எங்களது வட இந்தியப் பயணத்தில் முதன்முதலாக நாங்கள் சென்ற இடம் அலகாபாத். முதல் நாள் காலை நாங்கள் திரிவேணி சங்கமம் சென்றோம். வாருங்கள் அங்கு செல்வோம்.
புகைவண்டி நிலையத்திலும் பிற இடங்களிலும் அலகாபாத் என்ற பெயர் ஆங்கிலத்தில் இருந்தது. இந்தியில் இலாகாபாத் என்றிருந்தது. காரணம் தெரியவில்லை. பள்ளி நாள்களில் படித்த இந்தி தற்போது உதவியதையறிந்தேன். பல இடங்களில் இவ்வாறான நிகழ்வுகளை எதிர்கொண்டோம்.
தங்கும் விடுதியில் ஓய்வெடுத்துவிட்டு விடியற்காலை சூரிய உதயத்தில் அலகாபாத்திலுள்ள திரிவேணி சங்கமம் என்ற இடத்திற்குப் புறப்பட்டோம்.
சூரிய உதயத்தில் திரிவேணி சங்கமம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. வெளியூரிலிருந்து வருபவர்கள் கங்கை, யமுனை மற்றும் கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடத்தைக் காண ஆவலோடு வந்துகொண்டிருந்தார்கள். எங்களது குழுவில் வந்த மூத்த தம்பதியினர் 17 ஆண்டுகளாக இவ்வாறான பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகக் கூறினர். அவர்களுடைய வேகமும், ஆர்வமும் எங்களை அதிகமாக ஈர்த்தது.
அனைவரும் படகில் ஏறி சிறிது தூரம் சென்றோம். படகில் குடும்பம் குடும்பமாக மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடம் என்று கூறுமிடத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். படகு ஓட்டுபவர்கள் இலாவகமாக ஓட்டுவதைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. அருகருகே படகுகள் நெருக்கமாகச் சென்றபோதிலும் ஒன்றை ஒன்று உரசிவிடாமல் படகுகளை ஓட்டிச் சென்றனர். குறைவான எண்ணிக்கையில் படகுகளில் சுற்றுலாப் பயணிகளை அவர்கள் அழைத்துச் சென்றது எங்களுக்கு நெடுநாள் பழகிய நண்பர்களோடு செல்வதுபோல இருந்தது. சுற்றிலும் நீர். எங்களையும் அறியாத ஏதோ ஓர் பிணைப்பு எங்கள் அனைவரையும் இட்டுச்சென்றது போன்ற உணர்வு எங்களுக்கு இருந்தது. சிறிது தூரம் சென்றதும் படகினை நீரின் நடுவில் நிற்கவைத்துவிட்டு எங்களை இறங்கச் சொன்னார் படகோட்டி. அதிகமான ஆழம் அங்கு காணப்படவில்லை. அனைவரும் அங்கு இறங்கி புனிதக் குளியல் குளித்தோம்.
சில படகோட்டிகள் இரு படகுகளை நெருக்கமாக வைத்து குறுக்கே கயிறு கட்டி அதன்மூலமாக பக்தர்களை இறங்க வைத்து குளிக்கக் கூறினார்கள். அந்த இடம்தான் திரிவேணி சங்கமம் என்றும் அவ்வாறாகக் குளிப்பது சிறந்தது என்றும் கூறினர். எங்கள் குழுவில் சிலர் அவ்வாறு குளித்தனர். எங்களில் பலர் அருகருகே நின்று நீராடினோம். நீரிலிருந்து வெளியே வர எங்களுக்கு மனமில்லை.அடுத்தடுத்து பல ஊர்களுக்குச் செல்ல வேண்டிய நிலையில் நீரிலிருந்து வர மனமின்றி வெளியே வந்தோம். படகில் ஏறினோம். நதியின் அழகினை ரசித்துக்கொண்டே கரைக்கு வந்து சேர்ந்தோம்.
குளித்து கரையேறிய பின் அங்கிருந்து அருகில் பார்த்தபோது ஒரு கோட்டை தெரிந்தது. அந்தக் கோட்டை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. அந்தக் கோட்டையைப் பார்க்க எங்களுக்கு ஆவல் வரவே கோட்டையை நோக்கி நடந்தோம். கோட்டையின் வலப்புறம் ஒரு கோயில் இருப்பதாகக் கூறினார்கள். அங்கு சென்றோம். தாழ் தளமாக இருந்த பாதை வழியாக கோட்டையின் மேற்பகுதிக்குச் சென்றோம். கோயிலை நோக்கிச் செல்லும் வழியில் கொடிகளும், தோரணங்களும் கட்டப்பட்டிருந்தன. கோட்டையின் அப்பகுதியில் அவ்வாறாக ஒரு கோயில் இருப்பது பலருக்குத் தெரியவில்லை. கோயிலுக்குச் சென்றதும் உள்ளே பல சிறிய சன்னதிகளில் அதிக எண்ணிக்கையிலான பல கடவுள் சிலைகளைப் பார்த்தோம். ஒரே இடத்தில் அதிகமான எண்ணிக்கையிலான கடவுள்களைப் பார்த்ததில் எங்களுக்கு அதிக மகிழ்ச்சி. கோயில்கள் உள்ள ஒரு பக்கம் மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி என்றும், கோட்டையின் பிற பகுதியின் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறினர். எங்கு பார்த்தாலும் இராணுவ வீரர்களை அங்கு காண முடிந்தது. அனுமதி பெற்று கோட்டை உள்ளே பார்க்க விரும்பி அதற்கான முயற்சியினை மேற்கொண்டோம். எங்கள் முயற்சி பலனளிக்கவில்லை.
கோட்டையை ஒட்டியே சுமார் 2 கிமீ தூரத்திற்குச் சென்று அதன் அழகினை ரசித்தோம். கோட்டையின் முகப்பில் இந்திய தேசியக்கொடி பட்டொளி வீசிப் பறக்கும் அழகினை ரசித்தோம். கோட்டையைச் சுற்றி வந்தபின் அருகே இருந்த அனுமார் கோயிலைப் பார்த்தோம். சற்று நேரம் அங்கு இளைப்பாறிவிட்டு திரிவேணி சங்கமத்தைவிட்டு கிளம்பினோம்.
புகைப்படங்கள் எடுக்க உதவி : திருமதி பாக்கியவதி, திருமதி கண்மணி
இதற்கு முன் நாம் பார்த்த இடங்கள் அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை ஆனந்த பவன் புத்தகயா புகைப்படப்பதிவு |