13 March 2026

கங்கை கொண்ட சோழீச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதியுள்ள கங்கை கொண்ட சோழீச்சரம் என்னும் நூல் கங்கை கொண்ட சோழீச்சரம்-திருக்கோயிலமைப்பும் வரலாறும், கட்டடக் கலைச் சிறப்புகள், எழில்மிகு சிற்பங்கள், செப்புத்திருமேனிகள், கருவூர்த் தேவரும் கங்கைகொண்ட சோழீச்சரத்துப் (திருவிசைப்பா) பதிகமும், கல்வெட்டுச் சாசனங்கள் என்னும் ஆறு தலைப்புகளையும், பின்னிணைப்புகளாக கங்கை கொண்ட இராஜேந்திர சோழன் பிறந்தநாள் ஆடிமாதத்து ஆதிரை நாளே, கல்வெட்டில் கங்கை கொண்ட சோழப்பேராறு என்னும் இரு பின்னிணைப்புகளையும் கொண்டுள்ளது.


திருக்கோபுரம் தொடங்கி கோயிலின் ஸ்ரீவிமானம், மகாமண்டபம் ஆகியவை உள்ளிட்ட கட்டடக்கூறுகளின் உரிய தரை வரைபட அமைப்புகள், 19ஆம் நூற்றாண்டில் அழிக்கப்பட்ட இரண்டாம் இராஜகோபுரத்தின் படம் உள்ளிட்ட படங்கள் நூலில் இடம்பெற்றுள்ளன. துவாரபாலகர் தொடங்கி கோயிலில் காணப்படும் சிற்பங்கள், பிற நாடுகளிலிருந்து கொணரப்பட்ட சிற்பங்கள் ஆகியவற்றின் கலைப்பாணி ரசனையுடன் விளக்கப்பட்டுள்ளது. பன்னிரு திருமுறை உள்ளிட்ட இலக்கியங்களிலிருந்து எடுத்தாளப்படுகின்ற மேற்கோள்கள் விவாதிக்கப்படுகின்ற பொருண்மைக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரும் வகையில் அமைந்துள்ளன. உரிய இடங்களில் அக்காலத்திய சோழர்காலப் பெருங்கோயில்களுடன் ஒப்பு நோக்கி நூலாசிரியர் நுணுக்கமாகத் தந்துள்ள விதம் அக்கோயில்களை நம் மனக்கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது. அவருடைய நூலின் துணையுடன் கங்கை கொண்ட சோழீச்சரம் செல்வோம்.



“…இக்கோயிலிலுள்ள இப்பெருவேந்தனின் மூன்றாம் மகனான வீரராஜேந்திரனின் கல்வெட்டுச் சாசனம் அப்பேரரசனின் தந்தை இராஜேந்திர சோழன் தன் 23ஆம் ஆட்சியாண்டில் (கி.பி.1035இல்) கங்கை கொண்ட சோழீச்சரம் எனும் இத்திருக்கோயிலுக்கென கொடுத்த நிவந்தங்களைப் பட்டியலிட்டுக் குறிப்பிடுகிறது. அதனால் இத்திருக்கோயில் முதலாம் இராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலந்தொட்டுத் திகழ்கின்றது என்பது உறுதியாகின்றது…” (பக்கம் 9)

“…கங்கை கொண்ட சோழீச்சரம் எனும் இப்பெருங்கோயில் மாமன்னன் முதலாம் இராஜேந்திர சோழனால்தான் எடுக்கப்பெற்றது என்பதை 1987ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் எசாலம் என்னும் ஊரிலுள்ள இராமநாதேசுவர சுவாமி கோயில் வளாகத்துள் புதையுண்டிருந்து வெளிப்பட்ட இராஜேந்திர சோழனின் 25ஆம் ஆண்டு (கி.பி.1037) செப்பேட்டுத் தொகுதியில் குறிக்கப்பெற்றுள்ள செய்தி இதனை உறுதி செய்கின்றது….” (ப.9)

“தஞ்சாவூர் இராஜராஜேச்சரம், தாராசுரம் ஐராவதீஸ்வரம், திருபுவனம் கம்பகரேஸ்வரம் போன்ற சோழர்காலப் பெருங்கோயில்களின் கட்டுமான அமைப்பை நோக்கும்போது எல்லா ஆலயங்களிலும் கிழக்கு நோக்கிய பிரதான வாயிலில் இரண்டு இராஜகோபுரங்கள் இருப்பதைக் காணலாம்….இக்கோயில்களுடன் கங்கை கொண்ட சோழீஸ்வரமாம் இவ்வாலயத்தை ஒப்பிட்டு நோக்கும்போது பண்டு திருச்சுற்று மாளிகையுடன் இணைந்த திருமதிலில் ஒரு இராஜகோபுரமும், அதற்கு வெளியே அதனினும் உயர்ந்ததோர் கோபுரம் ஒன்றும் இருந்ததற்கான தடங்களைக் காணமுடிகின்றது.” (ப.13)

“திருவையாறு ஐயாறப்பர் திருக்கோயில் வளாகத்தின் உள்ளேயே தென்கயிலாயம் என்ற கற்றளியும், வடகயிலாயம் என்ற கற்றளியும் இருப்பதுபோன்றே கங்கை கொண்ட சோழீச்சரத்திலும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.” (ப.15)

“புறத்தோற்றத்தில் ஒன்பது அடுக்குடைய கட்டுமானமுடையதாக ஸ்ரீவிமானம் காணப்பெற்றாலும் உள்கட்டுமான அமைப்பு அவ்வாறு அமைந்தது அன்று.” (ப.18)

“கங்கை கொண்ட சோழீச்சரத்து சிற்பப் படைப்புகளுக்கும் தஞ்சை இராஜராஜேச்சரத்துப் படைப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தஞ்சைப் பெருங்கோயிலை வடிவமைக்கும்போது அப்பெரும்பணியில் மாமன்னன் இராஜராஜனோடு இணைந்து பணியாற்றியவன் இராஜேந்திர சோழனாவான்.” (ப.35)

“எப்படி இருப்பினும் மேல்பாடி கல்வெட்டு இராஜேந்திர சோழனின் பிறந்த நாள் ஆடிமாதத்து ஆதிரையே என்று கூறுவதோடு, அங்கு அவ்விழா எவ்வாறு கொண்டாடப் பெற்றது என்பதை விவரிக்கும் ஓர் அரிய ஆவணம் என்பதில் ஐயமில்லை. ” (ப.194)

“கங்கை கொண்ட சோழீஸ்வரர் திருக்கோயிலுக்கு உரியனவாகத் தற்போது 23 செப்புத்திருமேனிகள் உள்ளன….. இவற்றில் ஆறு திருமேனிகள் மட்டும் இராஜேந்திர சோழன் காலத்தில் வடிக்கப்பெற்றவையாகும்.” (ப.117)

“சோழ நாட்டில் காவிரியிலிருந்து சோழப் பெருமன்னர்களால் தோற்றுவிக்கப்பெற்ற ஆறுகளுக்கு முடிகொண்ட சோழப் பேராறு, விக்கிரம சோழப் பேராறு, வீரசோழப் பேராறு, கீர்த்திமான் ஆறு, சூடாமணியாறு போன்ற பெயர்களைச் சூட்டினர் என்பதைக் கல்வெட்டுகள் வாயிலாக அறியமுடிகிறது. இன்றளவும் அப்பெயர்கள் மக்கள் வழக்கில் இருப்பது போற்றுதற்குரியதாகும்.” (ப.196)

“பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தியாகி, திருச்சி மாவட்டத்திற்கும், அரியலூர் மாவட்டத்திற்கும் பாசனம் தந்து கொள்ளிடப் பேராற்றின் உபநதியாகத் திகழும் கங்கைகொண்ட சோழப்பேராறு எனும் உப்பாற்றினை மீண்டும் பழைய பெயராலேயே அரசு தன் ஆவணங்களில் பதிவு செய்து அழைக்குமானால் நம் பழைய வரலாற்றினை மீண்டும் மக்கள் அறிந்திட உதவியாய் இருக்கும்.” (ப.197)

பெருமுயற்சி மேற்கொண்டு நூலாசிரியர் ஆவணப்படுத்தியுள்ள அரிய புகைப்படங்கள் நூலுக்கு அழகுசேர்ப்பதோடு, நம் முன்னோர்களின் கலைப்படைப்புகளை ரசித்து உணரும் வகையில் அமைந்துள்ளன. பல குறிப்பிடத்தக்க நூல்களின் மூலமாக ஆய்வாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் அறிமுகமானவர் நூலாசிரியர். அவருடைய ஒவ்வொரு நூலும் பல முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொள்ளும் அளவிற்குத் தரவுகளுடன் உள்ளவையாகும். தொடர்ந்து, இந்நூலின் மூலமாக வரலாற்றுக்குப் பெரும் பங்களித்துள்ள நூலாசிரியரின் முயற்சி போற்றத்தக்கதாகும். அவருடைய எழுத்துப்பணி தொடர எல்லாம்வல்ல இறையருளை வேண்டுகிறேன்.

தலைப்பு : கங்கை கொண்ட சோழீச்சரம்
ஆசிரியர் : குடவாயில் பாலசுப்ரமணியன்
பதிப்பகம் : அன்னம், மனை எண்.1, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613 007, கைபேசி 7598306030
பதிப்பாண்டு : முதல் பதிப்பு, 2026
விலை : ரூ.400
-----------------------------------------------------------
-----------------------------------------------------------


நூலாசிரியரிடம் நூலைப் பெற்ற இனிய தருணம் (22.2.2026)

No comments:

Post a Comment