எங்களின் திருமண நாளான இன்று (1 செப்டம்பர் 2020), அவள் விகடன் இதழில் மகளிர் தினத்தையொட்டி வெளியான என்னுடைய கருத்தினைப் பகிர்வதில் மகிழ்கிறேன்,
அவ்விதழுக்கு நன்றியுடன்.
அடுத்தபடியாக என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெறுபவர் என்னுடைய மனைவி. வளரும்போது நம் பெற்றோர், அத்தை என்ற நிலையில் இருந்து வளர்த்தார்கள். திருமணத்திற்குப் பின் மனைவியின் பங்களிப்பு மிகவும் அதிகம் என்பதை அறிகிறேன். சற்று நான் அதிகமாகக் கோபப்படுவேன். அவ்வாறு கோபப்படும்போது, “அவ்வளவு கோபப்பட்டால் அனைத்தும் கெட்டுவிடும், கொஞ்சம் நிதானமாக இருக்கவேண்டும்” என்று கூறுவார். என்னுடைய மனைவி பெரிய குடும்பத்திலிருந்து வந்தவர். அதனால் குடும்பத்தில் காணப்படுகின்ற ஏற்ற இறக்கங்களை அறிவார். சற்று நேர்மாறாக, என் குடும்ப சூழல் வேறு என்ற நிலையில் வளர்ந்த காலகட்டத்தில் பல சிரமங்களை எதிர்கொண்டேன்.
படித்துக்கொண்டிருக்கும் காலத்தில் என் நண்பரின் சகோதரி சொல்லுவார், “நீ படித்துக் கொண்டிருக்கும்போதே உனக்கென்று பணம் சேர்த்துக்கொள். அப்பொழுதுதான் பின்னர் நீ வேலைக்குப் போகும்போது உதவியாக இருக்கும்.” எனக்கு அவர் சொன்ன வார்த்தைகள் எப்பொழுதும் என் மனதில் இருக்கும். இன்றுகூட நான் பணம் சிறிது சேகரித்து வைத்திருக்கிறேன், பணத்தில் சிறிது எச்சரிக்கையாக இருக்கிறேன் என்று சொன்னால் அதற்குக் காரணம் அவர் அப்போது கூறிய கருத்துதான்.
என் சகோதரியைப் போலவே, என் அத்தையைப் போலவே என் மனைவி எங்கெங்கெல்லாம் நான் கொஞ்சம் தடம் மாறும்போது “இப்படிச் செய்வதைவிட அப்படிச் செய்யலாம்” என்று கூறுவார். அதனால் பிறருடைய கோபத்திற்கு ஆளாகாமலும், வாழ்க்கையில் சீராக நடத்தவும் முடிந்தது. கோபத்தை விடுத்து வாழ்க்கையில் இயல்பாக நடந்துகொள்வது அவசியம் என்பதை உணர்த்துவார். நாம் சாதிக்க வேண்டியது என்ன? என்பதைச் சிந்தித்து அதனை இலக்காக வைத்துப் பயணிக்க அவர் எனக்குத் துணையாக இருக்கிறார்.
விளையாடிக்கொண்டிருந்த காலத்தில், படித்துக்கொண்டிருந்த காலத்தில் நல்லாப் படி, சரியா நேரத்தை செலவு செய் என்று சொன்ன அக்கா, நம் மனதில் ஆரம்பத்தில் விதையை விதைத்த அத்தை, இப்பொழுது தொடர்ந்து இப்படி இருந்தால்தான் வாழ்க்கையை நல்லபடியாக நடத்தலாம் என்று சொல்கின்ற, வழிகாட்டலுக்கு முக்கியமாக உள்ள, என்னுடைய மனைவி. இவர்களெல்லாம் என்னுடைய வாழ்க்கையில் முக்கியமான பங்கை ஆற்றியிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.
இவர்களெல்லாம் இல்லாவிட்டால் நான் இந்த அளவிற்கு நான் வந்திருக்கமுடியாது. 1000க்கும் மேற்பட்ட கட்டுரைகள், ஏழு நூல்கள், 30 சிலை கண்டுபிடிப்புகள் என்ற அளவில் தமிழகத்தில் முக்கியமான நிலைக்கு வந்ததற்குக் காரணம் என் சகோதரி, என் அத்தை, என் மனைவி. இவர்கள் கூறிய கருத்து மிகவும் சிறியதாக இருக்கும். ஆனால் இளம் வயதில் எனக்கு ஆழமாகப் பதிந்துவிட்டது. அந்த ஓர் ஆழமான பதிவுதான் என்னை நல்ல நிலைக்கு அழைத்துச் செல்கிறது. இந்த நிலையில்தான் மற்றவர்களுக்கு நாம் உதாரணமாக இருக்க முடிகிறது. அலுவலகம் செல்வதாக இருக்கட்டும், ஆய்வுப்பணியாக இருக்கட்டும், எழுத்துப்பணியாக இருக்கட்டும், என் மனைவி என் அத்தையையும், என் நண்பரின் சகோதரியையும் தாண்டி இன்னும் கைகொடுத்துக் கொண்டு வருகிறார். அதனால்தான் வாழ்க்கையில் வெற்றி என்ற தளத்தின் இலக்கை நோக்கி இன்னும் நான் செல்கிறேன். எங்களுடைய குடும்பம் சீரான நிலையில், பணக் கஷ்டமின்றி, சிக்கனத்தைக் கடைபிடித்து ஒரு முன்னுதாரணமாக சென்றுகொண்டிருக்கிறோம். இந்த நிலையில் என் மனைவியை நான் நன்றியோடு நினைவுகூர்கிறேன். என் அத்தையையும் நினைவுகூர்கிறேன். இந்த இனிய நாளில் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். நன்றி.
என் மனைவி ஜ.பாக்கியவதி எழுதியுள்ள நூல் கோயில் உலா
