26 June 2024

கார்டியன் : 15 வருட வாசிப்பு

கல்லூரிக்காலத்தில் தட்டச்சினையும், சுருக்கெழுத்தினையும் கற்றபோது புதிய சொல்லுக்கான பொருளையும், பயன்பாட்டையும் தெரிந்துகொள்ளும் ஆர்வமும், மொழி நடையினை உற்றுநோக்கும் ஆர்வமும் எனக்கு இருந்தது. அதன் தொடர்ச்சியாகவே நாளிதழ் வாசிப்பை நான் கருதுகிறேன்.

1970களின் இடையில் தொடங்கிய, இந்து  (The Hindu) நாளிதழின் வாசிப்பானது அவ்வப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, டெக்கான் க்ரானிகல் உள்ளிட்டவற்றை வாசிக்கும் ஆவலைத் தூண்டியது. குறிப்பிடத்தக்க நிகழ்வுகளைப் பற்றிய செய்தியை,  அரசியலுக்கு அப்பாற்பட்ட நிலையில் செய்தியின் தலைப்பு, உட்தலைப்புகள், செய்தி அமைந்துள்ள விதம், சொற்களின் அமைப்பு, எழுத்துருவின் தடிமன், படங்கள், பெட்டிச்செய்திகள்  போன்றவற்றை ஒப்புநோக்கிப் பார்ப்பதுடன்,  மொழி நடையையும் கூர்ந்து கவனிப்பேன்.    

அடுத்து என் கவனமானது இந்து இதழில் மேற்கோளாகக் காட்டப்படுகின்ற, கட்டுரைகள் வெளிவருகின்ற வெளிநாட்டு இதழ்களின் பக்கம் திரும்பியது.  ஒரு முறை அதில் ன் (The Sun) இதழை மேற்கோளிட்டு வந்தச் செய்திகளைக் கண்டேன். ஸ்கூப் எனப்படுகின்ற தலைப்புச்செய்திக்குப் புகழ்பெற்ற அவ்விதழை அச்சில் பார்க்க விரும்பி சன் இதழுக்கு 20 மார்ச் 1997இல் (The Editor, The Sun, London, United Kingdom என்று முகவரியிட்டு) கடிதம் எழுதி, அதனைப் பெற்றேன். டேப்ளாய்ட் வடிவில்  84 பக்கங்களுடன், அதிகமான விளம்பரங்களுடன் இருந்தது. இதழை அனுப்பியதற்காக அவர்களுக்கு 17 ஏப்ரல் 1997இல் நன்றி தெரிவித்தேன். அவ்விதழ், கும்பகோணத்தில் என் இளம் வயதில் எங்கள் தாத்தா வாசித்த நாத்திகம், கல்லூரிக்காலத்தில் நான் வாசித்த பிளிட்ஸ் (Blitz) ஆகிய டேப்ளாய்ட் வடிவ இதழ்களை நினைவூட்டியது. 

என்னுடைய படியாக்கம் (தாமரை பப்ளிகேஷன்ஸ் பி லிட், சென்னை, 2004) நூலுக்காகக் கூடுதல் தரவுகளைத் திரட்ட நேச்சர் (Nature) போன்ற இதழ்களைத் தேடியபோது வெளிநாட்டு ஆங்கில இதழ்களைக் காணும் வாய்ப்பினைப் பெற்றேன். அதில் வெளியான முக்கியமான செய்திகளை மொழியாக்கம் செய்து அயலக வாசிப்பு என்று தலைப்பிட்டும், ஆண்டின் சிறந்த சொல் தொடர்பாகவும் (WOTY, Word of the Year) ஒவ்வோராண்டும் எழுத ஆரம்பித்தேன். அந்த அனுபவங்களைப் பிறிதொரு பதிவில் காண்போம். 

அயலக இதழ்களின் வாசிப்பும், மொழியாக்க ஆர்வமும் 2010களின் இடையில் இணையத்தில் கார்டியன் (The Guardian), நியூ யார்க் டைம்ஸ் (The New York Times) உள்ளிட்ட பல இதழ்களை வாசிக்க ஓர் ஆரம்பமாக அமைந்தது.

இன்றைய (26 ஜூன் 2024) தி கார்டியன் இதழின் முதல் பக்கம்

ஐக்கிய நாடுகளில் 1821இல் மான்செஸ்டர் கார்டியன் என்ற பெயரில் வெளியாகிவந்த,  1959இல் கார்டியன் என்ற பெயரைப் பெற்ற இவ்விதழ் 1821-2005இல் பிராட்ஷீட் வடிவிலும், 2005-2018இல் பெர்லினர் வடிவிலும் வெளியானது. 15 ஜனவரி 2018 முதல் டேப்ளாய்ட் வடிவத்திற்கு மறுபடியும் மாறியபோது, 2005 முதல் பயன்படுத்தப்பட்டு வந்த நீல நிறமும், வெள்ளை நிறமும் கொண்ட முகப்பு வேறு வண்ணத்தினைப் பெற்றது. இதழ் வடிவமைப்பின் மாற்றத்தின்போது கார்டியன், அப்சர்வர் இதழ்களின் முதன்மை இதழாசிரியர் “பல மாதங்கள் மேற்கொண்ட சிந்தனை, படைப்பாற்றல், இலக்குகளின் அடிப்படையின் விளைவே இந்த புதிய வடிவம். இதழின் மூத்த ஆசிரியர்களும், வடிவமைப்பாளர்களும் இணைந்து இதனை வடிவமைத்துள்ளனர். தாம் விரும்புவதைப் போலவே வாசகர்களும் புதிய முகப்பினை விரும்புவர்" என்று கூறியிருந்தார்.

கும்பகோணம் பள்ளித் தீ விபத்து (ஜூலை 2004)முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் மறைவு (ஜூலை 2015),  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு (டிசம்பர் 2016) உள்ளிட்ட பல செய்திகளை இவ்விதழில் கண்டேன்.

கார்டியன் இதழில் வெளியான கட்டுரைகளில் சிலவற்றை வித்தியாசமான தலைப்பு, சில இடங்களில் செய்தியைச் சுருக்குதல், எளிய நடை என்ற உத்திகளைப் பயன்படுத்தி மொழியாக்கம் செய்ய ஆரம்பித்தேன். அவ்வகையில் தமிழ்நாட்டின் இனிய அறுவடை விழாவான பொங்கல் திருநாள் (ஜனவரி 2010)உரிய நேரத்தில் உறங்கச் செல்லும் குழந்தைகள் செய்யும் குறும்பு குறைவே (பிப்ரவரி 2013)உறங்கச்செல்லும்முன் படிப்பதைக் குதூகலமாக்க 10 வழிகள் (செப்டம்பர் 2013)நிதான வாசிப்பு ஒரு கலை (13 ஜனவரி 2014), ஐந்து ரூபாய்க்கு உணவு வழங்கி நல்லெண்ணத்தைப் பெறும் முதல்வர்  (ஏப்ரல் 2014)அமெரிக்கா-கியூபா உறவு: இப்படியும் ஒரு ராஜதந்திரம் (5 ஜனவரி 2015),  நூற்றுக்கணக்கான கோயில்கள், ஆனால் மிகச்சில பிரிட்டிஷாரைக் காணும் நிலை (ஜூலை 2015), தமிழ்நாட்டுப் பெண்கள் ஏன் சாராயம் தடை செய்யப்படவேண்டும் என ஏன் விரும்புகின்றார்கள்? (மே 2016)பலத்த எதிர்ப்பின் காரணமாக தமிழ்நாட்டில், ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கம் (ஜனவரி 2017)என்றென்றும் நாயகன் சே குவாரா இறுதித் தருணங்கள் (9 அக்டோபர் 2017)அலைச்சறுக்கின் மணிமகுடம் மகாபலிபுரம் (பிப்ரவரி 2018)ஹைதராபாத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு இந்திய ரயில்வேயின் ஆன்மீகச்சுற்றுலா (மே 2018) இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக்குவதற்கான எதிர்ப்பு வலுக்கிறது (டிசம்பர் 2022)மோடி  தென்னிந்தியாவை வென்று இந்தியாவின் தேர்தல் வரைபடத்திற்கு மறுவடிவம் தருவாரா? (மே 2024) என்பன போன்ற பல கட்டுரைகளையும் கார்டியனில் படித்துள்ளேன். இவற்றில் சில கட்டுரைகளை இந்து தமிழ் திசை இதழிலும், என் வலைப்பூவிலும் எழுதினேன். மொழியாக்கத்தை ஒரு கலையாக நோக்கிய என் கட்டுரை தினமணி இதழில் வெளியானது.




15 ஜனவரி 2018இல் வெளியான முதல் டேப்ளாய்ட் வடிவ
கார்டியன் இதழுடன் ஆசிரியர்

கார்டியனையும், இந்துவையும் என்னுடைய கைபேசியில் செயலி வழியாகவும், இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி அச்சிதழ்களையும், அவ்வப்போது இணையத்தில் நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், டான் உள்ளிட்ட இதழ்களையும் தொடர்ந்து வாசிக்கிறேன்.   

29 ஜூன் 2024இல் மேம்படுத்தப்பட்டது.

4 comments:

  1. தகவல்கள் நன்று. அயலக வாசிப்பு தொடரட்டும். உங்கள் ஆர்வத்திற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  2. மிகச்சிறப்பு வாழ்த்துகள் ஜம்பு...

    ReplyDelete
  3. தொடரட்டும் உங்கள் தேடல்; பரவட்டும் உங்கள் படையல்,

    ReplyDelete
  4. தங்களது தேடல் மேலும் தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete