28 April 2018

கோயில் உலா : 17 மார்ச் 2018

முனைவர் வீ.ஜெயபால் அவர்கள் குழுவினரோடு 17 மார்ச் 2018 அன்று நல்லூர், திருக்கண்ணமங்கை, நன்னிலம், திருக்கண்டீச்சரம், பனையூர், விற்குடி, கூத்தனூர், திலகைபதி, அம்பர்மாகாளம், அம்பல், திருமீயச்சூர் ஆகிய கோயில்களுக்குச் சென்றோம். மாடக்கோயில்கள், கஜபிருஷ்ட அமைப்பிலான கருவறை கொண்ட கோயில் உள்ளிட்டவை இவற்றில் அடங்கும். 

திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில்
கல்யாணசுந்தரேஸ்வரர்-கல்யாணசுந்தரி (ஞானசம்பந்தர், அப்பர்) (தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் சென்று; பிரிகின்ற வலங்கைமான் சாலையில் 2 கிமீ சென்று இத்தலத்தை அடையலாம்).  எங்கள் உலாவின் முதல் கோயில். சிவ புராணம் பாடி, உலா தொடங்கியது. அழகிய மாடக்கோயில். மூலவருக்குப் பின்புறம் அகத்தியருக்குத் திருமணக்கோலம் காட்டிய கல்யாணசுந்தரர் சுதை வடிவில் உள்ளார். சற்றொப்ப இதைப் போன்ற, மூலவருக்குப் பின்னர் இறைவனும் இறைவியும் உள்ள கோலத்தை திருவீழிமிழலையிலும், வேதாரண்யத்திலும் பார்த்துள்ளோம். 



திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோயில் 
(குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம்) திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இக்கோயிலின் மூலவரைப் பார்த்தபோது உப்பிலியப்பன் கோயில் மூலவர் நினைவிற்கு வந்தார். கம்பீரமான, உயர்ந்த அழகான மூலவரைக் கண்டோம்.  



நன்னிலம் மதுவனேஸ்வரர் கோயில்
மதுவனேஸ்வரர்-மதுவனநாயகி (சுந்தரர்) (மயிலாடுதுறையிலிருந்து நன்னிலம் வழியாக திருவாரூர் செல்லும் சாலையில் உள்ளது. நன்னிலம் பேருந்து நிலையத்திலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அரசு மருத்துவ மனை எதிரில் செல்லும் வழியில் சென்றால் கோயிலை அடையலாம்).  
மற்றொரு அருமையான மாடக்கோயில். 



திருக்கொண்டீச்சரம் பசுபதீஸ்வரர் கோயில் 
பசுபதிநாதர்-சாந்தநாயகி (அப்பர்) (நாகப்பட்டினம்-நன்னிலம்; மயிலாடுதுறை-திருத்துறைப்பூண்டி-வழி நன்னிலம்; நாகப்பட்டினம்-கும்பகோணம்-வழி நன்னிலம் முதலிய பாதைகளில் வருவோர் நன்னிலத்துக்குள் நுழைவதற்கு முன்னாள் தூத்துக்குடி நிறுத்தம் என்னுமிடத்தில் பிரியும் பாதையில் உள்ளே சென்றால் அருகில் உள்ள கோயிலை அடையலாம்).

பனையூர் சௌந்தரேஸ்வரர் கோயில் 
சௌந்தரேஸ்வரர்-பெரியநாயகி (ஞானசம்பந்தர், சுந்தரர்) (பேரளம்-திருவாரூர் சாலையில், சன்னாநல்லூரைக் கடந்து, மேலும் சென்றால் பனையூர் கைகாட்டி உள்ளது. அக்கிளைப் பாதையில் 1 கிமீ சென்றால் கோயிலை அடையலாம். அல்லது இதே சாலையில் மேலும் சென்று, ஆண்டிப்பந்தல் என்னும் ஊரை அடைந்து, திருமருகல், நாகூர் செல்லும் பாதையில் திரும்பி கோணமது என்னுமிடத்தில் இடது புறமாகத் திரும்பிச் செல்லும் குறுகலான கிளைப்பாதையில் 1 கிமீ சென்றால் இக்கோயிலை அடையலாம்). பனை மரம் இத்தலத்தில் உள்ளது. பனை மரத்தை தலமரமாகக் கொண்ட, பஞ்ச தலங்களில் இதுவும் ஒன்று  பனை மரத்தைத் தலமாகக் கொண்ட கோயில்கள் : வன்பார்த்தான் பனங்காட்டூர், திருப்பனந்தாள், திருப்பனையூர், திருவோத்தூர், புறவார் பனங்காட்டூர். இவை பஞ்ச தல சேத்திரங்கள் எனப்படுகின்றன)


திருவிற்குடி வீரட்டானேஸ்வரர கோயில்
வீரட்டானேசுவரர்-பரிமளநாயகி (ஞானசம்பந்தர்) (பேரளம்-திருவாரூர் சாலையில், ரிமளநாயகி (ஞானசம்பந்தர்) (மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் வெட்டாறு தாண்டி, கங்களாஞ்சேரிக்குப் பிரியும் வலப்புறப் பாதையில் திரும்பி, நாகூர்-நாகப்பட்டினம் சாலையில் சென்று விற்குடி புகை வண்டி நிலையத்தைத் தாண்டி (ரயில்வே கேட்) விற்குடி அடையலாம்). சிவனின் அட்டவீரட்டத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். அட்டவீட்டத்தமூலவர் சன்னதிக்கு வலது புறம் ஜலந்தரவதமூர்த்தி உள்ளார்.

கூத்தனூர் சரஸ்வதி கோயில்
மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் பூந்தோட்டம் அருகேயுள்ளது. தமிழகத்தில் சரஸ்வதிக்கு உள்ள ஒரே கோயில் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. சுமார் 40 வருடங்களுக்கு முன்பு சென்றபோது சரஸ்வதியை அமைதியாக நின்று வழிபட்டு வந்த அந்த நாள் நினைவிற்கு வந்தது. இப்போது கோயிலுக்குச் செல்லும் வழியில் எங்கு பார்த்தாலும் கடைகளைக் கண்டோம்.

திலதைப்பதி முத்தீஸ்வரர் கோயில் 
முத்தீஸ்வரர்-பொற்கொடிநாயகி (ஞானசம்பந்தர்) திலதர்ப்பணபுரி, திலதைப்பதி, செதலப்பதி, சிதலைப்பதி என்று அழைக்கப்படுகின்ற ஊர். (மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் பூந்தோட்டம் வந்து, அரிசிலாற்றுப் பாலத்தைக் கடந்து, வலப்புறமாகப் பிரியும் கும்பகோணம்-நாச்சியார் கோயில் சாலையில் சென்று கூத்தனூரை அடைந்து அங்கிருந்து செல்லலாம்). 



ஆதிவிநாயகர் கோயில்
முத்தீஸ்வரர் கோயிலுக்கு அருகே ஆதிவிநாயகர் கோயில் உள்ளது. அங்குள்ள சிற்பம்  தும்பிக்கையில்லாமல், வலக்கால் தொங்கவிட்டு, இடக்கால் மடித்து, இடக்கையை இடக்காலின்மீது வைத்து வலக்கை சற்று சாய்ந்த  அபய கரமாக காணப்படுகிறது. இவரைப் பார்ப்பதற்கு அய்யனார் உள்ளார். ஆனால் ஆதி விநாயகர் என்று வழிபடுகின்றனர்.
 அம்பர் மாகாளம் 
மாகாளேஸ்வரர்-பட்சநாயகி (ஞானசம்பந்தர்) (மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் பேரளம் தாண்டி, பூந்தோட்டம் சென்று அங்கு கடைவீதியில் காரைக்கால் என்று வழிகாட்டியுள்ள இடத்தில் இடப்புறமாகச் சென்று ரயில்வே கேட்டைத் தாண்டி நேரே அச்ச்லையில் சுமார் 4 கிமீ சென்றால் கோயிலையடையலாம்).
அம்பல் பிரம்மபுரீஸ்வரர் கோயில்
பிரம்மபுரீஸ்வரர்-பூங்குழலம்மை (ஞானசம்பந்தர்) மற்றொரு மாடக்கோயில். (அம்பர் பெருந்திருக்கோயில் என்றழைக்கப்படுகின்ற இக்கோயில் அம்பர் மாகாளத்திலிருந்து அதே சாலையில் மேலும் 1 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது).



மீயச்சூர்  மேகநாதர் கோயில்
மேகநாதர்-லலிதாம்பாள் (ஞானசம்பந்தர்) (மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் பேரளம் வந்து, இடப்புறமாகப் பிரிவும் காரைக்கால் பாதையில் செல்லாமல், வலப்புறமாகத் திரும்பும் திருவாரூர்ச் சாலையில் திரும்பிச் சிறிது தூரம் சென்றதும், கடை வீதியில், கடைவீதிக்கு இணையாகப் பின்புறம் பிரிந்து செல்லும் கம்பூர் பாதையில் சென்று ரயில்வே கேட்டைத் தாண்டி சுமார் 2 கிமீ சென்றால் மீயச்சூரை அடையலாம்).  இக்கோயிலிலுள்ள சேத்திரபுராணேஸ்வரரைப் பார்க்க பல வருடங்களாக ஆசைப்பட்டேன். அந்த ஆசை இந்த பயணத்தின்போது பூர்த்தியானது. 



மீயச்சூர் இளங்கோயில்
சகலபுவனேஸ்வரர்-மேகலாம்பிகை (அப்பர்) மீயச்சூர் மேகநாதர் கோயிலின் வடக்குப் புறத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.  கோயிலுக்குள் கோயிலாக உள்ள இக்கோயில் எங்கள் பயணத்தின் நிறைவாக அமைந்தது.

கோயில் உலாவின் நிறைவாக, பயணத்தில் சென்ற கோயில்களைப் பற்றிய பெருமைகளை முனைவர் வீ.ஜெயபால் எங்களுடன் பகிர்ந்துகொண்டார். வழக்கம்போல ஒரு மறக்கமுடியாத அனுபவம்.


நன்றி
எங்களை உலா அழைத்துச்சென்ற சித்தாந்த வித்தகர் முனைவர் வீ.ஜெயபால் அவர்களுக்கும், உடன் வந்தோருக்கும் நன்றி. முனைவர் வீ.ஜெயபால் தலைமையில் கலந்துகொண்டோர் திரு வேதாராமன், திரு வர்ணம் சுகுமார், நெய்வேலி திரு வெங்கடேசன், நெய்வேலி திரு செல்வம், பிஎஸ்என்எல் திரு சச்சிதானந்தம், பிஎஸ்என்எல் திரு மணிவாசகம், திருமதி செல்வராசன், முனைவர் ஜம்புலிங்கம், திரு கே.ஜே. அசோக்குமார், திருமதி மனோரஞ்சிதம், திருமதி கௌரி 



துணை நின்றவை
  • வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28 அம்மையப்பா இல்லம், கோவிந்தராஜ் நகர், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014
  • சிவ.ஆ.பக்தவச்சலம், தேவாரத் திருத்தலங்கள் வழிகாட்டி, குடியேற்றம், வேலூர் மாவட்டம், 2005
  • பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009 

21 April 2018

சமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017

27 நவம்பர் 2017 அன்று முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் மற்றும் திரு மணி.மாறன் ஆகியோருடன் போஜீஸ்வரர் கோயில் என்றழைக்கப்படுகின்ற போசளேஸ்வரர் கோயிலுக்குச் சென்றேன். நவம்பர் 2017 கோயில் உலாவின்போது பிற கோயில்களுடன் இக்கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. 

ஆனந்தவல்லி சமேத போஜீஸ்வரர் கோயில் ச.கண்ணனூர் (சமயபுரம்), மண்ணச்சநல்லூர் வட்டம், திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. போஜராஜா கோயில் என்றால்தான் இங்குள்ளவர்களுக்குத் தெரிகிறது.  ச.கண்ணனூர் புது ஆற்றங்கரைக்கு வட பகுதியில் அமைந்துள்ள ஊராகும். 
ராஜகோபுரம் இன்றி அமைந்துள்ள இக்கோயிலின் முகப்பினைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், நந்தி மண்டபம் காணப்படுகின்றன. வலது புறம் அமிர்தமிருத்ஞ்சயன் (சிவன்) உள்ளார். முன் மண்டபம், ராஜகோபுரம், கருவறையைக் கொண்டு மூலவர் சன்னதி அமைந்துள்ளது.



மூலவர் போஜீஸ்வரஸ்வாமி என்றும் போஜராஜஸ்வாமி என்றும் அழைக்கப்படுகிறார். திருச்சுற்றில் மடப்பள்ளி, நந்தவனம், விநாயகர் சன்னதி,முருகன் சன்னதி, நவக்கிரக சன்னதி ஆகியவை உள்ளன. மூலவர் கருவறையின் இடது புறம் அம்மன் சன்னதி உள்ளது.  இங்குள்ள அம்மன் ஆனந்தவள்ளி ஆவார்.  





பல வருடங்களுக்குப் பின் அண்மையில் திருப்பணி ஆனதாகத் தெரிவித்தனர். மண்டபத் தூண்களின் சிற்ப அமைப்பு பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. 

இந்தக் கோயில் ஹொய்சல மன்னர்களால் கி.பி.13ஆம் நூற்றாண்டில் அதாவது கி.பி.1253இல் பூஜிக்கப்பட்ட கோயிலாகும். மைசூரைச் சேர்ந்த துவாரசமுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு வாழ்ந்த ஹொய்சல மன்னர்களில் இரண்டாவது நரசிம்மன் என்பவன் 13ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் சோழனுக்கு உதவியாக வந்து பகைவரை விரட்டி சோழனைப் பட்டத்தில் நிறுத்தினான். இவனுடைய புதல்வனாக வீர சோமேஸ்வரன் தன் ராஜ்யத்தைத் தமிழ்நாட்டில் நிலைநிறுத்தக் கருதி கி.பி.1253இல் கண்ணனூரை தலைநகரமாக்கி விக்கிரமபுரம் என்ற புதிய பெயரைக் கொடுத்தான். ஹொய்சல மன்னர்களில் இவனே புகழ் வாய்ந்தவன். இவன் கர்நாடக தேசத்துக்குச் சந்திரன் என்ற பட்டத்தைப் பெற்றான். இவன் தன் வெற்றிக்கறிகுறியாக  இந்த நகரத்திலிருந்து ஒரு சூரிய கிரகணத்தன்று  (1.3.1253இல்) பல கிராமங்களைத் தானங்களைச் செய்துள்ளான். இவனைப் பற்றிய கல்வெட்டுகள் ஸ்ரீரங்கம் கோயிலிலும், திருவானைக்கா கோயிலிலும் உள்ளன. இவன் கண்ணனூரில் பொய்சலேசுவரம் என்னும் கோயிலைக் கட்டுவித்தான். வீரசோமேஸ்வர தேவன் கண்ணனூரில் ஒரு சிவன் கோயிலைக் கட்டுவித்து அதற்கு பொய்சலேசுவரம் என்று பெயரிட்டான். அக்கோயில் தற்போது போஜராஜா கோயில் என்று வழங்கப்படுகிறது. (கோயிலுள்ள அறிவிப்புப் பலகை) 

இக்கோயிலில் சுபகிருது வருடம் ஆவணி மாதம் 21ஆம் நாள் 6 செப்டம்பர் 1962 அன்றும், துர்முகி வருடம் மாசி மாதம் 21ஆம் நாள் 5 மார்ச் 2017 ஞாயிற்றுக்கிழமை அன்றும் குடமுழுக்கு நடைபெற்றதற்கான கல்வெட்டுகள் உள்ளன.

கோயிலுக்குச் சென்றுவந்தபின் இக்கோயிலைப்பற்றி விக்கிவீடியாவில் புதிய பதிவு ஆரம்பித்தேன். திருப்பணிக்குப் பின் வடிவம் பெற்றுள்ள, இக்கோயிலுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது செல்வோம்.

14 April 2018

காக்கப்பட வேண்டிய கலைப்பெட்டகம் : கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி (2)

எனக்கு அதிசயத்தையும் ஆச்சர்யத்தையும் கொடுத்தது அவ்வறையில் காணப்பட்ட ஒரு குறிப்பு. அழகாக பராமரிக்கப்படுகின்ற அறையின் வாயிற்கதவின் மேல் ஆங்கிலத்தில் ஸ்ரீனிவாச ராமானுஜன் படித்த அறை என்று பொருள்படும்படி காணப்பட்ட குறிப்பே அது. நாங்கள் படித்த காலத்தில் இவ்வாறான குறிப்பு காணப்படவில்லை. இந்த அறையைப் பற்றி இது தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை. புகுமுக வகுப்பு படித்த காலகட்டத்தில் இதற்கு அடுத்த அறையில் நண்பர்களின் வகுப்பறை இருந்ததால் பல முறை இந்த அறையின் வழியாக சென்றது நினைவிருக்கிறது. இதையொத்த பல அறைகளுடன் ஒப்புநோக்கிய போது இந்த அறையின் சிறப்பான பராமரிப்பிற்கான காரணத்தை இப்போது அறிய முடிந்தது. தன் தளத்தில் திரு கரந்தை ஜெயக்குமார் இதன் பெருமையைப் பகிர்ந்துள்ளார். 
அடுத்து பார்க்கும்போது அந்த அறைக்கு வெளியே கணித மேதை ராஜமானுஜன் கல்விபயின்ற வகுப்பறை என்ற குறிப்பு தமிழிலும் ஆங்கிலத்திலும் காணப்பட்டது. அப்போது தெரியாவிட்டாலும் இப்போது தெரிந்ததே என்ற மகிழ்ச்சி மனதில் ஏற்பட்டது. கணித மேதை படித்த அறையின் அடுத்து நான் படித்த வகுப்பறை இருந்ததை எண்ணிப் பெருமைப்பட்டுக்கொண்டேன்.  
அப்பகுதியில் ஒன்றோடோன்று இணைந்துள்ள நிலையில் அமைந்துள்ள வகுப்பறைகளின் அமைப்பு படிப்பதற்கான ஒரு சூழலையும் மனதில் அப்போது ஏற்படுத்தியிருந்ததை உணர முடிந்தது.   



வாயிலில் காணப்பட்டது போன்றே இப்பகுதியிலும் தூண்களிலும் உத்தரங்களின் தாங்கு பலகைகளிலும் மிக அழகான மரச் சிற்பங்கள் உள்ளதைக் காண முடியும். அடுக்கடுக்காக வரிசையாக அமைக்கப்பட்டுள்ள மர உத்தரங்களின் அழகு கட்டடங்களின் கம்பீரத்தை எடுத்துரைப்பதைக் காண முடியும்.   
வாயிலின் காணப்பட்ட தூண் சிற்பங்கள் இங்கும் தொடர்கின்றன. அதாவது மணிக்கூண்டின் தரை தளத்தின் இரு புறமும் இவ்வாறான தூண்கள் அமைந்துள்ளன. அவற்றின் நேர்த்தியும் பிற எவற்றுடனும் ஒப்பிட முடியாத அளவிற்கு இருப்பதைக் காணலாம்.  
காலனிடமிருந்து மார்க்கண்டேயரைக் காப்பாற்றுகின்ற (லிங்கத் திருமேனிக்கு மேலே காணப்படுகின்ற) சிவபெருமான், குடந்தைக்கிடந்தான் என்று ஆழ்வார்களால் பாடப்பெற்ற பாம்பணையில் அனந்த சயனத்தில் கிடக்கின்ற பெருமாள், லிங்கத்திருமேனியைப் பூசிக்கின்ற பிரம்மா உள்ளிட்ட பல மரச் சிற்பங்கள் அங்கு காணப்படுகின்றன. (சிற்பத்தின் அருகே வைக்கப்பட்டுள்ள பேனாவின் அளவினைக் கொண்டு சிற்பத்தின் அளவைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.)
மார்க்கண்டேயரைக் காப்பாற்றுகின்ற சிவபெருமான்
அனந்த சயனத்தில் பாம்பணையில் பெருமாள்

லிங்கத்திருமேனியைப் பூசிக்கின்ற பிரம்மா
அருகேயுள்ள மற்றொரு வகுப்பறையில் எங்களுக்கு இரண்டோ, மூன்றோ சிறப்பு வகுப்புகள் நடைபெற்றன. முன்புறம் அரை வட்ட வடிவத்திலும் தொடர்ந்து செவ்வகமாகவும் உள்ள இந்த அறையின் மேற்பகுதியில் பால்கேனி போன்ற அமைப்பு காணப்படும். ஆசிரியர் நிற்கின்ற (அரை வட்ட வடிவப் பகுதி) பகுதியில் மாடிப்படிகள் காணப்படும். இதன் வழியாக ஏறி ஒரு சுற்று சுற்றி வந்தால் கீழே நடக்கும் வகுப்பினை நன்கு காண முடியும். வகுப்பு நடைபெறாதபோது நாங்கள் மேலே ஏறி பார்ப்பது வழக்கம்.

பால்கேனியுடன் கூடிய வகுப்பறை
இவ்வறையினை அடுத்துச் சிறிது தூரம் சென்றால் மற்றொரு வகுப்பறை காணப்படும். இந்த வகுப்பறையில் நாங்கள் படிக்கவில்லையென்றாலும் பார்த்ததுண்டு. இந்த வகுப்பறையின் கடைசி இருக்கைகள் மிக உயரத்தில் காணப்படும். விளையாட்டு மைதானத்திற்கு அருகே உள்ள இந்த வகுப்பறையில் தொடர்ந்து படிப்படியாக கீழே இறங்கிய நிலையில் பார்க்க அழகாக இருக்கும். ஆசிரியரின் பார்வையில் அனைத்து மாணவர்களும் முழுமையாகப் படும்படி சரிந்த நிலையிலான தரையில் மேசைகள் காணப்படும். இக்கல்லூரியில் இவ்வாறாக வித்தியாசமாக அமைந்த அறை இது ஒன்று மட்டுமேயாகும். 
வித்தியாசமான இருக்கை அமைப்பு கொண்ட வகுப்பறை
ஒவ்வொரு அறையாகப் பார்த்துவிட்டு முதல்வர் அறை அமைந்துள்ள கட்டடத்திற்கு வந்தேன். இக்கட்டட வராந்தாவில்தான் புகுமுக வகுப்பு சேரும் நாளன்று அதிக நேரம் காத்திருந்தது நினைவிற்கு வந்தது. 

அக்கட்டடத்தின் நடுவில் அமைந்துள்ள மாடிப்படிகளின் வழியாக இடது புறம் வழியாகச் சென்றால் நாங்கள் பொருளாதாரம் இரண்டாம் ஆண்டு படித்த வகுப்பறையைக் காணலாம். முதல் தளத்தில் அமைந்துள்ளது. வகுப்பு முடிந்தபின்னரோ, வகுப்பு மாறும்போதோ இந்தப் படிகளின்வழியாகத் தான் வருவோம்.

அத்தளத்திலிருந்து எதிரே அமைக்கப்பட்டிருந்த ராமானுஜன் சிலையைப் பார்த்தோம். அதற்குப் பின் புறம் பல புதிய கட்டடங்கள் காணப்பட்டன. நாங்கள் படித்தபோது இவையனைத்தும் இல்லை.  
தொடர்ந்து அப்போது அறை எண்.44 ஆக இருந்த அறைக்குச் சென்றோம். அக்காலகட்டத்தில் இங்குதான் ஆண்டு விழாக்களும், இலக்கிய விழாக்களும் நடைபெற்றன. 

அங்கிருந்து கல்லூரியின் நூலகத்திற்குச் சென்றோம். நூலகத்தின் முன்பாக இப்போது அதிகமான மரங்களைக் காணமுடிந்தது. கல்லூரிக்காலத்தில் நூலகத்திற்கு அரிதாகவே சென்றுவந்துள்ளேன். 
கல்லூரியின் நூலகம்
நூலகத்தின் இடது புறத்தில் நாங்கள் படித்த புகுமுக வகுப்பறை இருந்தது. அதனையும் இப்போது பார்த்தேன்.  புகுமுக வகுப்பில் 1975இல் அளவையியல் (Logic) என்ற பாடத்தை நான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஒரு தளம் மட்டுமே இருந்ததாக நினைவு. கல்லூரியில் சேர்ந்தபின் முதல் நாள் முதல் வகுப்பு எங்களுக்கு இந்த அறையில்தான் ஆரம்பமானது. பிற பாடங்களுக்காக அவ்வப்போது பிற வகுப்பறைகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும். இளங்கலை பொருளாதாரம் படிக்கும்போதும் இந்த முறை தொடர்ந்தது. ஆகையால் கல்லூரியில் பல வகுப்பறைகளில் அமர்ந்து படித்த அனுபவம் இருந்தது.
புகுமுக வகுப்பறை அமைந்திருந்த கட்டடம்
புகுமுக வகுப்பறையின் வெளியே, நூலகத்தைக் கடந்து வந்தபோது எதிரில் இருந்த குளத்தைக் கண்டோம். நாங்கள் படித்தபோது இக்குளத்தில் எப்போதும் தண்ணீர் காணப்படும். இப்போது தண்ணீர் காணப்படவில்லை. சிறிது நேரம் குளக்கரையில் நின்றுவிட்டு கல்லூரியின் பின் புற வாயிலுக்குச் சென்றோம். 


அங்கு நண்பர் மணிவண்ணனுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு, கல்லூரி பற்றிய நினைவுகளை பரிமாறிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன்.   

நண்பர் மணிவண்ணன் உடன், 9 ஏப்ரல் 2017
தொடர்ந்து நான்கு மாதங்கள் கழித்து என் மனைவி திருமதி பாக்கியவதியுடன், நான் படித்த கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. கல்லூரிக் கால நினைவுகளை அவருடன் பகிர்ந்துகொண்டு மறுபடியும் கல்லூரியைச் சுற்றி வந்தேன்.
மனைவி திருமதி பாக்கியவதி உடன், 7 ஆகஸ்டு 2017
1854இல் துவங்கப்பட்ட இக்கல்லூரி பல கட்டடங்கள் பொலிவிழந்து, பல இடங்களில் செடிகள் முளைத்து பராமரிப்பின்றிப் பார்த்தபோது மனம் அதிகமாக நெகிழ்ந்தது. கும்பகோணத்திற்குப் பெருமை சேர்க்கின்ற இக்கல்லூரி புதுப்பொலிவினைக் காண்கின்ற நாளை இக்கல்லூரியின் முன்னாள் மாணவன் என்ற நிலையில், ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

முந்தைய பதிவு :
காக்கப்பட வேண்டிய கலைப்பெட்டகம் : கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி (1)

Abstract of the article in English
As an alumnus of the more than one and half century old Government College for Men (Kumbakonam) (1975-79) I feel that many of its magnificent and aesthetic structures need to be protected.