03 August 2021

மனதில் நிற்கும் ஆடிப்பெருக்கு

கும்பகோணத்தில் இளம் வயதில் ஆவலோடு கொண்டாடிய விழாக்களில் ஆடிப்பெருக்கும் ஒன்று. ஒவ்வோர் ஆடிப்பெருக்கின்போதும் சப்பரம், கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி, காவிரியாறு அனைத்தும் என் நினைவிற்கு வந்துவிடும். காவிரியாற்றில் தண்ணீர் வரும்போது பார்க்கும் அழகினைக்காண பலமுறை நண்பர்களோடு சென்றுள்ளேன். நுங்கும் நுரையுமாக ஒரு சிறிய அளவில் வரும் நீர் தொடர்ந்து முழுமையாக காய்ந்த மணலை நனைத்துக்கொண்டு பரவிவருவதைக்காணக் கண் கோடி வேண்டும். நாங்கள் அத்தண்ணீருடனே செல்வோம். சிறிது சிறிதாக கால்களை நனைத்துக் கொண்டே தண்ணீர் ஓடுவதைப் பார்ப்போம்.

எட்டாம் வகுப்பு வரை நான் படித்த பள்ளி திருமஞ்சன வீதி ஆரம்பப்பள்ளி. விழாக்காலங்களில் கும்பேஸ்வரரின் திருமஞ்சனத்திற்காக காவிரியிலிருந்து புனித நீரை யானை எடுத்துவருவதற்காக திருமஞ்சன வீதி வழியாகச் செல்லும். அப்போது திருமஞ்சன வீதியிலுள்ள எங்கள் பள்ளி, 16 கட்டு (உள்ளே புகழ்பெற்ற காளியம்மன் கோயில்), பேட்டை (இப்போது சுவடின்றி மறைந்துவிட்டது. இங்கு நண்பர்களின் வீடுகள் இருந்தன. கரகாட்டம் இங்கு சிறப்பாக நடக்கும். பார்வையாளர்கள் வட்ட வடிவில் அமர்ந்திருப்போம்.) வழியாகத் தொடர்ந்து கரும்பாயிரம் பிள்ளையார் கோயில் வழியாக காவிரியாற்றுக்கு செல்வதைப் பார்த்துள்ளோம். பல முறை யானையின் பின்னால் நாங்கள் சென்றுள்ளோம். திருமஞ்சன வீதிப்படித்துறை அந்த வகையில் எங்களுக்கெல்லாம் அறிமுகம்

எனக்கும் என் உடன் பிறந்தோருக்குமான மூன்று சப்பரங்கள் பரண்மீது இருக்கும். ஒரு கோயில் தேரை சிறிதாக மனதில் கற்பனை செய்துகொள்ளுங்கள். அதுவே, சப்பரம். ஆடிப்பெருக்கின் முதல் நாள் காலை பெரிய கூடத்தில் ஏணியை வைத்து, எங்கள் அப்பா இறக்குவார். நாங்கள் கீழிருந்து ஒவ்வொன்றாக வாங்கி சிறிய கூடத்தில் வரிசையாக வைப்போம். பின்னர் அதைச் சுத்தமாகத் தூசியினைத் தட்டிவைப்போம். கிழிந்த நிலையிலுள்ள கடந்த ஆண்டு ஒட்டிய வண்ணத்தாள்களைச் சரிசெய்வோம். அன்று மாலை எங்கள் அப்பா பல புதிய வண்ணத்தாள்களை ராமசாமி கோயில் சன்னதியில் உள்ள பேப்பர் கடையில் வாங்கிவருவார். சில சமயங்களில் நாங்களும் சென்றதுண்டு. அதில் சற்று மொத்தமான ஒரு பக்கம் வண்ணத்தோடும் மற்றொரு பக்கம் வண்ணமில்லாமலும் உள்ள தாள் (single colour thick paper), மெல்லிய அளவிலான பல வடிவப் பூக்களைக் கொண்ட மெல்லிய வண்ணத்தாள் (thin colour paper with design), மெல்லிய சாதாரண வண்ணத்தாள் (plain colour paper), பளபளப்பாக இருக்கின்ற தங்க, வெள்ளி வண்ணங்களில் தாள்கள் (gold and silver colour shining paper), சப்பரத்தின் உள்ளே ஒட்டுவதற்கு விநாயகர், முருகன், லட்சுமி, சரஸ்வதி, வெங்கடாஜலபதி போன்ற படங்களில் சில படங்கள் இருக்கும். எங்கள் அம்மாவோ, ஆத்தாவோ பசை மாவைக் காய்ச்சி ஒரு கொட்டாங்கச்சியில் தருவார்கள். நாங்கள்  அதை எடுத்து, அப்பாவைச் சுற்றி உட்கார்ந்து ஒட்டுவோம்

சப்பரம் நான்கு சக்கரங்களுடன் உள்ள கீழ்ப்பகுதி (தட்டைப்பகுதி, அதில் இழுத்துச்செல்லும் வகையில் ஆணி அடிக்கப்பட்டிருக்கும்), குறுகிய செவ்வகத்தில் நடுப்பகுதி, இரு பக்கவாட்டுப்பகுதி, மேலே நீண்ட முக்கோண வடிவப்பகுதி ஆகியவற்றுடன் இருக்கும். மூன்று சப்பரங்களும் ஒரே உயரமாக இல்லாமல் வெவ்வேறு உயரத்தில் இருக்கும். மூன்று சப்பரங்களுக்கும் அளவுக்கேற்றபடி தாள்களை வெட்ட ஆரம்பிப்பார் அப்பா. பசை வந்ததும் முதலில் சற்று மொத்தமாக உள்ள தாளை சப்பரம் முழுதும் ஒட்டிவிட்டு, பின்னர் அதில் பல வடிவப்பூக்கள் கொண்ட தாளை பார்வைக்காக ஓரத்திலும், குறுக்கே கோடுபோலவும் ஒட்டுவார். மூன்றாம் நிலையாக தாளை பூ வடிவில், பெரிய அளவிலிருந்து சிறிய அளவு வரும் வரை, வெட்டி அதன் மேல் வைப்பார். அது முப்பரிமாணத் தோற்றத்தைக் கொடுக்கும். இரு பக்க மூலையிலும் பளபளப்புத்தாள்கள் அழகாக வெட்டப்பட்டு தொங்கவிடப்படும். நிறைவாக நடுவில் சாமிப்படத்தை நடுவில் ஒட்டுவார். பார்ப்பதற்கு அழகான தேர்களைப் போல இருக்கும். சப்பரத்தின் முன்புறத்தில் நடுவில் இருக்கும் ஆணியில் இழுத்துச்செல்லும் அளவிற்கு வைத்து சணலை இரட்டையாக வைத்துக் கட்டுவார். அனைத்து வேலையும் முடிவதற்குள் இருட்டி விடும்.

எப்போது விடியும் என்று ஆவலோடு காத்திருப்போம். காலை எழுந்தவுடன் பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள். நாங்கள் சப்பரங்களை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்துவெளியே வருவோம். அதே சமயத்தில் அடுத்தடுத்த வீடுகளில் இருக்கும் சிறுவர்களும் சப்பரங்களுடன் வெளியே வருவார்கள். ஒவ்வொருவரும் சப்பரத்தில் ஒட்டப்பட்ட வண்ணத்தாள்கள், வடிவங்கள், ஒட்டப்பட்ட சாமி படம் அனைத்தையும் ஒப்புநோக்கி மகிழ்ச்சியடைவோம். அடுத்து பயணம் ஆரம்பிக்கும். சம்பிரதி வைத்தியநாதய்யர் தெருவில் எங்கள் வீட்டிலிருந்து தொடங்கி, மேட்டுத்தெரு சந்திப்பில் திரும்பி, சர் சி பி ராமஸ்வாமி அய்யர் துவக்கப்பள்ளி வழியாக கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி, வராகக்குளம், கரும்பாயிரம் பிள்ளையார் கோயில், ரெட்டியார் குளம் கீழ்க்கரை (இங்கிருந்த ஈஸ்வரன் தட்டச்சுப்பயிற்சி நிலையத்தில்தான் நானும் நண்பர்களும் தட்டச்சும், அந்நிலையத்தின் கீழே திண்ணையில் இந்தியும்  கற்றுக்கொண்டோம்.) வழியாகச் செல்வோம். செல்லும் வழியில் யார் முதலில் செல்வது என போட்டி வைத்துக்கொள்வோம். சப்பரங்கள் ஓடும் சப்தம் காதுக்கு இனிமையாக இருக்கும். எங்களின் பயணம் திருமஞ்சனவீதிப் படித்துறையில் காவிரியாற்றைப் பார்த்தபடியே நிறைவடையும்

வரிசைப்படியாக அழகாக சப்பரங்களை கரையோரத்தில் நிறுத்திவைப்போம். காவிரிக்கரையில் காதோலை, கருகமணி, காப்பரிசி, எலுமிச்சம்பழம், வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் போன்றவற்றைப் படைத்து, புனித மஞ்சள் நூலை கட்டுவர். புதுமணத்தம்பதிகள் தாலி பிரித்துக்கட்டுவர். அவற்றையெல்லாம் பார்ப்போம். பழங்களை அப்போது ஆற்றில் இடுவர். அதனை பலர் நீருக்குள் மூழ்கிச் சென்று அதனை எடுப்பர். ஏதோ ஒரு வீர விளைட்டினைப் பார்ப்பதைப் போல இருக்கும். அனைத்தையும் ரசித்துக்கொண்டே அதே வேகத்தில் திருமஞ்சனவீதி படித்துறையிலிருந்து வீட்டிற்குத் திரும்புவோம்.

இல்லத்தில் வந்து ஆடிப்பெருக்கிற்கான நிகழ்வுகளை நிறைவு செய்தபின்னர் ஆசை தீர தெருவில் சப்பரத்தை திரும்பத்திரும்ப இழுப்போம். பின்னர் சப்பரங்கள் மறுபடியும் பரணிற்குச் சென்றுவிடும். அடுத்த ஆடிக்காக ஆவலோடு காத்திருப்போம்.

எங்கள் அப்பா எங்களுக்கு சப்பரத்திற்கு வண்ணத்தாள்கள் ஒட்டித்தந்ததைப்போல நாளடைவில் நானும் ஒட்ட ஆரம்பித்தேன். பின்னர் எங்கள் மகன்களுக்கு செய்து தந்தேன். அவர்களும் ஆடிப்பெருக்கினை காவிரியாற்றிற்குச் சென்று அனுபவித்தனர்.  

கல்லூரிப்பருவத்தின்போது நீச்சல் கற்றுக்கொள்வதற்காக நண்பர்கள் ராஜசேகரன், செல்வம், திருமலை, பாஸ்கரன், பொன்னையா ஆகியோருடன் சென்றபோது அவர்கள் அனைவரும் அரச மரத்தடிப் படித்துறையில் நீந்த ஆரம்பித்து, ராயர் படித்துறை, திருமஞ்சன வீதி படித்துறை, மேலக்காவிரி புதுப்பாலம் வரை சென்று வருவார்கள். அதற்கு அடுத்துள்ள படித்துறைகளில் முக்கியமானவை சக்கரப்படித்துறை, பகவத் படித்துறை, பாணாதுரை படித்துறை என்ற வகையில் முக்கியமானவைகளாகும். காவிரியாற்றிற்கு நீந்தக்கற்கச் சென்றாலும் நான் நீச்சல் கற்றுக்கொள்ளாததற்கு ஒரு தனி கதை உள்ளது. அதை தனியாகப் பார்ப்போம்.  

இவ்வாறாக ஒவ்வொரு திருவிழாவின்போதும் கும்பகோணம் நினைவுகள் மனதைப் பற்றிக்கொள்ளும்.   

ஆடிப்பெருக்கு தொடர்பாக எங்கள் மூத்தமகன் பாரத், தன்னுடைய முகநூல் பக்கத்தில் 2017இல் எழுதிய பதிவு: 


16 ஏப்ரல் 2024இல் மேம்படுத்தப்பட்டது.

20 comments:

  1. தங்களது சிறு வயது நினைவலைகளை சொல்லி செல்வது நேரில் காண்பது போன்ற உணர்வை தந்தது.

    கிளைக்கதையை ஆவலோடு எதிர் நோக்கி...

    ReplyDelete
  2. எவ்வளவு இனிமையான நாட்கள், நினைவுகள்... தொடர்கிறேன்.

    ReplyDelete
  3. மிக அருமையான மலரும் நினைவுகள். ஒரு ஆடிப்பெருக்கு பதிவில் சப்பரம் செய்த கதையை குறிப்பிட்டு இருந்தீர்கள் பின்னூட்டத்தில்.
    இப்போது விரிவாக மனகண்ணில் பார்த்த நிறைவு கிடைத்தது.

    ReplyDelete
  4. ரொம்பவே ரசித்த மலருன் நினைவுகள். இப்போதுள்ள தலைமுறையும் இந்த மாதிரி கொண்டாடுகிறார்களா?

    ReplyDelete
  5. உங்கள் தந்தை உருவாக்கிய சப்பரத்தையும், நீங்கள் மகனுக்கு செய்த
    சப்பரத்தையும் ரசித்துப் படித்தேன். கலை நம்முடன் வளருவது எவ்வளவு முக்கியம் என்பது நம் இளமைப் பருவத்தில் கற்க வேண்டும்.
    எங்கள் தந்தையும் எங்களுக்குத் தேர் செய்து கொடுப்பார்.
    அதை நவராத்திரி கொலுவில்
    வைப்போம்.
    உங்கள் ஆடிப்பெருக்கு சமய நினைவுகள் மிக மிக அருமை. தலைமுறை தலைமுறையாகத் தொடரட்டும். அன்பு வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  6. Balaji N/Kumbakonam Natives முகநூல் பக்கம் வழியாக: Unforgettable memories of Aadipperukku day where we used to be present with our group at our R R Agraharam padithurai, river Cauvety with full of water, we go to the top of mandapam, jump into ghe river and drench the ladies who assembled there for celebration. However after due 'archanais'from them we get nice varieties of rice, vadam,papad etc. with advices (which they know will never be heeded). I was a specialist in a type of jumping 'thanni embal' with maximum water splashed and drenching the girls. Needles to say maximum sabams were showered in return for my act. Memorable malarim ninaivugal. Aadipperukku greetings.

    ReplyDelete
  7. Gurunathan Ponnuswamy/Kumbakonam Natives முகநூல் பக்கம் வழியாக: Old memories. I am also the student of kumbeswarar thirumanvhana veedhi school up to 5th patrachariar street school 6th to 8th thirumanvhana veedhi school my studied year 1962 to 1968.

    ReplyDelete
  8. Srinivasan Rajendran/Kumbakonam Natives முகநூல் பக்கம் வழியாக: Past about your days of memory, still you keep in your mind so you look younger. congratulations.

    ReplyDelete
  9. Radha Krishnan/Kumbakonam Natives முகநூல் பக்கம் வழியாக: Namaskaram. My experiance is also same line. It is from Banadurai(west) When I was small boy (6 years oil). In my house some carpentary work in progress I fight for making chupperam (with tears and Adam) I got it. The wood making is very good one and made colorful papers and finally Loard Murugan photo padam pasted inside With joyful movement
    I went with my mother to Pavalapadithurai As a small child I am not allowed to take bath. I stayed with my Chapparam. My mother after Holy dip and wroshiping mother cavery tag me with cotton thread
    And so me people exchange the same. This wonderful and taking special raw rice with nattu serkarai we eat and given to everybody. Ohhhm. Today I went the same place remembering the glorious past
    all are deserted nobody was allowed inside Pavalapadithurai. My small Chapparam with more dignity my son ridding it last for more than 35 years and condemed Now my mother father is no more
    but making their footprints never forget it. Today I am 66 years.. With all sweet memories.... I am fortunate enough to livie in the same house my father's house.

    ReplyDelete
  10. மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! மிகவும் ரசித்தவாறே நீங்கள் எழுதியதையும் உங்கள் மகன் எழுதியதையும் படித்து முடித்தேன். இளம் வயது மலரும் நினைவுகளை கிளறி விட்டு விட்டீர்கள்! இளம் வயது ஆடிப்பெருக்கு கொண்டாட்டங்கள், காப்பரிசி சுவைத்தது, பட்டுப்பாவாடையுடன் எல்லாவற்றையும் ரசித்துப் பார்த்தது எல்லாமே நினைவுக்கு வந்தன! ஒரு சப்பரத்தை படமாகப் போட்டிருக்கலாம். அது தான் குறையாக உள்ளது இந்தப்பதிவில்! கொரோனா முடிவுக்கு வந்தால் அடுத்த ஆடிப்பெருக்கன்றாவது கல்லணைக்கால்வாய் அருகே உட்கார்ந்து வேடிக்கை பார்க்க வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு ஆடிப்பெருக்கின்போதும் இதை எழுத நினைத்து இப்போதுதான் முடிந்தது. கொரோனா காரணமாக ஊருக்குச் செல்லமுடியாததால் (கும்பகோணம் சூழலில் சப்பரம், காவிரி, நாங்கள் சப்பரம் ஓட்டிய இடங்கள்) ஒளிப்படங்களை இணைக்கமுடியவில்லை. பிற தளங்களிலிருந்து ஒளிப்படம் எடுத்துச் சேர்க்க மனம் ஒப்பவில்லை. தவிரவும், கனத்த மனத்துடன் எழுதிய பதிவு. அந்நாள்கள் தொடர்பான அனைத்தும் இதயத்திலிருந்து வந்தவை. பழைய ஒளிப்படங்கள் எதுவும் இல்லை என்பதும் என் மனதில் இருந்த சோகங்களில் ஒன்று. என் கருத்தை ஏற்பீர்கள் என நம்புகிறேன்.

      Delete
    2. தங்கள் இதயத்திலிருந்து வந்த தகவல்கள் என்பதால் தான் சப்பரம் உருவாக்கிய கதை இத்த‌னை ஆழமாக ரசிக்க வைத்தது. பார்க்கலாம். அடுத்த வருடம் நிஜமான சப்பரம் தங்களால் படம் பிடிக்கப்பட்டு ஆடிப்பெருக்கு பதிவில் வருமென எதிர்பார்க்கிறேன். இனிய நன்றி.

      Delete
  11. வணக்கம் சகோதரரே

    அருமையான பதிவு. தங்கள் மலரும் நினைவுகள் அழகாகவும், அருமையாகவும் மலர்ந்திருக்கிறது. நீங்கள் சிறு வயதாக இருக்கும் போது உங்கள் தந்தை சப்பரம் செய்து தந்த நினைவுகள் சுவையாக கூறியது நன்றாக இருந்தன. நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்கு அதே போல் சப்பர அலங்காரம் செய்து ஆடி பதினெட்டாம் பெருக்கு விழாவை சிறப்பாக கொண்டாடியது மனதுக்கு நிறைவை தந்தன.

    தங்கள் மகனது மலரும் நினைவுகளும் சுவாரஸ்யமாக இருந்தது. நினைவுகள் நம்மை விட்டு என்றும் பிரிவதில்லை. அழகாக பகிர்ந்துள்ளீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  12. இளமைக்கால ஆடிப்பெருக்கு நினைவலைகள் மனதில் வலம் வருகின்றன

    ReplyDelete
  13. இனிய நினைவுகள் ஐயா... சொன்ன விதம் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது...

    ReplyDelete
  14. அருமையான பதிவு.. தங்களுடைய மனதின் நினைவுகள் எனது நினைவுகளையும் தூண்டி விட்டன...

    அப்படியான சந்தோஷங்கள் இனி எப்போது கிடைக்கும்?..

    பொக்கிஷமான செய்திகள்..

    ReplyDelete
  15. எத்தனை சிறப்பான கொண்டாட்டங்கள். தற்போது அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விட்டது வேதனை. வடக்கிலும் பண்டிகைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றன.

    ReplyDelete
  16. Chandrasekaran Chandrasekaran/Kumbakonam Natives முகநூல் பக்கம் வழியாக: காவிரியின் பிரவாகத்தை பாலக்காரையிருந்தும் மேலக்காவிரி பாலத்திலிருந்தும் ஆடி பெருக்கின் போது வேடிக்கை பார்த்த ஞாபகம் வந்து அலை போகிறது. கும்பகோணம் என்பதே கலாச்சார பண்பு அதிகமுள்ள ஊர்.

    ReplyDelete
  17. Thiagarajan Pakkirisamy/Kumbakonam Natives முகநூல் பக்கம் வழியாக: அருமையான நினைவுகள் நானும் குடந்தையில்தான் 1 ம் வகுப்பு முதல் M.A. வரையில் படித்தேன். பின்னர் சென்னை SIVET college ல் பொருளாதார துறைத்தலைவராக இருந்து ஓய்வு பெற்றேன். நீங்கள் கூறியது போலவே ஆடிபெருக்கு நாளில் குடந்தை நகரமே விழா கோலம் கொண்டிருக்கும். காவிரி ஆறு இரு கரையும் தொட்டு கொண்டு ஓடும். எல்லோரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். அந்த காலம் இனி வருமா?

    ReplyDelete
  18. அருமையான பதிவு. உங்கள் பதிவின் மூலமாக எங்களையும் உங்கள் இளமைப்பருவத்திருக்கு அழைத்துசென்றுவிட்டீர்கள். ஒரு சமூகமாக கூடி மகிழ்வது என்றால் என்ன என்றே இன்றைய குழந்தைகளுக்கு தெறியாது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் டிவியும் மொபைலும் தான். சென்னை போன்ற பெரிய நகரங்களில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு இதுபோன்ற சந்தோஷங்கள் கிடைப்பது அரிது.

    ReplyDelete