29 August 2015

திருமழபாடி வைத்யநாதசுவாமி கோயில்

-------------------------------------------------------------------------------
ஆங்கில விக்கிபீடியாவில் நான் இக்கோயிலைப் பற்றிய பதிந்துள்ள பதிவை Thirumazhapadi Vaidyanathaswami Temple என்ற தலைப்பில் பார்க்க அன்போடு அழைக்கிறேன். தலைப்பைச் சொடுக்கினால் விக்கிபீடியாவில் கட்டுரையைப் படிக்கலாம்.
-------------------------------------------------------------------------------

அண்மையில் அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமழபாடி வைத்யநாதசாமி கோயிலுக்குச் சென்றோம். குடமுழுக்கின்போதும், நந்தித்திருமணத்தின்போதும் போக முயன்றும் முடியவில்லை. பின்னர்தான் வாய்ப்பு கிடைத்தது.  ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலத்தில் கொள்ளிடம் வடக்கு நோக்கிப் பாய்ந்தோடுகிறது. நாங்கள் சென்றபோது ஆற்றில் தண்ணீர் இல்லை. ஆற்றில் இறங்கி சிறிது தூரம் நடந்துவிட்டு, கோபுரம் நோக்கி நடந்தோம்.  ஆற்றிலிருந்து கோபுரத்தைப் பார்க்க அழகாக இருந்தது. 


மார்க்கண்டேய முனிவருக்காக இறைவன் மழு ஏந்தி நடனமாடிக் காட்சி தந்ததால் இத்தலத்தை மழுவாடி என்பர். நாளடைவில் இது மழபாடி  ஆனதாகக் கூறுகின்றனர்.

பங்குனி மாதத்தில் நடைபெறுகின்ற நந்திதேவர் திருமண விழா புகழ் பெற்றதாகும். திருவையாற்றில் நடைபெறுகின்ற சப்தஸ்தான விழாவின்போது நந்திதேவர் புறப்பட்டுச் செல்வார்.   

நந்தித் திருமணத்தொடர்பு, ஒரே கல்லால் ஆன சோமாஸ்கந்தர், ஆற்றுக்கு எதிரே கம்பீரமான ராஜகோபுரம் என்பனவே இக்கோயிலைப் பற்றி நான் அறிந்தது. இக்கோயிலுக்கு முன்னரே நான் இரு முறை சென்றுள்ளபோதிலும் இப்போது செல்லும்போது ஏதோ புதிதாகச் செல்வது போல இருந்தது. பெரிய வெளிப்பிரகாரம். கடந்த முறை உள்ளே போகமுடியாதபடி இருந்தது. தற்போது சுத்தம் செய்யப்பட்டு சுற்றி வரும் அளவு உள்ளது.


கொடிமரம், பலிபீடத்தைக் கடந்து கோயிலின் உள்ளே சென்றதும் நூற்றுக்கால் மண்டபம் பார்த்தோம். அதன் வலப்புறத்தில் வாகனங்கள் வைக்கப்பட்டிருந்தன. 



கோயிலின் வலப்புறம் சூரியன், சந்திரன், அகோரவீரபத்திரர், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியரை பார்த்தோம். தொடர்ந்து மடப்பள்ளி விநாயகர்.


முன்மண்டபத்தைக் கடந்து உள்ளே கருவறை சென்றோம். வைத்யநாதசுவாமியைக் கண்டோம். இறைவனின் முன்பாக இரு புறமும் துவாரபாலகர்களைக் கண்டோம். கருவறையில் நிலைவாயிலின் மேலே அகத்தியர் புருசாமிருகரிசி, வசிஷ்டர் சிற்பங்களைக் கண்டோம்.





பின்னர் பிரகாரத்தைச் சுற்றிவந்தோம். சிவசூரியன், காத்யாயணி, சப்தமாதர்கள், ஏழு கன்னியர்கள், 63 நாயன்மார்கள், தொகையடியார்கள், தல விநாயகர் ஆகியோரைக் கண்டோம். தொடர்ந்து ஒரே கல்லால் ஆன சோமாஸ்கந்தரைப் பார்த்தோம். இரு புறமும் விநாயகரும், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியரும் இருந்தனர். வேதாரண்யம் கோயிலில் இக்கட்டட அமைப்பு உள்ள இடத்தில் சுழலும் தூண்களைப் பார்த்த நினைவு வந்தது. 

தொடர்ந்து காசி விசுவநாதர், விசாலாட்சி, கைலாசநாதர், மகாவிஷ்ணு, மகாலட்சுமி, அய்யாறப்பர், சரஸ்வதி, சுந்தரர், பரவை நாச்சியார், சொக்கநாதர், மீனாட்சியை வணங்கினோம். திருச்சுற்றில் சுற்றிவரும்போது பனை மரத்தினைப் பார்த்தோம்.  கருவறையின் பின் புற கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மாவைக் கண்டோம். கருவறையின் இடது புறம் நால்வேத நந்தி எனப்படும்  நான்கு நந்திகளைக் கண்டோம். இந்த நந்திகளைப் பார்த்தபோது அமைப்பில் வித்தியாசமாக இருந்தபோதிலும் புள்ளமங்கை கோயிலில் விமானத்தை ஒட்டிப் பார்த்த நினைவுக்கு வந்தன. தொடர்ந்து சிவதுர்க்கை அண்ணாமலையார், ஜுரகேஸ்வரர் சன்னதிகளைப் பார்த்தோம். கஜசம்காரமூர்த்தி, கல்யாண பாலம்பிகை, காலபைரவர், பைரவர் சிற்பங்களையும் பார்த்தோம்.  

இறைவனை வணங்கிவிட்டு, இறைவியின் சன்னதிக்குச் சென்றோம். இறைவியின் சன்னதி கோயிலின் இடது புறம் இருந்தது. அழகான நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றோம். நின்ற நிலையில் இருந்த தேவியை வணங்கினோம்.   



அம்மன் சன்னதியின் விமானம் மிகவும் அழகாக வித்யாசமான முறையில் இருந்ததை கண்டு வியந்தோம். சப்தஸ்தானத்தலங்களில் காணப்படும் அமைப்பிலிருந்து சற்று மாறுபட்டு ஒருவகையான மாறுபட்ட அடுக்குடன் விமானம் காணப்பட்டது.அம்மன் சன்னதிக்கு எதிரே கோயில் குளம் இருந்தது.

மறுபடியும் இறைவனை வணங்கிவிட்டு கோயிலை விட்டுக் கிளம்பினோம். நந்தி திருமணத்திற்கு வராத குறை எங்களை விட்டு அகன்றது. மன நிறைவுடன் வெளியே வந்தோம்.
31.8.2015 அன்று மேம்படுத்தப்பட்டது.

22 August 2015

கோயில் உலா : சூலை 2015

18.7.2015 அன்று தஞ்சாவூர் சைவசித்தாந்த ஆய்வு மைய நிறுவனர் முனைவர் வீ.ஜெயபால் அவர்களுடன் தலப்பயணம் சென்றோம். இப்பயணத்தில் தேவாரப்பாடல் பெற்ற தலங்களான பந்தணைநல்லூர், பழமண்ணிப்படிக்கரை, திருவாழ்கொளிப்புத்தூர், திருக்குரக்குக்கா, திருக்கருப்பறியலூர், திருப்புன்கூர், குருமாணக்குடி, கீழையூர், திருநின்றியூர், கஞ்சனூர், மங்களாசாசனம் பெற்ற திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில் ஆகிய கோயில்களுக்குச் சென்றோம். இவற்றில் நான் முன்னரே பார்த்தது பந்தணைநல்லூர் மட்டுமே. மற்ற அனைத்துக் கோயில்களுக்கும் இப்போது முதன்முறையாகச் செல்கிறேன். நாங்கள் சென்ற கோயில்களுக்கு உங்களை அழைக்கிறேன், வாருங்கள்.

1) பந்தணை நல்லூர், தஞ்சாவூர் மாவட்டம் (மயிலாடுதுறை-திருப்பனந்தாள் இடையில் உள்ளது. கும்பகோணம், குத்தாலம், திருப்பனந்தாள் ஆகிய இடங்களிலிருந்து செல்லலாம்)
பசுபதீசுவரர், வேணுபுஜாம்பிகை. (சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற தலம்). இத்தலத்தில் சட்டநாதர் சன்னதி உள்ளது. முதன்முதலாக சட்டநாதர் சன்னதியை சீர்காழியில் பார்த்தேன். பிறகு நெடுநாள் கழித்து கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் இருப்பதையறிந்து சென்று பார்த்தேன். கோயிலின் வலப்புறம் வெளியே ஆதிகேசவப்பெருமாள் சன்னதி உள்ளது. இறைவனை வணங்கிவிட்டு கோயிலில் காலை உணவினை கோயில் சன்னதியில் உண்டோம்.
பந்தணைநல்லூர் ராஜகோபுரம்
2) பழமண்ணிப்படிக்கரை, நாகை மாவட்டம் (வைத்தீஸ்வரன்கோயில்-திருப்பனந்தாள் சாலையில்  மணல்மேடு கடைத்தெருவிலிருந்து வடக்கே 2 கிமீ தூரத்தில் உள்ளது)
நீலகண்டேஸ்வரர், இரு தேவி அமிர்தகரவல்லி, மங்களநாயகி. (சுந்தரர்). பஞ்சபாண்டவர்கள் வழிபட்டதாகக் கூறுகின்றனர். இறைவன், இறைவி சன்னதிகள் சற்று உயர்ந்த தளத்தில் உள்ளன. பிற சன்னதிகள் பிரகாரத்தில் அமைந்துள்ளதைக் கண்டோம்.
பழமண்ணிப்படிக்கரை ராஜகோபுரம்
3) திருவாழ்கொளிப்புத்தூர், நாகை மாவட்டம் (வைத்தீஸ்வரன்கோயில்-திருப்பனந்தாள் சாலையில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்தும் வரலாம்)
மாணிக்கவண்ணர், வண்டார் குழலம்மை (ஞானசம்பந்தர், சுந்தரர்)
ராஜகோபுரமில்லா வாயிலைக் கடந்து உள்ளே சென்றோம். இறைவனை வணங்கினோம்.
திருவாழ்கொளிப்புததூர் கோயில் முகப்பு
4) திருக்குரக்குக்கா, நாகை மாவட்டம் (வைத்தீஸ்வரன்கோயில்-திருப்பனந்தாள் சாலையில் இளந்தோப்பு வந்து மருத்துவமனை கட்டடத்துக்கு பக்கத்தில் செல்லும் சாலையில் வடக்கில் 3 கிமீ தொலைவில் உள்ளது)
குந்தளேஸ்வரர், குந்தளாம்பிகை (அப்பர்)
குரங்கு வழிபட்ட தலம். குரங்கு கூட மூலவரை வழிபட்டதாகக் கூறுகின்றனர். இறைவன் சன்னதியைவிட ஆஞ்சநேயர் சன்னதிக்கு பக்தர்கள் அதிகமாக வருவதைக் கண்டோம்.
திருக்குரக்குக்கா கோயில் நுழைவாயில்
5) திருக்கருப்பறியலூர், நாகை மாவட்டம் (வைத்தீஸ்வரன்கோயில்-திருப்பனந்தாள் சாலையில் தலைஞாயிறு கைகாட்டி உள்ள இடத்தில் வலப்புறமாக செல்லும் பாதையில் செல்லலாம்)
குற்றம்பொறுத்தநாதர், கோள்வளைநாயகி (ஞானசம்பந்தர், சுந்தரர்)
இக்கோயிலிலும் சட்டநாதர் சன்னதி உள்ளது. மலைக்கோயில் என்று அதனை அழைக்கின்றனர். வித்தியாசமானதாக அழகான சன்னதியாக மூலவர் சன்னதியின் வலப்புறம் தனியாக அமைந்துள்ளது. இதுவரை இவ்வாறான அமைப்பில் ஒரு விமானத்தைக் கொண்ட ஒரு சன்னதியை நான் பார்த்ததில்லை.

திருக்கருப்பறியலூர் மூலவர் விமானம், சட்டநாதர் சன்னதி (இடது)
6) திருப்புன்கூர், நாகை மாவட்டம் (வைத்தீஸ்வரன்கோயில்-திருப்பனந்தாள் சாலையில் வைத்தீஸ்வரன்கோயிலிலிருந்து 3 கிமீ மேற்கே உள்ளது)
சிவலோகநாதர், சொக்கநாயகி (மூவர் பாடிய தலம்)
நான் பார்க்க ஆசைப்பட்ட கோயில்களில் இதுவும் ஒன்று. திருநாளைப்போவாருக்காக (நந்தனார்) தம்மை வழிபடுவதற்காக இறைவன் நந்தியை விலகியிருக்குமாறு கூறிய புகழ் பெற்ற இத்தலத்தில் உள்ள நந்தி மிக அழகாக உள்ளது. சுந்தரர் பதிகம் பாடி மழை வரவழைத்த பெருமை உள்ள ஊர். கோயிலின் உள்ளேயும், வெளியே எதிரேயும் நந்தனாருக்கான சன்னதிகள் உள்ளன. அவையனைத்தையும் பார்த்துவிட்டு மதியம் கோயிலில் விலகிய நந்தியருகே அனைவரும் ஓய்வெடுத்தோம். மாலை 4.00 மணி வாக்கில் அங்கிருந்து கிளம்பினோம். அடுத்து குறுமாணக்குடி சென்றோம்.
திருப்புன்கூரில் விலகிய நிலையில் நந்தி
7) குறுமாணக்குடி, நாகை மாவட்டம் (வைத்தீஸ்வரன்கோயில்-மயிலாடுதுறை சாலையில் வைத்தீஸ்வரன்கோயிலுக்கு தென்கிழக்கே 3 கிமீ தொலைவில் உள்ளது)
கண்ணாயிரமுடையார், முருகுவளர்கோதை (ஞானசம்பந்தர்)
இந்திரனுடைய சாபம் நீங்கிய இத்தலத்திற்கு திருக்கண்ணார் கோயில் என்ற பெயரும் உண்டு. இக்கோயிலைவிட்டுக் கிளம்பியதும் மழை தூற ஆரம்பித்தது.
குறுமாணக்குடி கோயில் நுழைவாயில்
8) கீழையூர், நாகை மாவட்டம் (மயிலாடுதுறை-பூம்புகார் சாலையில்  மேலையூர் மேலைப்பாதி தாண்டி, சத்திரம் பேருந்து நிறுத்தத்திலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது)
கடைமுடிநாதர், அபிராமி (ஞானசம்பந்தர்)
பிரமனும், கண்வ முனிவரும் வழிபட்ட பெருமையுடைய தலம். தனித்தனியாக சன்னதிகள் அமைந்துள்ளன. முதன்மை வாயில் பூட்டப்பட்டிருந்தது. பக்கவாட்டில் உள்ள வாயில் வழியாக உள்ளே சென்றோம். விட்டு விட்டு மழை தூறிக்கொண்டேயிருந்தது.

கீழையூர் கடைமுடிநாதர் கோயில் முகப்பு

9) திருநின்றியூர், நாகை மாவட்டம் (வைத்தீஸ்வரன்கோயில்-மயிலாடுதுறை சாலையில்  மயிலாடுதுறையிலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது)
மகாலட்சுமீசுவரர், லோகநாயகி (மூவர்)
சிறிய ராஜகோபுரத்தைக் கடந்ததும் ரிஷபக்கொட்டில் உள்ளது. அதையடுத்து மூலவர் சன்னதி உள்ளது. சிறிய கோயிலாக இருந்தாலும் பார்க்க அழகாக உள்ளது. மழையின் காரணமாக இக்கோயிலில் சற்று தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சிறிது நேரம் அங்கேயே இருந்துவிட்டு பின்னர் புறப்பட்டோம்.

திருநின்றியூர் ராஜகோபுரத்தை அடுத்த ரிஷபக்கொட்டில்
10) பரிமள ரங்கநாதர் கோயில், திருஇந்தளூர் (மயிலாடுதுறை நகரில் உள்ளது).
பரிமளரங்கநாதர், பரிமளரங்க நாயகி
இத்தலம் பஞ்சரங்கத்தலங்களில் ஒன்றாகும். பஞ்சரங்கம் என்றும் அந்தரங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. மற்றவை  ஆதிரங்கம் (ஸ்ரீரங்கப்பட்டணம், கர்னாடகா),  மத்தியரங்கம் (திருச்சி அருகேயுள்ள ஸ்ரீரங்கம்), அப்பாலரங்கம் (கொள்ளிடத்தின் தெற்குக்கரையில் அமைந்துள்ள திருப்பேர்நகர் என்ற கோவிலடி), சதுர்த்தரங்கம் (கும்பகோணம் சார்ங்கபாணி கோயில்) ஆகும்.  பரிமள ரங்கநாதரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அந்த அளவுக்கு அவர் நம் மனதில் பதிந்துவிடுவார்.
பரிமள ரங்கநாதர் கோயில் ராஜகோபுரம்
11) வேள்விக்குடி, நாகை மாவட்டம் (மயிலாடுதுறை -மகாராஜபுரம் சாலையில் மயிலாடுதுறையிலிருந்து 11 கிமீ தொலைவில் குத்தாலத்திற்கு அருகே உள்ளது).
கல்யாணசுந்தரேசுவரர், பரிமள சுகந்தநாயகி (சம்பந்தர், சுந்தரர்)
இரவு 7.30 மணிவாக்கில் சென்றோம். அர்ச்சகர் கோயிலைப் பூட்டி வெளியே வந்துவிட்டார். குழுவாகச் சென்ற நாங்கள் கேட்டுக்கொண்டும் கோயிலைத் திறக்க மறுத்துவிட்டார். வேறு வழியின்றி வாயிலில் நின்று இறைவனை வழிபட்டுவிட்டுத் திரும்பினோம். அங்கிருந்து கஞ்சனூர் சென்றோம்.
வேள்விக்குடி கோயில் நுழைவாயில்
12) கஞ்சனூர், தஞ்சாவூர் மாவட்டம் (கும்பகோணத்திலிருந்து செல்லலாம். திருவிடைமருதூர், மயிலாடுதுறையிலிருந்தும் செல்லலாம்)
அக்னீஸ்வரர், கற்பகாம்பிகை. (அப்பர்)
இத்தல உலாவில் எங்கள் பயணம் இக்கோயிலில் நிறைவுற்றது. கலிக்காம நாயனாருக்கும் திருமணம் நிகழ்ந்த இத்தலம், பிரமனுக்குத் திருமணக் கோலம் காட்டியருளிய தலமாகும். இறைவனை வணங்கிவிட்டு நிறைவாக இரவு உணவினை முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி, சுகமாக தஞ்சாவூர் வந்து சேர்ந்தோம்.  

எங்களது இப்பயணத்தில் மறக்கமுடியாதவை விலகிய நந்தி, சட்டநாதர் சன்னதி. மழையின் காரணமாக மேலும் சில தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு குறைந்தது. இருந்தாலும் ஒரே நாளில் 11 தேவாரப் பாடல் பெற்ற தலங்களுக்கும் மங்களாசாசனம் பெற்ற ஒரு கோயிலுக்கும் சென்றது மனதிற்கு நிறைவாக இருந்தது.

நன்றி
எங்களை தொடர்ந்து கோயில் உலா அழைத்துச்செல்லும் தஞ்சாவூர் சைவ சித்தாந்த ஆய்வு மைய நிறுவனர் முனைவர் வீ. ஜெயபால் அவர்களுக்கு எங்களின் மனம் நிறைந்த நன்றி.

துணை நின்றவை
சிவ.ஆ.பக்தவத்சலம், தேவாரத்திருத்தலங்கள் வழிகாட்டி
முனைவர் வீ. ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள்
விக்கிபீடியா

16 August 2015

விக்கிபீடியாவில் கட்டுரை எழுதுவோம்

---------------------------------------------------------------------------------------------------
நான் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியில் (16.8.1982)  சேர்ந்து
 34ஆம் ஆண்டு தொடங்கும் இந்நாளில் (16.8.2015) 
தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரை எழுதுவது தொடர்பான பதிவைப் பகிர்வதில் மகிழ்கிறேன். என் எழுத்துக்கும், ஆய்வுக்கும், வாசிப்புக்கும் துணை நிற்கும் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு மனமார்ந்த நன்றி. 

---------------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவில் தமிழ்விக்கிபீடியாவில் பயனராவதைப் பற்றி விவாதித்தோம். இருக்கின்ற கட்டுரையை மேம்படுத்துவதன் மூலமாகவும், புதிதாக கட்டுரை எழுதுவதன் மூலமாகவும் விக்கிபீடியாவில் பங்களிக்கலாம். நமக்கு எளிதானதை, பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்து, விக்கிபீடியாவின் நெறிமுறைகளை மனதில் கொண்டு எழுத ஆரம்பிக்கலாம். இப்பதிவில் நான் விக்கியில் எழுத ஆரம்பித்த நிலையில் பெற்ற அனுபவங்களைப் பகிர்கின்றேன். 

கட்டுரைகளை மேம்படுத்துவது
முன்னரே பிற விக்கிபீடியர்கள் எழுதியுள்ள கட்டுரைகளை மேம்படுத்த முயற்சிக்கலாம். கூடுதல் செய்திகளைத் தருவதன் மூலமாக கட்டுரை மெருகேறும். எளிதாகப் புரிந்துகொள்வதற்கு வசதியாக நான் மேம்படுததிய கட்டுரைகளில் சிலவற்றைப் பகிர்கிறேன். அந்தந்த தலைப்பில் சொடுக்கினால் உரிய தலைப்பிற்குள் செல்லலாம்.


மகாமகம் கட்டுரையில் ஆண்டுவாரியாக ஒவ்வொரு மகாமகம் என்ற நிலையில் 15ஆம் நூற்றாண்டு தொடங்கி 21ஆம் நூற்றாண்டு வரை தரப்பட்டுள்ள செய்திகள் என்னால் இணைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டன. அடிக்குறிப்புகள் சேர்ப்பது பற்றி கட்டுரையின் இறுதியில் விவாதிப்போம்

புதிய கட்டுரை எழுதுவது 
கட்டுரை எழுதுவதற்கு முன்பாக விக்கிபீடியாவில் உள்ள உங்களுக்கு ஆர்வமுள்ள கட்டுரைகளைப் படித்துப் பார்க்கலாம். எழுதும் முறை, பதிவின் அமைப்பு, உள்ளடக்கம் என்ற நிலைகளில் கட்டுரையினைப் படிக்கும்போது இயல்பாகவே பதிவு எழுதுகின்ற எண்ணம் தோன்றும். கடந்த வாரப்பதிவில் பார்த்த விக்கிபீடியா முதல் கட்டுரை என்ற கீழ்க்கண்ட அமைப்பைப் பார்ப்போம். கட்டுரைத் தலைப்பை இங்கே உள்ளிடவும் என்ற இடத்தில் புதிய கட்டுரையின் தலைப்பை தட்டச்சு செய்தால் புதிய பக்கம் உருவாகும். அதில் நாம் தட்டச்சு செய்ய ஆரம்பிக்கலாம். விக்கிபீடியாவில் தரப்பட்டுள்ள சில எளிய வழிமுறைகளைக் கடைபிடிக்கலாம்.

எந்த தலைப்பைத் தெரிவு செய்ய விரும்புகின்றோமோ அத்தலைப்பு தொடர்பான செய்திகளையும், செய்தி நறுக்குகளையும் சேகரித்து தனியாக ஒரு கோப்பில் வைத்துக்கொள்ளல் நலம். நாம் தேடும் இணைப்பு இணையத்திலிருந்தால் உரிய இணைப்பைக் கொடுக்கலாம். கட்டுரையில் ஒரு ஒழுங்கமைவு இருப்பது அவசியம். 

ஒரு கோயிலைப் பற்றி எழுதுகிறோமென்றால்  கோயில் அமைவிடம், வரலாறு, கோயிலிலுள்ள இறைவன், இறைவி, தொடர்புடைய புராணங்கள் மற்றும் செய்திகள், சிறப்புகள், மேற்கோள்கள், வெளி இணைப்புகள் என்ற நிலைகளில் பக்கத்தலைப்பு அமையலாம். இவ்வாறாக எளிதாக உள்ள ஒரு கட்டுரை புன்னைநல்லூர் கைலாசநாதர் கோயில்.



ஒரு அறிஞரைப் பற்றி எழுதுகிறோமென்றால்  அவரது பிறப்பிடம், பெற்றோர், பெற்ற பட்டங்கள்/விருதுகள், வகித்த பதவிகள், எழுதிய நூல்கள்,  சாதனைகள், மேற்கோள்கள், வெளி இணைப்புகள் என்ற நிலைகளில் அமைத்துக் கொள்ளலாம். இவ்வ்கையில் அமைந்தது விக்கியில் என் முதல் கட்டுரையான தமிழ்ப் பண்டிதர் திரு மணி. மாறன் அவர்களைப் பற்றிய பதிவு. எழுதிய சில நாள்களுக்குள் அக்கட்டுரை போதிய ஆதாரங்கள் இல்லாததாலும், விக்கி நெறிமுறைப்படி இல்லாததாலும் நீக்கப்படும் என்ற குறிப்பு விக்கியிடமிருந்து வந்தது. முதல் கட்டுரை நீக்கப்படக்கூடாது என்ற நிலையில் அதிக முயற்சி எடுத்து அவரைப் பற்றி மேலும் பல விவரங்களை நூல்களிலிருந்தும், நாளிதழ்களிலிருந்தும் சேகரித்துப் பதிவேற்றினேன். 


ஒரு நிகழ்வினைப் பற்றி எழுதுகிறோமென்றால் அந்நிகழ்வினைத் தொடர்ந்து கவனித்து மேற்கூறியவாறு உரிய மேற்கோள்களுடன் அமைத்துக்கொள்ளலாம். இதற்கு நாளிதழ் வாசிப்பு மிகவும் துணையாக இருக்கும். அவ்வகையில் தஞ்சைப்பெரிய கோயில் தேரோட்டம் கட்டுரை புதிதாக என்னால் ஆரம்பிக்கப்பட்டது. இக்கட்டுரையில் உசாத்துணையில் தரப்பட்டுள்ள குறிப்புகள் என்னால் நூல்களிலிருந்தும், அவ்வப்போது நாளிதழ்களிலிருந்தும் எடுத்து சேர்க்கப்பட்டவையாகும். விவரங்களை எடுக்க நாம் அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. தினமும் நாம் படிக்கும் செய்தித்தாளின் இணைப்பைச் சேர்க்கலாம். இக்கட்டுரை எழுதுவதற்கு முன்பாக பெரிய கோயில், தேர், முந்தைய தேரோட்டம் தொடர்பான செய்திகளைச் சேகரித்து தனியாக ஒரு கோப்பில் வைத்துக்கொண்டேன்.  நமக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றால் சிரமப்படவேண்டாம். நமக்குக் கிடைத்ததை, நாம் அறிந்ததை சேர்த்தால் போதுமானது. 

பக்கத்தலைப்புகள் 
கோயில் தொடர்பான கட்டுரையில் பக்கத்தலைப்புகளைப் பின்வருமாறு அமைத்துக்கொள்ளல் நலம். தேவைப்படின் வசதிக்குத் தக்கபடி மாற்றிக்கொள்ளலாம். மாதிரிக்கு கும்பகோணம் உச்சிபிள்ளையார் கோயில்  பதிவைப் பார்ப்போம். 
==இருப்பிடம்==
==மூலவர்==
==மேற்கோள்கள்==

கட்டுரைகளில் நாளிதழ் மேற்கோள் 
அடிக்குறிப்புகள் த்ருவதற்கான உத்திகள் கட்டுரை எழுத உதவியாக இருக்கும். அண்மையில் அழகர் கோயில் தேரோட்டம் கட்டுரையில் நான் சேர்த்த இணைப்பினை நான் சேர்த்த மேற்கோள் தேரோட்டம் என்ற உள் தலைப்பில் பின்வருமாறு அமையும் : 
"காலை 5.45 மணிக்கு, மேள தாளம் முழங்க புதிய தேரில் அழகர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். யானை கம்பீரமாக முன்னே சென்றது. காலை 7.15 மணிக்கு தேரின் வடத்தைப் பிடித்து பக்தர்கள் இழுக்கஆரம்பித்தனர். எங்கு பார்த்தாலும கோவிந்தா என்ற கோஷம் முழங்கியது. தேர் நான்கு கோட்டை வாசல்களை கடந்து, காலை 9.25மணிக்கு மீண்டும் நிலைக்கு வந்தது. அதிகமான எண்ணிக்கையில் பக்தர்கள் கலந்து கொண்டனர். அலங்காநல்லூர் : அழகர்கோயிலில் நேற்று ஆடித்தேரோட்ட விழா நடந்தது. ஆடிப்பௌர்ணமி நாளன்று நடைபெற்ற இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்." <ref>[http://m.dinakaran.com/adetail.asp?Nid=9490 அழகர் கோயிலில் ஆடித்தேரோட்டம், தினகரன், ஆகஸ்டு 1, 2015]</ref>

(3) என்ற அடிக்குறிப்பாக கட்டுரையில் வந்துள்ள இந்த மேற்கோள் கீழே உசாத்துணையில் (3) என்ற நிலையில் அமைந்துள்ளதைக் காணலாம். உரிய செய்திக்குப் பின்னர் <ref> என்ற சொல்லுடன் அடிக்குறிப்பிற்கான மேற்கோளாக உரிய நாளிதழின் உரலியைக் கொண்டும், அந்நாளில் வந்த அச்செய்திக்கான தலைப்பினைக் கொண்டும் தந்துவிட்டு, நாளிதழின் பெயர், நாள் விவரத்தைக் குறிப்பிடவேண்டும். இறுதியில் </ref> என்றவாறு குறி அமைக்கப்படவேண்டும்.

கட்டுரைகளில் நூல் மேற்கோள்
நூலை மேற்கோளாகக் காட்டும் நிலையில்  கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில் கட்டுரையில் தரப்பட்டுள்ள உத்தியைப் பயன்படுத்தலாம். கட்டுரையின் முதல் பத்திக்கான செய்தி பின்வருமாறு அமைகிறது: "கும்பகோணத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.<ref> புலவர் கோ.மு.முத்துசாமி பிள்ளை, கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992 </ref> இதற்கான அடிக்குறிப்பு ஆசிரியர், நூலின் பெயர், பதிப்பகம், ஊர், ஆண்டு என்ற நிலையில் அமைந்துள்ளது.


நமது கட்டுரைகள்
பிற இதழ்களில், நூல்களில் நாம் எழுதிய கட்டுரைகளை அப்படியே பதிவதும், அடிக்குறிப்பாகத் தருவதும் தவிர்க்கப்படுவது நலம். பெரும்பாலும் வலைப்பூக்களில் வெளியாகும் கட்டுரைகளும் மேற்கோளாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. 

நமது பங்களிப்புகள்
விக்கிபீடியாவில் நம்மால் துவங்கப்பட்ட மற்றும் திருத்தம் செய்யப்பட்ட பதிவுகளைக் காண்பதற்கு புகுபதிகை செய்து உள்ளே வந்தபின் திரையில் இடது மேல் புறத்தில் விடுபதிகைக்கு முன் உள்ள பங்களிப்புகள் என்பதைச் சொடுக்கினால் நாம் மேற்கொண்டுவரும் திருத்தங்கள், பதிவுகள் பதிவானதைக் காணமுடியும். 

நாம் எழுதிய கட்டுரைகள்
விக்கிபீடியாவில் நம்மால் துவங்கப்பட்ட கட்டுரையைக் காண்பதற்கு புகுபதிகை செய்து உள்ளே வந்தபின் திரையில் இடது மேல் புறத்தில் விடுபதிகைக்கு முன் உள்ள பங்களிப்புகள் என்பதைச் சொடுக்கும்போது பயனர் பங்களிப்புகள் என்ற தலைப்புடன் பக்கம் திறக்கும். அந்த பக்கத்தின் கீழ்ப்பகுதியில் (பா.ஜம்புலிங்கம் ஆகிய நான் பயனர் என்ற நிலையில்) கீழ்க்கண்ட அமைப்பு காணப்படும்.
பா.ஜம்புலிங்கம்:  பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு 
எண்ணிக்கை ·தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · 
அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்
அவற்றில் தொடங்கிய கட்டுரைகள் என்பதைச் சொடுக்கினால் அவரவர் தொடங்கிய கட்டுரைகளின் தலைப்பினைக் காணமுடியும். அண்மையில் நான் தொடங்கிய கட்டுரை திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்கசுவாமி திருக்கோயில் (நூல்) என்பதாகும். 

அக்கட்டுரைத் தலைப்பைச் சொடுக்கினால் அக்கட்டுரை கீழ்க்கண்டவாறு முழுமையாக திரையில் தோன்றும். மேலிருந்து இரண்டாவது நிலையில் படிக்கவும் தொகு வரலாற்றைக் காட்டவும் என்ற நிலைகளில் சொற்கள் காணப்படும். இவ்வமைப்பு அனைத்து கட்டுரைகளிலும் இருக்கும். அதில் வரலாற்றைக் காட்டவும் என்பதைச் சொடுக்கவேண்டும்.

திருத்த வரலாறு என்று தோன்றும் அப்பக்கத்தில், அச்சொல்லுக்குப் பின்னர் உரிய கட்டுரையின் தலைப்பு காணப்படும். அப்பக்கத்தின் கீழ்ப்பகுதியில் கீழ்க்கண்டவாறு பதிவு காணப்படும். அதன்மூலம் புதிய பக்கம் இன்னார் பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அறியமுடியும்.
(நடப்பு | முந்திய) 16:02, 13 ஆகத்து 2015‎ பா.ஜம்புலிங்கம் (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (3,012 பைட்டுகள்) (+3,012)‎ . . ("{{நூல் தகவல் சட்டம்| தலைப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

இப்பதிவில் நான் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துள்ளேன். ஒவ்வொருவரும் புதிதாக எழுத ஆரம்பிக்கும்போது மாறுபட்ட அனுபவங்களைப் பெறலாம். விக்கிபீடியாவில் கட்டுரை எழுதுவது தொடர்பான பதிவில் புகைப்படங்கள் சேர்த்தல், உள்ளிட்ட மேலும் பல விவரங்கள் எளிமையாகத் தரப்பட்டுள்ளன. இப்பதிவின் முதல் பத்தியில் குறிப்பிட்டுள்ளதைப் போல விக்கிபீடியாவின் நெறிமுறைகளை மனதில் கொண்டு எழுத உங்களை அன்போடு அழைக்கிறேன். 6.7.2014இல் தொடங்கி 13.8.2015 வரை தமிழ் விக்கிபீடியாவில் நான் ஆரம்பித்துள்ள கட்டுரைகள் 220. இவற்றுள் நீக்கப்பட்ட கட்டுரைகள் ஐந்து ஆகும். தமிழ் விக்கிபீடியா அனுபவம் ஆங்கில விக்கிபீடியாவில் தடம் பதிக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது. அதைப் பற்றி மற்றொரு பதிவில் விவாதிப்போம். வாழ்த்துக்கள். 

---------------------------------------------------------------------------------------------------
நன்றி : விக்கிபீடியா
---------------------------------------------------------------------------------------------------

08 August 2015

விக்கிபீடியாவில் பயனராவோம்

தமிழ் விக்கிபீடியாவில் அண்மையில் 200ஆவது பதிவினை (article) நிறைவு செய்ததை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டபோது, வலைப்பூ நண்பர்கள் தமிழ் விக்கிபீடியாவில் எழுதும் முறையைப் பற்றி ஒரு பதிவினைப் பதியும்படிக் கேட்டிருந்தனர். எனது அனுபவத்தில் நான் கற்றவற்றைப் பகிர்கிறேன். இன்னும் பல நான் கற்கும் நிலையில் உள்ளேன். இப்பதிவில் விக்கிபீடியாவில் பயனராவதைப் (User) பற்றி அறிவோம். பயனராவோம். வாருங்கள்.

முதலில் https://ta.wikipedia.org/wiki என்ற முகவரி மூலமாக விக்கிபீடியாவின் முகப்புப்பக்கத்திற்குச் செல்வோம். இடது மூலையில் புதிய கணக்கை உருவாக்கு புகு பதிகை என்ற சொற்கள் காணப்படும்.  முன்னரே கணக்கு வைத்து பயன்படுத்திக்கொண்டிப்பவர்கள் புகு பதிகை மூலமாக வரமுடியும்.

புதியவராக பதியப்போகும் நிலையில் புதிய கணக்கை உருவாக்கு என்பதைச் சொடுக்கவும். பின்னர் பயனர் (உங்கள்) பெயர், கடவுச்சொல், கடவுச்சொல்லை உறுதிசெய்க என்பனவற்றை வழக்கமாக முகநூல், மின்னஞ்சல் போன்றவற்றிற்குப் பதிவது போல பதியலாம். தேவையெனில் மின்னஞ்சல் முகவரியை தரலாம்.  பாதுகாப்பு சோதனைக்குப் பின் உங்கள் கணக்கை உருவாக்குக என்பதைச் சொடுக்கினால் நமக்கென்று ஒரு கணக்கு உருவாகும். முடிந்தவரை பயனராகப் பதிந்துவிட்டு எழுத ஆரம்பிப்பதே நல்லது.


பயனர் பெயர்
கடவுச்சொல்
கடவுச்சொல்லை உறுதிசெய்க
மின்னஞ்சல் முகவரி (விருப்பத்தேர்வு)
பாதுகாப்பு சோதனை
புதுப்பி

புதிதாக நம் பெயரில் கணக்கு உருவாகிவிட்ட நிலையில் பின்வருமாறு திரையில் தெரியும்போது கடவுச்சொல்லை தட்டச்சு செய்துவிட்டு புகுபதிகை என்பதனைச் சொடுக்கவேண்டும்.



புகுபதிகை

பயனர் பெயர்

புகுபதிகையைச் சொடுக்கிய பின்னர் பின்வருமாறு திரை தோன்றும். கட்டுரையை ஆரம்பிப்பதற்கு முன்பாக வலது ஓரத்தில் காணப்படுகின்ற கீழ்க்கண்டவற்றைப் படித்துத் தெரிந்துகொள்வது அவசியம். முதற்பக்கம் என்ற சொல்லைச் சொடுக்கினால் பின்வருமாறு திரை தோன்றும்.


விக்கிபீடியாவில் வலது பக்கம் காணப்படுகின்றவற்றில் புதிய கட்டுரை எழுதுக என்பதைச் சொடுக்கினால் பின்வருமாறு திரை தோன்றும். அதில் முதல் கட்டுரை எழுதுவது எப்படி என்று தெளிவாக எளிய முறைகள் தரப்பட்டுள்ளன. அப்பகுதியை நன்கு படித்துவிட்டு கட்டுரை எழுத ஆரம்பிக்கலாம். 

தமிழில் எழுத என்பதற்குள் நுழைந்தால் தமிழில் எழுதுவதற்கான முறைகள் தரப்பட்டுள்ளன. நான் எம்எச்எம் ரைட்டரை பதிவிறக்கம் செய்து தட்டச்சு செய்துவரும் முறையைக் கடைபிடிக்கின்றேன்.

ஆலமரத்தடி என்ற இணைப்பில் விக்கிபீடியாவின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல குறிப்புகள் உரையாடப்படுகின்றன. அவை புதிதாக எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கும்.  


கட்டுரைகளை உருவாக்கும் முன்பாக விக்கி நற்பழக்கவழக்கங்கள் என்ற பக்கத்திற்குள் சென்று ஒரு முறை படித்துவிட்டு வருவது பயன் தரும். பின்னர் கீழ்ப்பகுதியில் உள்ள பெட்டியில் கட்டுரையின் தலைப்பை இட்டு கட்டுரையைத் தொடங்கவும் என்ற பொத்தானை அழுத்தவேண்டும். இவை தெர்டர்பான உரிய விவரங்கள் இப்பக்கத்தில் தரப்பட்டுள்ளன. பக்கத்தை சேமிக்கவும் என்ற நிலையைத் தொடர்ந்து அந்த பொத்தானை அழுத்தும்போது கட்டுரை தமிழ்விக்கிபீடியாவில் இடம் பெற்றுவிடும். 

எழுத ஆரம்பித்தவுடனே நமக்கு உதவுவதற்கு விக்கிபீடியாவில் நண்பர்கள் உள்ளனர். அவர்கள் நமக்கு தேவையான கருத்தினைத் தந்து நம் பதிவுகளை செழுமைப்படுத்த உதவுவர். 

சரி. எந்த கட்டுரையை எழுதுவது. விக்கிபீடியாவில் நாம் எழுத விரும்பும் கட்டுரையோ, அப்பொருண்மை தொடர்பான கட்டுரையோ உள்ளதா என்பதை எப்படி உறுதி செய்வது, பத்திகளை எவ்வாறு அமைப்பது, இணைப்புகளை எவ்வாறு தருவது என்பனவற்றை அடுத்த பதிவில் பார்ப்போம். அதற்கு முன்பாக மேலுள்ள படிநிலைகளைப் படித்து முயற்சித்துப் பாருங்கள். பயனராகுங்கள்.  ஐயமிருப்பின் எனது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு (drbjambulingam@gmail.com) உங்களது தொலைபேசி எண் விவரத்தைத் தந்து கேளுங்கள், தெரிந்ததைப் பகிர்கிறேன்....  முதலில் பயனராக ஆவோம். 

.............................தொடரும்

நன்றி : விக்கிபீடியா