11 July 2022

அம்மாப்பேட்டை பஞ்சபூதத் தலங்கள்

1990களின் இடையில், திருவாவடுதுறை ஆதீனம் நடத்துகின்ற சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்பில் ஆரம்பகாலத்தில் ஆசிரியராக அறிமுகமான. சித்தாந்தச் செம்மணி திரு ச.சௌரிராஜன் ஐயா அவர்களை தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் அம்மாப்பேட்டையில் அவருடைய இல்லத்தில் சந்திக்கச் சென்றேன். இதற்கு முன்பாக அங்கு சென்றிருந்தபோதிலும், பல ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் சந்திக்கும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. புதுக்கோட்டையில் வலைப்பதிவர் மாநாட்டில் அறிமுகமான, கோயம்புத்தூர் கற்பகம் பல்கலைக்கழகப் இணைப்பேராசிரியர் பா.சக்திவேல் அவர்களை அங்கு சந்தித்தேன்.

இருவருமே என் பௌத்த ஆய்விற்கும், பிற எழுத்துப்பணிக்கும் ஊக்கம் கொடுத்துவருபவர் ஆவர். ஆய்வு, கோயில் உலா, விக்கிப்பீடியா, மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பல பொருண்மைகளில் உரையாடினோம். பின்னர் அங்குள்ள உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு நாங்கள் மூவரும் சென்றோம். பல ஆண்டுகளுக்கு முன்னர், குடமுழுக்கு (2005) ஆவதற்கு முன்பாக, அக்கோயிலுக்கு சௌரிராஜன் ஐயாவுடன் நான் சென்றுள்ளேன்.

அருணாச்சலேஸ்வரரையும், தர்மசம்வர்த்தனியையும் தரிசனம் செய்தோம். இறைவியின் பின்புறத்தில் சுவற்றில் உள்ள ஸ்ரீசக்கரம், கஜபிருஷ்ட அமைப்பிலிருந்த விமானம், அப்பகுதியில் அரிதாகக் காணப்படுகின்ற தனுசு சுப்பிரமணியர்,  நடுவில் உள்ள சூரியனைப் பார்க்கும் வகையில் அமைந்துள்ள நவக்கிரக சன்னதி, விக்கிரமாகாளியின் செப்புத்திருமேனி,  பங்குனி மாதம் 14 முதல் 16ஆம் தேதி வரை சூரிய ஒளியானது மூலவர்மீதும விழுவது உள்ளிட்ட பல சிறப்புகளைக் கண்டேன். 2005 குடமுழுக்கிற்குப் பின்னர் தற்போது கோயில் அடுத்த குடமுழுக்கிற்குத் தயாராவதாகக் கூறினர்.

கோயிலில், அம்மாப்பேட்டை பஞ்சபூதத்தலங்களில் இத்தலம் அக்னித்தலமென்றும், அம்மாப்பேட்டையைச் சுற்றி  பிற தலங்கள் உள்ளன என்றும், விக்கிரம சோழன் இப்பகுதியில் பஞ்சபூதத்தலங்களை நிர்மாணித்து வழிபட்டதாக அப்பகுதியில் கூறப்படுவதையும் அறிந்தேன்.  செவிவழிச் செய்தியாக கிடைக்கின்ற சில செய்திகள் நமக்கு ஆர்வத்தைத் தூண்டிவிடுவது இயற்கையே. மூவரும் பிற கோயில்களுக்குச் செல்வது குறித்து விவாதித்தோம். 

அம்மாப்பேட்டை பஞ்சபூதத்தலங்களாக அம்மாப்பேட்டை அருணாச்சலேஸ்வரர் கோயில் (அக்னி), அம்மாப்பேட்டை பூலோகநாதர் கோயில் (மண்), சாலியமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோயில் (வாயு), சாலியமங்கலம் சிதம்பரேஸ்வரர் கோயில் (ஆகாயம்), செண்பகபுரம் கோயில் (நீர்) ஆகியவை கூறப்படுகின்றன. 

அம்மாப்பேட்டை அருணாச்சலேஸ்வரர்தர்மசம்வர்த்தனி கோயில் நுழைவாயில் (பஞ்சபூதத்தலம் : அக்னி)

கஜபிருஷ்ட வடிவில் விமானம்

குடமுழுக்கிற்குத் தயாராகும் அம்மாப்பேட்டை பூலோகநாதர்–பூலோகநாயகி கோயில் (பஞ்சபூதத்தலம் : மண்)


சாலியமங்கலம் காளஹஸ்தீஸ்வரர்–ஞானாம்பிகை கோயில்  (பஞ்சபூதத்தலம் : வாயு)
 

சாலியமங்கலம் சிதம்பரேஸ்வரர்–சிவகாமசுந்தரி கோயில்  (பஞ்சபூதத்தலம் : ஆகாயம்)

முதல் நான்கு கோயில்களையும் பார்த்துவிட்டு ஐந்தாவது தலமான செண்பகபுரம் எனப்படுகின்ற ஜம்பகபுரத்தில் சிவன் கோயிலைத் தேடிச் சென்றபோது அவ்வாறாக எந்தக் கோயிலும் இல்லை என்று அப்பகுதியில் கூறினர்.  பூண்டிக்கு தெற்கில்புன்னைநல்லூருக்கு 5 கிமீ கிழக்கில் உள்ள செண்பகபுரத்தில் இடிபாட்டுடன் கூடிய கோயிலின் கட்டுமானப்பகுதியைப் பார்த்தோம்.  அங்கு இந்தக் கட்டுமானத்தைத் தவிர வழிபாட்டில் உள்ள சிவன் கோயில் எதுவுமில்லை என்று கூறினர். 

செண்பகபுரம் ஜம்புகேஸ்வரர்  கோயில் (?)  (பஞ்சபூதத்தலம் : நீர்)


இடிபாடான நிலையில் மரங்களுக்கிடையே ஒரு கோபுரத்தையும், சுற்றுச்சுவரையும் மட்டுமே அங்கு காணமுடிந்தது. மரங்கள் அடர்ந்த பகுதியாக இருந்ததால் உள்ளே செல்லமுடியவில்லை. அடுத்தடுத்த களப்பணியில் செண்பகபுரத்தில் உள்ளதாகக் கூறப்படுகின்ற ஜெண்பகேஸ்வரர் கோயிலைத் தேட உள்ளோம். அதற்கு இறையருள் துணைநிற்கும் என்று நம்புகிறோம். 


அம்மாப்பேட்டை கோயிலில் (இடமிருந்து வலமாக) ச.சௌரிராஜன், ஜம்புலிங்கம், சக்திவேல்

நன்றி: திரு கி.சிவஞானசம்பந்தம், சிவாச்சாரியார்
மற்றும் ஊர் மக்கள்

*****************************************

அம்மாப்பேட்டை அருணாசலேஸ்வரர் கோயில் தொடர்பாக முனைவர் சக்திவேல் எழுதியுள்ள கட்டுரை 12.10.2023 நாளிட்ட குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் வெளியாகியுள்ளது. (இதழ் வெளியான நாள் 29.9.2023)







29 செப்டம்பர் 2023இல் மேம்படுத்தப்பட்டது.

6 comments:

  1. வணக்கம்.

    நேர்த்தியான, சுருக்கமானத் தொகுப்பு ஐயா.
    தங்களின் வருகையும் உடன் பயணித்த தருணமும் மனமகிழ்ச்சி அளித்தது.
    நன்றி.
    மென்மேலும் தங்கள் பணி தொடர இறையருள் தடையின்றி கிடைக்கட்டும்.

    ReplyDelete
  2. தங்களது கோயில் பயணத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. புதர்களுக்கிடையே கோவில் எதுவும் இருப்பது போலவே தெரியவில்லை.

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அருமையான கோவில்கள். படங்கள் அனைத்தும் அழகாக உள்ளது. அம்மாபேட்டை பஞ்ச பூத கோவில்கள் பற்றிய விபரங்களை உங்களால் தெரிந்து கொண்டேன். ஐந்தாவதாக நீர் தலமதில் உள்ள கோவிலை பூரணமாக தேடும் பணியில் தங்களுக்கு இறையருள் பரிபூரணமாக துணையாக இருக்க நானும் அந்த இறைவனை வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  5. கோவில்கள் உலா அருமை ஐயா...

    ReplyDelete
  6. தங்களின் கோயில் உலா படங்களும், பகிர்வும் அருமை ஐயா. தங்களின் பயணம் தொடரட்டும்

    ReplyDelete