02 May 2020

விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச்

மத்திய ஆசியாவில் வாழ்கின்ற, குதிரையின்மீது அமர்ந்து சென்றுகொண்டிருந்த கசாக் எனப்படுகின்ற இனக்குழுவினர் நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையான கிறிஸ்டினா கோச் பூமியில் இறங்குவதை பார்த்தவர்களில் முக்கியமானவர்கள் ஆவர். 328 நாள் விண்வெளியில் தம் வாழ்நாளைக் கழித்த  கிறிஸ்டினா, கஜகிஸ்தானில் கசாக் புல்வெளியில் சோயுஸ் விண்கலத்திலிருந்து புன்னகை ததும்புகின்ற அழகான முகத்தோடு வெளியே வந்தார்.


இவருக்கு முன்னர் 288 நாட்களில் சாதனை படைத்த ஓய்வுபெற்ற விண்வெளி வீராங்கனையான பெக்கி விட்சன், கிறிஸ்டினாவிற்கு அதிக உற்சாகம் தந்தவர் ஆவார். "சாதனைகள் முறியடிப்பதற்காகவே படைக்கப்படுகின்றன. இது முன்னேற்றத்தின் அடையாளம்!" என்று பெக்கி விட்சன் கூறினார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு முதல் விண்வெளி நடையின் பயிற்சியில் கலந்து கொள்ள நேரம் ஒதுக்கிய தன் முன்னோடியான பெக்கி விட்சனின் சாதனையை முறியடித்த பின் அவரைத் தன்னுடைய கதாநாயகி என்றும் வழிகாட்டி என்று பெருமையோடு கூறினார் கிறிஸ்டினா. அடுத்த தலைமுறை ஆய்வாளர்கள் ஊக்குவிக்கப்படவேண்டும் என்ற தன் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார்.
கிட்டத்தட்ட ஓராண்டு விண்கலத்தில் இருந்து விண்வெளியில் நீண்ட காலம் தங்கி ஆய்வு மேற்கொண்ட பெண்மணி என்ற பெருமையைப் பெற்றவர் கிறிஸ்டினா. மார்ச் 14, 2019ஆம் நாளன்று சோயுஸ் விண்கலம் மூலமாக விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட அவர் 328 நாள்களுக்குப் பின் பிப்ரவரி 6, 2020 அன்று பூமியில் வந்திறங்கினார். அவருடன் தரையிறங்கியவர்கள் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தைச் சேர்ந்த லூசா பார்மிடானோ மற்றும் ரஷ்ய விண்வெளி நிறுவனத்தைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் ஸ்க்வோர்ட்சாவ் ஆவர். 
தான் உண்மையில் மிதந்து கொண்டிருந்ததை மறந்துவிட்டதாகவும், மிதக்கும் செயலை இயல்பாக்கிக் கொள்வதற்கு மனித மனதின் திறனை உணர்வது மிகவும் ஆச்சரியத்தைத்த் தந்தது என்றும், வலது பக்கமாக வேலை செய்வது போலவே தலைகீழாக இருந்துகொண்டு செய்வது மிகவும் சாதாரணமாகத் தெரிந்தது என்றும், விண்வெளி நிலையத்தில் இருந்தபோது பறந்துகொண்டே இருந்த தன் அனுபவத்தை கூறினார். 
மேலும் அவர் தம் உடல்கள் விண்வெளிச்சூழலுக்குத் தகுந்தவாறு தகவமைத்துக் கொள்வதைப் பார்க்கும்போது விண்வெளி வாழ்க்கை இயல்பானதாகத் தோன்றியது என்று தன் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினார்.  விண்வெளியில் தான் அனுபவித்த தரைக்கும் விதானத்திற்கும் இடையே தான் மிதந்த அந்த ஜீரோ கிரேவிட்டி எனப்படுகின்ற அந்தரத்தில் நிற்கின்ற எடையற்ற தன்மையினை நினைவுகூர்ந்தார். 

புன்சிரிப்போடு   கிறிஸ்டினா தனக்கு கிடைத்த மறக்கமுடியாத பொருட்களைப் பற்றிக் கூறும்போது தன் கணவரிடமிருந்து கையால் எழுதப்பட்ட கடிதங்களைப் பற்றி ஆர்வமாகப் பேசினார். கடிதம் எழுதப்பட்ட காலத்திற்கும் அது விண்வெளி நிலையத்திற்கு வந்ததற்கும் இடையில் இருந்த அதிக தாமதம் ஒரு பொருட்டே அல்ல. “இந்தத் தருணத்திற்கு கடிதங்கள் அவசியமானவை அல்ல. இருந்தபோதிலும் அக்கடிதங்கள் மூலமாக வெளிப்படுகின்ற உணர்வுகள் முக்கியமானவையாக அமைந்துவிடுகின்றன. அப்போது நீங்கள் அதிகம் நேசிப்பது என்னவென்றால் பூமியில் நீங்கள் நேசிக்கும் ஒருவர் அனுப்பியதை உங்கள் கையில் வைத்திருப்பது உண்மையில் மிகவும் சிறப்பு வாய்ந்தது." என்றார்.

கடலோரத்தில் வட கரோலினாவின் ஜாக்சன்வில்லில் வளர்ந்த கிறிஸ்டினா, தான் வளர்ந்த பகுதியில் இருந்த தன் ஊரை விண்வெளியிலிருந்து முதன்முதலாக பார்த்ததைப் பெருமையோடு கூறினார். அண்டார்டிக் மற்றும் ஆர்க்டிக் பகுதிகளில் பல ஆண்டுகள் பணிபுரிந்தபோது தரையில் இருந்து பார்த்து துருவ ஒளிகளை விண்வெளி நிலையத்திலிருந்து பார்த்து ரசித்ததாகக் கூறினார்.  வட, தென் துருவங்களுக்கு அருகில் தோன்றுகின்ற அபூர்வ ஒளியானது பெரும்பாலும் இரவு நேரங்களில் தோன்றுகின்ற இந்த ஒளித் தோற்றமானது உலகம் தோன்றியகாலம் முதலே இருப்பதாக அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.   தன் கணவர் ராபர்ட் கோச்சுடன் டெக்சாஸில் வசிக்கின்ற கிறிஸ்டினா பேக் பேக்கிங், மலையேற்றம், பேட்லிங், படகோட்டம், ஓட்டம், யோகா, சமூக சேவை, புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர் ஆவார். 
தனது கேமராவில் அதிகமான புகைப்படங்களை நிரப்பிக்கொண்டு அவர் பூமிக்குத் திரும்பியுள்ளார். செவ்வாய் கிரகத்திற்கு நீண்ட காலமாக மனிதர்களைக் கொண்ட பயணத்திற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் கிறிஸ்டினா சேகரித்துக் கொண்டு வந்துள்ள தகவல்கள் நாசா அறிவியலாளர்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும். 
அக்டோபர் 18, 2019 அன்று, ஜெசிகாமீரும் இணைந்து அனைத்து பெண் விண்வெளிப்பாதையில் பங்கேற்ற முதல் பெண்கள் என்ற பெருமையைப் பெற்றார். டிசம்பர் 28, 2019 அன்று, விண்வெளியில் மிக நீண்ட நேரம் தொடர்ந்து இருந்த பெண் என்ற சாதனையைப் படைத்தார். இன்றுவரை, 1961 முதல் 560க்கும் மேற்பட்ட ஆண்கள் விண்வெளிக்குச் சென்று வந்துள்ளனர். அதே காலகட்டத்தில் 70க்கும் குறைவான பெண்களே சென்றுவந்துள்ளனர். இருப்பினும் அவர்களில் முக்கியமான இடத்தைப் பெறுகிறார் கிறிஸ்டினா கோச். 

நன்றி : புகைப்படங்கள்
ABC News, BBC, Guardian, Guinness World Record, NASA, New York Times, Space 
துணை நின்றவை
Nearing 328 Days Aboard Space Station, Christina Koch Shares Most Memorable 
Moments, NASA, Jan 31, 2020
விண்வெளியில் நீண்டகாலம் இருக்கும் பெண்மணி என்ற சாதனையை படைத்த கிறிஸ்டினா!, கிஸ்பாட், ஜனவரி 2, 2020
US astronaut Christina Koch returns to Earth after breaking record for female space flight, South China Morning Post, 6 February 2020
Christina Koch returns to Earth after record-breaking space mission, Guardian, 6 February 2020 
NASA Astronaut Returns To Earth After Record-Breaking Space Mission, NDTV, 7 February 2020
Christina Koch, Wikipedia
Christina Koch has just made new strides for women in space,  Guinness World Records, 6 February 2020
Christina Koch lands on earth, and crosses a threshold for women in Space, 
New York Times, 6 February 2020

9 comments:

 1. தங்களால்தான் இது போன்ற செய்திகளையும், அதன் உள் விபரங்களையும் அறிர்து கொள்ள முடிகிறது. நன்றி முனைவர் அவர்களே...

  ReplyDelete
 2. உங்களால் இதுபற்றி அறிந்தேன். சுவாரஸ்யமான தகவல்கள்.

  ReplyDelete
 3. சிறப்பான தகவல்கள் ஐயா... நன்றி...

  ReplyDelete
 4. வின்வெளியில் 328 நாட்கள்
  உண்மையிலேயே போற்றுதலுக்கு உரிய பெண்மணி
  போற்றுவோம்

  ReplyDelete
 5. சிறப்பான தகவல்கள்.

  போற்றுதலுக்குரிய பெண்மணி பற்றி உங்கள் மூலம் அறிந்து கொண்டோம். நன்றி.

  ReplyDelete
 6. //அப்போது நீங்கள் அதிகம் நேசிப்பது என்னவென்றால் பூமியில் நீங்கள் நேசிக்கும் ஒருவர் அனுப்பியதை உங்கள் கையில் வைத்திருப்பது உண்மையில் மிகவும் சிறப்பு வாய்ந்தது." என்றார்.//

  அருமை.

  கிறிஸ்டினா கோச்பற்றி அறிய தந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 7. ஆண்களுக்குஎதிலு சளைதவர்கள் அல்ல பெண்கள்என்பதை மிண்டு உறுதி படுத்தி இருக்கிறார் கிரிஸ்டினா

  ReplyDelete
 8. நல்ல செய்தி ஐயா! ஆனால் ஒரு கவலை இருக்கிறது. ஏற்கெனவே நமது இல்லங்களைப் பெண்களுக்கு இல்லதானமாகக் கொடுத்துவிட்டோம். இனி விண்வெளியையும் அவர்களுக்கே
  கொடுத்துவிட நேர்ந்தால் ஆண்குலம் என்னதான் செய்வதாம்?

  ReplyDelete
 9. அருமையான தகவல்
  பயன்மிக்க பதிவு
  தொடருங்கள் ஐயா!

  ReplyDelete