1975. பள்ளி நண்பர்களான ராஜசேகரன் (16 கட்டு, திருமஞ்சன வீதி), செல்வம் (பழைய அரண்மனைத்தெரு), பொன்னையா (பேட்டை, திருமஞ்சன வீதி), மதியழகன் (திருமஞ்சன வீதி) ஆகியோர் புகுமுக வகுப்பில் (Pre University Course) முறையே கணக்கு, அறிவியல், கணக்கு, வரலாறு என்ற பாடப்பிரிவுகளில் சேர்ந்து கல்லூரிக்குப் (அரசினர் ஆடவர் கல்லூரி, கும்பகோணம்) போய்க் கொண்டிருந்தனர். கல்லூரி திறந்து ஒரு மாதம் ஆனது. நான் தொடர்ந்து மிளகாய் மண்டியில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தேன்.
கடைசி வாய்ப்பு
ஒரு நாள் நண்பர்கள் என்னிடம் அந்த ஆண்டில் சிறப்பாகச் சேர்க்கை நடைபெறவுள்ளதாகவும், அந்த நாளில் கல்லூரிக்கு உரிய சான்றிதழுடன் சென்றால் சேர்ந்துவிடலாம் என்றும் கூறினர். வருகைப்பதிவினைப் பற்றிக் கேட்டபோது அந்த சிக்கல் எதுவும் வராது என்று கூறினர். கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைத்ததை அறிந்து மகிழ்ந்தேன். எந்தப் பிரிவும் கிடைக்காவிட்டால் மாலைநேரக் கல்லூரியாவது சேர்ந்துவிடவேண்டும் என்று முடிவெடுத்தேன்.
வீட்டில் விவரத்தைக் கூறினேன். அப்போதும் அப்பா, அம்மா, தாத்தா, ஆத்தா உள்ளிட்ட அனைவரும் தயக்கமாகவே இருந்தனர். எனக்குக் கிடைத்த கடைசி வாய்ப்பினை நழுவவிட விரும்பவில்லை. கல்லூரியில் என்னை சேர்க்காவிட்டால் காவிரியாற்றில் போய்க் குதித்துவிடுவேன் என்று கூறி அழ ஆரம்பித்தேன். என் அத்தையின் விருப்பம் நான் கல்லூரியில் சேர வேண்டும் என்பதே. என் விடாமுயற்சியும், என் அத்தையின் விருப்பமும் நான் கல்லூரியில் சேருவதற்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன.
உண்மை நகல்கள்
நான் கல்லூரியில் சேர்வதற்காக தாத்தா, அப்பாவுடன் என்னை அனுப்பிவைத்தார். அப்போது எஸ்.எஸ்.எல்.சி. புத்தகம், எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், நடத்தைச் சான்றிதழ் (conduct certificate) ஆகியனவற்றையும் அதன் (தட்டச்சு செய்யப்பட்ட சான்றிதழின் கீழே உண்மை நகல் என்று தமிழிலோ True copy என்று ஆங்கிலத்திலோ குறிக்கப்பட்ட) உண்மை நகல்களையும் எடுத்துக்கொண்டு அனைத்து சாமிகளையும் கும்பிட்டுவிட்டுக் கிளம்பினோம்.
எஸ்.எஸ்.எல்.சி. புத்தகத்தை SSLC Book என்பார்கள். முழுக்காலிகோ அட்டையுடன் 12 பக்கங்கள் கொண்ட 20 செமீ x 14 செமீ அளவுள்ள சிறிய புத்தகம். School Record என்ற அப்புத்தகத்தின் முதல் பக்கத்தில் மாணவரைப் பற்றிய குறிப்புகள் என்ற வகையில் (Name, Nationality, Community, Sex, Date of Birth Father's name, Personal marks of identification, Nature of course) என்னைப் பற்றிய விவரங்கள் இருந்தன. ஒவ்வொரு பக்கத்திலும் நாளுடன் (6.5.75) தலைமையாசிரியரின் கையொப்பம் இறுதியில் இருந்தது. அடுத்தடுத்த பக்கங்களில் அப்பள்ளியில் 9 முதல் 11ஆம் வகுப்பு வ்ரை படித்த பாடங்கள், படித்த ஆண்டு, படித்த வகுப்பிற்கான (1972-73 IX B), (1973-74 X A), (1974-753 IX A), விவரங்கள், வருகை விவரம் (Number of school days/attended/percentage: I term, II term) இருந்தன. அந்தந்த பக்கங்களின் கீழே என் கையொப்பமும், தலைமையாசிரியரின் கையொப்பமும் தேதியுடன் இருந்தன.
நடை பயணம்
வீட்டில் மிதிவண்டி இல்லை. எங்காவது செல்ல வேண்டுமென்றால் மாட்டு வண்டியில்தான் செல்வோம். கும்பேஸ்வரர் கோயிலில் மொட்டை கோபுரம் அருகில் ஒற்றை மாட்டு வண்டிகள் வரிசையாக நிற்கும். இருக்கும். நாங்கள் சென்ற நேரத்தில் மாட்டுவண்டி எதுவுமில்லை. வீட்டிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலுள்ள கல்லூரிக்கு நடந்தே சென்றோம். புகுமுக வகுப்பில் எந்த பிரிவுப்பாடம் (Subject) கிடைத்தாலும் ஏற்கவேண்டும், அவ்வாறு கிடைக்காவிட்டால் மாலைநேரக் கல்லூரியிலாவது (Evening College) சேர்ந்துவிடவேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உருவானது.
அந்த நாள்
சேர்க்கை நடந்துகொண்டேயிருந்தது. மாலை ஆனது. சற்றே இருட்ட ஆரம்பித்தது. மாணவர்களும் ஆசிரியர்களும் வகுப்புகள் முடிந்து வெளியே சென்றுகொண்டிருந்தனர். காலையில் கல்லூரிக்கு வந்த நாங்கள் சாப்பிட மட்டும் வெளியே சென்று வந்தோம். அங்கிருந்த குடிநீர்க் குழாயில் தண்ணீரைக் குடித்துக்கொண்டோம். இரவு சாப்பாடு சாப்பிட சென்று வரும்போது இருட்டில் கல்லூரிப் பாலத்தைக் கடந்து செல்ல எனக்குப் பயமாக இருந்தது. பாலத்தின்கீழ் காவிரியாற்றின் நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது.
கல்லூரியில் சேரல்
கிட்டத்தட்ட இரவு 11.30ஐத் தாண்டியதாக நினைவு. நேரம் சரியாக நினைவில்லை. ஆனால் வெளியே எங்கு பார்த்தாலும் ஒரே இருட்டு. அலுவலகத்திற்குள் அழைத்தனர். அனைத்துச் சான்றிதழ்களையும் பார்த்தனர். 'லாஜிக்' (Logic, தமிழில் அளவையியல்) ஒன்றுதான் உள்ளது. மூன்றாம் தாளுக்குரிய பாடங்களாக வரலாறு, புவியியல், அளவையியல் என்ற பாடங்கள். பகுதி 1 (தமிழ்), பகுதி 2 (ஆங்கிலம்), பகுதி 3 (வரலாறு, புவியியல், அளவையியல்) அதில் சேர விருப்பம் இருந்தால் சேரலாம் என்றனர். அதுவரை அந்தப் பாடப்பிரிவைப் பற்றிக் கேள்விப்பட்டதேயில்லை. இருந்தபோதிலும் சேர்ந்தாகவேண்டும் என்ற ஆசையில் சரி என்றேன். வெளியில் வந்தேன். என் வாழ்வில் மகிழ்ச்சியில் திளைத்த நாள்களில் முக்கியமான நாள்.
புகுமுக வகுப்பறை (PUC/G Batch)அமைந்திருந்த வளாகம் (அப்போது கீழ் தளம் மட்டுமே இருந்ததாக நினைவு) |
வீடு திரும்பியபின் சூழல்
வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். ஆத்தா என்னைக் கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்துவிட்டார்கள். ஆத்தாவை நான் அப்படியே தூக்கிவிட்டேன். தாத்தா பதற்றத்தில் இருந்தார். அம்மா சோகமாக எங்கள் இருவரையும் பார்த்துக்கொண்டே இருந்தார். கல்லூரியில் இடம் கிடைக்காமல் பேரனும், மகனும் (நானும் அப்பாவும்) காவிரியாற்றில் விழுந்து இறந்துவிட்டதாகக் கருதி அழுது கொண்டேயிருந்தார்களாம். அருகில் உள்ளோர் எவ்வளவோ சொல்லியும் அவர் தன்னுடைய அழுகையை நிறுத்தவில்லையாம். கல்லூரியில் சேர்ந்துவிட்டேன் என்ற என் வார்த்தைகள் அந்த இடத்தின் சூழலை மாற்றியது.
பெற்றோர் மற்றும் தாத்தா ஆத்தாவின் கண்டிப்பும் பாசமும் என்னைக் கல்லூரிக்கு நெருங்குவதைத் தடுத்தது. இருந்தாலும் என் விடாமுயற்சி நான் கல்லூரியில் சேர உதவியது. படித்து முடித்து வெளியில் வரும்போது ஒரு நல்ல மாணவனாக, குடும்பத்தாரின் பெயரைக் காப்பாற்றும் வகையில் படித்து முன்னுக்கு வர முடிவெடுத்து, முயற்சியில் வென்றேன்.
அபூர்வ ராகங்கள்
கல்லூரி நாள்களில் நண்பர்கள் பல திரைப்படங்கள் பார்த்தபோதிலும் நான் நண்பர்களுடன் சேர்ந்து பார்த்த மறக்கமுடியாத திரைப்படம் பாலசந்தரின் அபூர்வ ராகங்கள். நூர்மஹால் தியேட்டரில் பார்த்தோம். (பின்னர் செல்வம் என்றாகி தற்போது வேறு பெயரில் உள்ளது). அரங்கேற்றம் (1973). அவள் ஒரு தொடர்கதை (1974) திரைப்படங்களைத் தொடர்ந்து நான் ரசித்த திரைப்படம் அபூர்வ ராகங்கள். அப்படத்தின் அனைத்துப் பாடல்களும் எனக்குப் பிடித்தபோதிலும் நான் அதிகம் ரசித்துக் கேட்பது ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்.... இன்றும்கூட. இப்படங்களே என்னை ஆரம்பகால பாலசந்தரின் ரசிகனாக்கியது.
என் தேர்ச்சி நண்பர்களின் மகிழ்ச்சி
பாடங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவ்வப்போது படித்தேன். எப்படியும் வெற்றிபெற வேண்டும் என்ற இலக்கு என்னுள் இருந்துகொண்டேயிருந்தது. முன்பின் அறிமுகமில்லாத அளவையியலில் 63 விழுக்காடு பெற்று தேர்ச்சி பெற்றேன். என் நண்பர்கள் அனைவரும் வெற்றி பெறும் வாய்ப்பினை இழந்தனர். நான் மட்டுமே தேர்ச்சி பெற்றேன். அவர்கள் ஒவ்வொருவரும் தானே வெற்றி பெற்றதாக எண்ணி என்னை வாழ்த்தினர்.
அவர்களுடைய இலக்கும், பயணமும் திசை மாறியது. பின்னாளில் ராஜசேகரன் சிற்பக்கலைஞர் ஆனார். மதியழகன் தன் அப்பாவின் கடலைக்கடையைக் கவனித்துக்கொண்டார். செல்வம் சென்னையில் உறவினரின் விறகு கடையில் வேலை பார்த்து, பின்னர் அவருடைய அப்பா பணியாற்றிய சோழன் போக்குவரத்துக் கழகத்தில் பணியில் சேர்ந்தார். பொன்னையா இரும்புக்கடை வைத்தார். நான் தொடர்ந்து இளங்கலையில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.
நான் படித்த கும்பகோணம் கல்லூரி தொடர்பான பிற பதிவுகள்:
மனதில் நிற்கும் கும்பகோணம் கல்லூரி
காக்கப்பட வேண்டிய கலைப்பெட்டகம் : கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி (1)
காக்கப்பட வேண்டிய கலைப்பெட்டகம் : கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி (2)
நான் எழுதிய நூலை நான் படித்த கல்லூரி நூலகத்திற்கு வழங்கிய இனிமையான தருணங்கள்.
13 மார்ச் 2023இல் கல்லூரி முதல்வர் நா. தனராஜன் அவர்களிடம் சோழ நாட்டில் பௌத்தம் நூலினை வழங்கல் |
5 ஜனவரி 2025இல், கல்லூரி முதல்வர் அ.மாதவி அவர்களிடம் சோழ நாட்டில் பௌத்தம் ஆங்கிலப்பதிப்பினை வழங்கல், உடன் நண்பர் ராஜசேகரன்
|
விடாமுயற்சி வெற்றி. இனிமையான நினைவுகள்.
ReplyDeleteஆமாம் ஐயா.. தங்களின் அனுபவமே மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அமையும்..
ReplyDeleteஐயா நான் 1968-1970 ஆண்டுகளில் கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் முதுகலை கணிதம் படித்தேன். தாங்கள் பதிப்பித்துள்ள புகைப்படங்கள் கல்லூரி முற்றிலும் மாறியிருப்பதைக் காண்பிக்கிறது.
ReplyDeleteJayakumar
விடா முயற்சியுடன் கல்லூரியில் சேர்ந்து படித்த நினைவுகள் குறித்த உங்கள் பதிவு மிகவும் சிறப்பு.
ReplyDeleteமனம் நெகிழும்படிக்கு எழுதியிருக்கின்றீர்கள் ஐயா..
ReplyDeleteதங்களது இளவயது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
ReplyDeleteபதிவு வெகு சுவாரஸ்யமாக இருந்தது.
அருமை ஐயா...
ReplyDeleteஇம்புட்டு “சின்ன” பையனா நீங்க!! நான் முதுகலை முடித்து வேலைக்கு வந்து 9 ஆண்டுகள் அப்போது ஆகியிருந்தன .. உங்களின் ஊக்கத்திற்கு என் பாராட்டுகள். அதில் கொஞ்சமாவது எனக்கும் இருந்திருந்தால் ....
ReplyDeleteஅருமை
ReplyDeleteவிடா முயற்சி. அத்தையின் ஆதரவு. அதன் பின் பெரியவர்களின் ஆதரவு கிடைக்கப் பெற இறைவன் அருளால் உங்கள் கனவை நினைவாக்கி வெற்றி பெற முடிந்தது மகிழ்வான விஷயம் ஐயா. ஊக்கம் கைவிடேல்!! உங்களுக்கு ரொம்பப் பொருந்திப் போகிறது.
ReplyDeleteஎன் அனுபவங்கள் சில நினைவுக்கு வருகிறது
துளசிதரன்
மனம் நெகிழ்ச்சி. இறுதியில் கடைசி வாய்ப்பு கிடைத்து நீங்கள் கல்லூரியில் சேர்ந்து உங்கள் கனவும் மெய்ப்பட்டு இன்று ஆராய்ச்சிப் பட்டத்துடன் உங்கள் ஆராய்ச்சிகள் தொடர்ந்து வருவதற்கு வித்திட்ட அத்தை போற்றத் தக்கவர். இறைவனின் ஆசியும் கூடவே. இப்போது நினைத்தாலும் உங்களுக்குச் சந்தோஷம் தரும் நினைவுகள். அருமை.
ReplyDeleteகீதா
மிக்க மகிழ்ச்சி அய்யா.. உங்கள் பதிவுகள் பார்த்ததும் எனக்கு கல்லூரி ஞாபகம் வந்தது..
ReplyDeleteநானும் அக்கல்லூரியில் படித்தேன் என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது..
வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகள்..