ஆனந்த பவன் |
அலகாபாத்தில் நகரின் நடுவில் காட்சியளிக்கின்றது ஆனந்த பவன். அளவில் சிறியதாக இருந்தாலும், வேலைப்பாடு மற்றும் கலையழகு என்ற நிலையில் உயர்ந்த நிலையில் காணப்படுகிறது. மோதிலால் நேருவால் வடிவமைக்கப்பட்டு அவரால் ஆனந்த பவன் என்ற பெயரையும் பெற்றது இந்த பவன். வண்ணமயமான பலவகைப்பட்ட பூச்செடிகள், அழகான புல்வெளிகள், நெடிது உயர்ந்து வளர்ந்த மரங்கள் போன்றவற்றைக் கொண்டபரந்து விரிந்த தோட்டத்தின் நடுவில் பார்ப்பவர் மனதை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. பூங்காவிற்குள் இருக்கிறோமோ அல்லது அரண்மனைக்குள் வந்துள்ளோமோ என்று உள்ளே வந்தவரைச் சிந்திக்க வைக்கிறது.
ஆனந்த பவனின் பெருமை பேசும் 1927ஆம் ஆண்டின் பதிவு |
ஆனந்த பவனில் உள்ளே நுழைந்ததும் அனைவருடைய பார்வையையும் கவர்ந்திழுக்கும் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. நுழைவாயிலின் அருகே உள்ள அந்த கல்வெட்டில் இந்தியிலும் ஆங்கிலத்திலும் 1927இல் கட்டப்பட்ட இந்த ஆனந்தபவனானது செங்கல்லாலும், சுண்ணாம்பாலும் கட்டப்பட்டதன்று, நமது நாட்டு விடுதலைப் போருடன் தொடர்புடையது, மிக முக்கியமான முடிவுகள் இங்கிருந்து எடுக்கப்பட்டன, மிக முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் இங்கு நடைபெற்றன என்ற குறிப்பு விடுதலைக்கு முந்தைய மற்றும் விடுதலை பெற்ற காலத்திய இந்தியாவை நினைவூட்டுகிறது.
மோதிலால் நேரு காலத்திலிருந்து உள்ள இந்த பவன் தரைத்தளம், ஒரு மாடியுடன் கூடியதாக உள்ளது. இரண்டாவது மாடியில் ஒரு மூலையில் மண்டபம் போன்ற சிறிய அமைப்பு காணப்படுகிறது. இந்த பவனில் மோதிலால் நேரு, சொரூப ராணி, ஜவஹர்லால் நேரு பயன்படுத்திய அறைகள் மிகவும் நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து அறைகளும் கண்ணாடித் தடுப்புகளால் உள்ளே உள்ளது தெளிவாகத் தெரியும்படி அமைக்கப்பட்டுள்ளன. ஓர் அறை காங்கிரஸ் கமிட்டி கூடி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட அறையாக உள்ளது. இன்னொரு இடத்தில் மகாத்மா காந்தி பெரும்பாலும் இங்குதான் இருப்பார் என்ற குறிப்பு காணப்படுகிறது. நேரு எழுதிய நூல்கள் ஓர் அறையில் விற்பனைக்கு உள்ளன. வரலாற்று நிகழ்வுகளை எடுத்துக் கூறும் பல அரிய புகைப்படங்கள் பவனில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நேரு எழுதிய கடிதங்களை அங்கு உள்ளன. நேரு குடும்பத்தினர் பயன்படுத்திய பொருள்கள், படித்த நூல்கள், பேனா மற்றும் பரிசுப்பொருள்கள் மிகவும் அழகாகவும், கண்ணைக்கவரும்படியும் அமைக்கப்பட்டுள்ளன. நேர்த்தியான அறைகள், கலை நயமிக்க நாற்காலி, மேசை உள்ளிட்ட மரப்பொருள்கள், நெடிதுயர்ந்த கதவுகள், அழகான தூண்கள், கண்ணைக் கவரும் முகப்பு, பவனைச் சுற்றிச் செல்லும் வகையில் அமைந்துள்ள தளம் என்ற நிலைகளில் சிறப்பான கட்டடமாக அது உள்ளது. நேரு குடும்பத்தார் பயன்படுத்திய அறைகளை உள்ளதுஉள்ளபடியே காட்சிப்படுத்தப்பட்டுள்ள விதத்தின் மூலமாக அவர்களுடைய கலை ரசனையை உணரமுடிகிறது. இந்திரா காந்தி பிறந்ததும், அவருக்குத் திருமணம் ஆனதும் ஆனந்த பவனில்தான்.
இந்திரா பிரியதர்ஷினி காந்தியின் திருமணம் |
ஆனந்த பவனில் ஜம்புலிங்கம் பாக்கியவதி |
நேருவின் அஸ்தி வைக்கப்பட்டது பற்றிய பதிவு |
நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டு வரும் ஆனந்த பவனின் நுழைவாயிலின் அருகே ஓர் இடத்தில் "நேருவின் அஸ்தி (திரிவேணி) சங்கமத்தில் கரைக்கப்படும் முன்பாக இங்கே வைக்கப்பட்டிருந்தது" என்று இந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட குறிப்பு காணப்படுகிறது. நேருவின் ஆசை பூர்த்தியானதை இங்கு வைக்கப்பட்டிருந்த சாம்பல் நினைவுபடுத்தியது. மோதிலால் நேரு காலந்தொட்டு இருந்துவருகின்ற ஆனந்த பவனில் மிக முக்கியமான அரசியல் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பாக காங்கிரஸின் பெரும்பாலான நடவடிக்கைகள் இங்கிருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேசத்தலைவர்கள் பயன்படுத்திய பொருள்கள் ஒரே இடத்தில் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நேருவும் காந்தியும் விடுதலைப் போராட்ட வீரர்களுடனும் பெருந்தலைவர்களுடன் உரையாடிய பெருமை கொண்ட இடம். இவ்வாறான பல பெருமைகளைக் கொண்ட ஆனந்த பவன் 1970இல் இந்திரா பிரியதர்ஷினியால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
அருங்காட்சியகமாக ஆக்கப்பட்டு பலர் வந்து கண்டுகளிக்கும் அளவு மிகவும் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. வட இந்தியப் பயணத்தில் ஆனந்த பவனத்திற்கு சென்ற நினைவுகள் என்றென்றும் எங்கள் நெஞ்சில் ஆனந்தமாக இருக்கும்.
---------------------------------------------------------------------------------------------------
புகைப்படங்கள் எடுக்க உதவி : திருமதி கண்மணி இராமமூர்த்தி, திருமதி பாக்கியவதி
---------------------------------------------------------------------------------------------------