16 May 2020

2019ஆம் ஆண்டின் சிறந்த சொற்கள்-அகராதிகளின் தெரிவு : தினமணி

2019ஆம் ஆண்டின் சிறந்த சொற்கள்-அகராதிகளின் தெரிவு என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை தினமணி  தளத்தில் (11 மே 2020) வெளியாகியுள்ளது. அதனைப் பகிர்வதில் மகிழ்கிறேன், தினமணி இதழுக்கு நன்றியுடன்.


2019இன் சிறந்த ஆங்கிலச்சொற்களாக கிளைமேட் எமர்ஜென்சி (ஆக்ஸ்போர்டு), அப்சைக்கிளிங் (கேம்பிரிட்ஜ்), தே (மெரியம் வெப்ஸ்டர்), கிளைமேட் ஸ்ட்ரைக் (காலின்ஸ்) ஆகிய சொற்களை அகராதிகளும், எக்சிஸ்டென்சியல் என்ற சொல்லை டிஸ்னரி இணைய தளமும் தெரிவு செய்துள்ளன.  சம்விதான் என்ற சொல்லை சிறந்த இந்தி சொல்லாக ஆக்ஸ்போர்டு அகராதி தேர்ந்தெடுத்துள்ளது. 2019க்கான சிறந்த ஆங்கிலச் சொற்கள் தெரிவு செய்ததற்கான பின்புலத்தினைப் பற்றி அந்த அகராதிகள்  கூறுவதைக் காண்போம்.   

ஆக்ஸ்போர்டு அகராதி தேர்ந்தெடுத்த சொல் “கிளைமேட் எமர்ஜென்சி” (climate emergency/கால நிலை அவசர நிலை) என்பதாகும். இச்சொல்லின் பயன்பாடு பல நூறு மடங்கு (10,796 விழுக்காடு) உயர்ந்ததோடு, தற்போதுள்ள அவசர நிலையை வெளிப்படுத்துவதாகவும், இந்த ஆண்டில் கால நிலை என்ற சொல் அவசரம் என்பதோடு இணைந்து, ஆரோக்கிய அவசரம் என்பதைவிட மூன்று பங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. 2019இல் நூற்றுக்கணக்கான நகரங்களும், நாடுகளும் பருவநிலை அவசர நிலையை அறிவித்துள்ளன. இச்சொல் கால நிலை நெருக்கடி, கால நிலை நடவடிக்கை, கால நிலை மறுப்பு, அழிவு, புவி வெப்பமயமாதல் போன்ற சொற்களுடன் போட்டியிட்டு முதலிடத்தைப் பெற்றுள்ளது. பருவ மாற்றத்தைக் குறைக்கவோ கட்டுப்படுத்தவோ, அதனால் விளைகின்ற சுற்றுச்சூழல் தாக்கத்தைத் தவிர்க்கவோ எடுக்கப்படுகின்ற நடவடிக்கையை இது குறிக்கிறது. ஐக்கிய நாடுகள் செயலர் இதனை இக்காலகட்ட முக்கியமான பிரச்னை என்று கூறியுள்ளார். இச்சொல் பற்றிய விவாதத்தோடு மட்டுமன்றி, அதிகமான செயல்பாடுகளும் பரவலாகக் காணப்படுகின்றன. 2019இல் அதிகம் பயன்படுத்தப்பட்ட சொல்லாக ஆக்ஸ்போர்டு கார்பஸ் தொகுப்பிலும் காணப்பட்டது. 2018ஐவிட 2019இல், செப்டம்பர் 2019 வரை இதன் பயன்பாடானது 100 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த வகையில் தான் எமர்சென்ஜி என்ற சொல் முக்கியத்துவம் பெறுகிறது.
சம்விதான் என்ற இந்திச்சொல்லை இந்த ஆண்டின் சிறந்த சொல்லாக இவ்வகராதி தேர்ந்தெடுத்தது. சம்விதான் என்றால் அரசியல் அமைப்பு என்று பொருளாகும்.

கேம்பிரிட்ஜ் அகராதி தேர்ந்தெடுத்த சொல் “அப்சைக்ளிங்” (upcycling/மறுசுழற்சி) என்பதாகும். பழைய அல்லது பயன்படுத்தப்பட்ட பொருள்களைக் கொண்டு உருவாக்குகின்ற புதிய தளவாடங்களையோ பொருள்களையோ உருவாக்குவதைக் குறிக்கின்ற இச்சொல் இவ்வகராதியின் இன்ஸ்டாகிராம் ரசிகர்களின் தேர்வு அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டது. 4 ஜுலை 2019ஆம் நாளன்று பகிரப்படும்போது மற்ற சொற்களைவிட இதற்கு அதிகமான ஆதரவு கிடைத்தது. வாசகர்கள் இதனை ஒரு சொல்லாகக் கருதுவதோடு மட்டுமன்றி, அதனை ஒரு நேர்மறை உத்தியாகவே கருதுகின்றனர் என்கிறார் இவ்வகராதியின் பதிப்பக மேலாளர். ஒரு தனிப்பட்ட நபரால் மேற்கொள்ளப்படுகின்ற உறுதியான செயல்பாடான அப்சைக்ளிங், ஒரு வேறுபாட்டையே உண்டாக்குகிறது என்கிறார் அவர். 2011 டிசம்பரிலிருந்து இச்சொல்லின் பயன்பாடானது 181 விழுக்காடு அதிகரித்துவிட்டதாகவும் கடந்த ஆண்டு மட்டும் இச்சொல்லுக்கான தேடல் இரு மடங்காகிவிட்டது என்றும் அவர் கூறுகிறார்.

மெரியம் வெப்ஸ்டர் அகராதி தேர்ந்தெடுத்த சொல் “தே” (they/அவர்கள்) என்பதாகும். நபர்களின் அல்லது பொருள்களின் பெயருக்குப் பதிலாக வருகின்ற பிரதி பெயர்ச்சொல் அல்லது சுட்டுப்பெயர்ச்சொல் தற்போது முக்கியமான இடத்தைப் பெறுகிறது. பொதுவாக செய்திகளில் கையாளப்படுவதன் அடிப்படையில் சொற்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும்கூட மொழியின் அடிப்படையில் நோக்கும்போது அகராதி என்பதானது ஒரு முதன்மை ஆதாரமாக அமைந்துவிடுகிறது. கடந்த ஆண்டைக்காட்டிலும் 2019இல் இச்சொல்லுக்கான தேடல் 313 விழுக்காடு உயர்ந்துள்ளது. கடந்த 600 ஆண்டுகளாக அவர்கள்/அவைகள் என்ற சொல் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. அண்மைக்காலமாக ஒரு நபரைக் குறிக்க பயன்படுத்தப்படும் இச்சொல் ஆங்கில மொழியில் பரவலாக நிறுவப்பட்ட நிலையில் அகராதியில் இணைக்கப்பட்டது.  இச்சொல்லை ஏப்ரல் 2019இல் வாஷிங்டன் மாநில இந்திய அமெரிக்க, அமெரிக்கக் கீழவை உறுப்பினரான பிரமிளா ஜெயபால் தன் குழந்தையின் பாலினத்தைப் பற்றிக் குறிப்பிடும்போதும், செப்டம்பர் 2019இல்  ஆங்கிலப் பாடகரான சாம் ஸ்மித் தனிப்பட்ட சுட்டுப்பெயரைக் குறிப்பிடும்போதும் பயன்படுத்தினர். அமெரிக்க உளவியல் சங்கத்தின் வலைப்பூ  அலுவல்பூர்வமாக அவன்/அவள் என்பதற்கு பதிலாக அவர்கள் என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைத்துள்ளது. 

காலின்ஸ் அகராதி தேர்ந்தெடுத்த சொல் “கிளைமேட் ஸ்ட்ரைக்” (climate strike/கால நிலை வேலை நிறுத்தம்) என்பதாகும். பருவ நிலை வேலை நிறுத்தம் என்பது கடந்த ஓராண்டுக்கு முன்னர் சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா தன்பர்க்கால் மேற்கொள்ளப்பட்ட உலகளாவிய இயக்கமாகப் பரவ ஆரம்பித்த, ஒரு விதமான எதிர்ப்பாகும். முதன்முதலாக இச்சொல் நவம்பர் 2015இல் பாரிஸில் ஐக்கிய நாடுகள் சவையின் பருவ நிலை மாற்ற மாநாடு நடைபெற்ற காலகட்டத்தில் முதல் நிகழ்வு நடைபெற்றபோது பதிவானது. அடுத்த ஓராண்டிற்குள் உலகம் முழுவதும் பருவ நிலை ஆர்ப்பாட்டம் பரவ ஆரம்பித்து, உலகின் பெரிய நகரங்கள்அதன் தாக்கத்தை உணர ஆரம்பித்தன. 2013இல் பிபிசி நடத்திய ப்ளூ ப்ளானட் இரண்டாம் பகுதியில் பருவ நிலை தொடர்பான செய்திகளையும், புகைப்படங்களையும் ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்தபின்னர் நான்கு மடங்கு அதிகரிக்க ஆரம்பித்த இச்சொல்லின் பயன்பாடானது, 2019இல் 100 மடங்கு உயர்ந்துவிட்டதாக காலின்ஸ் அகராதியின் அகராதியியலாளர்கள் கூறுகின்றார்கள்.

டிஸ்னரி இணையதளம் தேர்ந்தெடுத்த சொல் “இருத்தலியல்” (existential /இருத்தலியல்) என்பதாகும். இச்சொல் இருத்தல்  மற்றும் மனித இருத்தல் தொடர்பானவற்றைக் குறிக்கிறது. 1600களின் இறுதியில் ஒருவரின்/ஒன்றின் இருத்தலுக்கான ஆபத்தை, குறிப்பாக ஓர் இனம் எதிர்கொள்கின்ற பேரழிவினை இச்சொல் குறித்தது. லத்தீன் மொழியில் வினைச்சொல்லான இச்சொல் ஜெர்மன் பெயரைக் கொண்ட, முதன்முதலில் 1919இல் பதிவான,  தத்துவ இயக்கம் என்பதிலிருந்து ஆங்கிலத்திற்கு வந்ததாகும். 2019இல் இருத்தலியல் என்பதானது காலநிலை மாற்றம், துப்பாக்கிக் கலாச்சாரம், ஜனநாயக நிறுவனங்கள் என்ற பரந்துபட்ட அளவில் விவாதிக்கப்பட்டது. பிப்ரவரி 25இல் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான பெர்னி சாண்டர்ஸ் பருவ நிலை மாற்றம் பற்றி விவாதித்தபோது இருத்தலியலுக்கான தேடல் 179 விழுக்காட்டிற்கு உயர்ந்தது. உலகளவில் நடைபெற்ற பருவ நிலை ஆர்ப்பாட்டங்களின்போதும், தன்னுடைய உரைகளின்போதும் செப்டம்பர் 2019இல் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் கூறியதையும் நினைவில் கொள்ளவேண்டும். குறிப்பாக அமெரிக்க காங்கிரசிடம் அவர் தனக்கு ஒரு கனவு உள்ளதாகவும், ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்களும், ஊடகங்களும் பருவநிலை ஆபத்தை  இருத்தலியலின் அவசர நிலையாகக் கொண்டு செயல்பட ஆரம்பிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
ஒவ்வோராண்டும் ஆங்கில அகராதிகள் ஆண்டின் சிறந்த ஆங்கிலச் சொல்லாக ஆங்கிலச் சொற்களைத் தேர்ந்தெடுத்து வருகின்றன. ஆக்ஸ்போர்டு அகராதி கடந்த சில ஆண்டுகளாக ஆண்டின் சிறந்த இந்தி சொல்லைத் தேர்ந்தெடுத்து வருகிறது. இவ்வாறாக தமிழிலும் ஆண்டின் சிறந்த தமிழ்ச்சொல் தேர்ந்தெடுக்கப்படும் சூழல் அமையும் என்று நம்புவோம். தமிழகக் கல்வி நிறுவனங்கள், அகராதி அமைப்புகள் இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளலாம்.

துணை நின்றவை
Oxford Dictionary, Word of the Year 2019
Cambridge Dictionary announces ‘upcycling’ as World of the Year 2019
Merriam Webster, Word of the Year 2019
The Collins word of the year 2019 is climate strike  
Dictionary.com’s Word Of The Year 2019 For 2019 Is….

14 comments:

  1. தங்களால்தான் இந்த செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது நன்றி.

    ReplyDelete
  2. உலகில் அதிகம் உபயோகப்படுத்தும் வார்த்தைக் கொரோனா வாக்த்தான் இருக்கும் என்றுநம்புகிறென்

    ReplyDelete
  3. இது போன்ற பல தகவல்கள் தங்களின் மூலம் மட்டுமே அறிய முடிவதில்லை ஈடில்லா மகிழ்ச்சி ஐயா... நன்றிகள் பல...

    ReplyDelete
  4. சிறப்பான தகவல் ஐயா. தேடித் தேடி புதிய விஷயங்களை தரும் உங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  5. அறியாத செய்தியினைத் தங்களால் அறிந்தேன்
    நன்றி ஐயா

    ReplyDelete
  6. சிறப்பான தகவல்கள் தந்தமைக்கு இனிய நன்றி!

    ReplyDelete
  7. அருமை ஐயா. இப்படியான தகவல்கள் தங்கள் மூலமே அறிகின்றோம். மிக்க நன்றி.

    2020 ல் கொரோனா என்ற சொல்லாக இருக்குமோ? கொரோனா வேக்சின் இப்படியானவை

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  8. 'they' சரிதம் மனதைக் கவர்ந்தது.

    ReplyDelete
  9. அறியாத தகவலை அறிந்தேன். மகிழ்ச்சி.

    ReplyDelete
  10. தமிழில் 'தினமணி' ஒன்றுதான் இத்தகைய மொழி வளர்ச்சிப் பணியில் முன்னிற்கமுடியும் என்பது கண்கூடு. தினமணியில் தங்களுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி ஆண்டுதோறும் புதிய சொற்களைத் திரட்ட வழிசெய்யவேண்டும் என்பது இந்த எளியவனின் அவா.

    ReplyDelete
  11. மிக்க நன்றி. சிறப்பான தகவல்களைத் தரும் உங்கள் பணிக்கு மேலும் மேலும் பாராட்டுக்கள்

    ReplyDelete
  12. சிறப்பான தகவல் ஐயா. தேடித் தேடி புதிய விஷயங்களை தரும் உங்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  13. ஐயா! தாங்கள் தவறாமல் ஆண்டுதோறும் இது பற்றி எழுதி வருகிறீர்கள். கூடவே இதே போல் தமிழ்ச் சொற்களும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனும் தங்கள் ஏக்கத்தையும் தமிழ் மக்கள் சார்பில் பதிவு செய்து வருகிறீர்கள். நம் கனவு விரைவில் பலிக்கும் என நம்புவோம். பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
  14. தினமணியின் செயலைப் பாராட்டுவோம்.
    சிறந்த ஆய்வுத் தொகுப்பு
    தங்கள் பதிவுக்கு நன்றி

    ReplyDelete