10 October 2020

15-நிமிட நகரம் : தினமணி

டைம்ஸ் இதழ் அறிவித்துள்ள, 2020ஆம் ஆண்டின் 100 மிகப் பிரபலமானவர்களில் ஒருவர் என்ற சிறப்பினைப் பெறுகிறார் இரண்டாவது முறையாக பாரிஸ் நகரின் மேயராகப் பொறுப்பேற்ற அன்னி ஹிடல்கோ.  மேயராக 2014ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் இவர் அப்பதவியினை வகிக்கும் முதல் பெண்மணி என்ற சிறப்பினைப் பெறுகிறார். சோசலிசக் கட்சியின் உறுப்பினராக இவர், 2001 முதல் 2014 வரை துணை மேயராகப் பணியாற்றியுள்ளார்.  மேயராக முதல் முறை பணியாற்றிய காலத்தில் சார்லி ஹெப்டோ பத்திரிக்கை தலைமையகத்திலும் ஹைப்பர் ஹேச்சர் சூப்பர் மார்க்கட்டிலும் தீவிரவாதத் தாக்குதல்,  131 பேர் பலியான தற்கொலைப்படைத் தாக்குதல், இயற்கைப் பேரிடர்களான பெருவெள்ளம் மற்றும் வெப்ப அலை, மஞ்சள் சட்டைப் போராட்டம், ஓய்வூதியத்திட்டத்திற்கு எதிர்ப்பு, அகதிகள் மற்றும் புலம் பெயர்ந்தோரின் வருகை, சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பல பிரச்னைகளை எதிர்கொண்டார். பாரிஸ் மேயராக இருப்பது கடுங்காற்றில் கட்டுமரத்தை ஓட்டுவதற்கு ஒப்பானது என்றார்.


 

இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட காலகட்டமான பிப்ரவரி 2020இல், பாரிஸ் நகரில் “15-நிமிட நகரம்” என்ற திட்டத்தை முன்வைத்தார். கடை, பூங்கா, சிற்றுண்டி விடுதி, விளையாட்டு மைதானம், ஆரோக்கிய மையம், பள்ளி, பணியாற்றும் இடம் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் சிறிது நேரத்தில் நடந்தோ, சைக்கிளில் பயணித்தோ சென்று அடையும் வகையில் அந்த இலக்கானது அமைந்தது. கால் மணி நேரம் என்றழைக்கப்படுகின்ற அந்த வசதியானது பாரிஸ் நகரில் உள்ளோர் வீட்டுக்கு அருகிலேயே அனைத்தையும் பெறும் வாய்ப்பினைத் தரும். இதன் மூலமாக மாசு, மன அழுத்தம் குறைவதோடு சமூக, பொருளாதாரரீதியில் ஒருங்கிணைந்த மாவட்டங்களை உருவாக்கும் என்றும், அங்கு வசிப்போரின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் என்றார். “பாரிஸ் மற்ற நகரங்களைப் போலல்ல…..அது ஒரு சுதந்திரமான, சுறுசுறுப்பான எப்போதும் இயங்குகின்ற நகரம் ஆகும். கடந்த காலத்தை மறக்காமல் புதிய வரலாற்றை உருவாக்கும் தகுதி அந்நகருக்கு உண்டு,” என்றார் அவர்.


 “15-நிமிட நகரம்” உத்திக்கான பின்னணியில் முக்கியமான பங்கினை வகித்த, பாரிஸில் உள்ள சோர்போனைச் சேர்ந்த பேராசிரியரும் அறிவியலாளருமான  கார்லஸ் மொரீனோ, “பொதுமக்களின் நடவடிக்கைகள், வாகனங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் அமையவேண்டும்.  வாழும் இடங்களுக்கு அருகிலேயே பணியிடங்களும்,  கடைகளும் அமையும் நிலையில் மக்களுக்கு போதிய நேரம் கிடைப்பதோடு, அவர்கள் நிம்மதியாக வாழவும் வழி வகை செய்யும். இல்லங்களிலிருந்து பணியாற்றும் இடம் தொலைவில் இருப்பதால் பணி என்பதானது பெரும்பாலும் பிரச்னைகள் சார்ந்ததாக அமைந்துவிடுகிறது” என்றார். தன்னுடைய 20 வயது முதல் பாரிஸில் வாழ்ந்து வரும் அவர்,  “பொலிவுறு நகர வாழ்வு” என்ற தன்னுடைய திட்டம் மேயரின் தேர்தல் களத்தில் ஒரு முக்கியமான கூறாக அமைந்ததை பெருமையோடு நினைவுகூர்கிறார்.   “இது தொடர்பாக மேயர் என்னை  சந்திக்க அழைத்து தன் ஆர்வத்தை என்னிடம் வெளிப்படுத்தியபோது, தேர்தல் முகாமில் இது ஒரு சிறு பங்காக இருக்கின்றபோதிலும், அதற்கான முக்கியத்துவம் மிக அதிகமாக இருப்பதை உணர்ந்தேன்” என்று கார்டியன் இதழுக்கு அளித்த பேட்டியில் மொரீனா கூறியிருந்தார்.

 

“அக்கம்பக்கம் வெறும் கட்டடங்கள் மட்டுமே இருக்கக்கூடாது. சமூக உறவுகள் பேணப்படுவதோடு, உணர்வுகள் பரிமாறப்படுகின்ற இடமாக இருக்கவேண்டும்” என்று கூறிய அமெரிக்க-கனடா எழுத்தாளரும் செயற்பாட்டாளரும், 1961இன் செவ்வியல் நூலான அமெரிக்க மாநகரங்களில் இறப்பும் வாழ்வும் என்ற நூலின் ஆசிரியருமான ஜான் ஜேகப்ஸ் என்பவரால் இத்திட்டத்தினை வடிவமைக்க தான் தூண்டப்பட்டதாக கார்லஸ் மொரீனோ கூறினார்.  

 

பல ஆண்டுகளாக பாரிஸ், வாகனப் போக்குவரத்தினை அறிமுகப்படுத்துவதில் முன்னுதாரண நகரமாக இருந்து வருகிறது. தொழில்நுட்பம் வளர்ந்த இக்காலகட்டத்திலும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு, குறிப்பாக வாழ்விடத்திலிருந்து பணியிடத்திற்குச் செல்வதற்கு, அதிக நேரம் செலவழிப்பதைக் காணமுடிகிறது. பாரிஸ் மட்டுமன்றி ஒவ்வொரு நகரிலும் ஒவ்வொரு நாளும் காலைப்பொழுதில் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை தம் சொந்த வாகனங்களில் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் நேரத்தில் போக்குவரத்து பல இடங்களில் ஸ்தம்பித்துவிடுகிறது. நகர்ப்புற இரைச்சல்கள், வாகன ஒலி, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற தாக்கங்களும் ஏற்படுகின்றன.  பொதுமக்களுக்கு அணுக்கமாக உள்ள திட்டமாக அன்னி முன்வைக்கின்ற இத்திட்டமானது தேக ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நடைப்பயிற்சிக்கும் முக்கியத்துவம் தரும். ஒரு நகரமானது மக்களுக்காகத்தானேயன்றி, கார்களுக்காக அல்ல என்கிறார் மேயர் அன்னி.


 

பாரிஸ் நகரத்தவர் சமூகரீதியாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் அக்கரை செலுத்துவதைக் காணமுடிகிறது. கடந்த ஆறு வருடங்களாக அன்னி செயல்படுத்தி வரும் திட்டங்கள் அவர்களால் ஏற்கப்படுகின்றன. குறிப்பாக குறிப்பிட்ட சில இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படக்கூடாது என்ற அவருடைய கருத்து பரவலாக ஏற்கப்பட்டதே இதற்கு சான்றாகும். பாரிஸ் நகர வரைபடத்தினை பார்க்கும்போதே கார்களற்ற நகரம் என்ற இலக்கினை எளிதாகச் செயல்படுத்தலாம் என்பதை உணரமுடியும். இத்திட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பல கிலோமீட்டர் தொலைவிற்கு சைக்கிள் பாதை அமைக்கும் பணியும் அடங்கும். இவ்வாறான திட்டம் அறிமுகப்படுத்தும் நிலையில் சொந்தமாக வாகனம் வைத்துள்ளோர் இயல்பாகவே பிறர் நலனைக் கருத்தில் கொண்டு தம் எண்ணத்தை மாற்றிக்கொள்ள வகையுள்ளது என்ற நிலையில் பாரிஸ் ஒரு நம்பிக்கைக்கீற்றாகத் தெரிகிறது.

 

2024க்குள் அனைத்துத் தெருக்களிலும் சைக்கிள் செல்வதற்கான தனியான பாதைகள் அமைக்கப்படவுள்ளதாக அன்னி தெரிவித்துள்ளார். வாகன நிறுத்தத்திற்கான 60,000 இடங்களை அகற்றிவிட்டு அங்கு பசுமைசார் இடங்களையும் விளையாட்டு மைதானங்களையும் அமைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். முன்னதாக அந்நகரில் உள்ள செய்ன் நகரையொட்டியும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் கார் ஓட்டுதல் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 கிமீ தொலைவிற்கு சைக்கிள் செல்வதற்கான அமைக்கப்பட்டுள்ளது.


ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் “20-நிமிட  நகரம்” திட்ட சோதனை முயற்சியில் களம் இறங்கியுள்ளது. இத்தாலி, வெனிஸ் அருகேயுள்ள லாசரெட்டோ பகுதியில் “15-நிமிடம்” திட்டத்தை முன்னெடுத்துள்ளது. நகரவாசிகளின் தேவைகளுக்காக, சற்றொப்ப இதையொத்த “மிக அண்மை” என்ற திட்டத்தை டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகன், நெதர்லாந்தின் உத்ரெக்ட் ஆகிய நகரங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளன. அன்னி ஹெடல்கோவின் சைக்கிளுக்கான, பாதசாரிகளுக்கான அதன்மூலமாக சுற்றுச்சூழலுக்கான ஆதரவு உலகின் பிற நகரங்களிலும் பரவுவதை இதன்மூலம் அறியமுடிகிறது. 


15-நிமிட நகரம் என்ற என் கட்டுரையை வெளியிட்ட தினமணி (தினமணி, மகளிர் மணி, 7அக்டோபர் 2020) நாளிதழுக்கு நன்றி. அதன் மேம்படுத்தப்பட்ட வடிவம்.

9 comments:

  1. இப்படி ஒரு ஆட்சியாளர் நம் ஊரில் கிடைப்பாரா?!!

    ReplyDelete
  2. நல்லதொரு கட்டுரை. தகவல்கள் நன்று.

    தினமணியில் வெளியீடு - பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  3. In fact, it's not a much crowded city like Tokyo, Seoul, Pune or Mumbai or Singapore (according to my personal experience), however, this plan will definitely help to increase the quality of the natives life and comfortability of visitors.

    ReplyDelete
  4. 1. கணினியில் வாசிக்கும் போது எளிதாக அழகாக எழுத்துரு சிறப்பாக உள்ளது.
    2. கட்டுரை மிக நேர்த்தியாக உள்ளது.
    3. எழுத்தாளர்கள் என்பவர்கள் வேறு. பத்திரிக்கையாளர்கள் என்பவர்கள் வேறு. இவர் புகைப்படத்தைப் பார்க்கும் போதே நமக்கு உற்சாகமாக உள்ளது.
    4. ஐரோப்பிய நாடுகளில் இயற்கை வாழ்க்கை முறை என்பதனை அரசு முன்னெடுப்பதால் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் 2025 க்குள் மிக அதிகமான முதியோர் வாழும் நாடாக மாறும் என்றே நினைக்கிறேன். ஆயுள் அதிகமாகும் சதவிகிதம் இப்பொழுதே மிகவும் அதிகம். அடுத்தடுத்து இது போன்ற நல்ல விசயங்களை அறியத் தரவும். நன்றி.

    ReplyDelete
  5. தாங்கள் அறிந்த செய்திகளை எங்களுக்கும் அளித்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  6. வாழ்த்துகள் ஐயா
    15 நிமிட நகரம் போற்றுதலுக்கு உரிய முயற்சி
    நிச்சயம் வெற்றி பெறுவார்கள்

    ReplyDelete
  7. அருமை ஐயா...

    // உணர்வுகள் பரிமாறப்படுகின்ற இடமாக இருக்கவேண்டும் // சிறப்பு...

    ReplyDelete
  8. அருமையான கட்டுரை/ நேர்த்தியாகவும், எளிமையாகவும் எழுதி இருக்கிறீர்கள். இப்படி எல்லாம் மேயர்கள் நம் நகரங்களுக்குக் கிடைப்பதே அரிது. போற்றுதலுக்கு உரிய செய்தி. பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  9. சிறப்பான பகிர்வு.
    15 நிமிட நகரம் திட்டம் அருமை.

    ReplyDelete