கும்பகோணம் அழகில் ஒன்று மாசிமக தீர்த்தவாரி விழாவாகும். 17 பிப்ரவரி 2022இல் கும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கௌதமேஸ்வரர், பாணபுரீஸ்வரர், அமிர்தகலசநாதர், கம்பட்ட விஸ்வநாதர், கோடீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 12 சிவன் கோயில்களைச் சேர்ந்த இறைவனும் இறைவியும் ரிஷப வாகனத்தில் மகாமகக்குளத்தின் கரைகளில் எழுந்தருளினர். குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.
நானும் என் மனைவியும் இன்று காலை தஞ்சையிலிருந்து கிளம்பி சுமார் 8.00 மணியளவில் கும்பகோணம் சென்றோம். நேரடியாக காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று அங்கு கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்த இறைவனையும் இறைவியையும் தரிசித்துவிட்டு மகாமகக்குளத்தைச் சுற்றி வந்தோம். பின்னர் மகாமகக்குளத்தின் தென் கரையில் அனைத்து கோயில் மூர்த்திகளையும் பார்க்க வசதியாக ஓரிடத்தில் அமர்ந்து கொண்டோம். 12 கோயில்களில் பெரும்பாலான கோயில்களின் உற்சவமூர்த்திகளையும் அங்கிருந்து தரிசித்தோம். அங்கிருந்தபடியே தீர்த்தவாரி நிகழ்வினையும் கண்டோம்.
குளத்தின் நான்கு கரைகளிலும் சிறிய விழாக்காலக் கடைகளைக் காணமுடிந்தது. கிட்டத்தட்ட ஒரு சிறிய மகாமகமாகவே இவ்விழா இருந்தது. கொரோனா காலக் கெடுபிடி சற்று குறைய ஆரம்பித்த நிலையில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கலந்துகொண்டதையும், பலர் முகக்கவசத்துடன் இருந்ததையும் காணமுடிந்தது.
வழக்கமாக தீர்த்தவாரி நடைபெறும் இடத்தின் எதிரில் குளக்கரையில் படியில் அமர்ந்து பார்ப்போம். அதிகமாக உள்ளே பொதுமக்களை அனுமதிக்காததால் வெளியில் இருந்து பார்த்தோம். நேரம் ஆக ஆக வருவோர் எண்ணிக்கை அதிகமானது. அந்தந்த கோயில்களைச் சேர்ந்த அஸ்திரதேவர்கள் குளத்திற்கு வருவதற்காக அமைக்கப்பட்டிருந்த இடங்களில் மட்டும் கதவினைத் திறந்து கட்டுப்பாட்டுடன் உள்ளே அனுப்பிக்கொண்டிருந்தனர். கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக இவ்வாறு செய்திருக்கலாம். குளத்தில் பாதுகாப்பிற்காக மிதவைப்படகு சுற்றி வந்ததைக் கண்டோம். குளத்தின் வெளியே பக்தர்கள் ஆங்காங்கு குளிப்பதற்காக நீரூற்று அமைப்பு அமைக்கப்பட்டிருந்தது. உள்ளே செல்ல முடியாதவர்கள் அங்கே புனித நீராடினர். மூதாதையருக்கு திதி கொடுக்கும் சடங்கினை படித்துறையில் பலர் செய்தனர். குளத்தின் கரையில் இவ்வாறு செய்யவேண்டிய அவசியமில்லை என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டபோதும் பலர் அதனைத் தொடர்ந்து செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தன. முன்களப்பணியாளர்களின் சேவை பாராட்டத்தக்கது.
எங்கு பார்த்தாலும் மக்கள். விழாக்காகவே காத்திருப்பதைப் போன்று அவர்களின் முகங்களில் பிரகாசம். உள்ளூரிலிருந்து வருவோருக்கு நிகராக வெளியூரிலிருந்தும் பலர் வந்ததைக் காணமுடிந்தது. கும்பகோணத்திற்கு அழகினைத் தருகின்ற விழாக்களில் ஒன்றான தீர்த்தவாரிக்குப் பல முறை சென்றுள்ளோம். ஒவ்வொரு முறை செல்லும்போதும் அப்போதுதான் முதன்முதலாகச் செல்லும் உணர்வு ஏற்படும். அனுபவிப்பவர்களே அதை உணரமுடியும்.
கும்பகோணம் விழாக்கள் என்றாலே அங்கு செல்லவேண்டும் என்ற ஆர்வம் இயல்பாகவே வந்துவிடுகிறது. அவ்வகையில் இவ்வருடமும் விழாவிற்குச் சென்றது மனதிற்கு நிறைவாக இருந்தது. மாசிமகப் பெருந்திருவிழாவான தீர்த்தவாரிக்கு பலமுறை வந்தபோதிலும் இந்த முறை ஒரே இடத்தில் இருந்ததால் அதிக எண்ணிக்கையிலான கோயில்களின் உற்சவமூர்த்திகளைப் பார்க்கவும், புகைப்படம் எடுக்கவும் முடிந்தது.
நன்றி : புகைப்படம் எடுக்க உதவிய என் மனைவி பாக்கியவதி
குறிப்பு: போதிய நேரமின்மையால் நேற்று புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்திருந்தேன். இன்றுதான் அனுபவத்தை எழுதமுடிந்தது. இதில் உள்ள புகைப்படங்கள் அனைத்தும் என்னுடைய அலைபேசியில் எடுக்கப்பட்டவை.
மிக அருமையான காட்சிகள் ஐயா ...
ReplyDeleteஇந்த வருடம் அனைத்து இடங்களிலும் மாசிமக தீர்த்தவாரி மிக சிறப்பாக நடைப்பெற்றது ...
சுவையான காட்சிகள். தெளிவான புகைபபடங்கள். அலைபேசியில் அல்லாமல், கேமிராவில் எடுக்கபப்ட்டவை இல்லையா?
ReplyDeleteஅனைத்து மிகத் தெளிவாக, அழகாக இருக்கிறது படங்கள். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteமாசிமகமும் மகாமக குளமும் படங்கள் அருமையாக உள்ளன. கடைசி படத்தில் மொபைல் கையில் உள்ளதால் படங்கள் காமெரா வழி எடுக்கப்பட்டவை என்பது புரிந்தது.
ReplyDeleteJayakumar
படங்கள் அலைபேசியில் எடுத்திருந்தாலும் மிகத் தெளிவாக இருக்கின்றன ஐயா. குளமும் காட்சிகளும் அருமை. விவரங்களும் அறிந்து கொண்டேன்
ReplyDeleteதுளசிதரன்
படங்களும் மாசிமகம் பற்றிய விவரணமும் சிறப்பு. படங்கள் ரொம்பத் தெளிவாக வந்திருக்கின்றன. யானை மற்றும் இறைவன் எழுந்தருளும் படமும், தரையில் உள்ள கடைகளும் ஈர்த்தன.
ReplyDeleteகீதா
கட்டுரை, புகைப்படங்கள் சிறப்பு
ReplyDeleteதீர்த்தவாரி நிகழ்வை கண்முன் நிறுத்தியது.
1980 ல் என் தந்தையின் கையை பிடித்து கொண்டு மகாமகம் குளம், காவேரி நினைவுக்கு வந்தது.
படங்கள் கொள்ளை அழகு. பன்முறை பார்த்து மகிழ்ந்தோம். காட்சி வருணனை நேரே பார்ப்பது போன்ற உணர்வைத் தந்தது.
ReplyDeleteநீண்ட நாட்களாக நான் வலைபதிவுக்குள் வரவில்லை. இன்றுதான் வந்தேன். வந்ததும், காற்றசைந்து கனியொன்று கையில் தானே வந்து விழுந்ததுபோல் கும்பகோணத்து தெய்வங்கள் அனைத்தையும் உங்கள் பதிவு என்னிடம் கொண்டுவந்து சேர்த்தது என் பாக்கியமே!
ReplyDelete