பிற்காலச் சோழர் காலத்தின் ஒரே கலையமைப்பு கொண்ட கோயில்களாக தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் ஆகிய நான்கு கோயில்களைக் கூறுவர். இந்நான்கு கோயில்களின் விமானமும் சற்றொப்ப ஒரே மாதிரியாகக் காணப்படும். தமிழகத்தில் அவசியம் காணவேண்டிய கோயில்களில் இந்த நான்கு கோயில்களும் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. இந்த நான்கு கோயில்களுக்கு பல முறை தனியாகவும், குடும்பத்துடனும் சென்றுள்ளேன். அவ்வரிசையில் திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலுக்கு அண்மையில் குடும்பத்துடன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்த பின்னரும், சினம் குறையாது ஆர்ப்பரித்த நேரத்தில் மூவுலகமும் நடுங்கியதாகவும், அப்போது சர்வேஸ்வரன், சரபமூர்த்தியாகத் தோன்றி, நரசிம்மத்தின் ஆவேசத்தை அடக்கி, அனைவரின் நடுக்கத்தையும் தீர்த்து வைத்ததாகவும், அதனடிப்படையில் நடுக்கம் தீர்த்தநாதர் எனப் பொருள்படும் கம்பகரேஸ்வரர் எனப் பெயர் பெற்றார் என்று தலபுராணம் கூறுகிறது. இத்தகைய பெருமை பெற்ற கோயிலின் ஏழு நிலை ராஜகோபுரம் நம்மை ஈர்க்கிறது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம் உள்ளது.
ராஜகோபுரத்திற்கும் முன் மண்டபத்திற்கும் செல்லும் இடையேயுள்ள இவ்விடத்தில் நடந்துசெல்லும் வழியில் புதிதாக கட்டப்பட்ட மண்டபம் உள்ளது.
அம்மண்டபத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது அழகிய சிறிய கோபுரம் உள்ளது. அங்கிருந்து மூலவர் உள்ள கருவறைக்குச் செல்லும் வழி நீண்டு காணப்படுகிறது. மூலவரைப் பார்ப்பதற்கு முன்பாக இந்த தூண்களைப் பார்த்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்ற ஆவல் நமக்கு இயற்கையாக வந்துவிடும். ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு வகையில் நுட்பமான வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது.
கருவறையின் முன்புறம் அழகான வேலைப்பாட்டுடன் கூடிய தூண்கள் காணப் படுகின்றன. தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலில் காணப்படும் தூண்களிலிருந்து சற்றே மாறுபட்ட வடிவில் இவை உள்ளன. மூலவரை வணங்கிவிட்டு மூலவர் சன்னதியின் வலப்புறம் வழியாக வெளியே வந்தால் யானை இழுத்துச் செல்லும் நிலையிலான அமைப்பில் மண்டபம் உள்ளதைக் காணமுடிகிறது. திருக்களிற்றுப்படியில் இறங்கி மண்டபத்தைச் சுற்றி வரும்போது மிக நுணுக்கமான சிற்பங்களைக் காணமுடிந்தது. அவற்றுள் ராமாயணச் சிற்பங்கள் அடித்தள வரிசையில் உள்ளதாகத் தெரிவித்தனர்.
அங்கிருந்து திருச்சுற்றில் வரும்போது கம்பீரமான விமானம் உள்ளது. இந்த விமானத்தைப் பார்த்ததும் நமக்கு மற்ற மூன்று கோயில்களும் நினைவிற்கு வந்துவிடும்.
விமானத்தின் அழகைப் பார்த்துக்கொண்டே சுற்றிவரும்போது தட்சிணாமூர்த்தி, அடிமுடி காணா அண்ணல் ஆகியோரைப் பார்த்தபடியே தொடர்ந்து அறம்வளர்த்த நாயகி என்றழைக்கப்படும் அம்மனின் சன்னதியைக் காணலாம். அம்மன் சன்னதிக்கு அருகே சரபேஸ்வரர் சன்னதி காணப்படுகிறது.
கோயிலைச் சுற்றி வெளியே வரும்போது அதே பாணியில் அமைந்துள்ள மற்ற மூன்று கோயில்களின் விமானங்களும், அதிலுள்ள சிற்பங்களும், நேர்த்தியும் நம் மனதிற்குள் இயல்பாகத் தோன்றும். சிற்பக்கலைக்கும் கட்டடக்கலைக்கும் பெயர் பெற்ற திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலுக்கு ஒரு முறை செல்வோம். இக்கோயில் கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் கும்பகோணத்திலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
கோயிலில் எங்கள் பேரன் தமிழழகன் |
பலமுறை சென்றுள்ளேன்
ReplyDeleteநன்றி ஐயா
தஞ்சை கோவிலுக்கு மட்டுமல்ல, தஞ்சைக்கே இதுவரை வரும் பாக்கியம் கிட்டவில்லை இந்த முறை கண்டிப்பாக காண வருவேன்
ReplyDeleteத.ம.2
இன்னும் இந்தக் கோயிலைத் தரிசித்ததில்லை..
ReplyDeleteஅழகிய தகவல்களைக் கண்டு மகிழ்ச்சி..
எந்தக் கோவிலையும் பார்த்ததில்லை....
ReplyDeleteஇது சிவகங்கை அருகில் இருக்கும் திருப்புவனமா இல்லை வேறு இடமா ஐயா...
இக்கோயில் உள்ள திருபுவனம் என்னும் ஊர் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ளது.
Deleteதிருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் பறிய தகவல்களும், படங்களும், விளக்கங்களும் அருமையோ அருமை.
ReplyDelete//கோயிலில் எங்கள் பேரன் தமிழழகன்//
ஆஹா, அனைத்திலும் இது மேலும் அருமையோ அருமை.
பகிர்வுக்கு நன்றிகள்.
கல்லிலே கலைவண்ணம் மிளிர்கிறது :)
ReplyDeleteதங்களின் பதிவின் மூலமே இந்தக் கோயிலை பற்றி தெரிந்து கொண்டேன். அழகான கலையம்சம் கொண்ட கோயில். அவசியம் பார்க்க வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி அய்யா!
ReplyDeleteத ம 4
அருமையான அறிமுகம் கூறி
ReplyDeleteசிறந்த வரலாற்றைப் பகிர்ந்தமைக்கு
பாராட்டுகிறேன்.
தொடருங்கள்.
வணக்கம்.
ReplyDeleteகாணவேண்டிய கோயில்.
உங்கள் பதிவும் புகைப்படங்களும் மென்மேலும் பார்க்கத் தூண்டுவன.
தொடர்கிறேன்.
நன்றி.
Sirpa kalai arputham!! Thanks for sharing
ReplyDeleteமுன்பு அடிக்கடி போவோம். ஊரிலிருந்து வருபவர்கள், பட்டுபுடவை எடுக்க வரும் சொந்தகளுடன் பல முறை சென்று இருக்கிறோம்.
ReplyDeleteகலைநயம் மிக்க கோவில்.
பேரன் தமிழழகன் வாழ்க வளமுடன்.
தாத்தா போல் ஆராயச்சி செய்வான் போலும் , செல்லம் கீழே பார்க்கும் பார்வை அப்படி ஆராய்ச்சி செய்வது போல் உள்ளதே!
திரிபுவனம் என்றாலேயே பட்டு ஞாபகமே வருகிறது தஞ்சையில் இருக்கிறீர்கள் கலை நயம் கொண்ட கோவில்களுக்கு அடிக்கடி போகும் பாக்கியம் உங்களுக்கு உண்டு அடுத்த முறை தஞ்சை வரும்போது பார்க்க முயற்சி செய்ய வேண்டும்
ReplyDelete