Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts

10 October 2023

பேராசிரியர் வே.இரா. மாதவன் (6.4.1952-8.10.2023)

தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறை முன்னாள் துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர் வே.இரா. மாதவன் அவர்கள் 8.10.2023 அன்று இறந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். பழகுவதற்கு இனியவர், மிகச்சிறந்த பண்பாளர், மென்மையான பேச்சுக்குச் சொந்தக்காரர். அவரை இழந்து வாடும் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1993இல் ஆய்வில் ஈடுபட ஆரம்பித்த பின்னர் பல ஆசிரிய, அலுவலக நண்பர்களுடன் அவ்வப்போது என்னுடைய ஆய்வினைப் பற்றிப் பேசுவதுண்டு. அவ்வாறு நான் ஆய்வு தொடர்பாக பேசி வந்த ஆசிரியர்களில் ஒருவர் திரு வே.இரா.மாதவன் அவர்கள். அவரிடம் பேசும்போது பெரும்பாலும் கோயில்களைப் பற்றிய செய்திகளைக் கேட்டறிவேன். கருத்துகளை அவர் நுணுக்கமாக எடுத்துக்கூறும் விதம் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும். 15 ஆண்டுகளுக்கு அவருடைய நூல் தொடர்பாக நான் எழுதிய கடிதம் தி இந்து நாளிதழில் வெளியானது. சற்றே திரும்பிப்பார்ப்போம்.

2008இல் தி இந்து (ஆங்கிலம்) இதழில் வெளியான ஒரு கட்டுரையில் தமிழில் தல புராணங்கள் தொடர்பாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த நூலும் இல்லை என்ற பொருளில் ஒரு கட்டுரை வெளியானது. ("..Nobody has done any serious work on Tamil sthalapuranams.", The Vandalization of Heritage, Interview, The Hindu, Magazine Section, 10.2.2008, p.7)




அவர் எழுதிய தமிழில் தல புராணங்கள் நூலை (தமிழில் தல புராணங்கள், முதல் பகுதி மற்றும் இரண்டாம் பகுதி, பாவை வெளியீட்டகம், சி1, முன்றில் சாலை, தமிழ்ப்பல்கலைக்கழகக் குடியிருப்பு வளாகம், திருச்சி நெடுஞ்சாலை, தஞ்சாவூர், 1995) நான் படித்துள்ளேன். நாளிதழில் நான் படித்த செய்தியை அவரிடம் கூறி, இது தொடர்பாக அவ்விதழுக்கு நான் கடிதம் எழுதவுள்ளதைக் கூறினேன். அப்போது அவர் அவ்விதழில் 1997இல் வெளியான நூல் மதிப்புரையின் (Sthalapuranas in Tamil, The Hindu, 14 October 1997) படியைத் தந்தார். தொடர்ந்து அவ்விதழுக்கு நான் எழுதிய கடிதம் (More on sthalapuranams, The Hindu, Magazine, 24 February 2008) வெளியானது.

அவரைப் போன்ற அறிஞர்களுடன் விவாதம் செய்தது என் ஆய்விற்கும், வாசிப்பிற்கும் மிகவும் துணையாக இருந்தது. அவருடைய மறைவு என்னைப் போன்றோருக்குப் பேரிழப்பு.

தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் 2014இல் தமிழில் தல புராணங்கள் (நூல்) என்ற தலைப்பிலும், 2015இல் திருக்குடந்தை புராணம் என்ற தலைப்பிலும் பதிவுகளை ஆரம்பித்தேன்.

25 April 2023

சென்று வாருங்கள், ராண்டார் கை

தி இந்து ஆங்கில நாளிதழில் நான் தொடர்ந்துவிரும்பி வாசித்த பத்திகளில் ஒன்று ராண்டார் கை எழுதிவந்த திரைப்படம் தொடர்பான மதிப்புரைகள். அப்பதிவுகள் மூலமாக அவருடைய நினைவாற்றலையும், மொழி ஆழத்தையும் அறிந்து வியந்தேன். தொடர்ந்து அடுத்த வாரம் அவருடைய பத்தி எப்பொழுது வெளியாகும், எந்தப் படமாக இருக்கும், எந்த வகையில் எழுதுவார் என்ற எண்ண ஓட்டங்களோடு காத்திருப்பேன். தி இந்து ஆங்கில நாளிதழை தொடர்ந்து 50 வருடங்களாக நான் படித்துவருவதற்குக்காரணம் இவரைப் போன்ற எழுத்தாளர்களின் எழுத்துக்களும் முக்கியக் காரணம். அவருடைய அப்பதிவுகள் மூலமாக பல புதிய ஆங்கிலச்சொற்களைக் கண்டு வியந்ததுண்டு. As there is nobody to compete with him, he is competing with himself (இயக்குநர் பாலசந்தரின் திரைப்படம் பற்றிய ஒரு பதிவில்), The first scene will bring to you to the edge of the seat (பாலசந்தரின் புன்னகை மன்னன் திரைப்படம்), She had been to yonder blue (நடிகை பண்டரிபாய் இறந்தபோது என நினைக்கிறேன்), Reams have been written about him (நாகேஷ் பற்றிய பதிவில்), The title of film is spelt with capital V (referring to violence, வன்முறையை முதன்மையாகக் கொண்ட ஒரு திரைப்படத்திற்கு). இவர் எழுதிய கட்டுரைகளில் ஒரே பதிவில் அதிகமான புதிய வார்த்தைகளை நான் பார்த்தது ஸ்ரீவித்யா இறந்தபோது என நினைக்கிறேன். அதனைப் பல முறை படித்தேன், இவருக்காகவும், ஸ்ரீவித்யாவிற்காகவும்.

கட்டுரை வெளிவரும் நாளன்று ராண்டார் கை எழுதியுள்ள மதிப்புரையை முதலில் படித்துவிட்டு, பின்னர்தான் தி இந்து நாளிதழின் முதன்மைப்பக்கங்களைப் படிக்க ஆரம்பிப்பேன்.



நான் பல முறை ரசித்துப் பார்த்த திரைப்படங்களில் ஒன்று பத்து கட்டளைகள்(Ten Commandments) ஆங்கிலத்திரைப்படம். அத்திரைப்படம் வெளியான 50ஆவது ஆண்டு நினைவாக அவர் இவ்விதழில் (A Randor Guy, Memorable Milestone, The Hindu, Friday Review, 8.6.2007, p.1) எழுதிய கட்டுரையை அப்போது நான் நேரடியாக 70 நிமிடங்களில் மொழிபெயர்த்தேன், அவருடைய எழுத்தின்மீது உள்ள ஆர்வம் காரணமாக. இன்னும் அதனைப் பாதுகாத்து வருகிறேன். (இந்த மொழியாக்கத்தில் நிறைகுறைகள் இருக்க வாய்ப்புள்ளது), நான் மொழிபெயர்த்த, நினைவில் நிற்கும் பதிவுகளில் இதுவும் ஒன்று.




7 ஜூன் 2023இல் மேம்படுத்தப்பட்டது.

28 October 2022

ஓவியர் தங்கம்

புன்னகையுடன்கூடிய முகம், அனைவரையும் வசீகரிக்கும் பேச்சு, எப்போதும் நேர்மறைச்சிந்தனை, அனைவரிடமும் பழகும் பாங்கு, ஓர் முன்னுதாரண அரிய மனிதர் என்ற வகையில் எங்கள் அனைவரையும் ஈர்த்தவர். ஓவியத்துறையில் சாதனைகள் புரிந்தவர். இவரைப் போல ஓர் அரிய மனிதரைக் காணல் அரிது. அனைவரிடமும் நட்பு பாராட்டுபவர். எங்கள் குடும்ப நண்பர் திரு தங்கம் அண்ணன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

கையால் அவர் ஓவியமாக வரைந்த கல்கியின் பொன்னியின் செல்வன் 10 தொகுதிகளும் அவருடைய பெயரை என்றும் சொல்லிக்கொண்டிருக்கும்.

பிறந்த ஊர், வளர்ந்த ஊர், சுற்றம், நட்பு, பணியாற்றிய இடங்கள் என்று ஒவ்வொன்றைப் பற்றியும் பேச ஆரம்பித்தால் நாம் நம்மை மறந்துவிடுவோம். அந்தந்த காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச்சென்றுவிடுவார். என் தந்தைக்கும் மிக நெருக்கமானவர். நாங்கள் உறவினர் என்று கூறுவார். என் தந்தை இறந்தபின்னர் பல வருடங்கள் கழித்து உறவினர் திருமணத்தில் நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டபோது "உன் அப்பாவைப் பார்ப்பதுபோலவே இருக்கிறது. நானும் உன் அப்பாவும் கும்பகோணத்தில் ஆங்கிலத் திரைப்படங்கள் பார்க்கச் செல்வோம்." என்று நினைவுகூர்ந்தார்.

சந்திக்கச் செல்லும்போதெல்லாம் குடும்பத்தினரைப் பற்றியும், நண்பர்களைப் பற்றியும் அதிகம் பேசுவார். கும்பகோணம் தெற்கு வீதியில் அவர் குடியிருந்த இல்லத்தில் தொடங்கி பல இடங்களில் நடந்த நிகழ்வுகளை அப்படியே கண்முன் கொண்டு வந்துவிடுவார். பணியாற்றிய நிறுவனங்களை நன்றியோடு நினைவுகூர்வார்.

இத்தகு மாமனிதர் நம் அனைவரின் உள்ளங்களிலும் என்றும் வாழ்வார். அவருடைய சாதனைகள் என்றும் நிலைத்து நிற்கும்.

............

கண்ணீர் அஞ்சலி
திருமதி. R. சந்திரோதயம் தங்கம், ஓவிய ஆசிரியை (ஓய்வு) GCHS, அவர்களின் கணவரும், திருமதி. பொன்னியின் செல்வி, உதவி பேராசிரியர், குந்தவை நாச்சியார் கல்லூரி மற்றும் Dr. T. ராஜேந்திரன், USA., அவர்களின் தந்தையுமாகிய.
திரு. ப. தங்கம், ஆர்டிஸ்ட் & போட்டோகிராபர், நோய் குறியியல் துறை (ஓய்வு), தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அவர்கள் 27.10.2022 வியாழக்கிழமை இரவு 11:00 மணி அளவில் இயற்கை எய்தினார்கள்.

அன்னாரது இறுதி ஊர்வலம், 29.10.2022, சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு எண்.14, 6 வது, மெயின் ரோடு, ஞானம் நகர், தஞ்சாவூர் அவர்களது இல்லத்தில் இருந்து புறப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மீளாத்துயறுடன்,
குடும்பத்தினர் & உறவினர்கள்













ஒளிப்படம் : திரு கரந்தை ஜெயக்குமார்

விக்கிப்பீடியாவில் அவரைப் பற்றி நான் ஆரம்பித்த பக்கம்

............
ஓவியர் தங்கம் அவர்களின் மனைவி திருமதி சந்திரோதயம் நேற்று (11 அக்டோபர் 2023) மதியம் இயற்கை எய்தினார். அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். (அவருடைய குடும்பத்தார் அனுப்பிய செய்தி). 


12 அக்டோபர் 2023இல் மேம்படுத்தப்பட்டது.

18 May 2021

எங்கள் நண்பன் நாகராஜன்

 50 ஆண்டு கால நண்பன் நாகராஜன் உடல்நலக்குறைவின் காரணமாக நேற்றிரவு எங்களை சொல்லொணாத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டான். செய்தியை எங்களின் கும்பகோணம் நண்பன் சிற்பக்கலைஞர் ராஜசேகரன் நா தழுதழுக்க கூறியபோது அதிர்ந்துவிட்டேன். அவன் குடும்பத்தாருக்கு எப்படி ஆறுதல் சொல்லித் தேற்றுவது?

மாறாப்புன்னகை, கடின உழைப்பு, அன்பின் உறைவிடம், நட்பின் இலக்கணம், பொறுமையின் சிகரம் என்ற அனைத்திற்கும் பொருத்தமானவன். கும்பகோணத்தில் நானும் அவனும் செல்லாத தெருக்களே இல்லை. நடந்தே போவோம். பேசுவோம், பேசுவோம், பேசிக்கொண்டே இருப்போம். என்ன பேசுவோம்? ஆனால், மனதில் உள்ள சுமை குறைந்ததுபோல இருக்கும். பெரிய நிம்மதி கிடைக்கும்.

கும்பகோணம் மகாமகக்குளக்கரையில், 2016

தஞ்சாவூரில் எங்கள் இல்லத்தில், 2016

கும்பகோணம் செல்வம் இல்லப் புதுமனை புகுவிழாவில், 2017

கும்பகோணம் நண்பர் இல்லத் திருமணத்தில், 2017


கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில், 2019

நாங்கள் படித்த பள்ளியில் வாயிலில், 2019

கும்பகோணம் ராஜசேகரன் சிற்பக்கூடத்தில், 2021

தாராசுரம் கோயில், கும்பேஸ்வரர் கோயில் பிரகாரம், ராமஸ்வாமி கோயில் பிரகாரம், மகாமகக்குளப்படித்துறை, அவன் வீட்டிற்கருகே உள்ள அம்மன் கோயில் மண்டபம் என்று பல இடங்களில் உட்கார்ந்து பேசிக்கொண்டே இருப்போம். 40 ஆண்டுகளுக்கு முன்பாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கண்பார்வை இழந்த நிலையிலும் வாழ்வினை மிகவும் இலகுவாக எடுத்துக்கொண்டு வாழ்ந்தவன். பல நிகழ்வுகளில் அவனை நாங்கள் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்வோம்.

தாராசுரம் அருகே உள்ள மேலச்சத்திரத்திற்குச் செல்லும்போது நாங்கள் செல்லும் முக்கியமான இடம் நாங்கள் தாயாகக் கருதுகின்ற துர்க்கையம்மன் உள்ள பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோயில். அம்மாவைப் பார்க்கப்போகலாமா? என்பான். கிளம்புவோம். நடக்க ஆரம்பிப்போம். வயல் வரப்புகளைப் பார்த்துகொண்டு பேசிக்கொண்டே செல்வோம். கோயிலில் சென்றவுடன் வழக்கமாக துர்க்கையம்மன் அணிந்திருக்கும் புடவையின் வண்ணத்தைக் கேட்பான், கூறுவேன். பிற அலங்காரங்களை ஒவ்வொன்றாகக் கூறுவேன். எங்களைப் பொறுத்தவரை இப்பகுதியில் உள்ளோர் பட்டீஸ்வரம் துர்க்கையை ஒரு கடவுளாக எண்ணிப்பார்ப்பதில்லை. எங்களின் ஏற்றஇறக்கங்களில் துணை நிற்கும் தாயாகவும், உடன் பிறந்த சகோதரியாகவும், நினைக்கிறோம். அத்திருமேனியைப் பார்த்துக் கொண்டே மெய்ம்மறந்து நிற்போம். எங்களின் எண்ணங்கள் ஒரே மாதிரியாகவே இருக்கும். நண்பர்களுடன் நேரில் பேசுவதைப் போல நாங்கள் துர்க்கையம்மனிடம் பேசிவிட்டு மன நிறைவுடன் வெளியே வருவோம். பள்ளிச்சிறுவனாக இருந்த காலம் முதல் இன்று வரை எங்களுக்குத் துணை நிற்பவள் அவளே. அடுத்த முறை பட்டீஸ்வரம் செல்லும்போது துர்க்கையம்மன், ஏன் உன் நண்பனை அழைத்துக்கொண்டு வரவில்லை என்று கேட்பாள் என்று எனக்குத் தெரியும். அது அவளுக்கும் தெரியும்.

கும்பகோணத்தில் சூழல் காரணமாக எங்கள் வீடு விற்ற சங்கடத்தில் நான் இருந்தபோது வாழ்வில் சாதிக்க எவ்வளவோ இருக்கிறது என்று கூறி மன தைரியம் கொடுத்த நண்பர்களில் இவனும் ஒருவன்.

கொரொனா ஊரடங்கிற்கு முன்பாக என் மூத்த மகன் பாரத்துடன்  சென்றிருந்தேன். கடந்த நாள்களை நினைவுகூர்ந்தான். மகிழ்ச்சியோடு பேசினான்.

நண்பனே, நீ என்றுமே எங்கள் நினைவில் நிற்பாய். உன் உழைப்பும், மன தைரியமும் எனக்கு ஒரு பாடமாக என்றும் இருக்கும். 

19 September 2020

கும்பகோணம் நண்பர் செல்வம் (8.5.1958-13.9.2020)


எங்கள் 50 ஆண்டு கால குடும்ப நண்பரும், அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியிலும், கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் புகுமுக வகுப்பிலும் ஒன்றாகப் படித்தவரும் ஆன திரு எம்.செல்வம் (தொழில்நுட்பப் பணியாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், மயிலாடுதுறை கிளை, பணி நிறைவு) சிறுநீரகத்தொற்று காரணமாக 13 செப்டம்பர் 2020 அன்று இயற்கையெய்தினார் என்பதைக் கனத்த மனத்துடன் பகிர்கிறேன். 

என்னை ‘டேய், ஜம்பு!’ என்று உரிமையோடு அழைக்கும் ஒரு சில கும்பகோணம் நண்பர்களில் அவரும் ஒருவர். அவருடைய பிரிவு என்னையும், எங்கள் குடும்பத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவருடைய ஆத்தா, அக்கா, தங்கைகள் என்மீது பாசமாக இருப்பார்கள். அதைப்போலவே அவன் எங்கள் வீட்டில் ஒரு குடும்ப உறுப்பினராகவே இருந்து வந்தார். திருமணத்திற்குப் பிறகு அவருடைய மனைவி, மகன்கள், மருமகள்கள் என்ற வகையிலும் நட்பு தொடர்ந்தது. அவனுடைய மகன்கள் எங்களை மாமா அத்தை என்றும், என்னுடைய மகன்கள் அவர்களை மாமா, அத்தை என்றும் அழைப்பர். அவனுடைய மருமகள்கள் என்னை அப்பா என்று அழைக்கின்றனர்.

கும்பகோணத்தைவிட்டு தஞ்சாவூர் வந்துவிட்டபோதும், ஒவ்வொரு முறை கும்பகோணம் செல்லும்போதும் என்னுடைய நண்பர்கள் அனைவருடைய வீட்டிற்கும் சென்றுவருவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அந்த வகையில், கொரோனாவிற்கு முன்பாக, 15 மார்ச் 2020அன்று எங்கள் பள்ளியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா தொடர்பான கூட்டத்திற்குச் சென்றுவிட்டு அவரைப் பார்த்து சந்தித்து நெடுநேரம் பேசிவிட்டு வந்தேன்.

அவருடைய இளைய மகன், அவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறியதையடுத்து, குடும்பத்துடன் பார்க்கச் சென்றோம். எங்களைப்பார்த்து உணர்ந்துகொள்ளும் நிலையில் அவர் இல்லை. எப்படியும் இயல்புநிலைக்குத் திரும்பிவிடுவான் என்று பேசிக்கொண்டு வீட்டிற்குத் திரும்பினோம். சிறிது நேரத்தில் அவர் இறந்த செய்தி எங்களுக்கு வந்தது. அவனை இழந்து வாடும் அவன் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அந்த நாள் நினைவுகள்


6, பழைய அரண்மனைத்தெரு, சிதம்பர நாடார் சந்து, கும்பகோணம். இளமைக்காலம் முதல் நான் செல்லும் இடங்களில் ஒன்றான, எங்கள் நண்பர் திரு செல்வம் அவர்களின் இல்லமாகும். அவருடைய தாத்தாவான சிதம்பர நாடார் அவர்களின் பெயரில் உள்ள தெருவில் உள்ளது. நாங்கள் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் (1972-75) ஒன்றாகப் படித்தோம். பள்ளி செல்லும்போது அவர் வீட்டில் சிறிது நேரம் இருந்துவிட்டு அங்கிருந்து நண்பர்களுடன் ஒன்றாகச் செல்வோம். அப்போது எங்களுடன் தயாளன் (சாரங்கபாணி தெற்கு வீதி), இளஞ்சேரன் (மாணவர் விடுதி), ராஜு (பழைய அரண்மனைத்தெரு), சண்முகசுந்தரம் (அண்ணாலக்ரகாரம்), மனோகரன், குமாரராஜா (தாராசுரம்), பாலகிருஷ்ணன் (மல்லுக செட்டித்தெரு), ஜான்முகமது (மணிக்காரத்தெரு), பாஸ்கர் (கவரத்தெரு), அன்பழகன், ராதாகிருஷ்ணன் (தோப்புத்தெரு) உள்ளிட்ட பல நண்பர்கள் படித்தனர்.

எஸ்.எஸ்.எல்.சி. (11ஆம் வகுப்பு) நிறைவு செய்தபின் விடுமுறையில் என் தாத்தா கும்பகோணம் பெரிய தெருவில் இருளப்பன் மிளகாய் மண்டியில் வேலைக்கு சேர்த்துவிட்டார். எங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக என் வீட்டார் என்னை கல்லூரியில் சேர்க்கவில்லை. அங்கு நான் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தேன்.  அவ்வப்போது செல்வம் வீட்டிற்குச் செல்வது வழக்கம். பள்ளிக்காலம் முடிந்து கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரிக்கு அவர் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பம் வந்தபோது அவரும் நானும் இணைந்து அவருடைய விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்தோம். விண்ணப்பத்தில் அரசு ஆடவர் கல்லூரி என்றிருந்தது. அப்போது அவர் இனி நான் ஆடவர் என்று கூறி சிரித்துக்கொண்டே பூர்த்தி செய்தது இன்னும் நினைவிருக்கிறது. (கல்லூரி தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், படிப்பின்மீதான அதீத ஆர்வம் காரணாக, வீட்டிற்குத் தெரியாமல் நான் விண்ணப்பித்து  அதே கல்லூரியில் சேர்ந்தது தனிக்கதை).

கல்லூரியில் புகுமுக (பி.யு.சி.)  வகுப்பில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடத்தில் சேர்ந்தோம். நான், செல்வம், பதினாறுகட்டு ராஜசேகரன், பேட்டை பொன்னையா, கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி மதியழகன், சிங்காரம் செட்டித்தெரு மோகன் என்று ஒரு பட்டியலே நீளும். பள்ளிக்குப் பின் பள்ளி நண்பர்களான நாங்கள் கல்லூரி நண்பர்களாகி படித்தது பி.யு.சி. மட்டுமே.

அப்போது பாபி (Bobby) என்ற இந்தித் திரைப்படம் வந்த காலகட்டம். செல்வம் ஆர்வத்தோடு அப்போது பிரபல்யமான பாபி காலரை வைத்து சட்டை அணிந்தது இன்னும் நினைவில் உள்ளது. அவரைப் பார்த்து இன்னும் சில நண்பர்கள் பாபி காலருடன் சட்டை போட ஆரம்பித்தனர். எங்கள் அனைவருக்கும் பொது ஒற்றுமை அதிகமாக முடி வளர்த்திருந்தோம்.          

அப்போது காவிரியாற்றுக்கு செல்வம், பாஸ்கரன், நாகராஜன் உள்ளிட்ட நண்பர்கள் நீந்தச் செல்வார்கள். எனக்கும் ஆசை வந்து நீந்தச் சென்றேன். பாஸ்கரனும் பிற நண்பர்களும் எனக்கு நீந்த கற்றுத் தர ஆரம்பித்தனர். நான் ஆற்றுக்குச் செல்வது வீட்டிற்குத் தெரிந்துவிட எங்கள் தாத்தா ஆற்றில் சென்று நான் மூழ்விவிடுவேனோ என்ற பயத்தில் ஆற்றுப்பக்கமே போகக்கூடாது என்று தடை விதித்துவிட்டார்.

கல்லூரிக்காலத்தில், சுமார் 10 பேராக, நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பார்த்த ஒரே படம் பாலசந்தரின் அபூர்வ ராகங்கள். அப்போது நூர் மஹால் (பின்னர் செல்வம் தியேட்டர் என்றானது) தியேட்டரில் ஓடிய திரைப்படத்தை அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பார்த்தோம். அதற்கு முன்னரோ பின்னரோ இவ்வளவு பேராகச் சேர்ந்து நாங்கள் படம் பார்த்ததில்லை. அந்த வகையில் இந்த திரைப்படத்தை நாங்கள் அடிக்கடி நினைவுகூர்வதுண்டு.

பி.யு.சி.யில் நான் மட்டுமே தேர்ச்சி பெற இளங்கலை பொருளாதாரத்தில் சேர்ந்து நிறைவு செய்தேன். அக்காலகட்டத்தில் நண்பர்கள் அனைவரும் திசைக்கு ஒருவராகப் பிரிந்தோம். இருந்தாலும் எங்களின் நட்பானது தொடர்ந்து கொண்டேயிருந்தது, தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. அவருடைய இளைய மகன் பாலாவிடம் தொலைபேசியில் பேசியபோது, “மாமா, எப்போது கும்பகோணம் வந்தாலும் அப்பாவைக் காண வருவீர்கள். இனியும் எப்போது கும்பகோணம் வந்தாலும் வழக்கம்போல நீங்கள் எங்கள் வீட்டிற்கு வந்துகொண்டேயிருங்கள்” என்று என்னிடம் பேசியது எங்கள் நண்பன் இன்னும் ஆத்மார்த்தமாக எங்களோடு இருக்கிறான் என்ற எண்ணத்தைத் தந்தது.  

(இ-வ) பாஸ்கரன், ஜம்புலிங்கம், ராஜசேகரன், செல்வம், ராஜசேகர்  
(இ-வ) ஜம்புலிங்கம், நாகராஜன், ராஜசேகரன், செல்வம் 

அண்மையில் எங்களைவிட்டுப் பிரிந்த கும்பகோணம் நண்பர் அன்பழகன். கும்பகோணம் செல்லும்போதெல்லாம் எப்படியாவது நாங்கள் சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்துவிடும். பேசும் சில நிமிடங்களில் குடும்பம், நண்பர்களைப் பற்றி நாங்கள் இருவரும் பேசிக்கொள்வோம். கும்பகோணம் நட்புகள் எங்களை விட்டுப்பிரிவது 
பெரும் துயரைத் தருகிறது.   

27 July 2019

பேராசிரியர் இரா.பாவேந்தன் (13 ஏப்ரல் 1970 - 20 ஜுலை 2019)

முனைவர் இரா.பாவேந்தன் மூன்று மாதங்களாக கல்லீரலின் செயலிழப்புக்கும், நம் போன்றோரின் நலவிருப்புக்கும், மருத்துவர்களின் முயற்சிக்குமிடையே நடந்த போராட்டத்தில் 20 ஜுலை 2019 அன்று காலை இன்னுயிரை ஈத்தார். அன்று மாலை திருச்சி கீழ்க்கண்டார்கோட்டையில் நடைபெற்ற அவருடைய இறுதிச்சடங்கில் கலந்துகொண்டபோது அங்கு வந்திருந்த பல அறிஞர்கள், ஆய்வாளர்கள், நண்பர்கள் பாவேந்தனின் உழைப்பைப் பற்றிப் பேசியவை என்றும் என் நினைவில் இருக்கும். தமிழ்த்தாகம் கொண்டு வாழ்ந்தவர் தன் உடல் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையே என எண்ணி நாங்கள் வருந்தினோம். அவரது மனைவி திருமதி ஜெயலட்சுமி, குழந்தைகள், தம்பி மருத்துவர் இரா.  அமுதக்கலைஞன் மற்றும் குடும்பத்தாருக்கு என்னுடைய மற்றும் எங்கள் குடும்பத்தாருடைய சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள்.  



தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளராக, 1990களின் இடையில் அறிமுகமானவர் திரு இரா. பாவேந்தன். பழகுவதற்கு மிகவும் இனியவர். எப்பொழுதும் புன்னகையுடன் இருப்பார். எழுத்து, வாசிப்பு என்ற நிலையில் நன்கு விவாதிப்பார். 


ஆய்வாளராக இருந்தபோது மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களின் நலனுக்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைவருடைய நன்மதிப்பினையும் பெற்றவர். தற்போது புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் தமிழாய்வுத்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வரும் எங்கள் நண்பர் முனைவர் சு. மாதவன் அவர்களும் இரட்டையர்களாக இணைந்து அக்காலகட்டத்தில் பல நற்பணிகளைச் செய்தனர். தமிழியல் ஆய்வு, தமிழ்ப்பல்கலைக்கழக ஆய்வு மாணவர் மன்றம், மாணவர் உரிமைகளுக்கான போராட்டம், மாணவர் விடுதி கட்ட போராட்டம், விடுபட்ட பணியிடங்களை மீட்பதற்கான போராட்டம், ஐந்தமிழ் ஆய்வாளர் மன்றம் என்பனவற்றுக்கிடையே இருவரும் இணைந்து தமிழியலாய்வில் பங்காற்றினர். 

1990களின் இறுதியில் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டபோது அவர் எழுதிய தமிழில் அறிவியல் இதழ்கள் (சாமுவேல் ஃபிஷ்கறீன் பதிப்பகம், கோவை, 1998) நூலினை அன்பளிப்பாகத் தந்தார். அதிகமான முதல்நிலைத் தரவுகளைக் கொண்டது அந்நூல். இத்துடன் கீழ்க்கண்ட நூல்களையும், பல ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.







  •  சமூகப்புரட்சியாளர் ஜோதிராவ்ஃபூலே (சிந்தனைப்பேரவை, கோயம்புத்தூர், 1994)
  •  ஆதிதிராவிடன் இதழ்த்தொகுப்பு (சந்தியா பதிப்பகம், சென்னை, 2008, தமிழ் வளர்ச்சித்துறையின் 2008ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல் பரிசு பெற்றது)
  • பாழ்நிலப்பறவை லீலாகுமாரி அம்மா (கோ.நாகராஜ் உடன் இணைந்து, சந்தியா பதிப்பகம், சென்னை, 2008)
  • கறுப்பு சிகப்பு இதழியல் (கயல்கவின் பதிப்பகம், சென்னை, 2009),
  • திராவிட சினிமா (வீ.எம்.எஸ்.சுபகுணராஜன், உடன் இணைந்து, கயல்கவின் பதிப்பகம், சென்னை, 2009)
  • திராவிட நாட்டுக்கல்வி வரலாறு (கயல்கவின் பதிப்பகம், சென்னை, 2013)

அவருடைய முனைவர் பட்ட ஆய்வேடு உருவாக்கம் பெறும் நிலையில் தட்டச்சு, திருத்தம், மேம்படுத்தல் தொடர்பாக எங்கள் இல்லத்திற்கு அடிக்கடி வந்துகொண்டிருந்தார். அதன்மூலம் எங்கள் குடும்பத்தவர் அனைவரோடும் நன்கு பழகி, குடும்ப நண்பரானார். அவருடனான கலந்துரையாடல் என்பது எப்பொழுதும் பயனுள்ளதாக இருக்கும். Institute of Asian Studies வெளியிட்ட Archaeological Atlas of the antique remains of Buddhism in Tamil (1997) என்ற நூலைப் பற்றி அவர் மூலமாகவே நான் அறிந்தேன். சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பிலான என் முனைவர் பட்ட ஆய்வேட்டினை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் அளித்த பின்னர்தான் (1999) இந்நூல் அவர் மூலமாக எனக்கு அறிமுகமானது.  
கோயம்புத்தூரிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தபின்னர் நட்பு தொலைபேசியிலும், அலைபேசியிலும் தொடர்ந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் முகநூலில் தமிழியல் ஆய்வுகள் (Tamil Studies) என்ற பக்கத்தினைத் தொடங்கினார். தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆரம்ப காலம் முதல் பணியாற்றியவர் என்ற நிலையில் கல்வி, ஆய்வு அனுபவங்களை அத்தளத்தில் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டார். அந்த பக்கத்தில் ஆரம்ப காலத்தில் தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்தி மலர், தமிழ்ப்பல்கலைக்கழகக் காலாண்டிதழான தமிழ்க்கலை மற்றும் Tamil Civilization தொடர்பான பதிவுகளை எழுத ஆரம்பித்தேன். ஆரம்ப காலத்தில் பணியாற்றிய பேராசியர்களுடனான என் அனுபவத்தையும் அப்போது பகிர்ந்தேன்.

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பயின்ற ஆய்வில் ஆர்வமுடைய மாணவர்கள் பழைய மாணவர்கள் சங்கம் ஒன்றை அமைத்து அதன்மூலமாக பற்பல ஆய்வுகளுக்கு வித்திட வேண்டும் என்று அண்மையில் பேசிக்கொண்டிருந்ததை நண்பர்கள் பகிர்ந்துள்ளதைப் பார்க்கும்போது தமிழாய்வின்மீதான அவருடைய ஆர்வத்தினை உணரமுடிகிறது. அவருடன் நேரிலோ தொலைபேசியிலோ பேசும்போதோ எதையாவது சாதித்துக்கொண்டே இருக்கவேண்டும், இயங்கிக்கொண்டே இருக்கவேண்டும், தமிழுலகிற்கு நம்மாலான பங்களிப்பினைத் தொடர வேண்டும், என்று கூறிக்கொண்டே இருப்பார். சிறந்த கல்வியாளர். திராவிட இயக்கச் சித்தாந்தவாதி. சமூக ஆர்வலர். சாதிக்க நினைக்கத் துடித்த ஓர் அரிய இளைஞர், ஆய்வாளர், பேராசிரியர் என்ற பன்முகப்பரிமாணம் கொண்டவரை தமிழ் ஆய்வுலகம் இழந்துவிட்டது. அவருடைய கனவுகள் மெய்ப்படுத்தப்பட இனிவரும் ஆய்வாளர்களும், நண்பர்களும் அவருடைய வழித்தடத்தில் பயணிப்போம்.

தகவல் உதவி : 
விக்கிபீடியா
முனைவர் சு.மாதவன் மற்றும் நண்பர்களின் முகநூல் மற்றும் வாட்ஸ்அப் பதிவுகள் 

என் மூத்த மகன் ஜ.பாரத் எழுதிய முகநூல் பதிவு

நினைவேந்தல்
திரு பாவேந்தனின் நினைவேந்தல் திருச்சியில் 18 ஆகஸ்டு 2019இல் நடைபெறவுள்ளதாகவும், உரிய நேரமும், இடமும் குறித்த தகவல் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் அவருடைய சகோதரர் திரு அமுதக்கலைஞன் (9443217556) வாட்ஸ்அப் வழியாகத் தெரிவித்துள்ளார். அதில் பங்குபெற விரும்பும் நண்பர்கள் அவரைத்  தொடர்புகொள்ள வேண்டுகிறேன்.

13 April 2019

திரு சிலம்பொலி செல்லப்பன் (1929-2019)

தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பொறுப்பாகவும், பதிப்புத்துறை இயக்குநர் பொறுப்பாகவும் திரு சு.செல்லப்பன் அவர்கள் இருந்த காலகட்டத்தில், 16 ஆகஸ்டு 1982இல் பணியில் சேர்ந்தேன். பணியில் சேர்ந்தபோது ஆங்கிலத்தட்டச்சு உயர்நிலை, தமிழ்த்தட்டச்சு உயர்நிலை, ஆங்கிலச்சுருக்கெழுத்து கீழ்நிலை ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருந்தேன். நாடறிந்த தமிழறிஞரான அவரிடம் சுருக்கெழுத்துத்தட்டச்சராகப் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாததாகும். பதிவாளர் பிரிவில் வேலை பார்த்த எனக்கு பதிப்புத்துறையின் பொறுப்புகளையும் தந்தார். முதல் துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்களின் காலம் என்ற நிலையில் மூவர் செய்யவேண்டிய பணிகளை ஒருவரே அப்போது செய்வோம். அன்பு, நட்பு, பரிவு என்று பணியாளர்களிடம் மிகவும் அணுக்கமாகப் பழகுவார். தட்டிக்கொடுத்து வேலை வாங்குவார். "ஜம்புலிங்கம் தட்டச்சு செய்தால் அதில் தட்டச்சுப்பிழையே இருக்காது" என்பார். என் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துப் பணியையும், ஆங்கிலக் கடித வரைவுகளையும் வெகுவாகப் பாராட்டியவர்.


 

தமிழ்ப்பல்கலைக்கழக அரண்மனை வளாகம் 

தமிழே அவருடைய பேச்சாகவும், மூச்சாகவும் இருந்தது. பணிக்காலத்தில் நடந்த சில நிகழ்வுகள் இன்றும் நினைவில் உள்ளன. கட்டுரைகள், அணிந்துரைகளை அவர் பக்கத்தில் அமர்ந்துகொண்டு சொல்லச்சொல்ல, அதற்கு ஈடாகத் தட்டச்சு செய்வேன். அப்போது கடைபிடித்த நுணுக்கங்கள் பலவாயினும் சிலவற்றைக் காண்போம். 
  • அவர் சொல்வதில் விடுபான்றி, அதே சமயம் மறுபடியும் கேட்காமல் (ஒரே முறை கேட்பதை உள்வாங்கி) தட்டச்சிடுவேன்.
  • தட்டச்சு செய்துகொண்டிருக்கும்போதே ஒற்றை மேற்கோள், இரட்டை மேற்கோள் போன்றவற்றையும் விடுபாடின்றி செய்வேன். 
  • தடித்த எழுத்தில் சொல் அமைய வேண்டும் நிலையில் தட்டச்சுப்பொறியில் அவ்வசதி இல்லாத நிலையில் அடிக்கோடிடுவேன். 
  • உரைநடைப்பகுதியின் இடையே கவிதையோ, செய்யுளோ வரும்போது அதனை வேறுபடுத்திக்காட்ட உள்ளே தள்ளி தட்டச்சிடுவேன். 
  • என்னைப்போல அப்போது என்னைப்போல அவ்வாறு தட்டச்சு செய்தவர்கள் அப்போது திரு நடராஜன், திரு உதயகுமார், செல்வி விமலா கிறிஸ்டபெல் ஆகியோர். 
பணியில் சேர்ந்த சில நாள்களில் சிந்துவெளிக்கருத்தரங்கு நடத்தும் முழுப்பொறுப்பினையும் தந்ததோடு, பணி நிறைவுற்றதும், கருத்தரங்கப்பொறுப்பாளர் வரலாற்றறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் முன்பாக அதிகம் புகழ்ந்து கூறினார்.

ஆரம்ப காலத்தில் தமிழிலும், ஆங்கிலத்திலும் மாறி மாறி சுற்றறிக்கைகள் அனுப்புவோம். அவ்வகையில் நான் பணியில் சேர்ந்த இரண்டாவது வாரத்தில் ஆங்கிலத்தில் ஒரு சுற்றறிக்கையின் வரைவினைத் தயாரிக்கும் பொறுப்பில் பிறருடன் நானும் இணைந்திருந்தேன். அது பணியில் சேர்ந்தவர்களுக்கான பணிப்பங்கீடு தொடர்பான கடிதமாகும். அந்தப் பட்டியலில், பதிவாளரின் தட்டச்சுச்சுருக்கெழுத்தராக,  என் பெயரே முதலிடத்தில் இருந்ததை பெருமையாக நினைவுகூர்கிறேன். உயர் அலுவலர்களோ, ஆசிரியர்களோ இல்லாத நிலையில் அவர்களின்கீழ் பணியாற்றுகின்ற சுருக்கெழுத்தர்கள், செயலாளர்கள் போல அந்தந்தப் பிரிவினை கட்டுப்பாடாக வைத்திக்கவேண்டும் என்ற பொருளில் அப்போது சுருக்கெழுத்துத்தட்டச்சர்களாக இருந்த எங்களுக்கு அனுப்பப்பட்ட அக்கடிதத்தில் கையெழுத்திட்டபின் இவ்வாறான ஒரு கடிதம் ஆங்கிலத்தில் உள்ளதே, இனி இதுபோன்ற கடிதங்கள் தமிழில்தான்இருக்கவேண்டும் என்று எங்களையெல்லாம் அழைத்துக்கூறியது இன்னும் நினைவில் உள்ளது



நான் பணியில் சேர்ந்த முதல் வாரத்தில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் வெளிவரவுள்ள ஆங்கிலக்காலாண்டு ஆய்விதழான தமிழ் சிவிலிசேசன் தொடர்பாக வட இந்தியாவிலிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அக்கடிதத்திற்கு உரிய மறுமொழியினை தட்டச்சிட்டுக் கொண்டுவரும்படி கூறினார். எவ்விதத் தவறுமின்றி அதனை நான் தட்டச்சிட்டு அவரிடம் கொடுத்தேன். மற்றொரு சிறப்பு இக்கடிதம் நீண்ட சொற்றொடரைக்கொண்டிருந்தது. என் நினைவிலிருந்து.... "While acknowledging with thanks the receipt of your letter cited above we wish to state that the quarterly research journal of Tamil University, Tamil Civilization, is in print and would be sent to you in due course, for which the relevant details regarding the subscription rates is enclosed for ready reference". வரைவு தட்டச்சிடாமல் நேரடியாகவே கையொப்பமிடும் அளவு இருந்ததாகக் கூறி என்னைப் பாராட்டியதோடு, பிற சக பணியாளர்களை அழைத்து ஆங்கிலக்கடிதங்கள் இவ்வாறு தட்டச்சிடப்படவேண்டும் என்றார். 

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்வதற்கு முன்னரே பிற தனியார் நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் என் திறமைகளை வெளிப்படுத்த உதவியாக அமைந்ததோடு என்னை மென்மேலும் மேம்படுத்திக்கொள்ள உதவியாக இருந்தது. பிற்காலத்தில் நான் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டபோது ஆய்வுக்கட்டுரைகளை எழுதுவதற்கும், பிற மொழிபெயர்ப்புக்கட்டுரைகளைத் தற்போது எழுதுவதற்கும் இவரிடமும், இவரைப்போன்ற அறிஞர்களிடமும் பணியாற்றியபோது இடப்பட்ட அடித்தளமே என்பதை நன்கு உணர்கிறேன்.

என்னைப் போன்றோருக்கும் அவரின் பிரிவு ஒரு பேரிழப்பே.

03 June 2017

தமிழறிஞர் திரு வெள்ளையாம்பட்டு சுந்தரம்

தமிழறிஞர், பதிப்பாளர், பழகுவதற்கு இனியவர், பண்பாளர், பலரை எழுத்தாளராக ஆக்கியவர், என்றும் மாறாப் புன்னகையோடு இருப்பவர், என் பௌத்த ஆய்வு நூலாக வெளிவரவேண்டும் என்று தன் அவாவினை பார்க்கும்போதெல்லாம் வெளிப்படுத்திய பெருமகனார் திரு வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்கள் 31 மே 2017 அன்று இயற்கையெய்திய செய்தி எங்களை துக்கத்தில் ஆழ்த்தியது.  

கல்வெட்டறிஞர் திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி அவர்கள் மூலமாக அறிமுகமானவர் திரு வெள்ளையாம்பட்டு சுந்தரம் ஐயா. 2001இல் என் முதல் நூலான வாழ்வில் வெற்றி (சிறுகதைத்தொகுப்பு) வெளிவர உந்துசக்தியாக அவர், அந்த நூல் அச்சேறிக் கொண்டிருக்கும் போது என் எழுத்துகளைப் பாராட்டினார். முதன்முதலில் தொலைபேசியில்தான் அறிமுகமானேன். அப்போது பேசும்போது என் பௌத்த ஆய்வினைக் கேள்விப்பட்டு அதிசயித்து களப்பணியின் முக்கியத்துவத்தைப்பற்றிப் பேசினார். "களப்பணி அடிப்படையில் தற்போது நூல்கள் எவையுமே வருவதில்லை. குறிப்பாக பௌத்தம் சார்ந்த நிலையில் நூல்களே இல்லை. அந்த நிலையில் உங்களின் ஆய்வேட்டினை நூலாக்கம் செய்யுங்கள். என் உதவி எப்பொழுதும் உங்களுக்கு உண்டு. யோசிக்க வேண்டாம். எப்பொழுது வேண்டுமானாலும் என்னுடன் பேசலாம்." என்று அவர் பேசியது இன்னும் என் நினைவில் உள்ளது. அதற்குப் பிறகு அவரைப் பலமுறை சந்தித்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் என்னைப் பார்த்தபோது அவர் கேட்ட முதல் கேள்வி என் ஆய்வு அல்லது என்னுடைய புதிய கண்டுபிடிப்பு தொடர்பானதாகவே இருக்கும்.  

கருத்தரங்கு நடைபெறும் இடம், அறிஞர்கள் சந்திக்கின்ற இடம், நூற்கண்காட்சி நடைபெறுமிடம் என்ற பல இடங்களில் அவரைக் காணலாம். தமிழ் இலக்கியத்தின்மீதும், வரலாற்றின்மீதும் அவர் கொண்டிருந்த ஆர்வமும், அறிவும் ஈடு இணையற்றது. அவருடன் நெருக்கமாகப் பழகும்போது அதனை உணரலாம். வயது வித்தியாசமின்றி மிக எளிமையாக அனைவருடன் இயல்பாகப் பேசுவார். தம் பேச்சின்மூலம் நம்மை ஈர்க்க வைத்துவிடுவார். 
நன்றி : அருந்தமிழ் ஆய்வுகள்
தொல்லியல் ஆய்வுகளையும், வரலாற்று நூல்களையும் மிகுதியும் வெளியிட்டு அளப்பரிய பணிகள் செய்து வந்த அவரைச் சிறப்பிக்கும் வகையில் 19 ஜனவரி 2003 மற்றும் 8 நவம்பர் 2003 ஆகிய நாள்களில் நடைபெற்ற விழாக்களின் நினைவாக வரலாற்றில் ஒரு வரலாறு, அருந்தமிழ் ஆய்வுகள், வரலாற்றுச் சுடர்கள் ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. அதைத்தொடர்ந்து வரலாற்று வாயில்கள் என்னும் நூல் வெளியானது. (வரலாற்று வாயில்கள், பதிப்.கவிமாமணி கல்லாடன், குழலி பதிப்பகம், பாண்டிச்சேரி, டிசம்பர் 2003) 

2010களின் ஆரம்பத்தில் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு ஒரு கருத்தரங்கிற்காக வந்தவர் நான் பணியாற்றிய பிரிவிற்கு வந்து என் இருக்கைக்கு வந்தார். அலுவலகச் சூழலையும், அதிகமான பணியையும், அவருடன் பேசக்கூட முடியாத இருந்த நிலையையும் பார்த்த அவர் வியப்போடு "இவ்வளவு அலுவலக வேலைகளுக்கிடையில் நீங்கள் எப்பொழுது களப்பணி செல்கின்றீர்கள்? எப்பொழுது படிக்கின்றீர்கள்?" என்று வாஞ்சையோடு கேட்டார். சிறிது நேர உரையாடலுக்குப் பின் விடை பெறும்போது "கல்விப்புலம் சாராத நிலையில் உள்ள உங்களைப் போன்றோர்தான் அமைதியாக அதிகமாக சாதித்துக் கொண்டிருக்கின்றீர்கள். பெருமையாக இருக்கிறது. இன்னும் காலம் தாழ்த்தாதீர்கள். நூலை அவசியம் வெளியிட்டு விடுவோம், சரியா" என்றார். 

சோழ நாட்டில் நான் கண்டுபிடித்த புத்தர் கற்சிலைகளைப் பற்றி நாளிதழ்களில் வந்த செய்திகளைக் காண்பித்தபோது மிகவும் வியந்து பாராட்டினார். நாகப்பட்டினத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டு, வெளிநாடுகளிலும், இந்தியாவிலும், பிற மாநிலங்களிலும் உள்ள அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்ட நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகளின் புகைப்படங்களை என் ஆய்வேட்டில் பார்த்தபோது கற்சிலைகளுக்கும், செப்புத்திருமேனிகளுக்கும் இடையே காணப்பட்ட ஒற்றுமை வேற்றுமைகளைப் பற்றி விவாதித்தார். இலக்கியம், வரலாறு, தொல்லியல், செப்பேடு, கல்வெட்டு போன்றவை உள்ளிட்ட பல துறைகளில் ஆர்வம் கொண்டிருந்த அவர்,  புத்தர் சிற்பம் தொடர்பாகக் காட்டிய ஆர்வத்தை அப்போது அறிந்தேன்.     

3.12.2011 அன்று சென்னையில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தாரின் வைர விழா நடைபெற்றபோது நூல் ஆசிரியர் என்ற நிலையில் என்னைப் பெருமைப்படுத்தும் விதமாக பொன்னாடை அணிவித்து, சான்றிதழ் வழங்கினர். அவ்விழாவிற்கு வந்திருந்து என்னைப் பாராட்டினார். விடுதலை வேள்வியில் வங்காள வீரர்கள், புதிய காற்று ஒப்பிலக்கியப் பார்வைகள் உள்ளிட்ட சில நூல்களை அன்பளிப்பாகத் தந்து, தொடர்ந்து எழுதுங்கள் என்று வாழ்த்திவிட்டுச் சென்றார். ஒரு பெரியவர் சிரமம் பாராது விழா நடக்கும் இடத்திற்கு வந்து பாராட்டுகின்றாரே என நினைத்து சிலிர்த்துப் போனேன்.     

26.2.2016 அன்று வேலூரில் நடைபெற்ற அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி ஐயாவின் இளைய மகன் திரு தே.கி.பூங்குன்றன் திருமணத்திற்காக, மண நாளின் முதல் நாள் வேலூர் சென்று சேர்ந்தேன். திருமண அரங்கிற்கு வந்தவுடன் என்னைப் பற்றி விசாரித்தாக நண்பர்கள் கூறவே, அவரைக் காணச் சென்றேன். வழக்கமான புன்சிரிப்பினை அவருடைய முகத்தில் கண்டேன். "நீங்கள் வரவுள்ளதாக கிருட்டினமூர்த்தி கூறினார், உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி" என்றார். இரவு அதிக நேரம் அவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது அவர் மேற்கொண்டிருந்த பணிகள் குறித்தும், அவ்வப்போது உடல் நலம் சரியில்லாமல் போவது குறித்தும், முன்போல பணிகளை விரைந்து முடியாத நிலை குறித்தும் நெடு நேரம் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய உழைப்பைப் பற்றிப் பேசிவிட்டு உடல் நலனுக்கு சிறிது முக்கியத்துவம் கொடுக்கும்படி அவரிடம் கேட்டுக்கொண்டேன். அதற்கும் ஒரு புன்னகைதான் மறுமொழி. முடிந்தவரை செயலாற்றிக் கொண்டே இருப்போம் என்றார். சிறிது நேரம் அவருடன் பேசினால்கூட எதையாவது எழுத வேண்டும், வாசிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இயல்பாக வந்துவிடும். நான் சோழநாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் வலைப்பூ ஆரம்பித்து அதில் என் ஆய்வு தொடர்பாக நான் எழுதிவருவதைக் கேள்விப்பட்ட அவர் இவ்வாறான பதிவுகள் வந்துகொண்டேயிருக்கவேண்டும் என்று கூறி பாராட்டினார்.

1100 நூல்கள் பதிப்பிக்கக் காரணமாக இருந்தவர், பல்துறை வித்தகர், அறிஞர்களோடு தொடர்பு கொண்டிருந்தவர் என்ற நிலையில் நாளிதழ்கள் அவருக்குச் சூட்டியுள்ள புகழாரங்களைப் பார்த்தபோது அவற்றுக்கெல்லாம் அவர் தகுதியானவரே என்பதை அறிந்தேன். 

அன்னாருக்கு நாம் செலுத்தவேண்டிய மரியாதையாக நான் கருதுவது தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருக்கவேண்டும், எழுதவேண்டும், அதனை நூலாக்க வேண்டும், தமிழக வரலாற்றுக்கு நம்மால் ஆன பங்களிப்பினைச் செய்துகொண்டே இருக்கவேண்டும் என்பதேயாகும். அளப்பரிய சாதனைகளைப் படைத்த அவருடைய புகழ் என்றென்றும் வரலாற்றில் நிலைத்திருக்கும்.

என் எழுத்தை அச்சில் கொணர விரும்பியவர்களில் ஒருவரான அவரைப் பற்றி தமிழ் விக்கிபீடியாவில் வெள்ளையாம்பட்டு சுந்தரம் என்ற தலைப்பில் புதிய பக்கத்தை ஆரம்பித்துள்ளேன். அன்னாருக்கு நான் செலுத்தும் அஞ்சலியாக இதனைக் கருதுகிறேன். தொடர்ந்து அவரைப் பற்றிய இந்த பதிவினை மேம்படுத்துவேன். நண்பர்களை இப்பதிவினை மேம்படுத்த உதவ வேண்டுகிறேன். கீழ்க்கண்ட இணைப்பினைச் சொடுக்கினால் அவரது பக்கத்தினைப் பார்க்கலாம்.


24 ஜுன் 2017 அன்று அன்னாரின் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அப்பொழுது விழுமிய நெஞ்சர் வெள்ளையாம்பட்டு சுந்தரம் என்ற நூல் வெளியிடப்பட்டது. இதில் அன்னாருடன் பழகிய நண்பர்கள், அறிஞர்கள், வரலாற்று ஆர்வலர்கள் உள்ளிட்டோர் எழுதியுள்ள 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன. "எழுத்தாளர்களை உருவாக்கிய அறிஞர் திரு வெள்ளையாம்பட்டு சுந்தரம்" என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை இந்நூலில் வெளியாகியுள்ளது. என் கட்டுரை இந்நூலில் வெளியாக உதவியதோடு, நூலை அனுப்பியும் வைத்த திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி அவர்களுக்கு என் நன்றி.



நூல் : விழுமிய நெஞ்சர் வெள்ளையாம்பட்டு சுந்தரம்
தொகுப்பு : புலவர் ம.அய்யாசாமி
பதிப்பகம் : சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்.நகர், சென்னை 600 078
மின்னஞ்சல் : sekarpathippakam@gmail.com
விலை : ரூ.150

16 டிசம்பர் 2017இல் மேம்படுத்தப்பட்டது.