மூத்த வலைப்பதிவர்களில் ஒருவரான திரு ஜி.எம்.பாலசுப்ரமணியம் ஐயா அவர்கள் இயற்கையெய்திய செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். 85 வயது இளைஞர் என்று அவரைக் கூறலாம். எப்போதும் நற்சிந்தனை, அதனைப் பகிர்தல், சமுதாயம் மீதான அவருடைய ஈடுபாடு என்ற வகையில் அவருடைய குணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். வலைப்பூவில் அவர் எழுதுகின்ற பதிவுகள் ஆழமாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கும். சில பதிவுகள் நீண்டு இருந்தாலும் அதன்மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய செய்திகள் அதிகமாக இருப்பதைப் பார்த்துள்ளேன்.
![]() |
| திரு ஜி.எம்.பாலசுப்ரமணியம் ஒளிப்படம் நன்றி : எங்கள் ப்ளாக் வலைப்பூ |
முன்பெல்லாம் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பார். அண்மைக்காலமாக அவருடைய பதிவு அவ்வப்போது வெளிவந்ததைக் காணமுடிந்தது. கடைசியாக அவர் எழுதிய பதிவின் ஸ்கிரீன்ஷாட்டைக் கீழே தந்துள்ளேன். இலக்கியம், கவிதை, கட்டுரை, குடும்ப உறவு, ஆன்மீகம், சமுதாயம், அரசியல், வெளிநாட்டுப்பயணம் என்ற வகையில் அவர் எழுதாத துறையே இல்லை என்று கூறலாம். அண்மையில் கடவுளுடன் ஒரு நேர்காணல் என்ற அவருடைய பதிவைக் காணமுடிந்தது. அவருடைய பல மொழியாக்கங்கள் படிப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அவருடைய வலைப்பூ சுமார் 10,00,000 பக்கப் பார்வையினைக் கொண்டிருந்தது என்பதன்மூலமாக அவரைத் தொடர்பவர்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம். அவருடைய நட்பு வளையமானது மிகவும் பெரியதாகும். அதிகமாக எழுதுவார். ஆனால் தனக்குத் தெரிந்தது குறைந்ததே என்று தன்னடக்கமாக தன் எழுத்தில் வெளிப்படுத்துவார். மனதில் பட்டதைத் தெளிவாக, தைரியமாக எழுதுவார். என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் நூல் அச்சுப்பணி காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக வலைப்பூ பதிவுகளை தொடர்ந்து படிக்க இயலா நிலையில் இருந்தேன். அவ்வப்போதுதான் அவருடைய பதிவுகளையும் அண்மைக்காலத்தில் பார்த்தேன்.
என் பதிவுகளில் புத்தர், சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் பற்றிய வேறுபாட்டினையும், களப்பணி தொடர்பான அனுபவங்களைப் பாராட்டியும் பல முறை அவர் எழுதியிருந்தார்.
சக வலைப்பதிவர்களின் பதிவுகளில் அவருடைய பின்னூட்டங்களைப் பார்க்கும்போது அவருடைய வாசிப்பின் ஆர்வத்தை உணரமுடியும். எந்தப் பொருண்மையிலான பதிவென்றாலும் அதற்கேற்ற வகையில் அவர் மறுமொழி தருவது காண்போரை வியக்கவைக்கும்.
மதுரையில் நடந்த வலைப்பதிவர்களின் சந்திப்பின்போது மூரான திரு ஜி.எம்.பாலசுப்ரமணியம் ஐயா அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். அவருடைய வாழ்வின் விளிம்பில் என்னும் சிறுகதைத் தொகுப்பு நூலைத் தந்ததோடு, தன் எழுத்து தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அவரைச் சந்தித்தபோது அவரைப் பற்றி மேலும் அறிந்துகொண்டேன்.
அவருடைய வாசிப்பும், பகிர்வும் போற்றத்தக்கதாகும். வலைப்பூவில் பலரை எழுத வைக்கவும், பின்னூட்டம் இடவும் வைத்து அவர்களின் எழுத்தார்வத்திற்கு மிகவும் தூண்டுகோலாக இருந்தவர். எங்கள் பிளாக் தளத்தில் கேட்டு வாங்கிப்போடும் கதையில் அவர் எழுதிய கதை இடம்பெற்றிருந்தது. அவரைப் பற்றிப் பேசாத, எழுதாத சக வலைப்பதிவர்களே இல்லை எனலாம்.
ஒரு நல்ல மனிதரை, பண்பாளரை, பெருமனது கொண்ட ஆத்மாவை நாம் இழந்துவிட்டோம். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாரும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் எழுத்துக்களின் மூலமாக என்றும் வாழ்வார்.


No comments:
Post a Comment