எங்கள் தாத்தாவின் (பாட்டன்) அப்பாவை (பூட்டன்) நான் பார்த்ததில்லை. அவரைப் பற்றி வீட்டில் பேசக் கேட்டுள்ளேன். அவர் பெயர் ஜம்புலிங்கம் என்றும், அவர் நினைவாகவே எனக்கு இப்பெயரை வைத்ததாகவும் கூறுவார்கள். அப்பாவின் அப்பாவையும், அம்மாவின் அப்பாவையும் நாங்கள் தாத்தா என்றே கூறுவோம்.
அக்காலத்தில் முன்னோரை நினைவுகூறும் வகையிலும், இறை நம்பிக்கை அடிப்படையிலும் ஆத்தா, தாத்தா, மூத்தவர்கள், குலதெய்வம் என்றவாறு பெயர் சூட்டியுள்ளனர். அவர்களின் இப்பழக்கத்தைவிட்டு நாம் வெகு தூரத்திற்கு வந்துவிட்டோம். தொடர்பே இல்லாத, உச்சரிக்க முடியாத, நினைவில் வைத்துக்கொள்ள முடியாத, அந்நியமான பெயர்களை தற்போது வைத்துக்கொண்டு அதனைப் பெருமையாகக் கூறிக்கொள்வோரை இப்போது நாம் காணமுடிகிறது.
எங்கள் உறவினர்களில் லிங்கம் என்ற பெயரில் முடிகின்ற பெயர்களைக் கொண்டவர்கள் பலர் உள்ளனர். அவ்வகையில் ஜம்புலிங்கம் (நான்), ஜம்புலிங்கம் (என் சித்தப்பா), மகாலிங்கம் (என் சித்தப்பா), சங்கரலிங்கம் (என் பெரியப்பா), சிவலிங்கம் (என் மாமா) அந்த பட்டியல் அமையும்.
எங்கள் பூட்டன் ஜம்புலிங்கம் கம்பீரமாக, உயரமாக இருப்பாராம். பெரிய மீசை வைத்திருப்பாராம். அவரைப் போல நெடிய உயரம் வேறு யாருக்கும் இல்லை என்று கூறுவார்கள். அவர் நடந்து சென்றால் எதிரில் யாரும் வர மாட்டார்களாம். அவ்வளவு மரியாதையும் பயமும் அவரிடம் இருந்ததாம். அனைவரிடமும் மிகவும் அன்பாக நடந்துகொள்வாராம். வீட்டில் அவர் வளர்த்த நாய் அவரைக் கடித்து அவர் இறந்ததாகக் கூறுவார்கள்.
அவரைப் போல உயரமோ, கம்பீரமோ, பெரிய மீசையோ எனக்கு இல்லை. இருந்தபோதிலும் அவர் பெயருக்குக் களங்கம் ஏற்படா வகையில், நடந்து வருவதை உணர்கிறேன். இதனால்தான் மூத்தோரின் பெயரை இவ்வாறாக வைக்கின்றார்கள் போலுள்ளது. எங்கள் தாத்தா எங்களை கண்டிப்புடனும், அதே சமயம் அன்போடும் வளர்த்தார். அப்படியென்றால் அவருடைய அப்பா அவரை எப்படி வளர்த்திருப்பார் என்று நினைத்ததுண்டு.
பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், வெளியில் போய்விட்டு நானும் என் தங்கையும் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது குட்டியாம்பாளையத்தெருவினைச் சேர்ந்த ஒருவரின் வீட்டு நாய் என்னைக் கடித்துவிட்டது. வீட்டில் சொன்னால் திட்டுவார்களோ என பயந்து யாரிடமும் சொல்லாமல் நாங்கள் இருந்துவிட்டோம். என் தங்கை எனக்கு மஞ்சள் போட்டு விட்டார். அப்படியே தூங்கிவிட்டேன். சிறிது நேரம் கழித்து எனக்குத் தெரியாமல், நாய்க்கடியால் எதுவும் ஆகிவிடுமோ என்று நினைத்து என் தங்கை எங்கள் ஆத்தாவிடம் கூற, அவர் அழ ஆரம்பித்துவிட்டார். என்ன ஆகப்போகுதுன்னு தெரியலை என்று கூறி சத்தம் போட தெருவே கூடிவிட்டது. அந்த சத்தத்தில் தூக்கத்திலிருந்த நான் எழுந்தேன். எனக்கும் என் தங்கைக்கும் திட்டு விழுந்தது. உடனே என்னை பிரம்மன் கோயில் தெருவிற்கு அருகில் உள்ள நாகூரார் வீடு என்ற வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த வீட்டில் நாய்க்கடிக்கு மருந்து போடுவார்களாம். அவர் நாயின் பற்கள் அழுத்தமாகப் பதிந்திருந்த ஆறு இடங்களில் ஏதோ ஒரு திரவத்தை தொட்டுத் தொட்டு வைத்தார். அது திராவகம் என்று கூறினர். அவ்வாறு வைக்கும்போது வலி தாங்க முடியாமல் நான் சுவற்றைப் பிடித்துக்கொண்டு கத்தினேன். மருத்துவ மனைக்குக் கூப்பிட்டுக் கொண்டு போய் ஊசி போடவில்லை. அதுவே போதும் என்று கூறினர். வீட்டிற்குத் திரும்பியதும் பத்திய சாப்பாடு என்று கூறி சில உணவு வகைகளைத் தவிர்த்துவிட்டு பிறவற்றைத் தந்தனர்.
நாய் கடித்த அடுத்த நாள் முதல் ஒவ்வொரு நாளும் எங்கள் ஆத்தா நாய் இருந்த வீட்டிற்குச் சென்று அது உயிரோடு இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வருவார். நாய்க்கு ஏதாவது ஆகிவிட்டால் அது என்னை பாதிக்கும் என்று கூறி புலம்பிக் கொண்டே இருந்தார். எங்கள் பூட்டன்நாய் கடித்து இறந்ததாலும், அதே பெயர் எனக்கு வைத்திருந்ததாலும் எங்கள் ஆத்தாவிற்கு அதிகமான பயம் இருந்துகொண்டே இருந்தது. குறிப்பிட்ட நாள்களைக் கடந்தபின்னர்தான் ஆத்தா உட்பட அனைவரும் பெருமூச்சு விட்டு நிம்மதியடைந்தனர்.
பெரியவர்கள் இவ்வாறாகப் பெயர் வைக்கும்போது என்ன நம்பிக்கையில் வைத்தாலும், அது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது என்பதை என் அனுபவத்தில் கண்டுள்ளேன். ஜம்புலிங்கம் என்று பெயர் வைத்ததால், அவரைப் போலவே நாய்க்கடியால் இறந்துவிடுவேன் என்று பயந்துகொண்டிருந்தவர்களே பின்னர் தம் கருத்தினை மாற்றிக்கொண்டனர்.
நெறியோடு வாழ வேண்டும் என்ற உள்ளுணர்வும், அவரின் பெயருக்குக் குறை வராமல் நடந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமும் என்னையும் அறியாமல் என்னை ஒரு சட்டகத்தில் வைத்து வழிநடத்துவதை உணர்கிறேன். நம் முன்னோர் நமக்கு இவ்வாறாக பெயர் வைத்ததன் சூட்சுமம் இதுதானோ?
இதனை என்ன சொற்களைக் கொண்டு சொல்வதென்றே தெரியவில்லை... அன்பு, பாசம், நேர்மை, உண்மை...?
ReplyDeleteவணங்குகிறேன் ஐயா...
தங்களது விளக்கம் அருமையாக இருக்கிறது. ஆம் அவரது பெயரைக் களங்கப்படுத்தாமல் வாழ்வதே சிறப்பு.
ReplyDeleteஎங்களது வகையறாவில் மூன்று லிங்கங்கள் உண்டு.
பூவலிங்கம் (ஐயா)
ராமலிங்கம் (அத்தை மகன்)
சொக்கலிங்கம் (சிறிய அத்தை மகன்)
குழந்தைகளுக்கு பெரியவர்களின் பெயரை வைக்க வேண்டியதின் அவசியத்தை அழகாக விளக்கியிருக்கிறீர்கள்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
ReplyDeleteநல்ல பதிவு. வீட்டில் பெரியவர்களின் பெயர்களை அவர்களின் பண்புள்ளத்தை நினைவில் கொண்டு வாழ்வதற்காக அந்தப் பெயரையே நம் குழந்தைகளுக்கும் வைக்கும் பழக்கம் நம் காலங்கள் வரை இருந்தது. இப்போது விதவிதமான பெயர்கள் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப வைத்துக் கொள்கிறார்கள். ஒன்றும் சொல்வதற்கில்லை.
உங்கள் வீட்டில் பண்பு மாறாமல் பெரியவர்களின் பெயர்களை வைப்பது மகிழ்வை தருகிறது. அவர்களது பெயருக்கு களங்கம் ஏற்படாது வாழ்க்கையில் வாழ வேண்டுமென்ற தங்கள் விளக்கமும் படிப்பதற்கே பெருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நம் முன்னோரின் நினைவுகளைப் போற்றுவதும்
ReplyDeleteஅவர்கள் காட்டிய வழியில் வாழ்வதும்
நாம் அவர்களுக்குச் செய்யும் கடமை மட்டுமல்ல,
நம் வருங்காலத் தலைமுறையினருக்கு
உதவும் சிறந்த வழிகாட்டியும் ஆகும்.
அந்த வகையில் ஆகச் சிறந்த வாழ்வியல் நெறிமுறைகளைக்
கடைபிடித்துவரும்
தாங்கள் போற்றுதலுக்கு உரியவர்
சிறப்பு. அன்பான கூட்டுக குடும்ப வாழ்க்கைக்கு இணையேது?
ReplyDelete//நெறியோடு வாழ வேண்டும் என்ற உள்ளுணர்வும், அவரின் பெயருக்குக் குறை வராமல் நடந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமும் என்னையும் அறியாமல் என்னை ஒரு சட்டகத்தில் வைத்து வழிநடத்துவதை உணர்கிறேன்.//
ReplyDeleteமிக உண்மை.
அன்பு முனைவர் ஐயா,
ReplyDeleteஉயர்ந்த பண்பாட்டை விளக்கமாக
அன்பு அருமையுடன் சொல்லி இருக்கிறீர்கள்.
எத்தனை சரித்திரம் இந்தப் பெயர் வைத்தலில் அடங்கி இருக்கிறது!!!!!!
அழகான விளக்கங்களுடன்,கம்பீரத்துடன் வந்திருக்கும் இந்தப் பதிவை
படித்துப்
பயன் பெறுகிறேன்.
பிறந்த குழந்தைகளில் மூத்த குழந்தைக்கு தாத்தாவின் பெயரை வைக்கும் வழக்க்ம் குடும்பங்களில் உண்டு
ReplyDeleteநம்மிடம் இருந்த நல்ல வழக்கங்கிளல் ஒன்று அருகி வருவதை மிக நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
ReplyDeleteபொதுவா முதலில் பிறக்கும் ஆணுக்கு அப்பாவின் அப்பா பெயரை வைப்பதும் பெண்ணுக்கு அப்பாவின் அம்மா பெயரை வைப்பதும் நடைமுறை.
உங்களைப் பற்றி நினைக்கும்போது உங்களின் தெளிவான clearஆ விளக்கும் பேச்சுதான் நினைவில் வருகிறது.
வாழ்க வளமுடன்.
வணக்கம் ஐயா. தாத்தாவின் பெயருக்கு ஏற்றார் போல வாழ வேண்டும் என்ற உங்கள் எண்ணம் உயர்வானது. வணங்குகிறேன்.
ReplyDeleteநாய்க்கடி ஏற்படுத்திய பயத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. உங்கள் தங்கைக்கு தைரியம் தான்..மஞ்சள் போட்டுவிட்டு தூங்கவைத்திருக்கிறாரே!
சிறப்பாகச் சொல்லி இருக்கிறீர்கள். நம் வீடுகளில் இந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவது வருத்தம் தரும் விஷயம் தான்.
ReplyDeleteAstha Saravana
ReplyDeleteவணக்கம் அய்யா நலமா??
எனது குடும்பத்தில் பெண் வழிப்பெயர்கள் உண்டு, எனது பூட்டி பூமா ஒரு மருத்துவச்சி, அப்போதெல்லாம் (சீவலப்பேரி, குப்புறிச்சி, பாலாமடை, கட்டளை சத்திரம்(தாழையுத்து) போன்ற ஊரில் இருந்து வந்து எங்கள் பாட்டியிடம் மருத்துவம் பார்ப்பார்களாம், இவரும் முடியாதவர்களுக்காக பல ஊர்கள் நடந்து சென்று மருத்துவம் பார்த்துள்ளாராம், வழியில் பலர் இவரை கேலிசெய்யும் போது அவர்களுக்கு முன்னாலே குரைக்கும் நாயை கண்ணால் பார்த்தே குரைக்காமல் அமைதியாக செல்லும் படி செய்துவிடுவாராம், ஆகையால் அனைவரும் அச்சப்படுவார்களாம்.
அவரது பெயரில் பூமணி(எம்பிபிஎஸ் எம் டி) அத்தை, புனிதா(எம்பிபிஎஸ் நுண்கிருமி நோய் சிறப்பு மருத்துவர்) பெங்களூர் தங்கை பூமியார் மருந்தாளுனர் இறக்குமதியாளர் தாத்தா, புனிதகுமாரி செவிலியர் நார்வே அக்காவின் மூத்தமகள் என அவரது பெயர் வைத்த அனைவருமே மருத்துவத்தில் சிறந்து விளங்குகின்றனர்.
Sridharan Krishnappa (sridharmythily@gmail.com மின்னஞ்சல் மூலமாக)
ReplyDeletenice names..sridaran.
என் பாட்டையா ஒரு பள்ளி நிறுவி நடத்தினார் என்பதும், அவர் காலத்திற்குப் பிறகும் அது நன்கு நடந்து வந்ததும் எனக்குப் பெரிய மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.நானும் அங்கு படித்தேன் .. நடித்தேன் ....
ReplyDeletehttps://dharumi.blogspot.com/2005/11/101-chevalier.html
மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு மிகைப்படுத்தல் இல்லாது உள்ளது உள்ளபடி எழுதும் உங்கள் மொழி, இந்தப் பதிவில் இன்னும் அதிகமாக ஒளிர்வதைப் பார்க்க முடிகிறது. பெரியோர் நினைவுகளை அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தும் வழக்கம் நம் சமூகத்தில் இருந்து வருகிறது. அப்பாவின் பெயரை மகனுக்குச் சூட்டிவிட்டு, அப்புறம் அவனைப் பெயர் சொல்லி அழைக்கக் கூடாது என செல்லப்பெயரிட்டு அழைக்கும் பலரை நான் என் இளமைக்காலத்தில் பார்க்கிறேன். வங்கியில் ஒரு தோழர், ராமகிருஷ்ணன் என்று தமது தந்தை பெயரை மகனுக்கு வைத்தவர் ராம்கி என்று சொல்லிக் கூப்பிட்டு சமாளித்து வருகிறார். அய்யா மீது மரியாதை.
ReplyDeleteவாழ்த்துக்கள் அய்யா
எஸ் வி வேணுகோபாலன்
94452 59691
மிகவும் சிறப்பான பதிவு!
ReplyDeleteசகோதரர் தனபாலன் எழுதியிருப்பதை நான் அப்படியே வழிமொழிகிறேன்.
சிறு வயது நினைவுகளை எத்தனை அழகாய் எழுதியிருக்கிறீர்கள்! நல்ல பழக்கங்கள், உயர்ந்த சிந்தனைகள், நல்லொழுக்கங்கள் அனைத்தும் முன்னோர்களிடமிருந்து கிடைக்கப்பெறுபவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். எல்லோருக்கும் இது வாய்க்கபெறுவதில்லை. அந்த வகையில் நீங்களும் கொடுத்து வைத்தவர்.
மிகவும் அழகாக சொல்லியுள்ளீர்கள் ஐயா .
ReplyDeleteதற்போது தமிழிலில் பெயர் வைப்பதை விட வடமொழி கலப்பின்றி வைத்தால் இழுக்கு என்ற கலாச்சாரம் பரவி விட்டது மிகவும் வேதனைக்குரியது.