எந்தவொரு விழா என்றாலும் இளமைக்கால நினைவுகள் இயல்பாக வந்துவிடுகின்றன. நம் ஆழ்ந்த மனதில் தங்கியிருப்பதால் அந்த நினைவு வருகிறதா
அல்லது இயல்பான சூழலில் வருகிறதா என்று தெரியவில்லை. இருந்தாலும் அந்நினைவு மனதிற்குத்
தருகின்ற இன்பத்திற்கு ஈடாக எதனையும் ஒப்பிட முடியாது.
கும்பகோணத்தின் கோயில்களில் என்றுமே திருவிழாதான்.
தேரோட்டம், தெப்பம், விழா நாள்களில் இறைவனின் வீதியுலா போன்றவை மனதில் என்றென்றும்
இருக்கின்ற வகையில் இல்லங்களில் ஆடிப்பெருக்கு, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல்
போன்ற விழாக்களைக் கொண்டாடப்படும்போது நம்மையும் அறியாமல் இறையுணர்வு வெளிப்படுவதை
உணர்ந்துள்ளேன்.
ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்திக்கு முதல்
நாளே விநாயகர் வீட்டிற்கு வருவதைப் பற்றிய எண்ணங்கள் இருந்துகொண்டே இருக்கும். எங்கள்
அப்பா சிறிய மண்ணாலான விநாயகரை வாங்க என்னையும், தங்கையையும், தம்பியையும் அழைத்துச்
செல்வார். சில சமயங்களில் யாராவது ஒருவர் மட்டும்
போவோம். கும்பேஸ்வரர் கோயில் வடக்கு வீதி, பெரிய தெரு, கீழ வீதி உள்ளிட்ட பல இடங்களில்
தரையில் அழகாக களிமண்ணாலான விநாயகரை வரிசையாக அடுக்கி விற்பனைக்கு வைத்திருப்பார்கள்.
ஒவ்வொருவர் செய்திருப்பதும் ஒவ்வொரு விதத்தில் அழகாக இருக்கும். விற்பனைக்காக அடுக்கி
வைக்கப்பட்டிருக்கும் விதம் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விநாயகரை வாங்கவேண்டும் என்ற ஆவலை
ஏற்படுத்தும்.
எங்கள் வீடு இருந்த சம்பிரதி வைத்தியநாதன் தெருவினை
அடுத்துள்ள சிங்காரம் செட்டித்தெருவிலிருந்தும் அவ்வாறான விநாயகர் சிலைகளை செய்து எடுத்துச்செல்வதைப்
பார்த்துள்ளோம். மட்பாண்டங்கள் செய்பவர்களின் குடும்பங்கள் அங்கு இருந்த நினைவு. மண்
சட்டிகள், அடுப்புகள் உள்ளிட்ட களிமண் பாண்டங்களை அங்கு தயாரிப்பதையும், சூளையில் இடுவதையும்
பார்த்துள்ளேன். எங்கள் உடல்நிலை சரியில்லையென்றால் நெற்றியில் பத்து போடுவதற்காக எங்கள்
ஆத்தா எங்களை அங்கு அழைத்துச் செல்வார். அங்கு ஒரு கலயத்தில் செம்மண் கலந்த நிலையில்
உள்ள ஒரு திரவத்தை நெற்றியில் தடவுவர். வீட்டிற்கு வந்து சில மணி நேரங்களில் உடல்நிலை
குணமாகிவிடும்.
விழா நாளன்று காலை வீட்டிலிருந்து கிளம்பி, கும்பேஸ்வரர் வடக்கு வீதி வழியாக விநாயகரை வாங்கச் செல்வோம். எங்களுக்குப் பிடித்த விநாயகரை வாங்கி
வீட்டிற்குக் கையில் எடுத்துக்கொண்டு வருவோம். கடையிலிருந்து அதனை வாங்கி, கீழே விழுந்துவிடாதபடி
மார்பில் அணைத்தபடி எடுத்து வரும்போது கோயில்களில் உற்சவமூர்த்தி உலா வரும் நினைவிற்கு
வந்துவிடும். ஒரு புறம் அது கீழே விழுந்துவிடக்கூடாது என்ற பயம். மறுபுறத்தில் இறைவனையே
நாம் தூக்கி வருவது போன்ற எண்ணம். வரும் வழியிலேயே எங்கள் வயதையொத்த நண்பர்கள் அதனை
வாங்கிச் செல்வதைப் பார்த்து ஒப்பு நோக்குவதும் உண்டு. அவ்வாறு வரும்போது ஆடிப்பெருக்கன்று
வரிசையாக சப்பரம் ஓட்டிச் செல்லும் நினைவும் வருவதுண்டு.
வீட்டில் வந்தவுடன் அந்த விநாயகரை சாமியறையில் வைத்து,
அதனை அலங்கரித்துப் பார்த்துக் கொண்டேயிருப்போம். நவராத்திரியின்போது கொலு பொம்மைகளை
அலங்கரிக்கும் அனுபவத்தில் அந்த விநாயகரை அழகுபடுத்தி, பூ போட்டு வைப்போம். ஆரம்ப காலத்தில்
எங்கள் ஆத்தாவும், பின்னர் எங்கள் அம்மாவும் அந்த விநாயகருக்காக கொழுக்கட்டை செய்து
அருகில் இருந்து பார்த்துக் கொண்டேயிருப்போம். அவருக்குப் படைக்கும்போது அவருடைய வாயில்,
நாங்கள் தருவதை அவர் ஏற்றுக்கொள்கிறார் என்ற நம்பிக்கையில், தருவோம். நாங்கள் தந்ததை
அவர் ஏற்றுக்கொண்டதாக மன நிறைவு. வீட்டில் பிறந்த ஒரு குழந்தையைச் சீராட்டுவதைப் போல
அந்த விநாயகரைக் கவனிப்போம். மாலை நெருங்க நெருங்க அவ்விநாயகர் நம்மை விட்டுச் சென்று
விடுவாரே என்ற ஏக்கம் வந்துவிடும்.
எங்கள் வீட்டில் கிணறு இருந்தது. அந்தக் கிணற்றில்
விநாயகரைக் கரைப்பதற்கான நிகழ்வுகள் ஆரம்பிக்கும். அக்கிணற்று நீர் மிகவும் ருசியாக
இருக்கும். எங்கள் கிணற்று நீரின் ருசியினை இதுவரை நான் எங்கும் கண்டதில்லை. மிக பக்தியோடு விநாயகரை எடுத்து வருவோம். எங்களுக்குள்
யார் அந்த விநாயகரைக் கிணற்றில் போடுவது என்ற சிறு சலசலப்பு ஏற்படும். சிறிது நேரத்தில்
அது மறைந்து அனைவரும் சேர்ந்தே போடுவோம் என்று முடிவெடுப்போம். ஒன்றாகச் சேர்ந்து விநாயகரைக்
கிணற்றில் போடுவோம். “இந்த வருஷம் போய்ட்டு, அடுத்த வருஷம் வா, பிள்ளையாரப்பா” என்று
கூறிக்கொண்டே போடுவோம். கிணற்றில் இட்டுவிட்டு உள்ளே வந்த சில மணி நேரங்கள் மனது என்னவோ
போலிருக்கும். அடுத்த வருடம்தான் நாம் மறுபடியும் பார்க்கப்போகிறோமே என்ற எண்ணம் வந்தவுடன்
மனதில் மகிழ்ச்சி தோன்றும். சாதாரணமாக கிணற்றுப்பக்கம் போகும்போதுகூட அவ்வப்போது விநாயகர் மனதில் தோன்றுவார்.
தஞ்சாவூருக்கு வந்த பின்னர் இரு மகன்களும் வளர்ந்து
திருமணமாகி வேலைக்காக வெளியூர் சென்ற நிலையிலும் என் மனைவியும், மருமகள்களும் அந்தப்
பழக்கத்தைக் கடைபிடித்து, தொடர்ந்து வருகின்றனர். இதுபோன்ற விழா நாள்களில் இளமைக்கால
நினைவுகள் இயல்பாக வந்துவிடுகின்றன.
குடும்பத்தில் ஒருவராக இறைவனை வீட்டில் வணங்கிய காலம். கூட்டுக்குடும்பத்தின் மகிழ்ச்சி விரவியிருந்த காலம். ஆடம்பரம், பகட்டு என்றால் என்னவென்றே தெரியாத காலம். உண்மையான பக்தி வியாபித்திருந்த காலம். விநாயகரை விளம்பரப்பொருளாக ஆக்காத காலம். அந்த இளமைக்காலத்தையும், விநாயகரையும், கும்பகோணம் வீட்டுக் கிணற்றையும் மறக்கவும் முடியுமோ?
இனிய நினைவுகள் ஐயா... வாழ்த்துகள்...
ReplyDeleteமலரும் நினைவுகள் இனிமை...
ReplyDeleteகளிமண் கொண்டு வார்க்கப்பட்ட கணபதி சிலைகளுடன் கொண்டாடப்பட்ட விநாயக சதுர்த்தி விழாவை -
ஆடம்பர விழாவாக மாற்றி அமைத்தவர்கள்
சென்னையில் கொழுத்த வட இந்திய வியாபாரிகள்..
எளிமையின் இலக்கணம் விநாயக வழிபாடு என்பதைப் பெருவாரியான இந்துக்களும் மறந்து போனார்கள்...
மறக்க முடியாத நினைவுகள் - மறக்க வேண்டாத நினைவுகள்.
ReplyDeleteபகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.
மலரும் நினைவுகளும் அவற்றின் இனிமையும் என்றுமே மறக்க முடியாதவை! பகிர்ந்து கொண்டதற்கு இனிய நன்றி!
ReplyDeleteஎனக்கும் சிறு வயது நினைவுகள் வந்து விட்டது.
ReplyDeleteஊரின் பொதுக்கிணற்றில் போடும் களிமண் பிள்ளையாரின் வைக்கும் மூன்று பைசாவை எடுப்பதற்கு கிணற்றில் குதித்து எடுத்தது நினைவு வருகிறது.
இந்த தொற்று காரணமாக யூ ட்யூபில்செய்து காட்டிய மஞ்சள் பிள்ளையாருக்கு மவுசு கூடிவிட்டது எனக்கு வந்தபுகைப்படங்கள் எல்லாம்மஞ்சள்பிள்ளையாரை செய்து பூசித்து இருப்பது தெரிகிறது
ReplyDelete//“இந்த வருஷம் போய்ட்டு, அடுத்த வருஷம் வா, பிள்ளையாரப்பா” என்று கூறிக்கொண்டே போடுவோம். கிணற்றில் இட்டுவிட்டு உள்ளே வந்த சில மணி நேரங்கள் மனது என்னவோ போலிருக்கும்.//
ReplyDeleteமூன்று நாள், அல்லது ஐந்து நாள் இருப்பார். தினம் ஏதாவது செய்து வைத்து கும்பிடுவோம். அவரை கரைத்துவிட்டபின் வீடு வெறிச் என்று போய் விடும்.
விநாயகர் சதுர்த்தி அன்று கோவில் போய் அன்று எத்தனை பீள்ளையார் கோவிலில் பார்த்தோம் என்று கணக்கு போடுவோம் சிறு வயதில்.
அருமையான இனிமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
மலரும் நினைவை மிகவும் ரசித்தேன்.
ReplyDeleteகடைசி பத்தி மிக அருமை.
//பகட்டு என்றால் என்னவென்றே தெரியாத காலம். உண்மையான பக்தி வியாபித்திருந்த காலம். விநாயகரை விளம்பரப்பொருளாக ஆக்காத காலம். //
பக்தி என்பது குறைந்து, போட்டி என்பதாக ஆகிவிட்டது இந்தக் காலம். பழைய காலம் இனி வருமா என்ற ஆதங்கத்தை ஏற்படுத்தியது இந்த இடுகை. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.
இனிமையான இளமைக்கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா
ReplyDeleteபண்டிகைத் திருநாள் வாழ்த்துகள்
நினைவுகள் சுகமானவை
ReplyDeleteதஞ்சை கரந்தை மார்க்கெட்டில் 1980 ல் ஒரு அச்சுபிள்ளையார்(9 அங்குலம் உயரம்,4அங்குலம் நீளம் கொண்டது) விலை 15 பைசா. 1990 ல் ரு. 3. 1994 ல் ரு.4.
26-9-1994 முதல் மும்பையில் வசிப்பு.
அதே அளவு பிள்ளையார் (இங்கு கணபதி என்றழைக்கிறார்கள்) ரு.250.
2010 ல் ரு. 400.
2020 ல் வெறும் 200 ரூபாய்கள் ( கொரோனா பாதிப்பு)
இன்று மும்பையில் 30 அடி உயர பிள்ளையார் இல்லை 3 அடிக்கடி பிள்ளையார்தான்.
நகரம் சோபித்திருக்கிறது.
மீண்டும் பழையகாலத்திற்கு வருவோம்...
அந்த 15 நயாபைசா பிள்ளையார் காலம்தான் இனிமையான காலம். வருடத்தில் அன்றுதான் சுண்டல் கிடைக்கும்.
மாலை வேளையில் அப்பா பிள்ளையாருக்கு எண்ணெய், பால், தயிர் அபிஷேகம் பிறகு அலங்காரம் தீபாராதனை.
பழைய பிள்ளையார் வடவாற்றங்கரைக்கு படையெடுப்பின் தந்தியில் 25 காசு நாணயத்துடன்.
அவரை தண்ணீரில் விடும் போது அந்த 25 பைசா நாணயம்.....
- இரா சரவணன்
'இந்த வருஷம் போய்ட்டு, அடுத்த வருஷம் வா பிள்ளையாரப்பா!'
ReplyDeleteபிள்ளையார் சதுர்த்தி நினைவுகளை மீட்டெடுத்தது நெகிழ வைத்தது. நம்மோடு பிள்ளையார் என்றும் இருக்கையில் எந்தக் கவலையும் நமக்கில்லை என்று வாழ்க்கையை எதிர்கொள்வோம்.
வணக்கம் சகோதரரே
ReplyDeleteஉங்களது மலரும் நினைவுகள் அருமை. அதைப் படிக்க படிக்க எந்தன் மலரும் நினைவுகளையும் தூண்டி விட்டதை மகிழ்ச்சியுடன் ரசித்தேன். மிக நன்றாக மனதுள் இருக்கும் நினைவுகளை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். அம்மா வீட்டிலிருந்த வரை வருடாந்திர பூஜைக்கு பிள்ளையார் சிலைகள் பக்கத்து தெருவிலிருக்கும் மட்பாண்டம் செய்பவர்களிடமிருந்து அன்று காலை வந்து விற்பனை ஆகிவிடும். அதன்பின் மறுநாளுக்கு மறுநாள் பிள்ளையாரை பக்கத்திலிருக்கும் பெரிய அரசமரத்தடியில் கொண்டு போய் வைக்கும் போது மனது வேதனையாய் இருக்கும். நாங்கள் கரைப்பதில்லை. செப்டம்பரில் பெய்யும் மழையில் அவராகவே கரைந்து விடுவார். அப்படி ஒரு ஐதீகம்.
/கூட்டுக்குடும்பத்தின் மகிழ்ச்சி விரவியிருந்த காலம். ஆடம்பரம், பகட்டு என்றால் என்னவென்றே தெரியாத காலம். உண்மையான பக்தி வியாபித்திருந்த காலம். விநாயகரை விளம்பரப்பொருளாக ஆக்காத காலம்/
உண்மையான வரிகள்... பிள்ளையார் என்றும் நம்மை காப்பதற்காக நம்முடனே இருப்பார்.அண்டங்களை தன்னுள் வைத்திருப்பவன் ஆடம்பரங்களை விரும்ப மாட்டார். விரும்பாதது மட்டுமின்றி நம்மை விட்டு ஏன் விலகப் போகிறார்..அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நம் பிள்ளைப்பருவத்தில் விழா கொண்டாட்டங்கள் தந்த மகிழ்ச்சியான தருணங்களை என்றும் மறக்க இயலாது. அருமையான பதிவு. மிகவும் ரசித்தேன்.
ReplyDeleteசுகமான மலரும் நினைவுகள் எப்போதும் மகிழ்ச்சியே.
ReplyDelete