01 October 2016

கோயிற்கலை போற்றும் மகாமகம்

நவராத்திரி தொடங்கி நடைபெறும் இவ்வேளையில் மகாமகத்தின்போது நான் எழுதி வெளியான கட்டுரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன். கோயில்களைப் பார்ப்போம், கலைகளை ரசிப்போம். 

குடந்தை, குடமூக்கு, கும்பகோணம்

''கொற்றச்சோழர் குடந்தை வைத்த நாடுதரு நிதியினுஞ் செறிய அருங்கடிப் படுக்குவள்'' என்கிறது அகநானூற்றுப்பாடல். சங்க காலத்தில் குடந்தை என்றழைக்கப்பட்ட இவ்வூர் புகார் மற்றும் உறையூர் போல தலைநகராக இருந்திருக்க வாய்ப்புண்டு. நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் 51 பாசுரங்களில் 50 இடங்களில்  குடந்தை என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெரியாழ்வார் ''குடந்தைக்கிடந்தானே, சப்பாணி'' என்று கூறுகிறார். ''கோவணத்துடையான் குடமூக்கு'', ''கூத்தாடி உறையும் குடமூக்கு'' என்றார் நாவுக்கரசர். கி.பி.7ஆம் நூற்றாண்டில் குடமூக்கு என்று இவ்வூர் அழைக்கப்பட்டது. பண்டைய இலக்கியங்களிலும் தேவாரத்திருமுறைகளிலும், நாலாயிரத் திவ்யப் பிரபந்தங்களிலும் கல்வெட்டுக்களிலும் குடமூக்கு என்றே அழைக்கப்பட்டது. 



கும்பகோணம் கல்வெட்டுகளில் ஸ்ரீகுடந்தை, குடமூக்கு, திருக்குடமூக்கு, வடகரைப்பாம்பூர் நாட்டுத் தேவதானம் திருக்குடமூக்கு, உய்யக்கொண்டார் வளநாட்டுப் பிரமதேயம் திருக்குடமூக்கு என்றெல்லாம் அழைக்கப்பெற்ற பெருமையுடையது இவ்வூர். பாணபுரீசுவரர் கோயில் என வழங்கும் சோமநாததேவர் கோயில் பகுதி சோமநாதமங்கலம், சோமநாத தேவமங்கலம் என்று தனி ஊராக விளங்கியது. திருக்குடமூக்கிலிருந்த அவ்வூர் பிரிக்கப்பட்டது என்பது திருக்குடமூக்கில் வேறு பிரிந்த என்ற தொடரால் அறியலாம்.

கும்பகோணம் சார்ங்கபாணி கோயிலின் முன் மண்டபத்துத் தெற்குச் சுவரில் காணப்படும் கல்வெட்டு விஜயநகர வேந்தர் விருப்பண்ண உடையாருக்குரியதாகும். இக்கல்வெட்டின் காலம் கி.பி.1385 ஐப்பசி மாதம் 27ஆம் தேதி புதன்கிழமையாகும். இக்கல்வெட்டில்தான் இவ்வூரின் பெயர் கும்பகோணம் என்று முதன்முதலாக வருகிறது. அருணகிரியாரும் ''கும்பகோண நகர் வந்த பெருமாளே'' என்று கும்பகோணத்து முருகப்பெருமானைப் போற்றுகிறார். 

மகாமகப்பெருவிழா
இத்தகைய பெருமையுடைய கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமகப் பெருவிழாவினை, ''பூமருவும் கங்கைமுதல் புனிதமாம் பெருந்தீர்த்தம்  மாமகந்தான் ஆடுதற்கு வந்து வழிபடும் கோயில்'' என்று சேக்கிழார் பெருமான் கி.பி.12ஆம் நூற்றாண்டில் தாமருளிய பெரிய புராணத்தில் எடுத்துக்கூறியுள்ளார். தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் கோயில்களைக் கொண்ட நகரங்களில் முக்கியமான இடத்தைப் பெறுவது கும்பகோணம். அவற்றில் மகாமகத்தின்போது மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காணுகின்ற 12 சைவக்கோயில்களும், காவிரியில் தீர்த்தவாரி காணுகின்ற ஐந்து கோயில்களும் அடங்கும். மகாமகத் தீர்த்தவாரி சைவக்கோயில்களில் இரு கோயில்கள் கும்பகோணம் நகருக்கு அண்மையில் கொட்டையூரிலும், சாக்கோட்டையிலும் உள்ளன.
கோயில்களின் சிறப்பு
தமிழகத்தில், குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கோயில்கள் சிற்பம், ஓவியம், இசை, கட்டடம் என்ற பல்வேறு நிலைகளில் சிறப்பான கலையழகினைக் கொண்டு அமைந்துள்ளன. இக்கோயில்கள் நமக்கு இறையுணர்வினைத் தருவதோடு, கலையுணர்வினையும் நம்முள் எழ வைக்கின்றன. பல்லாண்டு காலமாக பற்பல காலகட்டங்களில் பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டு சிறந்த கலைப்பொலிவோடு விளங்கும் இக்கோயில்களுக்கு ஈடு இணையென இவற்றையே கூறமுடியும்.  தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலும், ஆவுடையார்கோயிலும், கும்பகோணம் ராமசுவாமி கோயிலும் சிற்பக்கலையின் உச்சத்தினை எடுத்துரைக்கும் கோயில்களில் முக்கியமானவையாகும். கும்பகோணம் சார்ங்கபாணிகோயில் கருவறையும், பழையாறை சோமநாதசுவாமிகோயில், கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில், திருக்கருக்காவூர் முல்லைவனநாதர் கோயில்களில் உள்ள ரத வடிவ மண்டபங்களும் காண்போரின் கண்ணைக் கவர்வனவாகும். தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில், திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில்  உள்ளிட்ட கோயில்களில் மிக நுட்பமாக ஓவியங்களைக் காணலாம். திருமழபாடியில் கருவறைத் திருச்சுற்றில் ஒரே கல்லால் ஆன சோமாஸ்கந்தர், வேதாரண்யம் திருமறைக்காட்டீஸ்வரர் கோயில் சுழலும் கல்தூண்கள், கும்பகோணம் வீர சைவ மடத்து வீரபத்திரர் கோயிலில் உள்ள செங்கல் கட்டுமானம், பழையாறையில் இராவணன் கயிலையைப் பெயர்த்தெடுத்தல் சிற்பம்  ஆகியவற்றில் கட்டடக்கலையின் நுணுக்கத்தைக் காணலாம். மகாமகம் கொண்டாடப்படும் இவ்வினிய விழாக்காலத்தில் இக்கோயில்களில் சில கோயில்களுக்குச் செல்வோம். 

கும்பகோணம் ராமசுவாமி கோயில்
காவிரியாற்றில் தீர்த்தவாரி காணும் ஐந்து மகாமக வைணவக்கோயில்களில் ராமசுவாமி கோயில் ஒன்றாகும். கி.பி.1600 முதல் கி.பி.1645 வரை தஞ்சாவூரை ஆட்சி செய்த ரகுநாத நாயக்க மன்னரால் இக்கோயில் கட்டப்பட்டதாகும். ஸ்ரீராமன் என்னும் விஜயநகரப் பேரரசனுக்கு ரகுநாத நாயக்கர் கும்பகோணத்தில் பட்டாபிஷேகம் செய்து வைத்த நினைவாக அவ்வரசர் இக்கோயிலைக்கட்டினார். கருவறையில் ராமர் பட்டாபிஷேகக்கோலம் கண்கொள்ளாக்காட்சியாகும்.  தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலிலுள்ள ராஜகம்பீரன் மண்டபத்தை நினைவுபடுத்துமளவு இங்குள்ள மகாமண்டபத்து சிற்பங்கள் உள்ளன. தாராசுரத்தில் ஒவ்வொரு தூணிலும் மிகச்சிறிய அளவிலான சிற்பங்கள் உள்ளன. ராமசுவாமி கோயிலில் ஒவ்வொரு தூணிலும் ஆளுயர சிற்பங்கள் உள்ளன. ஒரு தூணில் நான்கு பக்கங்களிலும் ராமர், சீதை, லட்சுமணர், அனுமார் சிற்பங்கள் உள்ளன. இக்கோயில் உள் திருச்சுற்றில் ராமாயண ஓவியங்கள் காணப்படுகின்றன.

புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயில்
தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் தஞ்சாவூரிலிருந்து 15 கிமீ தொலைவில் அய்யம்பேட்டைக்கு முதல் நிறுத்தத்தில் உள்ளது புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயில் என்றழைக்கப்படும் ஆலந்துறைநாதர் கோயில். திருவாலந்துறை மகாதேவர் என்று அழைக்கப்பட்ட இக்கோயில் முதலாம் பராந்தகசோழன் (கி.பி.907-955) காலத்தைச் சேர்ந்ததாகும். ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலம் காவிரியாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. இறைவன் ஆலந்துரைநாதர், இறைவி அல்லியங்கோதை. இக்கோயிலின் கருவறைக் கோஷ்டத்தில் சிறிய அளவிலான சிற்பங்கள் உள்ளன. சீதை இலக்குவனனுடன் ராமர் வனவாசம் ஏற்று படகில் கங்கையைக் கடந்து செல்லல், ஜடாயு வதம் போன்ற ராமாயணக்காட்சிகள், கஜசம்ஹாரமூர்த்தி, காளியின் மகிஷ வதம், காலசம்ஹாரமூர்த்தி, வராகமூர்த்தி பூமாதேவியை மீட்டு வரல், ஆதிசேடன்மீது அரிதுயில் கொள்ளும் அனந்தசயனமூர்த்தி உள்ளிட்ட பல சிற்பங்கள் உள்ளன. கம்பனின் காப்பியம் காட்டும் வாலி வதத்தின் சோகத்தை விஞ்சும் வகையில் கம்பனுக்கு காலத்தால் முற்பட்ட புள்ளமங்கைச் சிற்பம் எடுத்துரைப்பதாக குடவாயில் சுப்பிரமணியன் கூறுகிறார். விமானத்தில் பூதகணங்கள் காண்பதற்கு மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளன.   

திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில்
கும்பகோணத்திலிருந்து சுமார் 11 கிமீ தொலைவில் உள்ள திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில் புள்ளமங்கைக் கோயிலைப் போலவே கருவறைக் கோஷ்டங்களுக்குப் புகழ் பெற்ற கோயிலாகும்.  ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சம்பந்தரால் பாடப்பெற்ற இத்தலம்  காவிரியாற்றின் வட கரையில் அமைந்துள்ளது.  இறைவன் சாட்சிநாதேஸ்வரர், இறைவி கரும்பன்ன சொல்லம்மை. புள்ளமங்கையில் உள்ளதுபோலவே சிறிய, நுட்பமான சிற்பங்களை இங்கு காணலாம். இறைவனும் இறைவியும் பல்வேறு நிலைகளில்
அமர்ந்த கோலத்தில் உள்ள பல சிற்பங்கள் இங்கு காணப்படுகின்றன. புராணக் காட்சிகள் மிகவும் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன.

திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில்
திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர்கோயில் எனப்படும் கோயில் கும்பகோணம் தஞ்சாவூர் சாலையில் கும்பகோணத்திலிருந்து 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஞானசம்பந்தர், நாவுக்கரசரால் பாடப்பெற்ற இத்தலம் காவிரியாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. இறைவன் கபர்தீஸ்வரர், இறைவி பெரியநாயகி. இக்கோயிலின் முன் மண்டபத்தில் வேலைப்பாடுள்ள தூண்கள் அமைந்துள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் தூண்கள் சிறப்பாக அமைந்துள்ள கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இங்குள்ள அம்மன் சன்னதியில் ஓவியங்கள் காணப்படுகின்றன. இக்கோயில் வளாகத்தில் உள்ள வலஞ்சுழி விநாயகர் கோயிலிலும் தூண்கள் மிகவும் வேலைப்பாடுகளோடு அமைந்துள்ளன. விநாயகர் கோயிலின் காணப்படுகின்ற கொடுங்கை ஆவுடையார் கோயிலில் காணப்படுகின்ற கொடுங்கையை நினைவூட்டுகின்றது. 

மேற்கண்டவை மூலமாக கும்பகோணம் நகரிலும் அருகிலும் உள்ள கோயில்கள் கலைகளின் இருப்பிடமாகத் திகழ்வதை அறியமுடிகின்றது. கட்டடக்கலை நுட்பங்கள் நம் கலைஞர்களின் திறனை வெளிப்படுத்துவனவாக உள்ளன. ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு வகையில் சிறப்புக்கூறுகளைப் பெற்றுத் திகழ்வதைக் காணும்போது முன்னோர்கள் இறையுணர்வோடு கலையுணர்வையும் கொண்டிருந்தனர் என்பதை உணரமுடிகிறது. தமிழகத்தில் பெரும்பாலான கோயில்களில் இவ்வாறான வகையில் கலையின் நுட்பங்கள் காணப்படுகின்றன. இறையுணர்வினைப் பெறுவதற்காக மகாமகம் கொண்டாடப்படும் கும்பகோணத்திற்கு வருகின்ற இவ்வினிய வேளையில் கும்பகோணத்திலும் அருகிலும் உள்ள கோயில்களுக்குச் சென்று கோயிற்கலையின் பெருமையை நாம் அறிவதோடு, பிறர்க்கும் உணர்த்துவோம். கோயிற்கலையின் முக்கியத்துவத்தை வரும் தலைமுறையினர் பாதுகாக்க ஆவன செய்வோம். 
---------------------------------------------------------------------
கும்பகோணம் மகாமகம் 2016சிறப்பு மலரில் கோயிற்கலை போற்றும் மகாமகம் என்ற தலைப்பில் வெளியான கட்டுரை. கட்டுரையை வெளியிட்ட இந்து சமய அற நிலையத்துறை மலர்க்குழுவினர்க்கு மனமார்ந்த நன்றி.

கும்பகோணம் மகாமகம் 2016 சிறப்பு மலர் முகப்பட்டை
துணை நின்றவை
சி.பாலசுப்பிரமணியன், குடமூக்கு ஒரு நோக்கு,  மகாமகம் 1992 சிறப்பு மலர்
புலவர் செ.இராசு, குடந்தைக் கீழ்க்கோட்டக் கல்வெட்டுகள், மகாமகம் 1992 சிறப்பு மலர்
குடந்தை என்.சேதுராமன், திருக்குடமூக்கில் மகாமகம், மகாமகம் 1992 சிறப்பு மலர்
மா.சந்திரமூர்த்தி, புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயில், தமிழ்நாட்டுச் சிவாலயங்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2004
மு.அகிலா, புனலாடும் முன் புள்ளமங்கை செல்வோம், மகாமகம் மலர் 2004
பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
மகாமகம், விக்கிபீடியா

12 comments:

  1. புள்ளமங்கை கோவிலைப்பற்றிய தகவல்கள் அருமை! புள்ள‌மங்கை கோவில் பற்றி இப்போது தான் அறிந்து கொண்டேன். முதலாம் பராந்தக சோழன் காலத்தியது என்றால் மிகவும் பழமையானது தான்! ஒரு நாள் சென்று பார்க்க வேண்டும்!

    ReplyDelete
  2. முனைவருக்கு எமது வாழ்த்துகளும்
    த.ம. 2

    ReplyDelete
  3. அருமையான பதிவு
    தங்கள் ஆய்வுப் பணி தொடர
    எனது வாழ்த்துகள்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  5. மிகச் சிறப்பான கட்டுரை ஐயா...

    ReplyDelete
  6. கோவில்களின் சிறப்பில் , மதுரைக்கு நிகர் கும்பகோணம்தான் போலிருக்கே !

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. அருமையான கட்டுரை. ஒரு சில கோயில்களைப் பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டோம் ஐயா! கும்பகோணத்தின் பழைய பெயர்களையும் சான்றுகளுடன் சொல்லியமை சிறப்பு. வாழ்த்துகள் ஐயா!

    ReplyDelete
  9. அருமையான பதிவு. ஏற்கனவே பார்க்க வேண்டும் என்ற எனது விருப்பப்பட்டியலில் இருக்கும் கோயில்கள் பாடிய பல தகவல்களை தெரிந்துகொண்டேன். பகிர்வுக்கு நன்றி!
    த ம 4

    ReplyDelete
  10. அருமையான கட்டுரை. எத்தனை தகவல்கள்... எத்தனை கோவில்கள் - அனைத்திற்கும் சென்று பார்க்கவேன்ண்டும் என்ற ஆவல் உண்டாகியிருக்கிறது.

    பகிர்வுக்கு நன்றி. சிறப்பான கட்டுரைக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  11. பண்டைய கோவில்களைப் பற்றிய அரிய தகவல்கள் இறை உணர்வால் கலை உணர்வா கலை உணர்வால் இறை உணர்வா என்று பிரித்துப்பார்க்க முடியாதபடி ஒன்றை ஒன்று சார்ந்திருப்பது தெரிகிறது

    ReplyDelete