14 April 2017

முதல் சிறுகதை : எதிரும் புதிரும் : எங்கள் பிளாக்

எங்கள் பிளாக் தளத்தில் கேட்டு வாங்கிப்போடும் கதையாக நான் முதன் முதலில் எழுதி வெளியான எதிரும் புதிரும் என்ற சிறுகதை, என்னைப் பற்றிய முன்னுரையுடன் 21 மார்ச் 2017இல் வெளியாகியுள்ளது. 
 எங்கள் பிளாக் தளத்திற்கு மனமார்ந்த நன்றி.

கேட்டு வாங்கிப் போடும் கதை : எதிரும் புதிரும் ஜம்பு
     இந்த வார எங்களின் "கேட்டு வாங்கிப் 
போடும் கதை" பகுதியில் முனைவர் ஐயா ஜம்புலிங்கம் அய்யாவின் படைப்பு வெளியாகிறது.

     அவரின் தளம் முனைவர் ஜம்புலிங்கம்.

     இவர் மிகவும் பாஸிட்டிவான மனிதர் என்பதை அறிந்த அந்த வாரப் "பாஸிட்டிவ் செய்திகள்" பகுதியில் இவரையும் சொல்லியிருந்தோம்.  இவரது கட்டுரைகள் இப்போதும் செய்தித் தாளில் வந்துகொண்டிருக்கின்றன.

     தன்னைப்பற்றியும், தன் கதை பற்றியும் ஜம்புலிங்கம் அய்யாவின் முன்னுரையைத் தொடர்ந்து அவர் எழுதிய "சிறு" கதை இடம்பெறுகிறது.

என் எழுத்திற்கான அறிமுகம்
1983இல் என் முதல் வாசகர் கடிதம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளியானது. பின்னர் தொடர்ந்து பல தமிழ் மற்றும் ஆங்கில இதழ்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர் கடிதங்கள் எழுதியுள்ளேன். வாசகர் கடிதம் எழுத ஆரம்பித்த ஆர்வம் மென்மேலும் என்னை எழுதத் தூண்டியது.

1993இல் முதன் முதலாக சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். தஞ்சாவூரைச் சேர்ந்த நண்பர் ஒருவர் எனக்கு அந்த ஆர்வத்தைத் தூண்டினார்.  வாழ்விற்கான பொருளை முதன் முதலாக எனக்கு உணர்த்தியதோடு நல்ல பாடமும் கற்றுத் தந்தவர் அவர்.  நான் எழுதிய முதல் சிறுகதை குங்குமம் (9-15 சூலை 1993) இதழில் வெளியானது.  தொடர்ந்து பாக்யா, இதயம் பேசுகிறது, தமிழ் அரசி, வாசுகி, மேகலா, உஷா, சாவி, மாலை முரசு, தின பூமி, மங்கையர் பூமி, ராஜ ரிஷி உள்ளிட்ட இதழ்களில் என் கதைகள் வெளியாயின. இதே காலகட்டத்தில் சில கட்டுரைகளையும், கவிதை என்ற பெயரில் சிலவற்றையும் எழுத ஆரம்பித்தேன். 1997 வரை தொடர்ந்த இப்பயணத்தில்  40க்கும் மேற்பட்ட கதை, கட்டுரைகளை எழுதினேன். மற்றொரு நண்பரின் முயற்சியால் இச்சிறுகதைகள் வாழ்வில் வெற்றி என்ற தலைப்பில் நூல் வடிவம் பெற்றன.

முனைவர் பட்ட ஆய்விற்குப் பதிவு செய்த பின்னர் எனது இலக்கானது ஆய்வுக்களம் நோக்கி திரும்ப ஆரம்பித்தது.  1994 முதல் எழுதத் தொடங்கி  ஆய்வுக்கட்டுரைகள், பதிவுகள் (130+), பேட்டிகள் (6),  மேற்கோள்கள் (20+),  அணிந்துரை, வாழ்த்துரைகள் (8), சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ (90+), முனைவர் ஜம்புலிங்கம் வலைப்பூ (150+), தமிழ் விக்கிபீடியா (ஜனவரி 2017இல் நடைபெற்ற விக்கிக்கோப்பை போட்டியில் கலந்துகொண்டு எழுதிய 253 கட்டுரைகள் உட்பட 570), ஆங்கில விக்கிபீடியா (108+)  எழுதியுள்ளேன். மொழிபெயர்ப்பு ஆர்வம் காரணமாக தி இந்து, தினமணி உள்ளிட்ட நாளிதழ்களில் எனது கட்டுரைகள் வெளியாயின. இவ்வகையில் 1000க்கும் மேற்பட்ட பதிவுகளை அண்மையில் நிறைவு செய்துள்ளேன். இத்துடன்  தமிழகத்தில் 29 புத்தர் மற்றும் சமண தீர்த்தங்கரர் சிலைகளை தனியாகவும், நண்பர்கள் மற்றும் அறிஞர்களின் துணையோடும் கண்டுபிடித்துள்ளேன். கண்டுபிடிப்புகள் பற்றிய செய்தி நறுக்குகள் (150+) தமிழகத்தின் பெரும்பாலான தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் வெளியாயின.  

1983இல் வாசகர் கடிதமாக தொடங்கி தற்போது கட்டுரைகள் எழுதுமளவு உயர்த்தியமைக்குப் பல நண்பர்களும், அறிஞர்களும், குடும்பத்தாரும் துணை நின்றனர், நிற்கின்றனர். தற்போது முகநூல் மற்றும் வலையுலக நண்பர்களும் என்னை ஊக்குவிக்கின்றனர். என் எழுத்து ஆர்வத்தை நான் கடந்த 40 ஆண்டுகளாக வாசித்து வருகின்ற The Hindu நாளிதழும் என் வாசிப்பு மற்றும் எழுத்து ஆர்வத்தை மேம்படுத்துகிறது.  அனைத்திற்கும் மேலாக நான் பணியாற்றும் தமிழ்ப்பல்கலைக்கழகத்தை இப்போது நன்றியோடு நினைவுகூர்கிறேன்.  
என்னிடம் சிறுகதை கேட்டு வாங்கி வெளியிடும் எங்கள் பிளாக் தளத்திற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்கின்றேன்.
-------------------------------------------------------------------------------------------(குங்குமம் இதழில் வெளியான என் முதல் சிறுகதை)
எதிரும் புதிரும்  
-ஜம்பு
“பஸ்ல ஜன்னல்கிட்ட உட்காரும்போதே சந்தேகப்பட்டேன். எல்லாரோட சட்டையையும் வீணாக்கிட்ட பாரு.“
“நெனச்ச மாதிரியே நடந்துடுச்சி. “
கும்பகோணத்திலிருந்து தஞ்சையை நோக்கிப் போய்க் கொண்டிருந்த பஸ் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது.
அருணும் தன் பங்கிற்குத் திட்ட ஆரம்பித்தான்.
 “உடம்பு முடியலைன்னா டவுன் வண்டிலே வரவேண்டியதுதானே. இல்லாட்டி இது மாதிரி உள்ளதுங்க வசதிக்குத்தான் டிரெயின் இருக்குல்ல. எந்த தொந்தரவும் இல்லாம வரலாம்ல.“
வாந்தி எடுத்துக் கொண்டிருந்த பெரியவர் வாயில் துணியை வைத்து மூடிக் கொண்டு கீழே உட்கார்ந்தார்.
பக்கத்திலிருந்த மூதாட்டி – அவருடைய மனைவி – அவருடைய வாயைத் துடைத்துவிட்டபடி பஸ்சில் ஒவ்வொருவர் சொல்வதையும் கேட்டு சோகப்பார்வையோடு இருந்தாள்.
“சக்கராப்பள்ளி ஸ்டாப்பிங் வந்துடுச்சி. அய்யம்பேட்டைல பெரியவரை இறக்கிடுக். தஞ்சாவூர் வர்ற வரைக்கும் யாரும் பஸ்சில் உட்கார முடியாது போலிருக்கு. அவ்வளவு நாத்தமாக இருக்கு.“
அய்யம்பேட்டை வந்ததும் டபுள் விசில் கொடுத்தார் புத்திசாலி கண்டக்டர். தஞ்சைக்கு டிக்கட் எடுத்திருந்த அந்தப் பெரியவரையும் மூதாட்டியையும் தஞ்சையிலேயே இறக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு. அதைவிட, மனிதாபிமானமே இல்லாத இந்தக் கூட்டத்திற்கு புத்தி கொடுக்க வேண்டும் என்ற நினைப்பும் அவருக்கு!
***
தஞ்சை வந்து சேர்ந்தான் அருண். இறங்கி  நேராக வீட்டிற்குப் போனபோது அவனுடைய மகள் இந்திராவின் சட்டையை அவனுடைய மனைவி பிரியா அலசிக் கொண்டிருந்தாள்.
“நீங்க கும்பகோணத்திலேந்து வர லேட்டாகும்னு நெனச்சி நானும் இந்திராவும் மாரியம்மன் கோயிலுக்குப் போனோம். போய்ட்டுத் திரும்பும்போது இந்திரா பஸ்சில வாந்தி எடுக்க ஆரம்பிச்சிட்டா. எனக்கு ஒண்ணுமே புரியலே. பஸ்சில வந்த பெரியவர் ஒருத்தர் அவளை மடியில போட்டுக்கிட்டு அவர் வச்சிருந்த துண்டுலயே வாந்தி எடுக்கச் சொன்னார். அவரோட வேட்டி துண்டு எல்லாம் பாழாயிடுச்சி. அதை அவர் பெரிசா எடுத்துக்கல. ஊருக்கு வந்ததும் டாக்டர்கிட்ட இந்திராவைக் காட்டிட்டு வந்தேன்.“
“அப்பா! பஸ்சுல அந்த தாத்தா என்னை ரொம்ப நல்லா கவனிச்சுக்கிட்டார்ப்பா. ரொம்ப நல்ல தாத்தாப்பா அவரு.“
மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் இந்திரா தன் அப்பாவைப் பார்த்துக் கொண்டே சொன்னாள்.
இந்திரா சொன்ன எதுவும் அருணின் காதில் விழவில்லை.
இயற்கை நியதிகள் ஏளனமாக அருணைப் பார்த்துச் சிரிப்பது போல இருந்தது.

----------------------------------------------------------------
30 ஏப்ரல் 2017இல் பணி நிறைவு : திரும்பிப் பார்க்கிறேன்
பிறருடைய தளங்களில் என்னைப் பற்றிய பகிர்வுகள்
----------------------------------------------------------------

16 comments:

 1. தங்களுக்கும்
  இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

  ReplyDelete
 2. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 3. முனைவருக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 4. சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete
 5. அருமையான கதை.

  எங்கள் பிளாக் தளத்திலும் வாசித்தேன்.

  ReplyDelete
 6. அங்கேயும் இங்கேயும் படித்து ரசித்தேன் !

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete
 8. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா!
  -இராய செல்லப்பா (மீண்டும்) நியூஜெர்சி

  ReplyDelete
 9. எங்கள் பிளாக் தளத்தில் முன்பேயே இந்த அருமையான கதையை வாசித்திருக்கிறேன்.
  இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. எதிரும் புதிரும்..

  நியாயங்கள் உறங்குவதில்லை.. நல்ல கதை..

  அன்பின் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
 11. எங்கள் ப்ளாகில் வாசித்திருக்கிறேன் வாழ்த்துகள்

  ReplyDelete
 12. அங்கும் வாசித்தேன். கருத்துள்ள கதை

  ReplyDelete
 13. சகிப்புத் தன்மை வற்றிப்போன தலைமுறைக்கு சவுக்கடியான கதை. அருமை அய்யா. வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. இனிய வாழ்த்துகள்

  ReplyDelete
 15. திரு வித்யாசாகர் (மின்னஞ்சல் vidhyasagar1976@gmail.com வழியாக)
  மனிதாபிமானத்தின் பிரதிபளிப்பாக இருந்தது ஐயா உங்கள் சிறுகதை.பிறர் துயர் துடைத்தல், போதுநோக்குப் பார்வை என்பதெல்லாம் குறைந்துபோயுள்ள சமுதாயத்திற்கு இங்ஙனம் கதைகளுடே நன்னடத்தை போதிக்க அவசியமுள்ள நன்னிலத்தில் தான் வசிக்கிறோம்.. வாழ்க..

  ReplyDelete