14 July 2022

கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வுச்சங்கம் மரபு நடை : 3 ஜூலை 2022

கும்பகோணத்தை மையமாகக் கொண்டு கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வுச்சங்கம் என்ற அமைப்பானது அண்மையில் கும்பகோணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அச்சங்க நிர்வாகிகள் அறிமுக விழாவும் ஆலயம் அறிவோம் வரிசையில் முதல் மரபு நடையும் 3.7.2022 ஞாயிற்றுக்கிழமை காலை கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. 


சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தஞ்சாவூர் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் கோ. தெய்வநாயகம் குத்துவிளக்கேற்றி நிகழ்வினைத் தொடங்கி வைத்தார். பக்தி இயக்க காலம் தொடங்கி சோழர் காலம் வரையிலும் பின்னர் தொடர்ந்து தற்போது வரையிலும் கும்பகோணம் தமிழக வரலாற்றில் ஓர் முக்கிய அங்கமாகத் திகழ்ந்து வருவதையும், அவ்வாறே திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற இக்கோயிலும் பல்வேறு கால கட்டங்களில் பல மாற்றங்களைக் கடந்து வந்ததையும்  எடுத்துக் கூறினார்.  

சங்கத்தின் தலைவர் திரு பால.சிவகோவிந்தன் தலைமை தாங்கினார்.  நிறுவனரும் செயலாளருமான கும்பகோணம் ஆ.கோபிநாத் கும்பகோணத்திலும், அருகிலும் உள்ள கோயில்களைப் பற்றிய முக்கியத்துவத்தினை உள்ளூர் வாசிகளான அந்தந்த பகுதி மக்களிடம் கொண்டு சேர்த்தல், கோயில்களைப் பாதுகாக்கவேண்டிய முக்கியத்துவத்தினை வலியுறுத்துதல், ஒவ்வொரு கோயிலுக்கும் உள்ள தனித் தன்மைகளையும் சிறப்புத் தன்மைகளையும் வெளியுலகிற்குக் கொணர்தல், கோயிலிலுள்ள கல்வெட்டுச் செய்திகளை அனைவரும் அறிந்துகொள்ளும் வண்ணம் எடுத்துக்கூறல், கோயிலை நன்கு பராமரித்தல்  உள்ளிட்ட சங்க நோக்கங்களை  எடுத்துக்கூறினார். 

சங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான ஆலயம் அறிவோம் என்ற வரிசையில் நாகேஸ்வரன் கோயிலில் நடைபெற்ற முதல் மரபு நடையின்போது கோயில் விமானத்தின் சிறப்பான அமைப்பு, திருச்சுற்றிலும், கோட்டங்களிலும், பிற இடங்களிலும் உள்ள சிற்பங்கள், சிற்றுருவ ராமாயணச் சிற்பங்கள் ஆகியவற்றின் நுணுக்கங்களை தெய்வநாயகம் எடுத்துரைத்தார். சிற்பங்களை நுட்பமாக ஆழ்ந்து பார்க்கும்போது பல புதிய பரிமாணங்களைப் பெறலாம் என்றும் ஆழ்ந்து நோக்கலும், உற்றுநோக்கலும் தெளிவான புரிதலுக்கு வழிவகுக்கும் என்றும் கூறினார். 

கோயிலில் உள்ள கல்வெட்டுகளைப் படித்துக்காட்டி அனைவரையும் சோழர் காலத்திற்கு அழைத்துச் சென்றார், கும்பகோணம் கோபிநாத்.

நிகழ்வின் நிறைவில் பொருளாளர் முனைவர் சீ.தங்கராசு சங்கம் தொடர்ந்து மரபு நடையினை நடத்தும் என்று கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். விழாவில் உள்ளூர் பிரமுகர்கள், வரலாற்று ஆர்வலர்கள், தொல்லியல் மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். 

சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அணிவித்தல்  (இடமிருந்து) சீ.தங்கராசு, கோ.தெய்வநாயகம், பால. சிவகோவிந்தன், கும்பகோணம் கோபிநாத்.



நிகழ்வின்போது, பார்வையாளராகச் சென்றிருந்த என்னை சங்கத்தார் மேடைக்கு அழைத்து அறிமுகப்படுத்தி, நெகிழவைத்தனர். கும்பகோணத்தில் பிறந்து, வளர்ந்து வாழ்ந்து அனைத்துக் கோயில்களுக்கும் சென்ற அனுபவத்தையும், தமிழ் விக்கிப்பீடியாவிலும், ஆங்கில விக்கிப்பீடியாவிலும் கும்பகோணத்திலுள்ள பெரும்பாலான கோயில்களைப் பற்றி எழுதிய அனுபவத்தையும் குறிப்பிட்டுப் பேசி, வாய்ப்பு தந்தமைக்காக நன்றி கூறினேன்.



தொடர்ந்து சங்கம் மென்மேலும் வளர்ந்து வரலாற்றுக்கு முக்கியமான பங்கினை அளிக்கவும், மரபு நடை சிறக்கவும்  என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒளிப்படங்கள் நன்றி : கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வுச்சங்கம்

11 டிசம்பர் 2022இல் மேம்படுத்தப்பட்டது.

5 comments:

  1. சிறப்பான நிகழ்வு.  கவனிக்கப்படாமல் இருக்கும் அந்தந்த கோவிகள் பற்றி அந்தந்த ஊர் மக்களிடம் எடுத்துச் சொல்லுதல் நல்ல முயற்சி.  சிற்ப விளக்கங்கள், கல்வெட்டுச் செய்திகள் யாவும் சுவாரஸ்யம் தருபவை.  உங்களை அழைத்து கௌரவித்தார்கள் என்பது மகிழ்ச்சி தரும் செய்தி.

    ReplyDelete
  2. சங்கம் மென்மேலும் வளர்ந்து வரலாற்றுக்கு முக்கியமான பங்கினை அளிக்கவும், மரபு நடை சிறக்கவும் , நானும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  3. அருமை ஐயா... வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் முனைவர் ஐயா.
    கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கம் வாழ்க ! வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. கும்பகோணம் வட்டார ஆய்வு மைய சங்கத்தின் கொள்கைகள் சிறப்பாக உள்ளன. அதில் பங்கேற்ற அனைவரது எண்ணங்களும் சிறப்புற அமைய மனமார்ந்த வாழ்த்துகள். கோவில் பதிவுகளை மிகச்சிறப்பாக எழுதி அனைத்து மக்களும் உணரும் வண்ணம் தொண்டாற்றும் தங்களையும் இந்த விழாவில் சிறப்பித்து கௌரவித்திருப்பது மிக்க மகிழ்ச்சி தரும் செய்தி. தங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete