அண்மையில் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூருக்குத் தென்கிழக்கில் எட்டு கிமீ தொலைவில் தரங்கம்பாடியிலுள்ள மாசிலாநாதர் கோயிலுக்குச் சென்றோம். கடலுக்கு மிக அருகில் உள்ள கோயில் என்றும், சிறிது சிறிதாக கடல் அரித்துக்கொண்டு வரும் நிலையில் புதிய கோயில் கட்டப்பட்டதாகப் படித்ததன் அடிப்படையிலும் அக்கோயிலுக்குச் செல்லும் ஆவல் எழுந்தது. கோயிலை நெருங்க நெருங்க கடலலைகளின் சத்தம் இனிமையாக காதுகளில் கேட்க ஆரம்பித்தது.
அப்பர் பெருமான் "அண்ணாமலை யமர்ந்தார் ஆரூர் உள்ளார் அளப்பூரார் அந்தணர்கள் மாடக்கோயில்......" (6.51.3) என்றும், "எச்சில் இளமர் ஏமநல்லூர் இலம்பையங் கோட்டூர் இறையான் சேரி அச்சிறு பாக்கம் அளப்பூர் அம்பர்..." (6.70.4) என்றும், "...உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும் அளப்பூர் ஓமாம்புலியூர் ஒற்றியூரும்....." (6.71.4) என்றும், சுந்தரர் "ஆரூர் அத்தா ஐயாற்றமுதே அளப்பூர் அம்மானே..." (7.47.4) என்றும் இந்த வைப்புத்தலம் குறித்துப் பாடியுள்ளனர்.
பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள் என்னும் நூலில் பின்வருமாறு கூறுகிறார்: "சோழ நாட்டு வைப்புத்தலமான இத்தலம் முன்னர் அளப்பூர் என்றழைக்கப்பட்டது. அளம் என்பது உப்பளத்தைக் குறிக்கும். இக்கோயிலுக்குப் பல உப்பளங்கள் சொந்தமாக இருந்ததால், அளப்பூர் என்றழைக்கப்பட்டது. தரங்கம்பாடி கடற்கரையில் மே மாதம் முழுவதும் ஓசோ எனப்படுகின்ற சஞ்சீவி பர்வதக்காற்று உடல் நலத்திற்கு மிகவும் உகந்ததாகும். கடல் அலைகள் மோதுவதால் முற்பகுதி அழிந்து, கற்களெல்லாம் கடல் நீரில் விழுந்து கிடக்கின்றன. கடல் அலைகளால் கரைந்துகொண்டிருக்கும் இக்கோயிலைக் காப்பாற்றும் சிவபுண்ணியம் என்று, எவர் மூலம் நிறைவேறுமோ? கோயில் அழிவில் நம் நெஞ்சமும் உருகிக்கரைகிறது."
மேற்கண்ட நூலாசிரியர் தெரிவித்த அந்த ஆசையும், ஏக்கமும் 1 செப்டம்பர் 2013இல் நிறைவேறியுள்ளது. ஆம், இதற்கு அருமையில் புதிய கோயில் கட்டப்பட்டு குடமுழுக்கு ஆகியுள்ளது. புதிய கோயிலின் நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் அங்கே கருவறையில் மாசிலாநாதரைக் காணலாம். மூலவரை மாசிலாமணிநாதர் என்றும், மாசிலாமணீஸ்வரர் என்றும்கூட அழைக்கின்றனர். மூலவருக்கு முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளன. இடது புறத்தில் இறைவி அறம்வளர்த்தநாயகியின் சன்னதி உள்ளது. மூலவர் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன் ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், பாலமுருகன், அகிலாண்டேஸ்வரி, கஜலட்சுமி, நவக்கிரகம் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. மூலவரை வணங்கிவிட்டு அங்கிருந்தோரிடம் பழைய கோயிலைப் பற்றி விசாரித்தோம்.
அக்கோயிலின் வழியாகவே பழைய கோயிலுக்குச் செல்லலாம் என்று கூறினர். அதன்படி செல்லும்போது பழைய கோயிலைக் கண்டோம். பழைய கோயிலில் உள்ள இறைவன் சன்னதி கடலை எதிர்கொண்ட வகையில் அமைந்திருந்தது. அக்கோயிலுக்கு மிகவும் நெருக்கமாக கடலலைகள் வந்து செல்வதைக் காணமுடிந்தது. கோயிலின் முன் பக்கம் பெரும்பாலும் அரிக்கப்பட்ட நிலையில் இருந்தது. தமிழகத்தில் இந்த அளவிற்கு கடலுக்கு அருகில் வேறு கோயில் இருப்பதாகத் தெரியவில்லை.
கோயிலுக்குச் சென்ற நினைவாக அருகில் சில புகைப்படங்களை எடுத்தோம். அழிந்துகொண்டிருக்கும் கோயிலைப் பார்த்துவிட வேண்டும் என்ற நெடுநாள் கனவு நிறைவேறியது. எம்பெருமானை வணங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.
நன்றி
24 ஏப்ரல் 2019 பயணத்தில் உடன் வந்ததோடு, குறிப்புகள் எடுக்கவும், புகைப்படங்கள் எடுக்கவும் உதவிய என் மனைவி திருமதி பாக்கியவதி
துணை நின்றவை
வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014
பு.மா.ஜெயசெந்தில்நதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
பழைய கோவிலை ஒட்டியே புதுக் கோவில் நிர்மாணமா இல்லை அதையே புதுப்பித்திருக்கிறார்களா?
ReplyDeleteமாமல்லபுரத்தில் கடல் அருகில் (வெகு அருகில்) கோவில் உண்டு
பழைய கோயிலை ஒட்டியே புதிய கோயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.மாமல்லபுரத்தைவிடவும் இது நெருக்கமாகத் தெரிகிறது.
Deleteமுன்பு கடலிலிருந்து தள்ளியே அமைக்கப் பட்டிருந்திருக்கும். பிற்பாடு கடல் நெருங்கி வந்துவிட்டதோ என்னவோ...
ReplyDeleteநல்லதொரு தகவல்.சுவாரஸ்யமான பதிவு.
திருக்கடையூர் தற்போது நாகப்பட்டினம் மாவட்டமா?.. காலத்தின் மாற்றத்தில் தான் எவ்வளவு மாறுதல்கள்?
ReplyDeleteஅருள்மிகு மாசிலாமணீஸ்வர், இறைவி அறம் வளர்த்த நாயகி தரிசனம் பற்றிய விவரங்கள், புகைப்படங்கள் எல்லாமே சிறப்பு.
தரங்கம்பாடி என்றவுடன் டேனிஷ் கோட்டையும், Tranquebar என்று தமிழ் உச்சரிப்பு பாணியிலேயே ஆங்கில உச்சரிப்பும் நினைவுக்கு வந்தன.
பு.மா. ஜெயசெந்தில்நாதன் காஞ்சீபுரம் சங்கரமடம் பெரியவர் விருப்பத்தின் பேரில் பாடல் பெற்ற தலங்களை நேரில் தரிசித்து இந்த நூலை யாத்தார். பு.மா.ஜெ. மிகச் சிறப்பான குரல் வளம் கொண்டவர். ஆற்றொழுக்கான சொற்பொழிவு ஆற்றல் கொண்டவர். காஞ்சீபுரத்தில் இருந்த பொழுது அவரது ஆன்மிகச் சொற்பொழிவுகள் நிறையக் கேட்டிருக்கிறேன்.
கடல் அருகே கோவில் காணக்கிடைப்பது அரிது.
ReplyDeleteஅழகிய படங்கள். தங்களது ஆசை நிறைவேறியதில் மகிழ்ச்சி.
ReplyDeleteபடங்கள் அனைத்தும் அருமை ஐயா... கோவில் பற்றிய தகவல்களுக்கு நன்றி...
ReplyDeleteபழைய கோவில் கடல் உள்வாங்கி விட்டது அதையும் நாங்கள் பார்த்து இருக்கிறோம். இது புதிதாக கட்டப்பட்டது, அந்த கோவில் அருகிலும் இப்போது கடல் வந்து விட்டது.
ReplyDeleteநான் புதிதாக கட்டப்பட்ட போது போனதை பதிவு போட்டு இருக்கிறேன்.
பழைய கோவில் கடல் உள்ளே இருப்பதை சினிமாக்களில் பாடல் காட்சியில் காட்டுவார்கள். கோவில் விமானம் சாய்ந்து கிடக்கும் அதன் அருகில் காதலன், காதலி பாடுவது போல் பாடல் காட்சிகள் வரும்.
படங்கள் எல்லாம் அழகு.
https://mathysblog.blogspot.com/2013/04/blog-post_22.html
ReplyDeleteதரங்கம்பாடி
கோமதிக்கா உங்கள் சுட்டியும் சென்று பார்க்கிறேன்
Deleteகீதா
பழைய கோயிலும் கடல் உள்வாங்கிவிட்டது என்பதை உங்கள் மூலமாக அறிந்தேன். மேலும் கூடுதல் செய்திகளை மேற்கண்ட இணைப்பில் உங்கள் தளத்தின்மூலமாகக் கண்டேன். நன்றி.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
ReplyDeleteகடலின் அருகாமையில் அமைந்திருக்கும் திருசெந்தூர் கோவிலைப் போன்ற அருமையான கோவில் படங்கள். தகவல்கள். இந்த கோவிலைக் குறித்து இன்றுதான் அறிந்து கொண்டேன். ஆனால் கடல் அரிப்பால் சிதலமடைந்திருக்கும் கோவிலைப் காண வருத்தமாக உள்ளது. அதற்கு அருகிலேயே அதற்கிணையாக மற்றொரு சிவன் கோவில் அமைத்திருப்பது நல்ல விஷயம். கடலும் பழைய/புதிய கோவில் படங்கள் நன்றாக உள்ளன. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இதுவரை கேள்வி படாத ஒரு தகவல் சிறப்புமிக்கது
ReplyDeleteதரங்கம்பாடி என்பது ஆயிரம் வருட சரித்திர பின்புலம் கொண்டது.
ReplyDelete(மின்னஞ்சல்வழி: doraisundaram18@gmail.com) நல்லதொரு பதிவு ஐயா. சுந்தரம்.
ReplyDeleteநல்லதொரு பதிவு. திருச்செந்தூர்க் கோயிலும், கன்யாகுமரி கோயிலும் கூட கடலுக்கு அருகே அமைந்துள்ள கோயில்கள். இந்தக் கோயிலைப் பார்த்தது இல்லை. தரங்கம்பாடி போக வேண்டும் என்னும் ஆவல் உண்டு. திருக்கடையூருக்கு மட்டும் நாலைந்து முறை சென்றிருந்தும் தரங்கம்பாடி போக முடியலை! உங்கள் மூலம் தரிசனம் கிடைத்தது. நன்றி.
ReplyDeleteமார்ச் மாதம் நாகப்பட்டினம் சென்றிருந்தேன்! நேரமின்மையால் தரங்கம்பாடி பார்க்க முடியவில்லை! தங்களின் பதிவால் இறைவனை தரிசிக்க முடிந்தது. நன்றி!
ReplyDeleteபடங்கள் அத்தனையும் வெகு அழகு. கடல் பக்கம் என்றாலே அழகுதானே. கோயிலும் அழகாக இருக்கின்றது.
ReplyDeleteபடங்களும் விவரங்களும் வெகு சிறப்பு.
கீதா
தங்கள் துணைவியார் மிக நேர்த்தியாக புகைப்படம் எடுத்துள்ளார். பாராட்டுக்கள்.
ReplyDelete