28 July 2015

வெளிநாட்டு நாளிதழ்களில் அப்துல் கலாம்

முன்னாள் குடியரசுத்தலைவர் மேதகு ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்கள் இயற்கையெய்திய செய்தியை வெளிநாட்டு நாளிதழ்கள் வெளியிட்டுள்ளன. இந்தியாவின் மிகச் சிறந்த, அனைவராலும் நேசிக்கப்பட்ட அவரைப் பற்றிய செய்தி வெளிவந்துள்ள சில நாளிதழ்களைப் பார்ப்போம். அப்பெருமகனாருக்கு அஞ்சலி செலுத்துவோம். 

கார்டியன், லண்டன்
Guardian : Former Indian president APJ Abdul Kalam has died, aged 83
ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்தபின்னர் அவர் பல பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று மாணவர்களோடு உரையாடி அவர்கள் தம் கனவுகளை செயல்படுத்த தூண்டுகோலாக இருந்தார்.....
தன் பணியை நிறைவு செய்துவந்த பின்னரும் அவருக்கு ஒவ்வொரு நாளும் பள்ளி மாணவர்களிடமிருந்தும், இளைஞர்களிடமிருந்தும் அறிவுரை கேட்டு மின்னஞ்சல்கள் வந்துகொண்டேயிருந்தன. பெரும்பாலானவர்களுக்கு அவர் மறுமொழி அனுப்பிவிடுவார்...........
எளிய குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தந்தைக்கு பல படகுகள் இருந்தன. அவர் அதனை உள்ளூரிலுள்ள மீனவர்களுக்கு வாடகைக்கு விட்டிருந்தார். கலாம் தன்னை இந்தியாவில் உருவானவர் என்று கூறிக்கொள்வார். அவர் வெளிநாட்டில் எவ்வித படிப்போ, பயிற்சியோ மேற்கொள்ளவில்லை....
டெய்லி மெயில், லண்டன்
Mail, London: Abdul Kalam was a true Karam Yogi and raised the status of the presidency
1998இல் பொக்ரான் அணுகுண்டு சோதனைக்கு முக்கிய காரணமாக இருந்தார். சுகோய் விமானத்தில் முதன்முதலாகப் பறந்தவர், நீர்மூழ்கிக்கப்பலுக்குள் சென்றவர், எல்லைப்பகுதியில் உள்ள சியாசன் பனிப்பகுதியைப் பார்வையிட்டவர் என்ற பெருமைகளைக் கொண்டவர். 90 வருட இந்தியன் அறிவியல் காங்கிரசில் சொற்பொழிவாற்றிய முதல் குடியரசுத்தலைவர் என்ற சிறப்பைப் பெற்றவர்....மாணவர்களுடன், குறிப்பாக பள்ளி மாணவர்களுடன், விவாதிக்கும் எந்த ஒரு சூழலையும் பயன்படுத்திக்கொள்வார். அவர்களை அதிகம் கனவு காணச்சொல்வார். அப்போதுதான் அவர்கள் வாழ்வில் சாதனையாளர்களாக ஆக முடியும் என்பார்.......

பல அரசியல்வாதிகளும் தலைவர்களும் தம்மை ஆம் ஆத்மி என்று கூறிக்கொள்வர். ஆனால் மக்களுக்காக ஒருவர் உண்டென்றால் அவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் மட்டுமே. எளிய குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் உண்மையான மக்கள் ஜனாதிபதியான பெருமை அவருக்கு உண்டு..... இந்தியாவின் மிகச் சிறந்த ஜனாதிபதிகளில் ஒருவர். அவர் ஒரு அரசியல் ஜனாதிபதி அல்லர். தேசப்பற்று மிக்க இவர், தன் நாடு பலமான நாடாக இருக்கவேண்டும் என்று விரும்பினார். தமிழ்ப்பண்பாட்டில் ஊறித்திளைத்தவர். தமிழ்க் கவிதைகள் எழுதினார், ருத்ர வீணை வாசித்தார். ஒருவருடைய மரணத்திற்குப் பிறகு கர்மயோகி என்று கூறப்படுவதுண்டு.  அவ்வாறு இருப்பது உண்மையாயின் கலாம்தான் உண்மையான கர்மயோகி (ஆங்கிலத்தில் கரம்யோகி என்று உள்ளது)

இன்டிபென்டண்ட், லண்டன்
Independent: APJ Abdul Kalam: Physicist known as the father of India's missile programme who also served as the country's President

மக்கள் ஜனாதிபதி என்ற பெருமைக்குரிய இவர் கிராமப்புறத்திலுள்ளோரின் முன்னேற்றத்திற்காக தன் அறிவியல் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தியுள்ளார்.  நாட்டின் ஜனாதிபதியாக இருந்த இவர், இந்திய ஏவுகணைத்திட்டத்தின் தந்தை என்றும் அழைக்கப்பட்டார்..........

இவர் முதன் முதலாகப் பணியில் சேர்ந்த காலகட்டத்தில் இந்திய ராணுவத்திற்காக ஒரு ஹெலிகாப்டரை வடிவமைத்தார்.................போர் விமானியாக ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டாலும் குறுகிய இடைவெளியில் அவ்விலக்கை அடையமுடியாமல் போனார்..........

டான், பாகிஸ்தான்
Dawn: Former Indian president Abdul Kalam dies aged 83
Ignited Minds என்னும் நூலை எழுதிய கலாம் இந்தியாவின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் அதிக அக்கறை காட்டினார். மேற்கத்திய நாடுகளிலிருந்து விலையுயர்ந்த இறக்குமதிகளைத் தவிர்க்கவேண்டும் என்றார். நாட்டின் ஏவுகணைத்தந்தை என்று அழைக்கப்படும் இவர் இரண்டாவது முறை இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியபோது பெரும்பங்காற்றியுள்ளார். 1998இல் நடைபெற்ற அணுகுண்டு சோதனை நடத்த உதவியாக இருந்த நிலையில் பெரும் புகழ் பெற்றார்.

நியூயார்க் டைம்ஸ், அமெரிக்கா
New York Times: APJ Abdul Kalam, Ex-President who pushed a Nuclear India, Dies at 83
Ignited Minds இந்தியாவின் 11ஆவது ஜனாதிபதியான ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் இந்தியாவின் அணு ஆயுதத்திட்டத்தை முன்னுக்கு எடுத்துச்சென்ற நிலையில் நாட்டின் மிக முக்கியமானவராகக் கருதப்பட்டார். ஏவுகணை மனிதர் என்றழைக்கப்பட்ட அவர் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளால் மதிக்கப்பட்டார். அவரது மரணம் இந்தியாவிற்கு பெரும் சோகத்தைத் தந்துவிட்டது.

எளிமையான தென்னிந்திய குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை மீனவர்களுக்குப் படகை வாடகைக்கு விட்டவர்...கலாம் மிகச் சிறந்த மாணவராகத் திகழ்ந்தவர்....

அணுகுண்டு சோதனைக்குப் பின் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் அவர், 2500 ஆண்டுகளாக இந்தியா எந்த ஒரு நாட்டையும் பிடித்ததில்லை. மாறாக பிற நாட்டவர் இங்கு வந்திருக்கின்றனர் என்றார்........

ஜனாதிபதியான பின்னர் தன்னுடைய ஐந்தாண்டுப் பதவிக் காலத்திற்குள் 5,00,000 இளைஞர்களை நேரடியாகச் சந்திக்க இலக்கு வைத்தார்...பலர் இவரை கலாம் மாமா என்றனர்.இந்தியாவின் முதல் பிரதமரான நேரு அதற்கு முன்னர் மாமா என அழைக்கப்பட்டார்...கலாமின் பேச்சில் ஒரு உத்வேகத்தைக் காணமுடியும்....


வாஷிங்டன் போஸ்ட், அமெரிக்கா
1998இல் நடைபெற்ற அணுகுண்டு சோதனையின்போது மிக முக்கியமான பங்காற்றியவர். அச்சோதனையின் காரணமாக இந்தியாவின்மீது பல பொருளாதாரத்தடைகள் விதிக்கப்பட்டன. ஆனால் அச்சோதனை அவரை மிகச் சிறந்த கதாநாயகராக ஆக்கிவிட்டது..........

கனவு காணுங்கள், கனவு காணுங்கள், கனவு காணுங்கள், அக்கனவுகளை நினைவாக்குங்கள். அந்நினைவுக்கு செயல் வடிவம் கொடுங்கள் என்றார் அவர்.....
------------------------------------------
எங்களை கனவு காணவைத்துவிட்டு, கண்ணீரில் விட்டுவிட்டு சென்றுவிட்டீர்களே ஐயா. அனைவருடைய இதயங்களிலும் தாங்கள் குடியிருக்கின்றீர்கள். தாங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழ்ந்தோம் என்பது எங்களுக்குப் பெருமையே. தமிழ்நாட்டின் பெருமையையும், தமிழின் பெருமையையும், இந்தியாவின் பெருமையையும் உலகளவில் உயர்த்திப் பிடித்தவரே. உங்களுக்கு நிகர் நீங்களே. உங்களால் நீங்கள் ஏற்ற பதவிகள் பெருமை பெற்றன. உங்களால் நாங்கள் பெருமையடைந்தோம். இவ்வாறாக ஒரு மனிதன் இப்பூமியில் பிறந்து வாழ்ந்து மக்களின் இதயங்களில் கலந்துவிட்டார் என்று பல தலைமுறைகள் தங்களின் பெயரைக் கூறிக்கொண்டேயிருக்கும். 

எனது நூலைப் பாராட்டித் தாங்கள் எழுதிய கடிதம் அலுவலகத்தில் நான் பணியாற்றுமிடத்திலும், எங்களது இல்ல நூலகத்திலும் எப்பொழுதும் இருந்துகொண்டு எங்களை மென்மேலும் கனவு காண வைத்துக்கொண்டிருக்கும். கனவுகளை நினைவாக்குவோம். வாழ்க தங்களின் புகழ்.
------------------------------------------

நன்றி :  கார்டியன், மெயில், டான், இன்டிபென்டண்ட், நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் 

Courtesy: The Guardian, The Mail, Dawn, The Independent, New York Times and Washington Post

பத்திரிக்கை.காம். இதழில் படிக்க
வெளிநாட்டு இதழ்கள் கலாமுக்கு அஞ்சலி

22 July 2015

Charles Chaplin: My Autobiography

அண்மையில் நான் படித்த நூல் Charles Chaplin My Autobigraphy. நான் படித்த சுய வரலாற்று நூல்களில் என்னைக் கவர்ந்தது இந்நூல். சார்லி சாப்ளின் என்றால் நாம் அறிந்தது நகைச்சுவையே. ஆனால் அவரது வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது அவர் மிகப்பெரிய கலாரசிகனாக இருந்ததை அறியமுடிந்தது. இளமைப்பருவம் முதல் அவர் வறுமையிலும் சோகத்திலும் உழன்றதை அறிந்தபோது  நம்மைச் சிரிக்கவைத்தவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா எனச் சிந்தித்தேன். சாதனை படைத்தவர்கள் பலருடைய வாழ்க்கை மிகவும் சோகமாகவே இருந்துள்ளது. அந்த சோகத்தைச் சரிசெய்வதற்காகவோ, மறப்பதற்காகவோ அவர்கள் தம்மை ஒரு துறையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு பரிணமித்துள்ளார்களோ என எண்ணத்தோன்றுகிறது.


"என்னுடைய தாயாரின் குரல் வளம் சரியாக இல்லாத நிலையில் எனது ஐந்து வயதில் நான் மேடை ஏறும் நிலை ஏற்பட்டது.  மேடையில் என் அம்மா பாட முயற்சிக்கிறார். முடியவில்லை. ரசிகர்கள் கூச்சலிடுகிறார்கள். அங்கு என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. என் அம்மா மேடையைவிட்டு இறங்கினார்.  என் அம்மாவின் நண்பர்களுக்கு முன்பாக நான் நடித்ததை முன்பு பார்த்திருந்த நாடகப் பொறுப்பாளர் என்னை என் மேடையில் அம்மா இருந்த இடத்திற்கு என் கையைப் பிடித்து அழைத்துச்சென்றார்.  என்னைப் பற்றி ஏதோ கூறிவிட்டு மேடையில் என்னை தனியாக விட்டுவிட்டு அவர் இறங்கினார். எங்கு பார்த்தாலும் ஒளி வெள்ளம். அனைவரும் அறிந்திருந்த ஜாக் ஜோன்ஸ் என்ற பாடலை நான் பாட ஆரம்பித்தேன். பாடிக்கொண்டிருக்கும்போதே மேடையை நோக்கி பணத்தாள்கள் வந்துவிழுந்தன. அப்போது நான் பாடுவதை உடனே நிறுத்திவிட்டு, பணத்தைப் பொறுக்கி எடுத்தபின்னர்தான் பாடுவேன் என்றேன். என்னுடைய இந்த செய்கை ரசிகர்களிடம் சிரிப்பை வரவழைத்துவிட்டது. பொறுப்பாளர் கைக்குட்டையை எடுத்துவந்து பணத்தை எடுக்க உதவி செய்தார். அவர் அதனை வைத்துக்கொள்வாரோ என்று எனக்குப் பயம் வந்தது. என்னுடைய இந்த நினைப்பை ரசிகர்களிடம் கூறவே, அவர்கள் அதிகம் சிரித்தனர். அப்போது நான் அவர் பின்னாலேயே சென்று கொண்டிருந்தேன். அம்மாவிடம் அவர் அதனைக் கொடுத்துத் திரும்பும் வரை அவரைப் பின் தொடர்ந்தேன். பின்னர் மறுபடியும் மேடைக்கு வந்து தொடர்ந்து பாடினேன். எனக்கு எந்தவித கூச்சமும் இல்லை. ரசிகர்களிடம் பேசினேன், நடனமாடினேன், அம்மா பாடுவதைப் போலப் பாடிக் காண்பித்தேன். இவ்வாறான உத்தி ரசிகர்களின் மனதில் ஒரு தாக்கத்தை உண்டாக்கியதை உணர்ந்தேன். மறுபடியும் ஆரவாரம், சிரிப்பு. மேடையில் பணம் அதிகமாக வந்துவிழுந்தது. அம்மா மேடைக்கு வந்து சிதறிக்கிடந்த பணத்தை சேகரித்து உதவினார். அந்த இரவுதான் நான் மேடையில் தோன்றிய முதல் நாள். என் அம்மாவிற்கோ அதுவே மேடையில் கடைசி நாள்." (பக்.17-19)

"....நான் பல வேலைகள் பார்த்துள்ளேன். இருந்தாலும் நடிகனாக வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தொடர்ந்து இருந்தது....." (ப.76)

"கலை என்ற சொல் என் தலையிலோ, அகராதியிலோ இருந்ததில்லை. நாடகம் என்பது வாழ்வாதாரம், வேறு எதுவுமில்லை.....(ப.93)

"1909இல் பாரிஸ் சென்றேன். ஒரு வெளிநாட்டிற்குப் போவது என்பது எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது தெரியுமா? முதன்முதலில் பிரான்சை பார்த்ததும் எனக்கு மிகவும் பிடித்துப்போனது. என் கற்பனைக்கு விருந்தாக இருந்தது. ...சொல்லப்போனால் என் தந்தை சிறிதளவில் பிரான்சைச் சேர்ந்தவர் என்ற நிலையில் சாப்ளின் குடும்பம் என்பது பிரான்சிலிருந்து வந்த குடும்பமே.....(ப.108)

"...முதன்முதலாக என்னை போஸ்டரில் தனியாகப் பார்த்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை...."  (ப.128)

"அக்காலத்தில் இயக்கம் என்பது எளிதானதே. வலப்புறத்திலிருந்து இடப்புறத்தைத் தெரிந்துகொண்டு உள்ளே வரும் வழி, வெளியே செல்லும் வழியை உறுதி செய்துகொள்ளவேண்டும். ஒரு காட்சி நிறைவில் ஒருவர் வலப்புறமாகச் சென்றால் மற்றொருவர் இடப்புறமாக வருவார். காமராவை நோக்கி ஒருவர் வெளியே சென்றால் அடுத்த காட்சிக்கு ஆயத்தமாக வருபவர் கேமராவின் பக்கம் தன் பின் புறம் அமைவது போல வரவேண்டும். சொல்லப்போனால் இவையெல்லாம் அடிப்படை விதிகள்.... (ப.152)

"எனக்குத் தெரிந்த யாரையும் சந்திக்காமல் இரு நாள்கள் நியூயார்க்கில் இருந்தேன். ஒரு பக்கம் மகிழ்ச்சி, மறுபுறம் வேதனை.....ஒப்பந்தம் கையெழுத்தாவதற்குள் என் மன நிலை இவ்வாறு இருந்தது.150000 டாலருக்கான காசோலையைப் பெறும்போது புகைப்படம் எடுததனர். டைம்ஸ் ஸ்கொயரில் கூட்டத்தின் நடுவே நின்றேன். மின்னொளியில் டைம்ஸ் கட்டடத்தில் 'சாப்ளின் முயூட்சுவல் நிறுவனத்தோடு ஓராண்டிற்கு 6,70,000 ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளார்'   என்ற செய்தி ஓடிக்கொண்டிருந்தது. அது எனக்கு அல்ல யாரையோ அது குறிப்பிடுகிறது என எண்ணிக்கொண்டே நான் நின்றேன். மனதை என்னன்னவோ செய்தது..  (ப.178)

"...குறுகிய காலத்தில் நான் கோடீஸ்வரனாகிவிடுவேன். எனது பணப்பெட்டியில் பணம் நிரம்ப ஆரம்பித்துவிட்டது. ஒரு பத்தாயிரம் என்பது சில வாரங்களில் பல பத்தாயிரங்களானது..........  (ப.188)

" ...வாழ்க்கையில் கஷ்டப்பட ஆரம்பித்தேன். பணம் அதிகமாக சம்பாதிக்க ஆரம்பித்தேன். சரி. இதனால் என் வாழ்க்கை முறை மாறிவிட்டதா?...அதனை நிரூபிக்க ஏதாவது செய்தாக வேண்டுமே. ஒரு செயலர், ஒரு கார்..இல்லை இன்னும் மேல்... என்ற நிலையில் வசதியை மேம்படுத்தவேண்டுமே. ஒரு நாள் கார் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காட்சியறை வழியாகச் சென்றேன். அமெரிக்காவின் அந்த நாள்களின் சிறந்த காரான எழுவர் இருக்கை கொண்ட லோகோமொபைல் கார் காட்சியறையில் விற்பனைக்குத் தயாராக இருந்தது. கடைக்குள் சென்று, இந்த கார் என்ன விலை? என்றேன். 4900 டாலர் என்றார் கடைக்கார். அதனை வாங்கிக்கொள்கிறேன் என்றேன். கடைக்காரர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். உடனே விற்பனை என்றதும் கடைக்காரர் காரின் இன்ஜினை நீங்கள் பார்த்து சோதனையிட வேண்டாமா? என்றார். அதைப் பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது என்று கூறிக்கொண்டே காரில் அனுபவம் வாய்ந்தவன் போல டயரினை அழுத்திப் பார்த்தேன். வியாபாரம் முடிந்தது. ஒரு துண்டுத்தாளில் எனது பெயர் எழுதப்பட்டது. கார் எனக்குச் சொந்தமானது..... (ப.190)

தாயாரின் உடல் நலம் குறித்து படும் வேதனை, உடன் பணியாற்றியவர்களைப் பற்றி அவர் பெருமையாகக் கூறல், பழகும் பெண்களை வர்ணிக்கும் முறை, நடிப்பு என்பதற்கப்பால் தொழில்நுட்பத்திற்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம், மனைவியரால் ஏற்பட்ட மன வேதனை, தொழில்ரீதியாக எதிர்கொண்ட சிரமங்கள், ஒவ்வொரு நாட்டிலும் எதிர்கொண்ட அனுபவங்கள், இரு உலகப்போரின் போது சந்தித்த நிகழ்வுகள், அரசியல்வாதிகளால் எதிர்கொண்ட பிரச்சனைகள், தான் படித்த படங்களைப் பற்றிய அலசல், வழக்கில் சிக்கிக்கொள்ளல், நிம்மதியற்ற வாழ்க்கை என்ற நிலையில் பலவற்றை அவர் எழுதியுள்ள விதம் படிப்பவர் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். ஒவ்வொரு சொல்லும் அர்த்தத்துடன் எழுதப்பட்டிருக்கும். ஒவ்வொரு தலைப்பிலும் விவாதிக்கொண்டே  போகலாம். 

அவருடைய படங்களில் The Kid, The Gold Rush, The Circus, Modern Times, The Great Dictator   உள்ளிட்ட பலவற்றை நான் பார்த்துள்ளேன். நம்மை முற்றிலுமாக வேறு ஒரு புதிய உலகிற்கு அழைத்துச்சென்றுவிடுவார், தன்னுடைய அசாத்திய நடிப்பின் மூலமாக. அவர் பேசும்படத்தைவிட பேசாப்படங்களையே அதிகம் நேசித்தார். ரசனையை நேசிப்பவர்களும், வாழ்க்கையை அதிகம் நேசிப்பவர்களும், எச்சூழலையும் சர்வசாதாரணமாக எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தைப் பெற விரும்புபவர்களும் அவசியம் படிக்கவேண்டிய நூல். 

Charles Chaplin: My Autobiography, Modern Classics, Penguin Books, 2003, UK $ 10.99  

16 July 2015

கும்பகோணம் சார்ங்கபாணி கோயில் கும்பாபிஷேகம்

அந்த நாள் ஞாபகம் வந்ததே, நண்பனே
திங்கட்கிழமை (சூலை 13, 2015) கும்பகோணம் சார்ங்கபாணி கோயில் கும்பாபிஷேகத்திற்குச் சென்றுவந்து முகநூலில் சில புகைப்படங்களை வெளியிட்டபோது நாக்பூரில் உள்ள, எனது கல்லூரித் தோழர் சந்தானகிருஷ்ணன் "அந்த நாள் ஞாபகம் வந்ததே, நண்பனே" என்று கருத்துக் கூறியிருந்தார். அவருக்காகவும், கும்பாபிஷேகம் பற்றிய பதிவை எழுதுங்கள் என்று கூறிய தஞ்சையம்பதிக்காகவும் இப்பதிவு.


கும்பகோணத்திலுள்ள அனைத்துக் கோயில்களுக்கும் நாங்கள் சென்றுள்ளோம். என்னை அந்நாட்களுக்கு இட்டுச்சென்றன அவரது எழுத்துக்கள். கல்லூரி நாள்களில் பாடம் படிக்க நாங்கள் செல்வது கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் பிரகாரம். பின்னர் நான் சென்றது சார்ங்கபாணி கோயில் பிரகாரம். அவ்வளவு அமைதியான இடங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு அவ்வாறாக ஒரு முறை சார்ங்கபாணி கோயில் சென்றபோது கும்பகோணம் திருமஞ்சன வீதி ஆரம்பப்பள்ளியின் உதவித்தலைமையாசிரியர் என்னை பிரகாரத்தில் பார்த்துவிட்டு அதிகம் விசாரித்தார். அந்த அளவு கோயில்களுடனான எங்களது பிணைப்பு அதிகமே. கோயிலுக்குச் செல்வோம், வாருங்கள்.

சார்ங்கபாணி
சார்ங்கம் என்னும் வில்லுடன் பெருமாள் விமானத்தில குடந்தை வந்து கோமளவல்லியை ஏற்றுக்கொண்டதாகக் கூறுவர். அதனால் அவரை சார்ங்கபாணி என்றழைப்பர். சிலர் தவறாக சாரங்கபாணி என்று கூறுகின்றனர். 

திவ்யப்பிரபந்தம்
அண்மைக்காலமாக திவ்யப்பிரபந்தம் படித்துவருவதால் குடந்தைக்கிடந்தான் என்றாலே பெருமாளது நினைவு வரும். நாலாயிரத்திவ்யப் பிரபந்தத்தைத் தொகுக்கக் காரணமாக இருந்த பெருமாள் இவரே என நினைக்கும் போது மெய் சிலிர்க்கும். 

கோயில்
உயர்ந்த அழகான ராஜகோபுரம். திருவரங்கம், திருவில்லிப்புத்தூரை அடுத்து அமைந்துள்ள பெரிய கோபுரம். பார்க்கப் பார்க்க பார்த்துககொண்டே இருக்கலாம். கருவறை மண்டபம் தேர் போன்ற வடிவில் கண்கொள்ளாக் காட்சி. சயனக்கோலத்தில் பெருமாளின் அழகிற்கு ஈடு இணையில்லை. இக்கோயிலிலுள்ள சித்திரைத்தேர் தமிழகத்தின் மிகப் பெரிய தேர்களில் ஒன்றாகும். இந்தத் தேரை திருமங்கையாழ்வாரே இறைவனுக்கு அர்ப்பணித்ததாகக் கூறுவர். 

திருமழிசையாழ்வார் இப்பெருமாளை நோக்கி இலங்கைக்கு நடந்த வருத்தத்தால் கால்கள் நொந்து களைத்துப் போய் படுத்துள்ளீரோ, உலகைத் தாங்கிய களைப்போ என்று கேட்டுக் கிடந்தவாறே எழுந்திருந்து பேசு கேசவனே என்று பாடியதும், சற்றே எழுகின்ற கோலத்தில் புஜத்தைச் சாய்த்து எழுந்திருக்க முயல்வதுபோல் காட்சி தந்தாராம். இன்றும் இதுபோல் சாய்ந்தவாறே எழுந்திருக்க முயலும் கோலத்தில்தான் காட்சிதருகிறார் (சாய்ந்து எழ முயலும் திருக்கோலம்) இருக்கிறார். 

கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக நாளன்று விடியற்காலை கிளம்பி கும்பகோணம் சென்றேன். கும்பேஸ்வரர் கோயில் மொட்டைகோபுரம் நிறுத்தத்தில் இறங்கி பொற்றாமரைக்குளம் வழியாகக் கோயிலை நோக்கிச் சென்றேன். அங்கிருந்து கோபுரங்களைக் கண்டேன். 

பொற்றாமரைக்குளத்திலிருந்து கோயில் தோற்றம்

ஒரே இடத்தில் நான்கு விமானங்களும், கோபுரமும்
பொற்றாமரைக்குளத்தருகே உள்ள வாயிலின் வழியாக சார்ங்கபாணி கோயிலுக்குள் நுழைந்தேன். பிரகாரத்திலிருந்து உள்ளே உள்ள சன்னதிகளைக் கண்டேன். அங்கிருந்து முதலில் ராஜகோபுர தரிசனம் கண்டேன்.

பிரகாரத்திலிருந்து ராஜ கோபுரம் தோற்றம்
பிரகாரத்தில் சுற்றிவிட்டு உள்ளே யாகம் நடந்த இடத்திற்குச் சென்று வணங்கினேன். எங்கு பார்த்தாலும் பக்தர்கள் போய்க்கொண்டும், வந்துகொண்டும் இருந்தனர்.  




யாகசாலைக்காட்சிகள்
உள்ளே சன்னதிக்குள் சென்றேன். பெருமாளை நின்று வரிசையில் பார்க்கலாமென்றால் ஒரே கூட்டம். பெருமாள் சன்னதியையும், தாயார் சன்னதியையும் பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். 


தாயார், பெருமாள் சன்னதிக்கு செல்லும் வரிசை
 ஆங்காங்கு கூட்டம். சிறிது நேரம் நின்றுவிட்டு பின்னர் கருவறையைச் சுற்றி வந்து தேர் போன்ற வடிவில் யானை இழுத்துச் செல்லும் அந்த அரிய காட்சியைக் கண்டேன், முன்னர் பல முறை நானும் நண்பர்களும் ரசித்த காட்சி.

தேரை யானை இழுத்துச்செல்லும் அரிய காட்சி (பெருமாள் கருவறை)

பின்னர் பிரகாரத்தில் இருந்து கோபுர தரிசனம் கண்டேன். அங்கிருந்து முன் மண்டபம்  நோக்கிச் சென்றேன். 

முன்மண்டபம்
வெளியே வந்து கும்பாபிஷேகக் காட்சியைக் கண்டுகளித்தேன். மகாமகத்தை வரவேற்க ஒவ்வொரு கோயிலாக கும்பாபிஷேகம் ஆகவுள்ள நிலையில் சார்ங்கனைக் கண்ட மன நிறைவுடன் தஞ்சாவூர் திரும்பினேன் 


கும்பாஷேகம் கண்டுள்ள ராஜகோபுரம்

நன்றி: டாக்டர் ஆ.எதிராஜன், 108 வைணவ திவ்ய தேச ஸ்தல வரலாறு, வைணவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், காரைக்குடி, 2002

தஞ்சையம்பதி திரு துரை செல்வராஜ் அவர்கள் எழுதியுள்ள பதிவைப் பின்வரும் இணைப்பில் காணலாம்.

09 July 2015

உடையார் கோயில் கரவந்தீஸ்வரர் கோயில்

தேவாரம் பாடாத கோயில் 


காவிரியின் வடகரையிலும், தென்கரையிலும் தேவாரப் பாடல் பெற்ற கோயில்களை அதிகமான எண்ணிக்கையில் காணமுடியும். தேவாரப் பாடல்கள் கிடைக்கப்பெறாத பல சிவன் கோயில்களும் உள்ளன. அவ்வாறான ஒரு கோயிலே கரவந்தீஸ்வரசுவாமி கோயில்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் உள்ள உடையார்கோயில் என்னும் சிற்றூரில் கரவந்தீஸ்வரசுவாமி கோயில் என்னும் சிவன் கோயில் உள்ளது. தஞ்சாவூர் நாகப்பட்டினம் சாலையில் 18 கிலோமீட்டர் தொலைவில் அம்மாப்பேட்டைக்கு முதல் நிறுத்தத்தில் உள்ள இக்கோயில் இரு வகைகளில் சிறப்பு பெறும் கோயிலாகும். ஒரு காலத்தில் ஏரியின் நடுவில் இருந்த சிறப்பையும், சோழர் காலத்தில் கோயில்கள் கட்ட கற்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன என்பதற்கான விடையையும் கொண்ட சிறப்பையும் கொண்டது இக்கோயில்.


தற்போது குளமாகிவிட்ட பேரேரி
இக்கோயில் முன்னர் திரிபுவனமாதேவிப் பேரேரியின் நடுவில் இருந்ததாக ஒரு கல்வெட்டு கூறுகிறது. அக்கல்வெட்டைப் பற்றி கரந்தைச் செப்பேடு மிகச் சிறப்பாகக் கூறுகிறது. இக்கோயில் முன்பு ஏரியின் நடுவில் தீவு போன்ற அமைப்பில் இருந்துள்ளது. திருக்கிளாஉடையார் மகாதேவர் கோயில் எனப்படும் இக்கோயிலின் ஒரு புறம் தூர்க்கப்பட்டு அக்கோயிலுக்குச் செல்வதற்கான வழித்தடத்தினை அமைத்துள்ளனர். நாளடைவில் ஏரி சுருங்கி, குளமாக ஆகிவிட்டது. இக்குளம், கிழக்கு நோக்கி அமைந்துள்ள கோயிலின் முன்பாகக் காணப்படுகிறது.


கற்கள் வந்தது எப்படி?
பாறைகள், மலைகள் இல்லாத தஞ்சாவூர் மாவட்டத்தில் காணப்படும் கற்றளிகளை உருவாக்க புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த நொடியூர்ப்பட்டணத்து கிள்ளியூர் மலையிலிருந்து கற்களைக் கொண்டு வந்ததற்கான சான்று இக்கோயிலில் உள்ளதாக வரலாற்றறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியன், தஞ்சாவூர் என்ற நூலில் கூறுகிறார்.

“தஞ்சைக்கு அருகேயுள்ள உடையார் கோயில் சிவாலயத்திற்கு மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் (18ஆம் ஆட்சியாண்டு, கி.பி.1196) கல் எங்கிருந்து கொணரப்பெற்றது என்பதனை, நொடியூர் பட்டணத்து கிள்ளியூர் மலையிலிருந்தும் சிலை கொண்டு வந்து... என்ற கல்வெட்டுக்குறிப்பால் அறியலாம். நொடியூர் எனும் ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில் குன்னாண்டார் கோயில் பகுதியில் உள்ளதாகும். அனைத்தையும் நோக்கும்போது தஞ்சைப் பெரிய கோயிலுக்கும் நொடியூர்ப்பட்டணத்துக் கிள்ளியூர் மலைப்பகுதியிலிருந்து கற்கள் வந்திருக்கலாம் எனக் கொள்ளமுடிகிறது” என்கிறார் அவர்.

ஆட்கொண்டாரும் உய்யக்கொண்டாரும்
இத்தகு பெருமை பெற்ற இக்கோயிலின் வாயில் முகப்பைக் கடந்து உள்ளே பலிபீடமும், நந்தியும் உள்ளன. தொடர்ந்து ராஜகோபுரம். அதற்கடுத்து உள்ள முன் மண்டபத்தை அடுத்து கருவறை அமைந்துள்ளது. அங்குள்ள இறைவன் கரவந்தீஸ்வரர் லிங்கத்திருமேனியாக உள்ளார். கருவறையில் வலது புறம் ஆட்கொண்டாரும், இடது புறம் உய்யக்கொண்டாரும் உள்ளனர்.

கருவறையைச் சுற்றியுள்ள பிரகாரத்தைச் சுற்றி வரும்போது வரிசையாக முக்குருணி அரிசி விநாயகர், பிரம்மபுரீஸ்வரர், ஆனந்தபுரீஸ்வரர், காசி விஸ்வநாதர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், வேதபுரீஸ்வரர், சதுர்வேதபுரீஸ்வரர், பூலோகநாதர், கஜலட்சுமி ஆகியோர் உள்ளனர். இப்பிராகாரத்தில் பிரதான விநாயகர் சன்னதி தனியாக உள்ளது.

அச்சன்னதியில் அனுராதா க்ரமன சரஸ்வதி உள்ளார். கருவறையின் பின்புறம் முறையே விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. இக்கோயிலின் தலவிருட்சமான களாச்செடி பிரகாரத்தில் காணப்படுகிறது.


முன்மண்டபச் சிற்பங்கள்
பிராகாரத்தைச் சுற்றி உள்ளே வரும்போது அங்கே உள்ள முன்மண்டபத்தில் பள்ளியறை உள்ளது. அதனைத் தொடரந்து பைரவர், திருமறைக்கோயில், சேக்கிழார், ஞானசம்பந்தர், அப்பர், சுந்தர், மாணிக்கவாசகர், அனுமார், சூரியன், சந்திரனைக் காண முடியும்.
இம்மண்டபத்தில் நவக்கிரகச் சன்னதி உள்ளது. கோயிலின் இடது புறம் அம்மன் சன்னதி உள்ளது. அங்குள்ள இறைவி தர்மவல்லி என்றழைக்கப்படுகிறார். அம்மன் சன்னதி அருகே நர்த்தன விநாயகர் உள்ளார்.





அண்மையில் திருப்பணி நிறைவுற்ற இக்கோயில், வரலாற்றின் சுவடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ள பெருமையுடையதாகும். ஆயிரமாண்டு கால வரலாற்றைத் தன்னுள் கொண்டிருக்கும் இக்கோயிலின் இறைவன் தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார், ஏரி, குளமாகச் சுருங்கிய நிலையிலும்.
















இன்றைய தி இந்து நாளிதழில் தேவாரம் பாடாத கோயில் என்ற தலைப்பில் வெளியான இக்கட்டுரையைப் பகிர்வதில் மகிழ்கின்றேன், கூடுதல் படங்களுடன். தி இந்து நாளிதழுக்கு நன்றி.
-----------------------------------------------------------------
புதுக்கோட்டையில் திரு முத்துநிலவன் இல்லத்தில், நண்பர் திரு கில்லர்ஜியின் வருகையையொட்டி 8.7.2015 மாலை நடைபெற்ற வலைப்பதிவர்கள் சந்திப்பைப் பகிர்ந்துகொண்ட நண்பர்களின் தளங்களுக்கு அன்போடு அழைக்கிறேன். 

தென்றல் கீதா : 
வலைப்பதிவர்கள் சந்திப்பு
வளரும் கவிதை முத்துநிலவன் : 
முனைவர் பா.ஜம்புலிங்கம், கவிஞர் கில்லர்ஜியைக் கௌரவித்து மகிழ்ந்தோம்
எனது எண்ணங்கள், தி. தமிழ் இளங்கோ : 
புதுக்கோட்டையில் வலைப்பதிவர்கள்
கரந்தை ஜெயக்குமார் :
கவிஞரின் இல்லத்தில்



-----------------------------------------------------------------