27 January 2022

தஞ்சையும் அரண்மனையும் : முனைவர் மணி. மாறன்

முனைவர் மணி. மாறன் எழுதியுள்ள தஞ்சையும் அரண்மனையும் என்னும் நூல் சுற்றுலாப்பயணிகளுக்கான ஒரு அழகிய கையேடாக மட்டுமன்றி, பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில் அமைந்துள்ள நூலாகும். நூலை வாசிக்கும்போதே தஞ்சாவூரையும், அருகிலுள்ள பகுதிகளையும் சுற்றிவந்த ஓர் உணர்வு ஏற்படுகிறது.


இந்நூல் தஞ்சாவூரின் வரலாற்றுச்சிறப்புகளையும், கலையின் அருமைகளையும் மிக நுணுக்கமாக எடுத்துரைக்கிறது. தேவையான இடங்களில் ஒளிப்படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

பல நூற்றாண்டுகளைக் கண்ட கோட்டையும் அகழியும் சூழ்ந்த தஞ்சாவூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அரண்மனை, கலைக்கூடம், காவல் கோபுரம், சங்கீத மகால், சரசுவதி மகால் நூலகம், மராட்டா தர்பார் ஹால், ராயல் அருங்காட்சியகம், சரபோஜி அருங்காட்சியகம், அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், ஐந்தடுக்கு மாளிகையான சர்ஜா மாடி, இந்தியாவிலுள்ள பெரிய பீரங்கிகளில் ஒன்றான இராஜகோபால பீரங்கி அமைந்துள்ள பீரங்கி மேடு, மணிக்கூண்டு, சிவகங்கைப்பூங்கா, இராஜராஜேச்சரம் எனப்படுகின்ற தஞ்சாவூர் பெரிய கோயில், தமிழ்ப் பல்கலைக்கழகம், ராஜராஜன் மணிமண்டபம். மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல இடங்களைப் பற்றி இந்நூலில் காணலாம்.

தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் ஓவியங்கள், தஞ்சாவூர் கலைத்தட்டு, தஞ்சாவூர் மாலைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, உலோகச் சிலைகள் தயாரிப்பு, குத்துவிளக்குகள், நெட்டி வேலைப்பாடு, பட்டுப்புடவை உற்பத்தி, கலம்காரி துணி வேலைப்பாடு, கோயில் குடை வேலைப்பாடு என்ற வகையில் கலைகளின் தாயகமாக தஞ்சாவூர் விளங்குவதை இந்நூல் விவாதிக்கிறது. தஞ்சாவூரின் சிறப்புகள் சிலவற்றை இந்நூலிலிருந்து காண்போம்.

"2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கத் தமிழ் நூல்களில் தஞ்சாவூர் என்ற ஊர் பற்றிய குறிப்பு எங்கும் காணப்பெறவில்லை. சோழ நாடாகத் திகழ்ந்த இம்மாவட்டத்தின்கண் உள்ள வல்லம், ஆவூர், ஆர்க்காடு, கிழார் போன்ற ஊர்களைப் பற்றிய குறிப்புகள் சங்கத் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன." (ப.8)

"சாகித்ய ரத்னாகரம், இரகுநாத விலாசம், இரகுநாதப்புதயம், மன்னாருதாச விலாசம் போன்ற நாயக்கர் காலத்தில் எழுந்த நூல்களின் வழியாக தஞ்சைக் கோட்டை, அகழி, அரண்மனை பற்றிய செய்திகளை அறிய முடிகிறது." (ப.9)

"தற்போது ஆயுத கோபுரம் என்றழைக்கப்படும் எட்டு அடுக்குகள் கொண்ட மாட மாளிகையே இந்திரா மந்திரம் எனப்படுவதாகும். ஒவ்வொரு அடுக்கின் நடுப்பகுதியிலும் மன்னரின் படுக்கைக்குரிய கட்டில்களும், விதானங்களும் இருந்ததற்கான அடையாளங்களை இன்றும் காணலாம்." (ப.16)

"....பெரிய கோயில் வளாகத்தில் பெய்யும் மழை நீர் முழுவதும் வீணாகாமல் இருக்கும் பொருட்டு மாமன்னன் இராஜராஜனால் சிவகங்கை என்ற பெயரில் குளம் வெட்டி காக்கப்பெற்று, அக்குளத்தில் நீரானது சேகரிக்கப்பட்டது. மழைநீர் சேகரிப்பின் வழிகாட்டி மாமன்னன் இராஜராஜனே ஆவான்..." (ப.32)

தஞ்சாவூரைப் பற்றி மட்டுமன்றி அருகிலுள்ள மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த திருவையாறு, சுவாமிமலை, தாராசுரம், கும்பகோணம், திருபுவனம், சிதம்பரம், தரங்கம்பாடி, பூண்டி மாதா கோயில், கல்லணை, திருவாரூர், நாகூர், வேளாங்கண்ணி, மனோரா, அலையாத்திக் காடுகள், புதுக்கோட்டை, கங்கைகொண்ட சோழபுரம், நவக்கிரகத் தலங்கள் ஆகிய ஊர்களைப் பற்றிய பறவைப்பார்வையினையும் இந்நூல் கொண்டுள்ளது.

தஞ்சாவூரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைக் காண விரும்புவோருக்கும், புகழ் பெற்ற கலைகளைப் பற்றி அறிந்துகொள்ள விழைவோருக்கும் இந்நூல் மிகவும் உதவியாக இருக்கும். அரிதின் முயன்று செய்திகளைத் திரட்டி, சிறப்பான நூலை எழுதியுள்ள நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

நூல் : தஞ்சையும் அரண்மனையும்
ஆசிரியர் : முனைவர் மணி. மாறன்
பதிப்பகம்: ஏடகம், 2481, ஜவுளி செட்டித்தெரு, தெற்கு வீதி, தஞ்சாவூர் 613 009, (அலைபேசி 82487 96105)
பதிப்பாண்டு: அக்டோபர் 2021
விலை ரூ.100


20 January 2022

மிளகாய் மண்டி அனுபவம் (1975 பள்ளி விடுமுறை)

1975. கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு உயர்நிலைப் பள்ளியில் (தற்போது அறிஞர் அண்ணா  அரசு மேல்நிலைப்பள்ளி என்றழைக்கப்படுகிறது) படிப்பு நிறைவுற்ற பின்னர் எனக்குக் கல்லூரியில் சென்று படிக்கவேண்டும் என்று ஆசை. 

புகைப்படம் 2017இல் பள்ளிக்குச் சென்றபோது எடுத்தது 

கல்லூரிக்குச் சென்றால் வீணாகிவிடுவான் என்று கூறி சேர்க்கப் பயந்தனர். எப்படியும் தேர்ச்சி பெற்றுவிடுவோம், கல்லூரிக்குச் செல்வோம் என்ற கனவுகளில் நாள்கள் கழிந்தன.

இருளப்பன் மிளகாய் மண்டி 

எங்கள் தாத்தா பெரிய கடை வீதியில் அவர் கணக்கப்பிள்ளையாக வேலை பார்த்து வந்த ஷண்முக விலாஸ் மளிகைக்கடைக்கு அருகில் இருந்த அவருடைய நண்பரின் கடையான இருளப்பன் மிளகாய் மண்டியில் சேர்த்துவிட்டார்.  

எங்கள் வீடு இருந்த கே.ஜி.கே.தெருவிலிருந்து மேட்டுத்தெரு,  (சர்.சி.பி.ராமஸ்வாமி ஐயர் துவக்கப்பள்ளியைக் கடந்து), திருமஞ்சன வீதியில் நான் ஐந்தாவது வரை படித்த பள்ளி, கலியுக கிருஷ்ணன் கோயில், பாட்ராச்சாரியார் தெரு வழியாகச் சென்றால் பெரிய கடை வீதி வரும். இடது புறத்தில் முதலில் லோகநாதன் மிளகாய் மண்டியும், அடுத்து இருளப்பன் மிளகாய் மண்டியும் அடுத்தடுத்து இருக்கும். தினமும் நான் கடைக்கு இவ்வழியாகச் செல்வேன்.   

கடையின் முதலாளியை அனைவரும் அண்ணாச்சி என்பர். சேர்ந்த புதிதில் அவரை அவ்வாறு அழைக்க சிரமப்பட்டேன். அக்கடையில்  பணியாற்றிய என் சித்தப்பா அங்கு செய்யவேண்டிய வேலைகளைக் கூறினார். 

மிளகாய் மூட்டைகள் கிட்டத்தட்ட இரண்டு ஆள் உயரத்திற்கு அடுக்கிவைக்கப்பட்டிருக்கும். வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கேட்கும் அளவிலும், தரத்திற்கேற்பவும் மிளகாயை மூட்டையாக எடை போட்டுத் தருவதற்குத் துணைபுரிவது, மூட்டைகளில் பெயர் எழுதுவது, லாரியில் ஏற்றப்படும்போது உரியவர்களுக்கு உரிய மூட்டைகள் செல்கிறதா எனக் கண்காணித்தல் போன்றவை என் வேலைகள். 

என் பணியிடம் பெரும்பாலும் எடை போடும் கருவியான தராசின்  அருகில்தான். தராசின் இரு புறமும் மேலிருந்து தொங்குகின்ற நான்கு இரும்புச் சங்கிலிகளால் சதுர வடிவிலான தட்டுகள் கீழே பிணைக்கப்பட்டிருக்கும். நடுவில் முள் இருக்கும். கிட்டத்தட்ட ஆறு அடிக்கு மேல் உயரமுள்ள இதைப்போன்ற தராசைக் கும்பகோணத்தில் எங்கள் வீட்டிற்கு எதிரில் இருந்த விறகுக்கடையில் எடை போடுவதற்காகப் பயன்படுத்தும்போது பார்த்துள்ளேன். இதனை இப்போது காண்பது அரிதாக உள்ளது. கோயில்களில் தற்போது துலாபாரக் காணிக்கைக்காக இதுபோன்ற தராசினை கோயில்களில்  பயன்படுத்துகின்றனர். 

சில சமயங்களில் உயரத்தில் இருக்கும் மூட்டையைக் கீழே இறக்க உதவ வேண்டும். சேர்ந்த சில நாள்கள் மிளகாய் நெடி தாங்க முடியாமல் தவித்தேன். நாளடைவில் பழகிப்போனது. மூட்டையை அங்கு மூடை என்றார்கள். எடை போடும்போது கவனமாக இருக்கவேண்டும்.  வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப மூட்டைகள் போடப்படும். அதில் வாடிக்கையாளரின் பெயரையும், ஊரையும் மையால் எழுதுவது என் வேலை.  முதலில் எழுத சிரமப்பட்டேன். பின்னர் எவ்வளவு மூட்டையானாலும் அனாயாசமாக எழுத ஆரம்பித்தேன். ஒன்றுக்கு மேல் மூட்டை இருந்தால் (உதாரணமாக ஐந்து மூட்டைகள் இருந்தால் 1/5, 2/5, 3/5, 4/5, 5/5) அதனைக் குறிக்கும் வகையில் மூட்டையில் எழுத வேண்டும். இந்த ஒரு உத்தியை அங்குதான் கற்றுக்கொண்டேன். 

ஒரு முறை முதலாளி இல்லாத நேரத்தில் அவருடைய இருக்கையில் அமர்ந்துவிட்டேன். எதிர்க்கடையிலிருந்து பார்த்த ஒருவர் அதனை முதலாளியிடம் சொல்லிவிட்டார். அதனையறிந்த முதலாளி என்னிடம் "இவ்வாறாக நீ நடந்துகொள்ளக்கூடாது. கஷ்டப்பட்டு உழைத்து அவ்விடத்திற்கு வர  நன்கு உழைக்க வேண்டும்." என்று புத்திமதி கூறினார்.  

காலை 11.00 மணி வாக்கில் முதலாளி வீட்டிற்குச் சென்று ஆரஞ்சு ஜுஸை (ஒரு லிட்டர் அளவுள்ள கண்ணாடி பாட்டிலில்)  வாங்கி வருவதும், அவ்வப்போது மளிகைப்பொருள்கள்  வாங்கி வீட்டில் கொண்டுபோய் கொடுப்பதும் என் வேலை. ஒரு சமயம் இரண்டு கிலோ ஜீனியை துணிப்பையில் வாங்கி மிதிவண்டியின் முன்புறம் தொங்கவிட்டு வரும்போது பையின் காது அறுந்து ஜீனி அனைத்தும் கொட்டிவிட்டது. அதை அப்படியே அள்ளி மறுபடியும் பையில் சுற்றி பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டு வீட்டில் சென்று கொடுத்துவிட்டேன். ஏதும் சொல்லாமல் கடைக்குத் திரும்பிவிட்டேன். மறுநாள் வீட்டிற்குப் போகும்போது முதலாளியம்மாள் என்னிடம் "ஜீனி மண்ணாக இருந்ததே?" என்று கேட்க டந்ததைச் சொன்னேன். "நேற்றே நீ சொல்லியிருக்கலாமே? இவ்வாறு நடப்பது இயல்புதான். எதையும் மறைக்கக்கூடாது. அது ஒரு வகையில் ஏமாற்றுவதுதானே?" என்றார்களே தவிர என்னிடம் கோபப்படவில்லை. திட்டவும் இல்லை. முதலாளிக்கு அது பற்றித் தெரிந்தபோதும் அவரும் ஒன்றும் சொல்லவில்லை. அடுத்தடுத்து வேலை செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க ஆரம்பித்தேன்.

அதே ஆண்டில் தட்டச்சு, இந்தி கற்றல்

அப்போது காலை நேரத்தில் இந்தி வகுப்புக்கும், தட்டச்சுக்கும் சென்றுவந்தேன். வாடிக்கையாளர் வராத நிலையிலோ, வேலை இல்லாமல் இருக்கும்போதோ இந்தி எழுத்துகளையும், தட்டச்சுப் பயிற்சிக்கான எழுத்துக்களையும் குறித்து வைத்துப்பார்ப்பேன். எழுதிய  தாள்களை மூட்டைகளின் இடுக்கில் யாருக்கும் தெரியாதவாறு ஒளித்துவைத்திருப்பேன். மூட்டைகளைப் புரட்டும்போது  முதலாளி ஒரு முறை அதனைப் பார்த்துவிட்டார். இவ்வாறு படிப்பதில் தவறில்லை. இருந்தாலும் வேலை நேரத்திலோ, யாரும் வரும்போதோ இவ்வாறு செய்யக்கூடாது என்றார். பின்னர் அவர் கூறியபடியே செய்ய ஆரம்பித்தேன். 

வேலை வாய்ப்பகம்

முதலாளியும், அவரது குடும்பத்தாரும் என்னை நன்றாக நடத்தினர். இருந்தாலும் என் நினைவு கல்லூரிப்பக்கமே இருந்தது. சுமார் மூன்று மாதங்கள் அங்கு வேலை பார்த்தேன். வேலை முடிந்து வெளியே வரும்போது ரூ.100 கொடுத்தார். அதனை வைத்துக்கொண்டு தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பகத்தில் என் பெயரைப் பதிவு (பதிவெண்.4937/75) செய்தேன், வேலை தேடலின் ஒரு பகுதியாக. தொடர்ந்து அதனைப் புதுப்பித்துக் கொண்டிருந்தேன். 

திடீரென்று ஒரு நாள் என் நண்பர்கள் என்னிடம் வந்து அந்த ஆண்டு சிறப்பாக மறுபடியும் புகுமுக வகுப்புக்கான சேர்க்கை கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் நடைபெறுவதாகவும், சான்றிதழ்களுடன் வந்தால் உடனே சேர்ந்துகொள்ளலாம் என்றும் கூறினர். வீட்டில் தாத்தா உள்ளிட்டோர் நான் கல்லூரியில் சேர மறுப்பு தெரிவித்தபோது, எனக்காகப் பரிந்து பேசி என் விருப்பத்தைப் பூர்த்தி செய்தவர் என் அத்தை இந்திரா. கல்லூரியில் சேர்ந்த நாள் அனுபவத்தைப் பிறிதொரு பதிவில் காண்போம்.

09 January 2022

பைண்டிங் பிரஸ் அனுபவம் (1972 பள்ளி விடுமுறை)

கும்பகோணம் நினைவுகளில் முக்கியமான இடத்தைப் பெறுவது பள்ளிவிடுமுறையின்போது நான் பார்த்த பைண்டிங் பிரஸ் வேலை. அந்த அனுபவத்தைக் காண 50 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வோம்.

1972. கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று விடுமுறையில் இருந்தபோது என் தாத்தா (திரு ரெத்தினசாமி) என்னை பெரிய கடை வீதியின் அருகில் உள்ள பாபுநாயக்கன் தெருவில் உள்ள, அவருடைய நண்பரின் கடையான கணேஷ் பைண்டிங் பிரஸுக்கு வேலைக்கு அனுப்பிவைத்தார். விடுமுறையை வீணாக்காமல் இருப்பதற்காகவும், நண்பர்களுடன் வெளியே சுற்றாமலிருக்கவும் இவ்வாறு செய்தார். காலை 10.00 மணி முதல் இரவு சுமார் 8.00 மணி வரை வேலை. மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்துவிடுவேன்.  

அங்கு தாள் வெட்டும் பொறி (கட்டிங் மெஷின்), கோடிடும் பொறி (ரூலிங் மெஷின்) உள்ளிட்டவை இருந்தன. அலுவலகங்களுக்கான கணக்குப்பதிவேடுகள் (அக்கவுண்ட் லெட்ஜர்ஸ்), கல்வி நிறுவனங்களுக்கான மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய நோட்டுகள் (பெரும்பாலும் சிறிய அளவிலான ஒரு குயர் நோட்டுகள்) போன்றவை தயாரிக்கப்பட்டு, நூற்கட்டு செய்யப்படும்.

தாத்தா சொல்லி நான் பிரஸில் வேலைக்குச் சேர்ந்தேன்.  அவர்களுக்கு தாத்தாமீது அளவு கடந்த மரியாதை. அதனடிப்படையில் எனக்கு வேலை இலகுவாக இருக்கும் என நான் நினைத்தேன். சேர்ந்து சில நாட்கள் எளிதான பணிகளே இருந்தன. 

பின்னர் ஒரு நாள் "தாத்தாவின் பெயரைக் காப்பாற்ற வேண்டும். கவனமாக வேலை பார்க்கவேண்டும்" என்று கூறி சிறு சிறு வேலைகளைக் கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால் அவை எனக்கு பெரிய வேலைகளாகத் தெரிந்தன.  வேலை பார்க்கும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுதல், தேநீர் வாங்குதல், பேப்பர் கடைக்குச் சென்று பேப்பரை வாங்கி வரல் போன்ற வேலைகள்.  தேநீர்க்கடையில் ஐந்து அல்லது ஆறு 'கிளாஸ்' தேநீரை  இரும்புக்கம்பியாலான 'ஸ்டான்ட்'டில் தருவார்கள். பிடியைப் பிடித்து அதனைத்  தூக்கிக்கொண்டு வரும்போது என்னவோ போல் இருக்கும். அனைவருக்கும் அதனைக் கொடுத்துவிட்டு, நானும் குடிப்பேன். அவர்கள் குடிக்கும்வரை நின்று, கிளாஸ்களை கடையில் திருப்பிக்கொடுப்பேன். என்னுடைய தினசரி வேலைகளில் ஒன்று. 

அடுத்த வேலை தாள் வெட்டல். தாள் வாங்க கரிக்காரத்தெருவில் (ஆஞ்சநேயர் கோயில் அருகில்) இருந்த ஒரு பேப்பர் கடைக்குச் செல்வேன்.பெரும்பாலும் ஒரு தடவைக்கு ஒரு ரீம் என்ற அளவில் வாங்கி அங்கிருந்து தலையில் பேப்பரைத் தூக்கிவைத்துக் கொண்டு வரவேண்டும். அவ்வாறு வரும்போது (எங்கள் ஆத்தாவின் தம்பி திரு பெரியசாமி அவர்களின்) ஷண்முக விலாஸ் மளிகைக்கடை, ஷண்முக விலாஸ் காப்பித்தூள் கடைகளைக் கடந்துவரும் சூழல் ஏற்படும். அக்கடைகளைக் கடக்கும்போது யாரும் பார்க்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக வேகமாக விடுவிடுவென நடப்பேன். இவ்வகையான வேலைகளைச் செய்யும்போது நான் ஒரு வேலைக்காரனைப் போல உணர்ந்தேன். அவ்வப்போது அவமான உணர்வு மேலிடும்.

நாளடைவில் தாள் வெட்ட உதவுதல், வெட்டும்போது வருகின்ற ஜல்லி எனப்படுகின்ற உதிரித்தாள்களை ஒதுக்கி ஓரிடத்தில் கொட்டுதல், ரூலீங் மிஷினில் மை போடல், தாள் சரியாக வெளியே வருகிறதா எனப் பார்த்தல், தவறாகவோ முழுமையான பதிவின்றியோ வரும் தாளைத் தனியாக எடுத்துவிடல், ரூல் போட்ட தாளை மடித்தல், (நம்பர் மெஷினை வைத்து) எண்ணிடல், தைத்தல், பதிவேட்டின் அட்டைக்கு வண்ணத்தாள் ஒட்டுதல்,  மூலைக் காலிகோ அல்லது முழு காலிகோ அட்டைகளுக்கு உரிய அளவில் பசை தடவித் தரல், நூற்கட்டு வேலைகள், நோட்டின் முதுகிலும் பிற பக்கங்களிலும் வண்ணத்தில் தோய்த்த நூலைக்கொண்டு டிசைன் போடுதல் என பட்டியல் நீளும்.    

அடுத்து, பைண்டிங் தொடர்பான வேலைகளில்  உதவுதல் என்ற நிலையில் அமைந்தது.   கட்டிங் மிஷினில் பெரிய அளவு தாளினை அடுக்கிவைத்து, தேவையான அளவிற்கு வெட்டுவர். ஒருவர் கீழே நின்று தாளை அளவு பார்த்து வைத்து, கைப்பிடியைச் சுற்றுவார். மற்றொருவர் தாளின் அழுத்தம் உறுதியாக இருக்க மேலே நின்றுகொண்டு ஒருவர் உருண்டையாக இருக்கின்ற அழுத்தம் தருகின்ற பகுதி மூலமாக மேலே நின்று அழுத்துவார். அதனைச் சுற்றச்சுற்ற தாள் இறுக ஆரம்பிக்கும்.  பின்னர் வலதுபுறத்தில் இருக்கின்ற கைப்பிடியோடு கூடிய உருண்டை வடிவப் பகுதியைச் சுற்றினால் பிளேடு கீழே இறங்கி தாளை வெட்டும். அவ்வாறு சுற்றும்போது மிகவும் வேகமாகவும் கவனமாகவும் சுற்றவேண்டும். அப்போதுதான் பிளேடு இறங்கி  தாளை வெட்டிவிட்டு திரும்பி ஏற வசதியாக இருக்கும்.  மேலே நின்று சுற்றும் வேலையையும், சில சமயங்களில் கீழே நின்று சுற்றும் வேலையையும் நான் செய்துள்ளேன்.  பிளேடு நம் பக்கம் வந்து காலை வெட்டிவிடுமோ என்று ஏறி நிற்க பயந்தேன். கவனக்குறைவால் திட்டு வாங்கியுள்ளேன். கீழிருந்து கைப்பிடியைச் சுற்றும்போதும், மேலிருந்து அழுத்தும்போதும் சில சமயங்களில் நெஞ்சு வலிக்கும். பின்னர் பழகிப்போனது.  

புகைப்படம் நன்றி: ஜான் செபஸ்டியன்

ரூலிங் மிஷின் சற்றே வித்தியாசமானது. அது சற்றொப்ப தறிபோடுவதைப் போலக் காணப்படும். இப்போது இது அருகிவிட்டது. சிறிய வடிவிலான பெட்டி போன்ற அமைப்பில் வண்ண மையை ஊற்றுவர். அதனை அடுத்துள்ள வளைவு போன்ற அமைப்பின் மூலமாக மை வெளிவந்து தாளில் கோடாக விழும். ஒரே சமயத்தில் பல வண்ணங்களில் கோடிட முடியும். அவ்வாறு செய்யும்போது ஒரு முறை வட்ட வடிவ, மை வரும் இடத்தில் கையைவிட்டு விரலில் ரத்தம் வந்துவிட்டது. பின்னர் என்னை எச்சரித்து கவனமாக இருக்கும்படி கூறினர். அதனையும் கற்றுக்கொண்டேன். பள்ளி மாணவர்களுக்கான ஒரு குயர் கணக்கு நோட்டு, வியாச (கட்டுரை) நோட்டு, இரண்டு கோடு மற்றும் நான்கு கோடு காப்பி நோட்டு அனைத்தும் அங்கு கோடிடப்பட்டு நூற்கட்டு (பைண்டிங்)  செய்யப்படுவதைப் பார்த்துள்ளேன்.  

அங்கு வேலை பார்த்த காலத்தில்தான் முதன்முதலாக தாளை வீணாக்கக்கூடாது என்பதை உணர்ந்தேன். தாளைத் தட்டி அடுக்குதல், எண்ணுதல், குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்கங்களை ஒன்று சேர்த்தல்,  மடித்தல், தலைப்பு மாற்றி அடுக்குதல், மேலட்டை மற்றும் காலிகோவிற்காக (பசை தடவி) ஊறப்போடுதல் உள்ளிட்ட பல வேலைகளைக் கற்றுக்கொண்டேன். டீ வாங்கப்போவது, தாளைத் தலையில் தூக்கிகொண்டுவருவது, ஜல்லிகளை (வெட்டப்பட்ட தாள்களின் துண்டுகள்) விளக்குமாற்றால் கூட்டி ஒதுக்குவது போன்ற வேலைகளைச் செய்தேன். ஆரம்பத்தில் இவ்வேலைகளைச் செய்ய கௌரவம் பார்த்த நான் நாளடைவில் பார்க்கும் வேலையில்  கௌரவக்குறைவு இல்லை, நேர்மையும் ஈடுபாடும் முக்கியம் என்பதை உணர்ந்தேன். 

கிட்டத்தட்ட ஒரு மாதம் அங்கு பணியாற்றினேன். எவ்வித ஊதியமும் பெறவில்லை. ஆனால் பல வேலைகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றேன். 

திம்மி 1க்கு 8 அளவினைவிட சற்றுச் சிறிய அளவில் (கிட்டத்தட்ட சுருக்கெழுத்து நோட்டைப் போன்ற) ஒரு சிறிய நோட்டை நானே நூற்கட்டு செய்யும் அனுபவத்தைப் பெற்றேன். அதனைத் தயாரிக்க எனக்கு மூன்று நாள்களாயின. ஒவ்வொரு நாளும் மதியத்தில் அனைவரும் சாப்பிடச் சென்றபின் நானே யாருடைய துணையுமின்றி தாளை எடுத்து கட்டிங் மிஷினில் வெட்டி, அட்டையையும் உரிய அளவு வெட்டி வடிவமாக்கி பின்னர் தைத்து, முதுகுப்பகுதியில் காலிகோ ஒட்டி முன் அட்டையிலும், பின் அட்டையிலும் வண்ணத்தாளையும் ஒட்டி உருவாக்கினேன். என் பெருமையைக் கூறுவதாக நினைத்து ஒருவரிடம் அதனைக் காண்பிக்க, அவர் அதனை எடுத்து அனைவரிடமும் காட்டிவிட்டார். பின்னர் நான் "யாரும் இல்லாதபோது இவ்வாறாக தனியாகச் செய்யக்கூடாது" என்று எச்சரித்தனர். அதே சமயம் அவ்வாறாக நான் செய்ததை எண்ணி என்னைப் பாராட்டினர்.

அறிஞர் அண்ணா அரசினர் பள்ளியில் சேர்வதற்காக அனைவரிடமும் நன்றிகூறிக் கிளம்பியபோது அனைவரும் என் பணியைப் பாராட்டினர். நன்றாகப் படிக்கவேண்டும் என்று வாழ்த்தி அனுப்பினர். இவ்வகையில் என்னுடைய எட்டாம் வகுப்பின் விடுமுறை நாட்கள் கழிந்தன.

இப்போது பைண்டிங் பிரஸ், தாள் வாங்கச் சென்ற கடை, சண்முக விலாஸ் கடை, தேநீர்க்கடை எதுவுமே இல்லை....ஆனால் நினைவுகள் மட்டும் தொடர்கின்றன.