28 December 2019

ஏடகம் வரலாற்று உலா : 7 டிசம்பர் 2019 : கல்வெட்டுகள் கண்டெடுப்பு

கடந்த வாரம் கோயில் உலா சென்ற நாம், இந்த வாரம் வரலாற்று உலா செல்வோம். வாருங்கள்.
தஞ்சாவூரில் இயங்கி வருகின்ற கல்வி சமூக மேம்பாட்டு மையமான ஏடகம் அமைப்பின் சார்பாக கானாடுகாத்தான் அரண்மனை, ஆத்தங்குடி அரண்மனை, ஆத்தங்குடி மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில், அரண்மனை சிறுவயல் மருதுபாண்டியர் கோட்டை, மருதுபாண்டியர் நினைவிடம், காளையார்கோயில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் ஆகிய இடங்களுக்கு வரலாற்று உலா சென்றோம். அப்போது இரு பாண்டியர் காலக் கல்வெட்டுகளைக் கண்டோம். கல்வெட்டு கண்ட அனுபவத்தை இப்பதிவில் காண்போம்.
எங்கள் உலாவின்போது கானாடுகாத்தான் தொடங்கி பல ஊர்களுக்குச் சென்றோம். மருதுபாண்டியர் நினைவிடத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது உள்ளூரைச் சேர்ந்த திரு பாரதிதாசன் என்பவர் எங்களுக்கு அறிமுகம் ஆனார். அவர் அப்பகுதியில் இரு கல்வெட்டுகள் இருப்பதாகக் கூறினார். எங்களின் வரலாற்று உலா, தேடல் உலாவாக மாறியது.  
அவருடைய வழிகாட்டலில் சுமார் 1 கிமீ தொலைவிற்கு நடந்து சென்றோம். உலாவின் போது வந்த பல நண்பர்கள் கல்வெட்டினைக் காணும் ஆர்வத்தோடு உடன் வந்தனர். பாதையே தெரியாமல் செடிகளுக்குள் புகுந்து சென்றது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. சிறிது தூரம் சென்றபின்னர் அவர் அங்கு இடிபாடான நிலையிலிருந்த ஒரு கட்டடத்தைக் காண்பித்தார். 
முன்னரே அந்தக் கல்வெட்டைப் பார்த்தாகக் கூறிய அவர், எங்கிருக்கிறது என்பதை மறந்துவிட்டார். பின்னர் அவருடன் நாங்களுக்கும் அந்தக் கட்டடத்தைச் சுற்றி வந்தும், உள்ளே சென்றும் தேடினோம். இறுதியில் அதனைக் கண்டோம்.  அவ்வாறே அங்கிருந்து மற்றொரு இடத்திற்கு எங்களை அவர் அழைத்துச்சென்று அங்கும் ஒரு கல்வெட்டினைக் காண்பித்தார். எங்களோடு அவர் ஆர்வமாக வந்ததும், கல்வெட்டினைப் பற்றிக் கூறியதும், தேடியதும் எங்களை வியக்க வைத்தன. கல்வெட்டுகளைச் சுத்தம் செய்து அவற்றிலிருந்து குறிப்புகளை எடுக்க அவரும் நண்பர்களும் பெரிதும் உதவினர். அவருக்கு நாங்கள் நன்றி கூறிவிட்டு எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.  



சிவகங்கையிலிருந்து கிழக்கில் 18 கி.மீ. தொலைவிலும், காரைக்குடியிலிருந்து தெற்கில் 30 கி.மீ. தொலைவிலும் காளையார்கோயில் உள்ளது. இவ்வூரின் பழம் பெயர் கானப்பேரெயில், திருக்கானப்பேர், தலையிலங்கானம் என்பனவாகும். சங்க காலத்தில் வேங்கைமார்பன் என்ற மன்னனால் ஆட்சி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாண்டியர்களாலும், மதுரை நாயக்க மன்னர்களாலும், ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களாலும், சிவகங்கை மன்னர்களாலும் ஆட்சி செய்யப்பட்டது. மருது சகோதரர்களுக்கு பலமிக்க கோட்டையாகத் திகழ்ந்தது. பிறகு ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது.
பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற தலங்களில் திருக்கானப்பேர் என்று அழைக்கப்படும் காளையார் கோயிலில் உள்ள சிவாலயத்தில் காளீஸ்வரர், சோமேஸ்வரர், சுந்தரேஸ்வரர் என்ற மூன்று சன்னதிகள் உள்ளன. சோமேஸ்வரர் சன்னதிக்கு எதிரே அமைந்துள்ள ராஜகோபுரம் மருது சகோதரர்களால் கட்டப்பட்டது. சுந்தரேசர் ஆலயமும், காளீஸ்வரர் ஆலயம் முன்னுள்ள கோபுரமும் வரகுணபாண்டியனால் தோற்றம் பெற்றதாகும்.
சங்க காலத்தில் பாண்டிய நாட்டில் கானப்பேரெயில் என்ற அரண் அமைத்து சிங்களப்படைகளை வென்று ஆட்சி செய்த மன்னன் வேங்கைமார்பன் ஆவான். இம்மன்னன் காலத்தில் ஆழம் நிறைந்த அகழியினையும், நிகர்ந்த பெரும் மதில்களையும், அடர்ந்த காவற்காட்டினையும் உருவாக்கி பகைவர் எளிதில் கைப்பற்ற முடியாத ஒரு பேரூராக காளையார்கோயிலைத் தோற்றுவித்தான். கடைச்சங்க காலப் பாண்டிய மன்னன் விக்கிரபெருவழுதி, பெரும்படையுடன் கானப்பேரெயிலைக் கைப்பற்றினான். கானப்பேரெயிலை சுற்றி இருக்கும் காடுகளின் அடர்த்தி தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகும். சோழப் பேரரசு காலத்திலும் இக்காட்டுப் பகுதி பரந்து விரிந்திருந்தது. புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் வரையிலும், அதேபோல் திண்டுக்கல், அழகர்கோயில் வரையிலும் பரந்த பகுதியாகும். இதன் வடக்கு எல்லையாய் கானாடுகாத்தான் அமைந்துள்ளது.
மாமன்னன் ராஜராஜனும் ராஜேந்திரனும் தங்களின் பெரும் படையினை இவ்வூரின் வழியே வழிநடத்தி ஈழம் சென்றிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கி.பி.1325இல் வருகை தந்த அரபு நாட்டுப் பயணி திமிஸ்கி என்பார் இவ்வூரை காய்ன் என்ற பெயரால் குறிப்பிட்டுள்ளார். அவர்தம் பயணக்குறிப்பில் தென்னகத்தின் சிறந்த ஊர்களில் ஓர் ஊராக இவ்வூரினைப் பதிவு செய்துள்ளார்.

முதல் கல்வெட்டு:
காளையார்கோயில் சிவன் கோயிலிலிருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மிகப்பெரும் கண்மாயின் உள் பகுதியில்,  பிற்காலத்தில் மருதுபாண்டியர்களால் கட்டப்பெற்ற நாணயசாலைக் கட்டடம் பழுதுற்று புதர் மண்டிக் கிடக்கின்றது. அதன் வாயிற்படியில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த, உடைந்த நிலையில் உள்ள துண்டுக் கல்வெட்டு கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டு 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.





வலமிருந்து:  ஜம்புலிங்கம், மணி.மாறன், பாரதிதாசன், தில்லை கோவிந்தராஜன்

  


இக்கல்வெட்டின் வரிகள் பின்வருமாறு உள்ளது.   
1.    ……………….கும் நெய்யமுது
2.    ஞ் திண்புறமாக(ம்)
3.    தொம் உடையார்
4.    டிஇமமாள்ளான அகொர
5.    பிர மா காரயன் எழுத்து
6.    இப்படிக்கு பாண்டியதேவ பிரமராயன்
உள்ளது. இது கோயிலுக்கு நெய்யமுது போன்ற தானம் வழங்கப்பட்டதைக் குறிப்பிடுகின்றது.

இரண்டாவது கல்வெட்டு:
இவ்வூரில் முத்துவடுகநாத தேவர் நினைவிடத்திற்கு அருகில் மற்றொரு பாண்டியர் காலத்து கல்வெட்டு ஒன்றின் உடைந்த பகுதி கண்டறியப்பட்டது. 



இக்கல்வெட்டின் வரிகள் பின்வருமாறு உள்ளது.   


1.    ஸ்வதிஸ்ரீ ஸ்ரீதிரிபுவன……………
2.    கொனெரிமை கொண்டான்……………
3.    சதுர்போதி மங்கலம் உ……………
4.    தெவர்கு யாண்டு இரண்டு…………..
5.    ஙய கூல பொகம்…………
6.    திருவிடையாட்டம்………

உள்ளது. பாண்டியர் காலத்தில் வழங்கப்பட்ட திருவிடையாட்டம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
காளையார்கோயிலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் புதிய இரண்டு துண்டுக் கல்வெட்டுகளைக் கண்டறிய முடிந்தது. இவை முழுமையாக இல்லை. இதன்மூலம் வரலாற்று ஆர்வலர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் புதிய செய்திகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்ற நம்பிக்கையோடு அங்கிருந்து கிளம்பினோம். அன்றைய நாளில் நாங்கள் உலா சென்றதைப் பற்றிய அனுபவங்களை பிறிதொரு பதிவில் காண்போம். 

 






நன்றி:
  • ஏடகம் நிறுவனர் முனைவர் மணி.மாறன்
  • திரு தில்லை. கோவிந்தராஜன்
  • கல்வெட்டுகளைக் கண்டுபிடிக்க உதவிய திரு பாரதிதாசன்
  • உடன் வந்ததோடு, புகைப்படம் எடுத்து உதவிய நண்பர்கள்
  • செய்திகளை வெளியிட்ட நாளிதழ்கள்
31.12.2019 அன்று மேம்படுத்தப்பட்டது

10 comments:

  1. சிறப்பான பதிவு....
    முத்தான செய்திகள்...

    வாழ்க நலம்...

    ReplyDelete
  2. காளையார்கோவில் குறித்த பழைய பெயர்கள் மற்றும் நிறைய தகவல்கள் அறிந்தேன் நன்றி.

    ReplyDelete
  3. காளையார்கோவில் குறித்த தகவல்கள் வியப்பு. விஷயங்கள் பல தெரிந்து கொள்ள முடிந்தது. தொடரட்டும் உங்கள் ப்யணங்களும் ஆய்வுகளும். வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  4. ஒவ்வொரு தகவல்களும் சிறப்பு...

    ReplyDelete
  5. சுவாரஸ்யமான தகவல்கள்.  அழகிய படங்கள்.

    ReplyDelete
  6. எங்கள் பகுதியில் உள்ள இவை அனைத்தும் சிறு வயதில் வெவ்வேறு வேலையின் பொருட்டு சென்றது. உங்களைப் போல இந்த அளவுக்கு ஆழ்ந்த அறிவோடு இந்த ஊர்களைப் பார்த்தது இல்லை. ஏடகம் என்றொரு குழுடெலிகிராம் தளத்தில் உள்ளது. தமிழக புத்தகங்களின் பைரசி வடிவத்தை உருவாக்கி தமிழ் கூறும் நல் உலகத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த ஏடகம் குழுவினர் பழைய காலத்தை தோண்டி எடுத்து மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். முரண்நகை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. அரியதொரு செய்திப் பகிர்வு. இதன் மூலம் புதிய விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் நன்று. ஆனாலும் நம் மக்களுக்குக் கல்வெட்டுக்களின் அருமை தெரியவில்லை. அவற்றை உடைத்து வைத்திருக்கின்றனர். பாதியாவது கிடைத்ததற்கு சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  8. நம் வரலாற்றின் பக்கங்களை தேடி எடுக்கும் நல்ல முயற்சி. அதை அழகாக ஆவணப்படுத்தியிருக்கிறீர்கள்.  

    ReplyDelete
  9. வணக்கம் சகோதரரே

    தங்களின் அனுபவ பதிவு அருமை. பாண்டிய மன்னர்கள் காலத்து வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டுகளை ஆராய்ந்து கண்டெடுத்திருப்பது மிகவும் பெருமையாக உள்ளது. தங்களது சேவைகள் தொடரட்டும். பதிவின் வாயிலாக நீங்கள் எங்களையும் வழிநடத்திச் சென்று பலங்கால கல் வெட்டுக்களை காணச்செய்து விட்டீர்கள். பத்திரிக்கைகளிலும் தங்கள் கண்டுபிடிப்பு கட்டுரைகள் வந்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
    வரும் புத்தாண்டு இன்னமும் பல மகிழ்ச்சிகளை அள்ளித்தர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete