வங்கக்கடலோரத்தில்
அமைந்துள்ள தரங்கம்பாடி பகுதியில் அண்மையில் பயணித்தபோது டேனிஷ் கோட்டை என அழைக்கப்படுகின்ற
தரங்கம்பாடி கோட்டைக்கு எதிரில் அமைந்துள்ள கடல்சார் அருங்காட்சியகத்திற்குச் சென்றோம்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தின் நுழைவாயிலில் டேனிஷ் இந்திய கலாச்சார மையம், தரங்கம்பாடி கடல்சார் அருங்காட்சியகம் (Danish Indian India Cultural Centre, Tranquebar Maritime Museum) என்ற பெயர்ப்பலகையைக் கண்டோம். நுழைவாயிலை அடுத்து உள்ளே சென்றதும் கடல் சங்குகள் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அதில் அவற்றைப் பற்றிய ஆன்மிக விளக்கங்கள் தரப்பட்டிருந்தன.
அங்கு கடல் சங்குகள், அணிகலன்கள், கடலில் கண்டெடுத்த குதிரையின் வடிவம், குதிரையின் பல் போன்றவை இருந்தன. அத்துடன் பல வகையான பீங்கான் பொருள்கள் பல வண்ணங்களில், பல அளவுகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அனைத்துப் பொருள்களும் காட்சிப்பேழையில் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தன. புதிய ரக கட்டு மரத்தின் மாதிரி ஒன்று மிகவும் அழகாக இருந்தது. பல அளவுகளில் மண் பானைகள், குடுவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அப்பகுதியைக் கடந்து உள்ளே சென்றதும் அங்கு தனியாக உள்ள ஒரு அறையின் நுழைவாயிலில் Tranquebar Maritime Museum என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அருங்காட்சியகத்தில்
காணப்படுபனவற்றில் பெரும்பாலான பொருள்கள் கடலில் கண்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு
வருவதை அறியமுடிந்தது. அந்த அறையின் நடுவில் அழகான படகு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
படகினை நேரில் பார்க்க விரும்புவர்கள் இதனைப் பார்த்து படகின் அமைப்பினைத் தெரிந்துகொள்ளமுடியும்.
அருங்காட்சியக வளாகத்தில் இரு சிறிய படகுகள் காணப்பட்டன.
இவ்வருங்காட்சியகம்
காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரையிலும், மாலை 2.30 முதல் 6.00 மணி வரையிலும் இயங்குகிறது.
தரங்கம்பாடிக்குச் சுற்றுலா வருபவர்கள், குறிப்பாக குழந்தைகளும் மாணவர்களும் பார்க்கவேண்டிய இடங்களில் இதுவும் ஒன்றாகும்.
நன்றி
24 ஏப்ரல் 2019 பயணத்தில் உடன் வந்ததோடு, குறிப்புகள் எடுக்கவும், புகைப்படங்கள் எடுக்கவும் உதவிய என் மனைவி திருமதி பாக்கியவதி
இப்பகுதியில் முன்னர் நாம் பார்த்தது
தரங்கம்பாடி மாசிலாதர் கோயில்
24 ஏப்ரல் 2019 பயணத்தில் உடன் வந்ததோடு, குறிப்புகள் எடுக்கவும், புகைப்படங்கள் எடுக்கவும் உதவிய என் மனைவி திருமதி பாக்கியவதி
இப்பகுதியில் முன்னர் நாம் பார்த்தது
தரங்கம்பாடி மாசிலாதர் கோயில்