25 February 2026

அருள்நெறி ஆசான்

தஞ்சாவூர் நகர சைவ சமய அமைப்புகள் இணைந்து 14.5.1998 முதல் 28.5.1998 வரை சைவ சமய இலவச வகுப்பினை நடத்தின. அவ்வகுப்பில் சிறப்பு நிலைப் பேராசிரியராகப் பங்கேற்று மாணவர்களுக்கு வகுப்பெடுத்து உதவியமைக்காக பாராட்டும் வகையில் சிறப்புப்பட்டம் பெறுவதற்கான அழைப்பினை தஞ்சாவூர், தஞ்சை அருள்நெறித் திருக்கூட்டத்தின் அமைப்பாளர் பேராசிரியர் முனைவர் சிவ.திருச்சிற்றம்பலம் அவர்கள் அனுப்பியிருந்தார்.    

28.5.1998 அன்று தஞ்சாவூர், கூட்டுறவு குடியிருப்பு வளாகத்திலுள்ள அருள்மிகு கற்பக விநாயகர் கோயில் சொற்பொழிவு மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவின்போது அருள்நெறிக்காவலர் டி.பாலசுப்ரமணியன் எழுதிய சிவமூர்த்தங்கள்-நடராஜர் நூல் வெளியீடு,  மாணவ மாணவியருக்குச் சான்றிதழ் வழங்கல்,  பேராசிரியர்களாக வகுப்பு எடுத்தவர்களுக்கு அருள்நெறி ஆசான் சிறப்புப்பட்டம் வழங்கல், மாணவர்களுக்கு இலவச உணவு உறையுள் வழங்க உதவிய சைவ சமய நிறுவன அருள்நெறிப் புரவலர்களுக்கு பாராட்டு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. அதில் அருள்நெறி ஆசான் என்னும் சிறப்புப்பட்டத்தினைப் பெற்றேன்.

சைவ சமயப் பற்றாளர்களையும், முன்னோடிகளையும் காண்கின்ற, உரையாடுகின்ற வாய்ப்பினைப் பெற்றேன். 





12.5.1997 முதல் 26.5.1997 வரை முனைவர் திரு சிவ.திருச்சிற்றம்பலம் அவர்கள் தஞ்சாவூரில் நடத்திய சைவ சமயப் பயிற்சி வகுப்பில் மாணவனாகக் கலந்துகொண்டது நினைவில் நிற்கும் அனுபவம்.
 

-------------------------------------------------------------------------------------------
நன்றி: தஞ்சை சைவ சமயப் பயிற்சி மையம்
-------------------------------------------------------------------------------------------

24 February 2026

One minute birding: Supraja Kannan

Foreword

'One Minute Birding' by Supraja Kannan, daughter of my friend Mr. R. Kannan of Thillaisthanam, Thanjavur district, Tamil Nadu, India, is an interesting and informative work. The author's total involvement in her subject makes the reader wonder. Initially, she puts forward some reasonable questions. Though they are simple, many of us aren't in a position to answer them affirmatively.


We see such creatures in our daily life, but we don't spare time to know them. Actually, they're very near, before our eyes, making endearing voices and cheerful calls. We neither watch their beautiful colours nor listen to their melodious voices. If we lend our ears and eyes, we can grasp more. They'd impact us much.

We're attending to our daily business, caring little for them. If we think and proceed to watch, we'll get a kind of satisfaction that can't be expressed in words. The author shares what she realized and experienced and makes us feel the same. She takes us to another world we haven't attempted before.

While going through the book, I felt as if, I too had wings and accompanied the birds on their journey. The pictures shared by her speak volumes and make one realize the affinity she had with her winged friends. Nature comes to her in handy. She appeals to readers to spare a minute to know about those perky creatures and their special features.

Now let's spare just a minute and think. It'll lead to bewilderment and lots of information will start pouring in. She starts with 'Raising tunes of the Koels in the morning' and moves on with 40 types of encounters she faced. Now we're taken to an unknown world.

Supraja Kannan, a vivid reader, deserves appreciation for carefully following the sweet creatures and meticulously recording the anecdotes in a sublime manner. No doubt, after reading the book, one would automatically start watching birds. I'm happy to share that the author of this book, following the footsteps of her beloved father, is also editing a monthly e-magazine, ‘Payum Oli’, in Tamil, containing articles and poems on multifarious subjects, which is about to cross the one hundred mark shortly. I wish her success in her endeavours.


An introduction about the book by the author: One Minute Birding
Link to get the book: One Minute Birding

-----------------------------------------------------------
My Foreword to the book
-----------------------------------------------------------

18 February 2026

முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம்: சில நினைவலைகள்

தனியார் நிறுவனங்களில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றிவிட்டு, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தட்டச்சுச்சுருக்கெழுத்தராக 16.8.1982இல் பணியில் சேர்ந்து, பல பொறுப்புகளில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி உதவிப்பதிவாளராக 30.4.2017இல் பணி நிறைவு பெற்றேன். 


நான் பணியில் சேர்ந்தபோது முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்கள் முதல் துணைவேந்தராகப் பொறுப்பில் இருந்தார். அவருடைய காலகட்டத்தில் பணியாற்றும்போது பெற்ற அனுபவங்கள் என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்களாகும். அப்போது பல்கலைக்கழகம், அரண்மனை வளாகத்தில் இயங்கிக்கொண்டிருந்தது.


தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்த காலத்தில் பதிவாளர் பிரிவிலும் பதிப்புத்துறையிலும் பணியாற்றினேன். துறைக்கு வரும்போது சில சமயங்களில் திடீரென தட்டச்சுப்பொறிமீதோ, மேசைமீதோ ஆட்காட்டி விரலை வைத்து லேசாகத் தேய்த்துப் பார்ப்பார். பணியாற்றும் இடமும், பயன்படுத்தும் பொருள்களும் சுத்தமாக இருக்கவேண்டும் என்பது அவர் எண்ணம். அவர் வருவதற்குள் நாங்கள் இடம் சுத்தமாக இருப்பதை உறுதி செய்துகொள்வோம். அனைவருடைய பணியிலும் ஒழுங்கு கடைபிடிக்கப்படும். ஒவ்வொரு பணியாளரும் தத்தம் பணிகளைக் கண்ணும் கருத்துமாக மேற்கொள்வோம். நேரந்தவறாமை, திட்டமிடல் போன்றவற்றில் கவனமாக இருப்பார்.  

பணியில் சேர்ந்த ஒரு வாரத்தில், தமிழ் சிவிலிசேசன் காலாண்டிதழை அனுப்பிவைக்கும்படி வட இந்தியாவிலிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அப்போதிருந்த பதிவாளர் முனைவர் சு.செல்லப்பன் அவர்கள், அதற்கான  மறுமொழியைத் தமிழில் கூறி அதனைத் தட்டச்சிட்டுக் கொண்டுவரும்படி கூறினார். எவ்விதத் தவறுமின்றி அதனை நான் ஆங்கிலத்தில் தட்டச்சிட்டு அவரிடம் கொடுத்தேன். சுமார் 50 சொற்களைக்கொண்ட ஒரே வாக்கியத்தில் அந்த மறுமொழி இருந்தது. இப்பொழுது நினைத்தாலும் எனக்கு வியப்பாகவும் உள்ளது. அவர், அந்தக் கடிதத்தை சக பணியாளர்களிடம் காண்பித்து என்னுடைய மொழிபெயர்ப்பையும், ஆங்கில வரைவு எழுதும் முறையையும்  பாராட்டினார். தொடர்ந்து ஆங்கில வரைவுகள் எழுதும் பணிகளையும், மொழிபெயர்ப்புப்பணிகளையும் மேற்கொண்டேன்.


சேர்ந்த ஒரு மாதத்திற்குள் நான் உள்ளிட்ட ஒன்பது சுருக்கெழுத்தர்களுக்கும் தரப்பட்ட ஒரு கடிதத்தில் (25.8.1982) “அலுவலர்களும், கல்விநிலைப்பணியாளர்களும் தம்கீழ் பணியாற்றும் சுருக்கெழுத்தர்களின் சேவையை வெளிநாட்டில் உள்ளதுபோல நல்லமுறையில் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அலுவலர்களோ, கல்விநிலைப் பணியாளர்களோ இல்லாத சமயத்தில் அவர்கள்கீழ் பணியாற்றும் சுருக்கெழுத்தர்கள் அந்தந்தப் பிரிவினை செயலாளர்கள் போலக் கவனித்துக்கொள்ளவேண்டும்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. பணியின்மீதான பொறுப்பும் அதற்கான எங்களுடைய மதிப்பும் உயர்ந்ததாக நாங்கள் உணர்ந்தோம்.

ஓவியத்துறை சார்பாக இந்திய அளவிலான ஒரு கருத்தரங்கின்போது ஓர் அறிஞருக்கு வழங்கவேண்டிய மதிப்பூதியத்தைத் தவறுதலாக பிறிதொரு அறிஞருக்கு வழங்கிவிட்டேன். புலத்தலைவரும், துறைத்தலைவருமான முனைவர் ஏ.எஸ்.ராமன் அவர்கள், "தவறு வருவது இயல்பே. இதுபோன்ற பணிகளைச் செய்யும்போது சற்று கவனமாக இருக்கவேண்டும்". என்றார். எனக்கு அது ஒரு சரியான பாடமாக இருந்தது. இவ்வாறு ஒரு துறை இருந்ததே பலருக்கு இப்போது தெரிய வாய்ப்பில்லை.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக மின்சாரத் தட்டச்சுப் பொறி வாங்கியபோது முதலில் தட்டச்சு செய்ய பணிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். அந்த தட்டச்சுப்பொறியில் எழுத்துருக்கள் மற்றவற்றில் உள்ளதைப் போல் அல்லாமல் எலுமிச்சம்பழம் அளவிலான சிறு உருண்டையாக உலோகத்தில் இருக்கும். அதில் அனைத்து ஆங்கில எழுத்துகளும் இருக்கும். ஆறு வகையான எழுத்துருக்களை அந்நிறுவனத்தினர் அப்போது வழங்கியிருந்தனர். நாம் தட்டச்சிடும்போது அது சுற்றி சுற்றி வந்து கருப்பு ரிப்பன் வழியாக அழகாக தாளில் தட்டச்சிடும். அதனை  கோல்ப் பால்ஸ் என்று கூறினர். தவறாகத் தட்டச்சிடும் நிலை ஏற்படும்போது, எந்த எழுத்தை தவறாகத் தட்டச்சிட்டோமோ அதே எழுத்தை தட்டச்சிட்டால் eraser ribbon வழியாகப் பதிந்து முன்னர் தட்டச்சிட்டதில் அப்படியே அப்பதிவு விழும். தவறான எழுத்து அழிந்துவிடும். அதில் தட்டச்சு செய்ததும்கூட மறக்கமுடியாத அனுபவமே.

அலுவலகக்குறிப்பினை துணைவேந்தரின் இசைவுக்காக அனுப்பும்போது அலுவலர்களின் பெயர்களை வரிசையாகத் தட்டச்சிட்டுவிட்டு, மாண்புமிகு துணைவேந்தரவர்கள் என்று தட்டச்சிடுவோம். அவர் எங்களுக்கு அனுப்பிய 1.10.1984 நாளிட்ட சுற்றறிக்கையில்  “துணைவேந்தர் பதவிக்கு முன் ‘மாண்புமிகு’ என்றும் ஆங்கிலத்தில் ‘ஆணரபிள்’ என்றும் அச்சடிப்பதையும், தட்டச்சு செய்வதையும், மேடையில் கூறுவதையும் அருள்கூர்ந்து நிறுத்திவிடுமாறு, கலைமகள் விழா தொடங்குவதற்குமுன் தமிழ்ப் பல்கலைக்கழகப் பணியாளர்கள் ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.” என்று ஒரு சுற்றறிக்கையின்மூலமாகக் கூறியிருந்தார். அதற்குப் பின்னர் நாங்கள் அலுவலகக்குறிப்பு தட்டச்சிடும்போது துணைவேந்தரவர்கள் என்றே குறிப்பிட ஆரம்பித்தோம்.  

பல பணிகளை மேற்கொண்டபோதிலும் எனக்குக் கிடைத்த பேறாக நான் நினைப்பது நான் மேற்கொண்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைச்சட்ட விதிகளைத் தட்டச்சு செய்யும் பணியாகும். அந்த கிடைத்தற்கரிய பொறுப்பினை என்னிடம் தந்து, “மிகவும் கவனம். இதைப் பற்றி யாரிடமும் விவாதிக்கக்கூடாது. நுணுக்கமாகத் தவறின்றிச் செய்யவேண்டும்” என்று கூறினார்.  அப்போதிருந்த துணைப்பதிவாளர் முனைவர் முத்துக்குமாரசுவாமி அவர்களின் வழிகாட்டலில் தட்டச்சுப்பணியை மேற்கொண்டேன்.   பூல்ஸ்கேப் வடிவ தாளில் சுமார் 120 பக்கங்கள் ஸ்டென்சில் தட்டச்சிட்டு, படியெடுக்கப்பட்டது. நூற்கட்டு செய்து அனைத்துத் துறைகளுக்கும் அப்போது அனுப்பப்பட்டன. வழக்கமான இருக்கைப்பணிகளோடு அப்பணியை அவருடைய ஆணைப்படி நிறைவு செய்தேன். ஆரம்ப காலப்பணிகளில் எனக்குக் கிடைத்த அபூர்வமான வாய்ப்பாகவும், மறக்கமுடியாத பணியாகவும் இப்பணி அமைந்தது. இதற்காக அனைவரின் பாராட்டையும் பெற்றேன்.

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுடைய  தமிழில் இலக்கிய வரலாறு என்ற ஆங்கில நூலின் வரைவை சக பணியாளர்களுடன் தட்டச்சு செய்யும் பணியினை மேற்கொண்டேன். அவ்வப்போது அவரே வந்து அருகில் அமர்ந்திருந்து தட்டச்சில் தன் நூலில் ஆங்கில மொழி தொடர்பாக எழும் ஐயங்களைத் தெளிவுபடுத்துவார். சில சமயங்களில் அவர் சொல்லச்சொல்ல நான் தட்டச்சு செய்ததும் உண்டு. ஆங்கிலத்தட்டச்சுப் பணியை பாராட்டியதோடு அலுவலர்களிடமும் இதைப் பற்றி அவர் கூறினார். 

சற்றொப்ப அதே காலகட்டத்தில் கல்வெட்டுத்துறை சார்பாக நடைபெற்ற சிந்து வெளி எழுத்துக் கருத்தரங்கு (Indus Script Seminar) தொடர்பான பணிகளை சக உதவியாளருடன் மேற்கொள்ளும்படி பணிக்கப்பட்டேன். ஒருங்கிணைப்பாளர் கல்வெட்டறிஞர் ஐராவதம் மகாதேவனுக்கும், ஆய்வுறிக்கைகள் அளிக்கும் ஆய்வாளர்களுக்கும் நிகழ்வு நடைபெறும் நாள்களில் உரிய வசதிகள் செய்துகொடுப்பதும் எங்கள் பணியாக இருந்தது. கருத்தரங்கு, ஆய்வாளர் என்பதற்கெல்லாம் பொருள் தெரியாத அந்தச்சூழலில் ஒரு பெரிய பொறுப்பை ஏற்று முடித்தது வித்தியாசமான அனுபவம்.  கருத்தரங்க நாள்களில் அக்குழுவினருடன் முதன்முதலாக பெருவுடையார் கோயில் சாந்தாரத்தில் உள்ள புகழ்பெற்ற சோழர் கால ஓவியங்களைக் கண்டேன். லண்டனிலிருந்து வந்திருந்த அறிஞர் முனைவர் கீனியர் வில்சன் என்பவருடைய கடவுச்சீட்டை அலுவலக நண்பர் இடம் மாற்றிவைத்துவிட்டு அதனை நாங்கள் தேடிக் கண்டுபிடிப்பதற்குள் பட்ட மன உளைச்சல் ஒரு தனிக்கதை. நிகழ்விற்குப் பின் ஒருங்கிணைப்பாளர் எங்களைப் பாராட்டினார். 

தமிழில் ஒரு காலாண்டிதழ் வரவேண்டும் என்று துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய்.சுப்ரமணியம் அவர்களால் முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது அதற்கான அலுவலகக்குறிப்பினைத் தட்டச்சு செய்யும் வாய்ப்பினைப் பெற்றேன். Tamil Civilization என்பதற்கு இணையாக தமிழ் சிவிலிசேசன் (ஆங்கிலத்தில் உள்ளபடியே தமிழில்), தமிழ்ப்பண்பாடு, தமிழ்க்கலை என்ற பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு, தமிழ்க்கலை என்ற பெயர்  தெரிவு செய்யப்பட்டது.

ஆங்கிலக் காலாண்டிதழின் முகப்பட்டை வடிவமைக்கப்படும்போது என்னால் மேற்கொள்ளப்பட்ட ப்ளாக் தயாரிப்பு, அட்டை வடிவமைப்பு உள்ளிட்ட பல ஆயத்தப் பணிகள் மறக்கமுடியாதவை.  வடிவமைப்பில் நேர்த்தி, எழுத்துருவில் தெளிவு, உள்ளடக்கத்தில் உலகளாவிய தரம், ஆடம்பரமற்ற அதே சமயம் பார்வைக்கு உயர்ந்த தரம் என்ற நிலையிலும், திருவனந்தபுரத்திலிருந்து வெளிவரும் ISDL இதழின் அமைப்பிலும் அமையவேண்டும் என்று பதிவாளர் வழியாக ஆணையிட்டிருந்தார். முதல் இதழ் வெளியானதும் கட்டுரையாளர்களுக்கு இதழின் படியும், கட்டுரைப்படிகளும் (offprints) அனுப்பும்போது பெற்ற அனுபவமும்கூட மறக்கமுடியாதனவாகும். கீழ ராஜ வீதியில் ப்ளாக் தயாரிக்கும் கடையில் பல்கலைக்கழக எம்ப்ளம் தயாரித்து வாங்கி வந்தது நினைவில் உள்ளது. 

வாசிப்பினை ஊக்குவிக்கவும், பிற இதழ்களுக்கு ஆதரவு தரவும் தமிழ் சிவிலிசேசன், தமிழ்க்கலை ஆகிய இதழ்களுக்கு உறுப்பினர் கட்டணம் செலுத்தியவர்களுக்கு செந்தமிழ்ச்செல்வி, தமிழ்ப்பொழில், செந்தமிழ், கலைக்கதிர், விஞ்ஞானச்சுடர் ஆகிய ஐந்து மாத இதழ்கள் 200 எண்ணிக்கை பெறப்பட்டு அன்பளிப்பாக அனுப்பிவைக்கப்பட்டன. 

காலாண்டிதழ்களை உரிய பெயர்ப்பட்டியலைத் தயாரித்து, உள்நாடு, வெளிநாடு என பிரித்து விடுபாடின்றி அனுப்பும் பணியானது சற்றே சிரமமாக இருந்தாலும் குறையின்றி அப்பணி மேற்கொள்ளப்பட்டது. அனுப்புவதற்கான அஞ்சல் செலவின் அடிப்படையில் வெளிநாட்டு உறுப்பினர்களுக்கு முதலில் கடல் வழியாக (Surface Mail) அனுப்பப்பட்டது. பின்னர் இதழ் சரியாக வந்துசேரவில்லை என்று அவர்கள் கூறியதும் ஆகாயவழியாக (Air Mail) அனுப்ப நாங்கள் பணிக்கப்பட்டோம். அவ்வாறான வகையில் அனுப்பும்போது ஒரு இதழை பேக்கிங் செய்ய அதிக கவனம் மேற்கொள்ளவேண்டியிருக்கும். ஒவ்வொரு பார்சலுக்கும் அதனதன் எடையின்படி அஞ்சல் வில்லைகள் கவனமாக ஒட்டப்படவேண்டும். 

ஒவ்வொரு மாதமும் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவருகின்ற செய்தி மலருக்காக (தமிழ்ப் பல்கலைக்கழகச் செய்தி மலர், Tamil University News Bulletin) செய்திகளைத் திரட்டுவது, தட்டச்சு செய்வது, விடுபாடின்றி உறுப்பினர்களுக்கும், முக்கிய நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் அனுப்பிவைப்பது போன்ற பணிகளைச் சக பணியாளர்களுடன் இணைந்து மேற்கொண்டேன். சில சமயங்களில் ஒவ்வொரு துறையிலிருந்தும் மலருக்கான செய்தியைப் பெறும் பணியையும், அதனைத் தட்டச்சிடும் பணியையும் செய்தேன். விழா நிகழ்வுகளை வடிவமைக்கவேண்டிய முறை, புகைப்படங்களை வெளியாரிடமிருந்து பெறும்போது நன்றி கூறும் முறை உள்ளிட்ட பலவற்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. உரிய காலத்திற்குள் அவை அனுப்பப்படவேண்டும் என்று துணைவேந்தர் ஆணையிட்ட நிலையில் அப்பணியை மேற்கொண்டோம். முதலில் அஞ்சல் வில்லையை ஒட்டி அனுப்பிக்கொண்டிருந்தோம். பின்னர் தலைமை அஞ்சலகத்தில் குறிப்பிட்ட தொகைக்கான காசோலையைத் தந்து அஞ்சல் வில்லை மதிப்பிற்கு ஈடாக ஃப்ராங்கிங் மிஷினில் பதிவு செய்துகொண்டு வந்து, அதனை அலுவலகத்திற்கு எடுத்துவந்து ஒவ்வொரு செய்தி மலரையும் அதில் வைப்போம். உரிய அஞ்சல் வில்லை மதிப்புக்குரிய அச்சு அதில் விழுந்துவிடும். பின்னர் மொத்தமாக அதனை அனுப்புவோம். விடுபாடின்றி செய்தி மலர் உரிய நேரத்திற்குள் அனுப்பப்படவேண்டும் என்பது எங்கள் பணியாக இருந்தது. 

செய்தி மலருக்கான செய்திகள் சில சமயங்களில் தமிழில் மட்டுமே வரும்போது அதனை ஆங்கிலச் செய்தி மலருக்காக மொழிபெயர்க்கும் பணி மேற்கொள்ளப்படும். அப்பணியில் நானும் ஆர்வமாக இணைந்துகொள்வேன். அவ்வாறே ஆங்கிலச் செய்தி மலர் இறுதி மெய்ப்புத்திருத்தப்பணியை மேற்கொண்ட அனுபவமும் உண்டு. இளநிலை உதவியாளர் என்ற பணிநிலைக்கு அப்பாற்பட்டு ஆர்வத்துடன் செய்ய ஆரம்பித்தது பிற்காலத்தில் எனக்கு பல வகையில் உதவியது. 

வேலூர், மத்திய சிறையிலிருந்த ஆயுள் தண்டனைக்கைதி ஒருவர் பல்கலைக்கழக வெளியீடுகள் மீது ஆர்வம் கொண்டு தனக்கு அனுப்பும்படி கடிதம் அனுப்பியிருந்தார். துணைவேந்தர் ஆணைப்படி தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்தி மலர் கட்டணம் பெறப்படாமல் அன்பளிப்பாக அவருடைய எண் குறிப்பிடப்பட்டு வேலூர் சிறை முகவரிக்கு தமிழ்ப்பல்கலைக்கழக தொடர்ந்து அனுப்பிவைக்கப்பட்டது.

ஒவ்வொரு நூலும் அச்சான பின்னர் அதன் இரு படிகளை துணைவேந்தருக்கு அனுப்பும் நடைமுறை இருந்தது. அன்றோ, மறுநாளோ அதன் மற்றொரு படி பதிப்புத்துறைக்கு அவருடைய குறிப்போடு திரும்பிவரும். அதை முற்றிலும் வாசித்து அவர் எழுதியுள்ள கருத்துகள் அதில் இடம்பெற்றிருக்கும். அதில் எதிர்மறைக் கருத்து எதுவும் இருக்கக்கூடாது என்று துறையினர் உள்ளிட்ட அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருப்போம். அதற்காக நூல் வடிவம் பெறும் வரை துறையினர் எடுக்கும் முயற்சிகள் ஏராளம். அவ்வாறாக ஏதேனும் குறை சுட்டப்பட்டிருந்தால் அடுத்தடுத்த நூல்களில் அது இடம்பெறாதவாறு பதிப்புத்துறையினர் பார்த்துக்கொள்வர்.

அலுவலகம் சாராத ஒரு நிகழ்வு. 1.9.1985இல் தஞ்சாவூர், கீழ ராஜ வீதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் எனக்குத் திருமணம் நடைபெற்றது. மாப்பிள்ளை அழைப்பு நிகழ்வாக கொண்டிராஜபாளையத்தைக் கடந்துகொண்டிருந்தபோது துணைவேந்தர் வந்து காத்துக் கொண்டிருப்பதாகக் கூறினர். ஆமை வேகத்தில் வந்த மாப்பிள்ளை ஊர்வலம் திருமண மண்டபத்தை அடையும்போது தாமதமாகிவிட்டது. "வந்து, காத்திருந்ததாகச் சொல்லுங்கள்" என்று அங்கிருந்தவர்களிடம் கூறிவிட்டு அவர் திரும்பிச்சென்றதாக அறிந்தேன். அவரிடம் நேரில் வாழ்த்து பெறமுடியவில்லை. விடுப்பு முடிந்து பணியில் சேர்ந்தபின்னர் துணைவேந்தர் செயலகத்தில் சென்று தாமதத்திற்கான காரணத்தைத் தெரிவித்துவிட்டு வந்தேன்.

சில வருடங்களுக்குப் பிறகு நான் எழுதிய படியாக்கம் (தாமரை பப்ளிகேஷன்ஸ், சென்னை, டிசம்பர் 2004) நூலை அவருக்கு அனுப்பியிருந்தேன். அதைப் பாராட்டி எழுதியதோடு கண் சிகிச்சை செய்திருந்ததைத் தன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். 


அவர் இயற்கையெய்தியபோது தினமணி நாளிதழில் வெளியான கட்டுரையைப் பற்றி நான் எழுதிய கருத்து அவ்விதழில் இடம்பெற்றிருந்தது


முதல் துணைவேந்தர் காலத்தில் நான் மேற்கொண்ட பணியானது பிற்காலத்தில் என்னை ஓர் ஆய்வாளனாக உருவெடுக்கவைக்க உதவிய நிலையில் அவரையும்,  தமிழ்ப் பல்கலைக்கழகத்தையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

தொடர்புடைய பதிவுகள்:
-----------------------------------------------------------------------------------
முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் நூற்றாண்டு (18.2.1926-29.6.2009)
-----------------------------------------------------------------------------------

1.3.2026இல் மேம்படுத்தப்பட்டது.

16 February 2026

முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம்: வாழ்த்து (31.7.86)

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்கள், பொறுப்பை ஒப்படைத்த 31.7.1986இல்,  ஆய்வாளர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் அனுப்பிய வாழ்த்துக்கடிதம் வாசிப்போரை மனம் நெகிழவைக்கும்படி இருந்தது.

அவர் காலத்தில் தட்டச்சுச்சுருக்கெழுத்தராகப் பணியில் சேர்ந்து பணியாற்றியது நினைவில் நிற்கும் அனுபவம். 



தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

டாக்டர் வ.அய்.சுப்பிரமணியம்                                                                    
துணைவேந்தர்                                                                                              நாள்: 31.7.86
வாழ்த்து

இன்று (31.7.86) மாலை ஐந்து மணியுடன் என் பொறுப்பை ஒப்புவித்து ஆய்விற்காக நான் திருவனந்தபுரம் செல்கிறேன். பரதன் பாதுகாத்த பாதுகையைப் போல் பிறர்கையில்  மகிழ்ச்சியுடன் விட்டுச்செல்லும் உணர்வு ஏற்படுகிறது. 

கடந்த ஐந்து ஆண்டுகளாக உங்களனைவருடன் உழைத்துத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைப் படிப்படியாக உருவாக்குவதில் ஒரு பெருமிதம் எனக்கு இருந்தது. இணைந்த செயற்பாடும், உறவுமுறையும், தமிழுக்காகச் செய்கின்றோம் என்ற மன நிலையும் இந்த வளர்ச்சிக்குக் காரணம். இவற்றிற்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.

தமிழ்ப் பல்கலைக்கழகம், பிற பல்கலைக்கழகங்கள் போன்ற ஒன்றன்று. இது உயராய்வு மையம். இங்கே அறிவுசான்ற சிலரே இடம் பெற  முடியும். இடம் பெற்றவர்களும் தமது அறிவாற்றலை வெளிப்படுத்தத் தொடர்ந்து தம்மைத் தாமே தேர்வுக்குட்படுத்திக் கொள்ள வேண்டும். அதைப்போன்றே அலுவலகமும் சிறப்பாகச் செயற்படவேண்டும்.

என்று ஆய்வின் தரங் குறைகிறதோ அன்று தமிழ்ப் பல்கலைக்கழகம் தளர்ந்துவிடும். நல்கைகள் குறையும். பொருள் முட்டுப்பாடு தோன்றி தமிழ்ப் பண்பாட்டைக் காத்து வளர்க்கும் இந்த நிறுவனம் நிலை குலைந்துவிடும். இதனை ஒவ்வொருவரும் நினைவிற் கொள்வது நன்று. இதன் வாழ்வும், வளர்ச்சியும் ஒவ்வொரு ஆய்வாளர்/அலுவலர் கையில் எப்போதும் இருக்கும்.

'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்ற புறநானூற்று அடிகள் நமக்கு மனப்பாடம்.

'அறநெறி தவறாமல் செயற்படுவதே பெரும் அரச வெற்றி' என்று அசோகன் கல்லெழுத்தில் கூறியதும் நமக்கு நினைவிருக்கலாம் 

தமிழ்ப் பல்கலைக்கழக வளர்ச்சியை தமிழர் அனைவரும், ஏன், பிற மாநிலத்தார்கூட  உன்னிப்பாகக் கவனித்து வருவர். அயல்மாநிலத்தில் வாழ்ந்த தமிழ் மகன் என்ற முறையில் அகலவிருந்து பார்த்து உங்கள் வளர்ச்சியை என் மனம் வாழ்த்தும். தளர்ச்சியிருப்பின் என் முகம் வாடும்.

அன்றுள்ள பல்கலைக்கழக அதிகாரிகள் அனுமதித்தால் நான் காலமானபின் என்னுடற் சாம்பலின் இம்மியளவைத் தஞ்சை தென் வளாகத்தில் ஒரு மூலையில் என் கண் முன்னே வளர்ந்த மரத்தடியிலும், காஞ்சி, உதகை, மண்டப மையங்களில் வளரும் மரத்தடியிலும் புதைத்திட என் குழந்தைகள் அனுப்புவர். புதைத்திடுக. 

நீங்களனைவரும் வளமுற வாழ்த்துகிறேன்.

(ஒம்).....................................
(வ.அய்.சுப்பிரமணியம்)
துணைவேந்தர்



தமிழ்ப்பல்கலைக்கழக நிர்வாகக் கட்டட முகப்பில்
இடம் பெற்றுள்ள வாழ்த்தைக் கொண்ட நினைவுச்சின்னம்


அன்னாருடைய அஸ்தியின் ஒரு பகுதி அவர் விருப்பப்படி தமிழ்ப் பல்கலைக்கழகக் குடியிருப்பு வளாகத்தில் துணைவேந்தர் இல்லத்தின் அருகேயுள்ள மரத்தடியில் புதைக்கப்பட்டு அதில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டுப்பொறிப்பு


-----------------------------------------------------------------------------------
முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் நூற்றாண்டு (18.2.1926-29.6.2009)
-----------------------------------------------------------------------------------

1.3.2026இல் மேம்படுத்தப்பட்டது.

14 February 2026

கும்பகோணம்-சுவாமிமலை அருகேயுள்ள கோயில்கள்: மா.செல்வகுமார்




கும்பகோணம்-சுவாமிமலை மற்றும் அருகேயுள்ள கோயில்கள்

கும்பகோணத்தில் பெரும்பாலான தெருக்கள் கோயிலை மையமாகக் கொண்டு உள்ளதால், அங்குள்ளோர் முகவரியைக் கூறும்போதே மொட்டை கோபுரம் அருகில், கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி, கும்பேஸ்வரர் மேல வீதி என்ற வகையில் அந்தந்த கோயிலின் பெயரோடு திருமஞ்சனவீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி, மேல வீதி, கீழ வீதி என்ற பின்னொட்டோடு கூறுவது வழக்கம்.

அந்த அளவிற்குக் கோயில்கள் கும்பகோணத்திலுள்ளோர் வாழ்வில் ஒரு முக்கியமான பங்கினை வகிக்கின்றன. எந்தத் திசையில் நின்றாலும், இருந்தாலும் ஏதாவது ஒரு கோயிலின் கோபுரத்தினைக் காணமுடியும். தேவாரத்திலும், திவ்யப்பிரபந்தத்திலும் குடமூக்கு என்றும், குடந்தை என்றும் அழைக்கப்பட்ட இவ்வூரிலும், அருகிலுள்ள ஊர்களிலும் பாடல் பெற்ற கோயில்கள், மங்களாசாசனம் பெற்ற கோயில்கள் உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளன.

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கொரு முறை கொண்டாடப்பெறுகின்ற மகாமகம் புகழ்பெற்றதாகும். இங்கு வசிப்போர் அவ்விழாவினைத் தம் வாழ்வின் ஒரு முக்கியமான அங்கமாகக் கருதுவர். வாழ்வின் நிகழ்வுகளைத் தொடர்புபடுத்தி, முந்தைய மகாமகத்தில் வீடு கட்டினோம், கடந்த மகாமகத்தில் திருமணம் நடைபெற்றது, இந்த மகாமகத்தின்போது மூத்த மகன் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தான், மகளுக்குக் குழந்தை பிறந்தது என்றெல்லாம் பெருமையோடு கூறிக்கொள்வர்.

இத்தகு சிறப்புகளைக் கொண்ட கும்பகோணம், மகாமகம், அருகிலுள்ள கோயில்கள் ஆகியவற்றைப் பற்றி பல நூல்கள் பல்வேறு காலகட்டங்களில் வெளிவந்துள்ளன. அவ்வகையில், மா. செல்வகுமார் எழுதியுள்ள கும்பகோணம்-சுவாமிமலை அருகேயுள்ள கோயில்கள் என்னும் நூல் பொதுமக்களுக்கும், ஊரைச் சுற்றிப் பார்க்க வருகின்ற பக்தர்களுக்கும் வழிகாட்டியாக அமைந்துள்ள நூலாகும்.

இந்நூல் கும்பகோணம்-அமைவிடம், கும்பகோணமும் மகாமகப் புராண வரலாறும், மகாமகம்-நீராடலும் பயன்களும், மகாமகக் குளக்கரைக் கோயில்கள், அமிர்தம் பரவிய தலங்கள், கும்பம் சிதைந்தபோது தோன்றிய தலங்கள் ஆகிய தலைப்புகளில் தொடங்கி, சார்ங்கபாணி கோயில், சக்கரபாணி கோயில், ராமஸ்வாமி கோயில்கள், இப்பகுதியில் காணப்படுகின்ற குறிப்பிடத்தக்க சில கோயில்கள் உள்ளிட்ட தலைப்புகளைக் கொண்டுள்ளது. பின்னிணைப்புகளாக சைவ, வைணவ நவக்கிரகத்தலங்கள், பிற முக்கியத் தலங்கள், கும்பகோணம் சுவாமிமலையின் சிறப்புகள் ஆகியவை அமைந்துள்ளன.

அமிர்தம் பரவிய தலங்கள் என்ற தலைப்பில் பஞ்சகுரோசத்தலம் எனப்படுகின்ற திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, கொரநாட்டுக்கருப்பூர் ஆகிய கோயில்களின் அமைவிடமும், சிறப்பும் விவாதிக்கப்பட்டுள்ளன. கும்பம் சிதைந்தபோது தோன்றிய தலங்களான ஆதிகும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், கௌதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், பாணபுரீஸ்வரர், கம்பட்ட விஸ்வநாதர், ஏகாம்பரேஸ்வரர், கோடீஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், அமிர்தகலநாதர் ஆகிய கோயில்களின் தல வரலாறு, இறைவன், இறைவி, திருவிழாக்கள் போன்ற பல கூறுகள் ஆராயப்பெறுகின்றன.

தொடர்ந்து அருகில் அமைந்துள்ள திருவெள்ளியங்குடி, சுவாமிமலை, திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், இன்னம்பூர், ஏரகரம், திருப்புள்ளபூதங்குடி, திருஆதனூர், திருக்கருகாவூர், திருப்புறம்பியம், திருவைகாவூர் ஆகிய தலங்களின் சிறப்புகள் பல கோணங்களில் காணப்படுகின்றன.

ஒவ்வொரு தலைப்புகளிலும் விவாதிக்கப்படுகின்ற செய்திகளும், நிகழ்வுகளும் அந்தந்தத் தலத்திற்கு வாசகர்களை அழைத்துச்செல்வதைப் போன்ற உணர்வைத் தருகின்றன. கட்டுரைகளில் கூறப்பட்டுள்ளவற்றில் சிலவற்றைக் காண்போம்.

கும்பகோணம் வந்து வழிபட்டவர்க்கும், வர முடியாத நிலையில் நினைத்தவர்க்கும், ஒரு முறை கும்பகோணம் என்று வாயால் சொன்னவர்க்கும் பாவங்கள் நீங்கி வீட்டுலகம் வாய்க்கும். (பக்கம் 7)

உமையம்மையார் சிவபெருமானிடம் உலக உயிர்கள் வினையிலிருந்து நீங்கி மோட்ச உலகம் சேர்வதற்குரிய தலம் எது என்று கேட்டபோது, சிவபெருமான், இத்தலத்தின் பெருமையை எவராலும் உள்ளது உள்ளபடி உரைத்தல் என்பது இயலாது...உன் மனத்துள்ளும் அடியவர் உள்ளத்துள்ளும் வேத இசையிலும் நாம் விளங்குவது போல இக்குடந்தை நகரில் வீற்றிருக்கிறோம் என்கிறார். (ப.9)

ஒரே நீர்த்துறையில் பல ஆலயங்களைச் சேர்ந்த மூர்த்திகள் ஒரு பொழுதில் வந்து தரிசனம் கொடுத்தல் மிக அரிய நிகழ்வாகும். பல புண்ணிய நதிகளில் நீராடிய பயன்களை மகாமக நீராடல் நமக்குக் கிடைக்கச் செய்கிறது. (ப.18)

ஒருவர் செய்த பாவங்கள் புண்ணியத் தலங்களில் உள்ள தீர்த்தங்களில் நீராடினால் அகலும்..காசியிலுள்ளோர் செய்த பாவங்கள் கும்பகோணம் தீர்த்தமான மகாமகக்குளத்தில் நீராடினால் விலகும். கும்பகோணத்தில் இருப்பவர்கள் செய்த பாவங்கள் கும்பகோணத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடினால்தான் அகலும்...(ப.24)

கும்பகோணத்திற்கு வரும் பக்தர்களுக்கு மிகச்சிறந்த கையேடாக அமைந்துள்ள இந்த நூல் தலத்தின் பெருமைகளை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துரைக்கிறது. இவ்வாறான நூலைப் படைத்த நூலாசிரியர் இன்னும் தொடர்ந்து அருகிலுள்ள பிற தலங்களைப் பற்றி எழுதி இறைவன் அருள் பெற மனம் நிறைந்த வாழ்த்துகள்.

தலைப்பு: கும்பகோணம்-சுவாமிமலை அருகேயுள்ள கோயில்கள்
ஆசிரியர்: மா.செல்வகுமார் (அலைபேசி +91 99448 86468)
பதிப்பகம்: மௌவல் பதிப்பகம், மடவிளாகம் தெரு, வலங்கைமான் 612 804,திருவாரூர் மாவட்டம், அலைபேசி +91 97877 09687, +91 94888 40898
பதிப்பாண்டு: அக்டோபர் 2025
விலை: ரூ.130




-------------------------------------------------------------------------------------------
நூலில் வெளியான என்னுடைய அணிந்துரை
-------------------------------------------------------------------------------------------