
ஆசிரியர் : சித்தாந்தச் செம்மணி, சிவத் தமிழ்ச் செல்வர் ச.சௌரிராஜன்
பதிப்பகம் : மணிவாசகர் சிவநெறி அறக்கட்டளை, 13/37, மேல சாலைக்காரத் தெரு, அம்மாப்பேட்டை 614 401, தஞ்சாவூர் மாவட்டம், அலைபேசி 94865-76561/99440-13133
பதிப்பாண்டு : முதல் பதிப்பு, 2017
விலை : ரூ.350
--------------------------------------------------------------------

இடமிருந்து: நூலாசிரியர் ச.சௌரிராஜன், பா.ஜம்புலிங்கம், பா.சக்திவேல்
(அம்மாபேட்டை, அருணாசலேஸ்வரர் கோயில், 6.6.2022)
--------------------------------------------------------------------

03 March 2026

மெய்கண்ட சித்தாந்த சாத்திரம் (சொற்பொழிவுகள்): சிவப்பிரகாசம்

தஞ்சாவூர், பெருவுடையார் கோயிலில் சித்தாந்த சாத்திரங்களான 14 நூல்களைப் பற்றி சைவ நெறியாளர்கள் 14 மாதக்கூட்டங்களில் சொற்பொழிவாற்றினர். அதில் 18.9.1998இல் சிவப்பிரகாசம் குறித்து உரையாற்றும் அரிய வாய்ப்பினைப் பெற்றேன். பின்னர், சொற்பொழிவுகள் நூல் வடிவம் பெற்றது. அதில் என்னுடைய உரையின் அச்சு வடிவம் வெளியானது. 

உமாபதி சிவாச்சாரியார் அருளிய  சிவப்பிரகாசம்







முதன் முதலாக தஞ்சாவூர், பெருவுடையார் கோயிலில் இவ்வாறான ஒரு உரையாற்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்ததும், அச்சொற்பொழிவுகள் இடம் பெற்ற தொகுப்பில் என் கட்டுரை இடம் பெற்றதும் எனக்குக் கிடைத்தப் பெரும் பேறாகக் கருதுகிறேன்.     



-------------------------------------------------------------------------------------------
நன்றி: சைவ சித்தாந்தப் பெருமன்றம், தஞ்சாவூர் 
-------------------------------------------------------------------------------------------