தஞ்சாவூரின் சிறப்பைப் பற்றிய ஒரு பறவைப்பார்வையைத் தரும் அவர், தான் பிறந்த ஜெபமாலைபுரத்தைப் பற்றிய ஒரு வரலாற்றுக்கண்ணோட்டத்தைப் பல்வேறு தலைப்புகளில் தொகுத்துத் தந்துள்ளார்.
தஞ்சைக்கருகே ஜெபமாலை செய்து விற்கும் கிராமம் ஒன்று உள்ளது என்பது தெரிய வருவதாகவும், ஜெபமாலைபுரத்தில் அவர்கள் ஜெபமாலைகள் வாங்கிவந்ததாக தம் முன்னோர்களால் சொல்லப்பட்டு வருவதாகவும் கூறும் ஆசிரியர், தம் ஊரானது ஊர் அல்லது அவர்களைச் சார்ந்தவர்கள் என்ற முறையில் ஏழு பிரிவினராகப் பிரிக்கப்பட்டு, ஏழு குடும்ப நாட்டாண்மைகளாக இயங்கிவருவதாகக் கூறுகிறார். அவர்கள் மேற்கொண்டு வருகின்ற மக்கள் நலப்பணிகளையும் பட்டியலிடுகிறார்.
தற்போது ஜெபமாலைபுரத்தைச் சார்ந்தவர்கள் அனைத்து அரசுத்துறைகளிலும் அடிப்படைப்பணியிலிருந்து உயர் அலுவலகத் தலைமைப்பொறுப்பு வரை பல நிலைகளில் பணிபுரிந்ததாகவும், பணிபுரிந்துவருவதாகவும் பெருமையோடு கூறுகிறார்.
தம் முன்னோர்கள் வாய்மொழி செய்திவழி ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா ஆலயம் கட்டப்பட்ட காலத்தில் தம் ஊர் மக்களால் தூய ஜெபமாலை மாதா ஆலயம் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுவதாகப் பதிவு செய்யும் நூலாசிரியர், அவ்வூரில் அமைந்துள்ள பிற ஆலயங்களைப் பற்றியும், விழாக்களைப் பற்றியும் விவரிக்கிறார். பாஸ்கா நாடகம் தொடங்கி, ஆலய வழிபாடு, பிற நிகழ்வுகள் தொடர்பான பல புகைப்படங்கள் நூலுக்கு அழகு சேர்க்கின்றன.
தன்னைப்பற்றியும், தன்னுடைய சமுதாயப் பணிகளைப் பற்றியும் குறிப்பிடும் நூலாசிரியர், தன் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரைப் பற்றியும், ஊரிலுள்ள குறிப்பிடத்தக்க பெருமக்களைப் பற்றியும் உரிய புகைப்படங்களோடு ஆவணப்படுத்தியுள்ளார். இவ்வாறான ஒரு தொகுப்பினை வெளியிடுவதற்காக அவர் மேற்கொண்டுள்ள முயற்சியை நூல் மூலம் தெளிவாக உணரமுடிகிறது. பணிக்குத் துணைநின்ற சான்றோரையும் ஆங்காங்கே நினைவுகூர்கிறார். நூலைப் படிக்கும்போது ஜெபமாலைபுரத்தின் ஒட்டுமொத்த வரலாற்றினை அறியமுடிகிறது. பொதுமக்களுக்கும், வளரும் தலைமுறையினருக்கும் தான் பிறந்த மண்ணின் பெருமையை மிகவும் தெளிவாகப் புரியும் வகையில் எழுதியுள்ள நூலாசிரியரின் ஈடுபாடு போற்றத்தக்கதாகும்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி 2024இல் அலுவலக உதவியாளராகப் பணிநிறைவு பெற்றவர் ஜான் ஜெயக்குமார், பல்கலைக்கழகத்தில் நான் பணியில் சேர்ந்த காலகட்டத்தில், 1980களின் ஆரம்பத்தில், எனக்கு அறிமுகமானவர். சக பணியாளர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழும் அளவிற்குப் பணியில் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டினை நான் அறிவேன்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அலுவல்நிலையில் பணியாற்றி நூல்களை வெளியிட்ட பா.ஜம்புலிங்கம் (வாழ்வில் வெற்றி/2001 உள்ளிட்ட 10 நூல்கள்), கு.ச.மகாலிங்கம் (திருமணப்பேறு நல்கும் திருவிடைமருதூர்/2004), மா.சுந்தரபாண்டியன் (பண்பாட்டுப்பொருண்மைகள்/2006 உள்ளிட்ட மூன்று நூல்கள்), பா.மதுசூதனன் (திவ்யதேசப் பாசுரங்கள்-சோழ நாட்டுத் திவ்ய தேசங்கள்/2025) ஆகியோரின் வரிசையில் தற்போது ஜான் ஜெயக்குமாரும் சேர்ந்துள்ளார் என்பதும், பணி நிறைவு பெற்ற நாளில், தான் எழுதிய இந்நூலை அனைவருக்கும் அன்பளிப்பாகத் தந்துள்ளார் என்பதும் பாராட்டத்தக்கச் செய்திகளாகும். அவர் மென்மேலும் பல நூல்களை எழுத மனம் நிறைந்த வாழ்த்துகள்.
நூல் : ஒளிவீசும் ஜெபமாலைபுரம் (கண்டதும் கேட்டதும்)ஆசிரியர் : ஆ.ஜான் ஜெயக்குமார் (99940 42699)
வெளியீடு : ஸ்ரீசக்தி புரமோஷனல் லித்தோ புரொசெஸ், கோயம்புத்தூர்
பதிப்பாண்டு : ஜூலை 2024
பக்கங்கள் : 248


No comments:
Post a Comment