"பித்தா
பிறைசூடீ பெருமானே அருளாளா
எத்தான்
மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய்
பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
அத்தா
உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே."
என்று
பித்தா என்று ஈசனை, சுந்தரர் அழைத்த தலமான, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணெய்நல்லூர்
உள்ளிட்ட நான்கு கோயில்களுக்கும், சந்தானக்குரவரில் முதன்மையானவரான மெய்கண்டதேவர் முக்தியடைந்த இடத்திற்கும் 28
ஜனவரி 2017 அன்று தஞ்சாவூர் சைவ சித்தாந்த ஆய்வு
மைய நிறுவனர் முனைவர் வீ.ஜெயபால் மற்றும்
திருவாவடுதுறை சைவ சித்தாந்த பயிற்சி மைய திருச்சி கிளையின் தலைவர் திரு சண்முக சுந்தரம்
ஆகியோரின் தலைமையில் சுமார் 60 பேர் அடங்கிய குழுவினர் சென்றுவந்தோம். இந்த கோயில்கள்
அனைத்தையும் இப்போதுதான் முதன்முதலாக நான் பார்க்கும் வாய்ப்பினைப் பெற்றேன். இந்த
உலா மூலமாக சுந்தரர் சிவபெருமானை பித்தா என்றழைத்த கோயிலுக்குச் செல்லவேண்டும்
என்ற 20 ஆண்டுகளுக்கு மேலான என் ஆசை நிறைவேறியது. இதுவரை சோழ நாட்டில் உள்ள கோயில்களைப்
பார்த்துவந்துள்ளேன். முதன்முதலாக நடுநாட்டில் இவ்வாறாக ஒரே நாளில் கோயில்களைப் பார்த்தது
மறக்கமுடியாத அனுபவம். (இக்கோயிலில் இருக்கும்போது நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சுந்தராக நடித்த திருவருட்செல்வரில் பித்தா பிறைசூடி பாடலைப் பாடும் நினைவு வந்தது)
திருநெய்வெணை சொர்ணகடேஸ்வரர் கோயில்
சொர்ணகடேஸ்வரர்-பிரஹன்நாயகி (ஞானசம்பந்தர் பாடல் பெற்றது) ஞானசம்பந்தர்
கையில் தாளமின்றி, கை கூப்பிய நிலையிலும், சுந்தரர் நடன நிலையிலும் சிற்பங்கள் அமைந்துள்ள
சிறப்புடைய கோயில். (சுந்தரர் என்று கூறப்படுகின்ற சிற்பம் சுந்தரர்தானா என்பது ஆய்வாளர்களால்
உறுதிசெய்யப்படவேண்டிதொன்றாகும்) (உளுந்தூர்ப்பேட்டை கள்ளக்குறிச்சி சாலையில் 7 கிமீ தொலைவிலுள்ள A.குமாரமங்கலத்திற்கு வடக்கில் 7 கிமீ தொலைவில் உள்ளது)
திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டதேவ நாயனார் கோயில்
சந்தானக் குரவர்களுள் முதன்மையானவரும்,
சிவஞானபோதம் அருளியவருமான மெய்கண்டார் பிறந்து, வாழ்ந்து உபதேசம் பெற்று,
முக்தியடைந்த இடம் - இனம் புரியாத ஒரு மன அமைதியைக் கொடுத்த கோயில். குழுவில்
சென்ற பெரும்பாலானோர் அதனை உணர்ந்தோம். கோயிலில் மூலவருக்கான சிறப்பு அபிஷேகமும்,
பூசையும் கண்டோம். சிவஞானபோதம் எட்டாம் சூத்திரமான குருவருள் கேட்கின்ற (பொழிவு
முனைவர் வீ.ஜெயபால்) இனிமையான வாய்ப்பினையும் பெற்றோம். 22 ஆண்டுகளுக்குப் பின் தற்போது இக்கோயிலில்
குடமுழுக்கு நடப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. (திருவெண்ணெய்நல்லூரில் வடக்கு வீதியில்
உள்ளது)
திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோயில்
கிருபாபுரீஸ்வரர்-வேற்கண்ணிநாயகி. சுந்தரர் முதல் பாடல்
பாடியப் பெருமையுடைய கோயில். சிவபெருமான் வழக்கிட்டு, சுந்தரரை ஆட்கொண்ட தலம். இக்கோயில்
பற்றிய பதிகத்தில் சுந்தரர் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் உனக்கு முன்பே ஆளாகிய யான்
இப்போது அதனை இல்லையென்று கூறுதல் பொருந்துமோ என்னும் பொருள் படுமாறு அத்தா உனக்கு
ஆளாய் இனி அல்லேன் எனலாமே என்று இறைவனைப் போற்றியுள்ளார். வழக்கு நடைபெற்றதை நினைவுகூறும்
வகையில் வழக்கு தீர்த்த மண்டபம் உள்ளது. தற்போது கோயிலில் திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
திருமுண்டீச்சரம் சிவலோகநாதர் கோயில்
சிவலோகநாதர்-சௌந்தர்யநாயகி (அப்பர்) வீரபாண்டியன் என்னும் மன்னனுக்கு இறைவன் திருநீற்றுப்பை
(பொக்கணம்) தந்ததால் கல்வெட்டில் இறைவன் பொக்கணம் கொடுத்த நாயனார் என்று
போற்றப்படுகிறார். இவ்வூர் கிராமம் என்று அழைக்கப்படுகிறது.
(திருக்கோயிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியாக அரசூர் செல்லும்
பாதையில் சென்று திருவெண்ணெய்நல்லூரை அடுத்து 2 கிமீ தொலைவில் உள்ளது).
திரு இடையார் கோயில்
இடையாற்றீசர்-ஞானாம்பிகை
(சுந்தரர்) (திருக்கோயிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியாக அரசூர் செல்லும் சாலையில்
சித்தலிங்க மடத்தை அடுத்து இடையாறு உள்ளது.T.எடையார் என்றும் இடையாறு என்றும் இவ்வூர்
அழைக்கப்படுகிறது)
நன்றி
நடுநாட்டில்
உள்ள 22 கோயில்களில் நான்கு கோயில்களுக்கும், மெய்கண்டதேவ நாயனார் கோயிலுக்கும் எங்களை
அழைத்துச்சென்ற முனைவர் வீ.ஜெயபால் அவர்களுக்கும், திரு சண்முகசுந்தரம் அவர்களுக்கும்
எங்களின் மனமார்ந்த நன்றி.