மார்ச் 2022இல் அறக்கட்டளைச்சொற்பொழிவிற்காகச் சென்னை சென்றிருந்தபோது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் விழா நடைபெற்றுக்கொண்டிருந்ததை அறிந்தேன்.
அப்போது எனக்குக் கும்பகோணத்தில் கோயில் திருவிழாவில் கலந்துகொண்டு சென்றது நினைவிற்கு வந்தது. கோயிலைச் சுற்றி பெரிய அழகான வீதிகள். அதிகாரநந்தியின்மீது கபாலீஸ்வரர் உலா வரும் காட்சியைக் கண்டு ரசித்து உடன் சிறிது தூரம் சென்றேன். அழகான பெரிய குளத்தைக் கண்டு சிறிது நேரம் அங்கே நின்றேன்.
கபாலீஸ்வரர் கோயிலுடன் தொடர்புடைய கோயில்கள் மயிலாப்பூரில் இருப்பதாகவும், அவற்றை ஒரே நேரத்தில் தரிசிப்பது சிறப்பு என்றும் கூறினர். அவை 1) கபாலீஸ்வரர் கோயில், 2) காரணீஸ்வரர் கோயில், 3) வெள்ளீஸ்வரர் கோயில், 4) மல்லீஸ்வரர் கோயில், 5) விருப்பாட்சீஸ்வரர் கோயில், 6) வாலீஸ்வரர் கோயில், 7) தீர்த்தபாலீஸ்வரர் கோயில் என்பனவாகும். இவற்றில் தீர்த்தபாலீஸ்வரர் கோயில் திருவல்லிக்கேணியில் உள்ளது. அனைத்துக் கோயில்களுக்கும் அடுத்தடுத்து சென்று சுமார் இரண்டு மணி நேரத்தில் தரிசனத்தை நிறைவு செய்தேன்.
கபாலீஸ்வரர் கோயில் விமானம்
அதிகாரநந்தியின்மீது கபாலீஸ்வரர் உலா
கபாலீஸ்வரர் கோயில் குளம்
வெள்ளீஸ்வரர் கோயில் விமானம்
மல்லீஸ்வரர் கோயில் விமானம்
விருப்பாட்சீஸ்வரர் கோயில் நுழைவாயில்
தீர்த்தபாலீஸ்வரர் கோயில் நுழைவாயில்
வாலீஸ்வரர் கோயில் நுழைவாயில்
காரணீஸ்வரர் கோயில் விமானம்
ஏழு சிவன் கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு, மாதவப்பெருமாள் கோயிலுக்கும், முண்டகக்கண்ணியம்மன் கோயிலுக்கும் சென்றேன்.
அட்டவீரட்டத்தலங்கள், சப்தஸ்தானத்தலங்கள், சப்தமங்கைத்தலங்கள் என்பதைப் போல இக்கோயில்களை சப்த சிவத்தலங்கள் என்று கூறுகின்றனர். கும்பகோணத்தில் மகத்தின்போதும் பிற விழாக்களின்போதும் ஒரே நாளில் 10க்கும் மேற்பட்ட கோயில்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டுள்ளேன். அத்தகைய கோயில்களுக்குச் சென்ற நினைவினை மயிலாப்பூரில் உணர்ந்தேன். மன நிறைவோடு அங்கிருந்து திரும்பினேன்.