15 August 2021

75ஆவது சுதந்திர தினம்

75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்ற இந்த இனிய நேரத்தில், ஒவ்வோராண்டும் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தினங்களை மிகவும் சிறப்பாகக் கொண்டாடிய எங்கள் தாத்தாவின் நினைவு வந்தது. எங்கள் தாத்தா திரு ரெத்தினசாமி அவர்கள் பழைய காங்கிரஸ் கட்சிக்காரர். தேசப்பற்று மிக்கவர். 


கும்பகோணத்தில் சம்பிரதி வைத்தியநாதய்யர் தெருவில் இருந்த எங்கள் வீட்டின் வாசலில் கொடிக்கம்பம் இருக்கும். அதில் காங்கிரஸ் கொடி பறந்துகொண்டேயிருக்கும்.  தெருவில் கடைசியில் எங்கள் வீடு இருந்ததால் அருகில் வந்தால்தான் கொடி பறப்பது தெரியும். கொடி பழையதாகும்போதோ, கிழியும் நிலையில் இருந்தாலோ தாத்தா அதனை மாற்றி புதிய கொடியைக் கட்டிவிடுவார். கொடி கட்டிய கயிற்றின் கீழ்முடிச்சு எங்களால் தொட முடியாத உயரத்தில் இருக்கும். பெரியவர்களால் மட்டுமே அதனை ஏற்றி, இறக்கமுடியும்.

சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தினங்களில் எங்கள் வீட்டில் தேசியக்கொடி ஏற்றப்படும். தெருவில் ஆங்காங்கே உயரத்தில் வண்ணத்தாள்கள் விதம் விதமாக பல வடிவங்களில் வெட்டப்பட்டு,  குறுக்கும் நெடுக்குமாக கட்டப்பட்டிருக்கும். கொடிக்கு முன்பாக ஒரு தட்டில் உதிரிப்பூக்கள் காணப்படும். நடுநாயகமாக மகாத்மா காந்தியின் படம் வைக்கப்பட்டிருக்கும். குழந்தைகளுக்கு தேசியக்கொடியை சட்டையில் அணிவிப்பார்கள். ஆரஞ்சுசுளை மிட்டாய் தட்டில் வைக்கப்பட்டிருக்கும். பிறருக்குத் தரும்போது, ஆசைதீர நாங்களும் எடுத்து டவுசர் பைகளில் நிரப்பிக்கொள்வோம்.  

சுதந்திர தினம் போன்ற தினங்களில் தத்தம் பகுதியில் தேசியக்கொடி ஏற்றுவதற்காக எங்கள் தாத்தாவை அழைப்பதற்காக பலர் வருவார்கள். கும்பேஸ்வரர் கோயில் மேலவீதியிலுள்ள திரு பி.ஆர். (அவர் பெயர் முழுமையாக எனக்குத் தெரியாது, ஆனால் பி.ஆர்.என்றழைப்பார்கள்), கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி 16 கட்டில் திரு குருசாமி அண்ணன், தெற்கு வீதியில் திரு குமரசாமி அண்ணன் உள்ளிட்ட அனைவரும் கும்பகோணம் கும்பேஸ்வரர் பூங்காவின் எதிரில் உள்ள நண்பரின் பட்டாணிக்கடையில் அமர்ந்து நாட்டு நடப்பு தொடர்பாக விவாதிப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர்களும் தாத்தாவைப் போலவே ஆங்காங்கே கொடி ஏற்றுவார்கள். 

எங்கள் தெரு, கும்பேஸ்வரர் கோயில் மேல வீதி, மணிக்காரத் தெரு, பழைய அரண்மனைத்தெரு உள்ளிட்ட பல தெருக்களில் எங்கள் தாத்தா தேசியக்கொடியேற்றிப் பார்த்திருக்கிறேன். விழா நாள்களில் பள்ளி மாணவர்களுக்கு மேடையில் இலவச நோட்டுப்புத்தகங்கள், பேனா, பென்சில், சிலேட், சிலேட் குச்சி, இனிப்புகளை அவரோ, பிற நண்பர்களோ வழங்குவர். சில சமயங்களில் அவருடன் சென்று இலவச நோட்டுப்புத்தகங்களை நானும் வாங்கி வந்ததுண்டு. 

அவர் நினைவாக எங்கள் வீட்டில் இன்னும் இதுபோன்ற நாள்களில் தேசியக்கொடியை ஏற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். கொடி மரம் நட்டு கயிற்றில் கட்டி ஏற்றுவதற்கு பதிலாக அந்நாள்களில் தேசியக்கொடியை பறக்கவிடுகிறேன். 

கடந்த ஆண்டுகளில் எங்கள் இல்லத்தில் கொண்டாடப்பட்ட 
சுதந்திர தின, குடியரசு தின விழாக்கள்

இந்த ஆண்டு நாங்கள் குடியிருக்கும் நகரில் தேசியக்கொடி ஏற்றுவதற்காக என்னை அழைத்தார்கள். சுதந்திர தின பவள விழாவில் கலந்துகொண்டு கொடியேற்றிவைத்தேன். வழக்கம்போல எங்கள் வீட்டிலும் கொடியேற்றினோம். நான் மூன்றாவதோ நான்காவதோ படிக்கும் காலம் தொடங்கி, எங்கள் தாத்தாவை கொடியேற்றுவதற்காக பலர் வந்து அழைத்துச்சென்ற அந்த நாள்கள் நினைவிற்கு வந்தன. ஜெய்ஹிந்த்.


எங்கள் குடியிருப்புப்பகுதியில் இந்திய சுதந்திர தின பவள விழாவில் கொடியேற்றி, உரையாற்றல், 
புகைப்படம் நன்றி : முனைவர் அசோக்குமார்


தொடர்புடைய பதிவு : காந்தி 150: எங்கள் இல்லத்தில் காந்தி

14 comments:

 1. சிறப்பு ஐயா...

  இனிய சுதந்திர தின வாழ்த்துகள்...

  ReplyDelete
 2. மிகச்சிறப்பு.   இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
  பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.
  படங்கள் அருமை.

  ReplyDelete
 4. அருமையான பதிவு
  இனிய சுதந்திர நாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. மிகச் சிறப்பான பதிவு..
  வளர்கின்ற குழந்தைகளின் மனதில் தேச பக்தியை வளர்க்கின்ற விதம் வெகு அழகு..

  அன்பின் இனிய சுதந்திர தின வாழ்த்துகளுடன் -
  துரை செல்வராஜூ..

  ReplyDelete
 6. இனிமையான நினைவுகள்.

  சுதந்திர தின வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. மலரும் நினைவுகள் அருமை.
  தாத்தா வழி பேரன் அவர்களும் கொடிஏற்றியது மகிழ்ச்சி.

  ReplyDelete
 8. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. தங்களது மலரும் நினைவாக வந்த கொடியேற்றும் விழாக்கள் பற்றிய செய்திகள் நன்றாக உள்ளது. தேச பக்தி நிறைந்த உங்கள் தாத்தாவின் பெருமைகளை அழகாக நினைவு வைத்து சொல்லியுள்ளீர்கள். உங்கள் குடும்ப படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. உங்கள் பேர்ன்களும் உற்சாகமாக இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு வாழ்த்துகள். உங்கள் குடியிருப்பு பகுதியில் கொடியேற்று விழாவில் நீங்களும் கலந்து கொண்டு உரையாற்றி வந்ததற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 9. Inian Govindaraju (முகநூல் வழியாக)
  ஆயிரத்தில் ஒருவர் கூட இப்படி வீட்டில் தேசியக்கொடி ஏற்றுவதில்லை. உங்களைப்போல் எல்லோரும் கொடியேற்றும் காலம் வர வேண்டும்.

  ReplyDelete
 10. சரவணன் வெங்கடாசலம் (முகநூல் வழியாக)
  அருமை அய்யா. இது போன்ற பதிவுகளை ஒரு நூலாக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் அய்யா.

  ReplyDelete
 11. சுதந்திர தின வாழ்த்துகள் நண்பரே... கொடி ஏற்றிவைத்து உரையாற்றி கொண்டாடியதை அறிந்து மிக்க மகிழ்ச்சி..

  ReplyDelete
 12. இனிமையான பழைய நினைவுகள்

  உடுவை.எஸ்.தில்லைநடராசா
  கொழும்பு-இலங்கை

  ReplyDelete
 13. அழகான மலரும் நினைவுகள்.

  ReplyDelete