டிசம்பர் 1978 தேர்வுக்காக எடுக்கப்பட்ட ஒளிப்படம்
|
பயிற்சியின்போது ஒரு சொல்லுக்கான குறியீட்டை (stroke) குறைந்தது ஐந்து வரிகள் எழுத வேண்டும். ஒரு சொல் பயிற்சிக்குப் பின் பல சொற்கள், சொற்றொடர் என்ற வகையில் பழகவேண்டும். கல்லூரி நேரம் தவிர பிற நேரம் சுருக்கெழுத்துப்பயிற்சிக்கான நேரமாக அமைந்தது.
கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் கூடத்திலும், வாசல் திண்ணையிலும் உள்ள தூண்களில் சாய்ந்துகொண்டு எழுதுவது வழக்கம். அந்த இரு இடங்கள்தான் சுருக்கெழுத்து எழுதப் பயிற்சி எடுத்த பிரத்யேகமான இடங்கள். கணக்குப்பிள்ளையாக இருந்த எங்கள் தாத்தா பயன்படுத்திய சிறிய மேஜையை (writing desk) பயன்படுத்தினேன். சுருக்கெழுத்துச் பென்சிலை (Shorthand pencil) சரியாக கூர்மையாகச் சீவி எழுத வேண்டும். அவ்வாறாக ஒவ்வொரு பக்கத்திலும் எழுதியதைப் பார்க்கும்போது அழகான கோலம் போட்டதைப் போலவோ, கோயிலில் காணப்படுகின்ற சிற்ப வரிசையினைப் போலவோ இருக்கும். தட்டச்சுப் பயிற்சியைப் போலவே சுருக்கெழுத்துப் பயிற்சியும் ஒரு கலையியல் ரசனையோடு மேற்கொள்ளப்பட வேண்டியதாகும்.
குறிப்பிட்ட மாதிரியான சொற்களுக்காக அதையொத்த சுருக்கக் குறியீடுகளை எழுதும்போது பல சொற்களைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பயிற்சிக்கால நிறைவில் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களை ஒரே குறியீடாக எழுதும் பழக்கம் இயல்பாக வந்துவிடும்.
நோட்டின் நடுவே ஒரு கோட்டினை போட்டு இரண்டாகப் பிரித்துக்கொள்வேன். எந்த அளவிற்கு சுருக்கெழுத்துக் குறியீட்டை (Stroke for word/sentence) சிறிதாக எழுத முடியுமோ அந்த அளவிற்குச் சிறிதாக எழுதுவேன். புள்ளி வைக்கவேண்டிய இடங்களில் இடைவெளி விட்டுவிடுவேன். இவ்வாறான உத்திகள் குறிப்பிட்ட நிமிடத்தில் அதிகமான சொற்களை/சொற்றொடர்களை எழுத முடியும். சுருக்கெழுத்துப் பயிற்சியைப் பின்பக்கத்தில் எழுதுவதில்லை. பயிற்சியின்போது பின் பக்கத்தில் எழுதாமல் அடுத்த பக்கத்தில் எழுதுவது வழக்கம். பக்கங்கள் முடிவுற்ற பின் நோட்டை முழுதாகத் திருப்பி எழுதுவார்கள். ஒரு பக்கத்தை முடித்து அடுத்த பக்கத்தில் எழுதுவதற்காக தாளைப் புரட்டும்போது எவ்விதச் சலனமோ, பதட்டமோ இருக்கக்கூடாது.
எழுதும் குறியீட்டில் ஐயமிருப்பின் சுருக்கெழுத்து அகராதியைப் பார்த்துக்கொள்வேன். அதிலுள்ள சொற்களுக்குரிய குறியீடுகளைப் பயன்படுத்தும்போது புதிய சொற்களை அறிந்துகொள்ளவும், வேகத்தை அதிகப்படுத்தி எழுதவும் முடியும்.
என்னுடன் பல நண்பர்கள் சுருக்கெழுத்துப் பயிற்சி மேற்கொண்டபோதும் மிகச்சிலரே தொடர்ந்து எழுதினோம். டிசம்பர் 1978இல் சுருக்கெழுத்து கீழ் நிலைத் தேர்வினை (ஒரு நிமிடத்திற்கு 80 சொற்கள்) தட்டச்சுப்பயிற்சி நிறுவனம் மூலமாகவும், அடுத்தடுத்த தேர்வுகளை நேரடியாகவும் எழுதி வெற்றி பெற்றேன்.
பொறுமை, நிதானம், ஈடுபாடு உள்ளிட்ட குணங்கள் இருந்தால்தான் இப்பயிற்சியைத் தொடர முடியும். மிக எளிது என நினைத்து எழுதினால் வெற்றி பெறலாம். எழுதுவது சிரமம் என நினைப்பவர் தொடர்வது அரிதே. கல்லூரியில் ஆசிரியர்கள் பாடம் நடத்தியபோதும், பின்னர் பணியில் சேர்ந்தபோதும், மாணவர்களுக்கு கற்றுத்தரவும் சுருக்கெழுத்து பெரிதும் உதவியது. அது தொடர்பான அனுபவங்களைப் பிறிதொரு பதிவில் காண்போம்.
14 செப்டம்பர் 2022 மாலை பதிவு மேம்படுத்தப்பட்டது.