25 August 2018

நாலாயிர திவ்யப் பிரபந்தம் : மூன்றாம் திருவந்தாதி : பேயாழ்வார்

பேயாழ்வார் அருளிய மூன்றாம் திருவந்தாதியை (2282-2381) அண்மையில் நிறைவு செய்தேன். அவற்றில் சில பாடல்களைப் பொருளுடன் காண்போம். 



மனத்து உள்ளான், மா கடல் நீர் உள்ளான், மலராள்
தனத்து உள்ளான், தண் துழாய் மார்பன், - சினத்துச்
செருநர் உகச் செற்று, உகந்ததேங்கு ஓத வண்ணன்,
வரு நரகம் தீர்க்கும் மருந்து. (2284)
திருப்பாற்கடலிலே கண் வளர்ந்திருப்பவனும், பிராட்டியின் கொங்கைத் தடத்திலே அடங்கிக் கிடப்பவனும், திருத்துழாயைத் திருமார்பில் அணிந்தவனும், பகைவர் அழியும்படி சீற்றத்தினால் அழித்து மகிழ்ந்தவனும், கடல் போன்ற வடிவையுடையவனும், தப்பாமல் நேரக்கூடிய சம்சாரமாகிய நரகத்தைப் போக்க வல்ல மருந்து போன்றவனுமான சர்வேச்வரன் என் மனத்திலே வந்து சேர்ந்துவிட்டான்.

பேசுவார், எவ்வளவு பேசுவர், அவ்வளவே
வாச மலர்த் துழாய் மாலையான், - தேசு உடைய
சக்கரத்தான், சங்கினான், சார்ங்கத்தான், பொங்கு அரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு. (2302)
மணம் மிக்க மலர்களோடு கூடிய திருத்துழாய் மாலையை அணிந்தவனு ஒனியையுடைய திருச்சக்கரத்தை ஏந்தியவனும், திருச்சங்கத்தை உடையவனும், சார்க்கவில்லை உடையவனும், மிக்க ஆரவாரமுடையவனாய் வந்த தந்தவக்கிரனைக் கொன்றொழித்தவனுமான எம்பெருமானுடைய வடிவு எப்படிப்பட்டதென்றால், பேசுகின்ற அவரவர்கள் எவ்வெவ்வளவு பேசுகின்றார்களோ அவ்வவ்வளவேயாம்.

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பும், வாய்ந்த
மறை, பாடகம், அனந்தன் வண் துழாய்க் கண்ணி,
இறை பாடி ஆய இவை. (2311)
திருப்பாற்கடல், திருக்குடந்தை, திருமலை, நேர்ப்பட்ட எனது மனம், நிறைந்த பரமபதம், அமைந்த வேதம், திருப்பாடகம், ஆதிசேடன் - ஆகிய இவையெல்லாம் அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள எம்பெருமான் நித்தியவாசம் செய்ப் பெற்ற இராசதானிகளாம்.

நிறம் வெளிது, செய்து, பசிது, கரிது என்று
இறை உருவம் யாம் அறியோம், எண்ணில் - நிறைவுஉடைய
நா-மங்கை தானும் நலம் புகழ வல்லளே
பூ மங்கை கேள்வன் பொலிவு? (2337)
எம்பெருமானுடைய திருமேனியானது நிறத்தால் வெளுத்திருக்குமோ, சிவந்திருக்குமோ? பச்சென்றிருக்குமோ? கறுத்திருக்குமோ? எவ்வண்ணமிருக்கும் என்று ஆராயுமிடத்தில் நாம் அறியமாட்டோம்;  (இதுநிற்க) ஞான சக்திகளில் நிறைவுடையவளான கலைமகளும் பூவிற் பிறந்த பெரிய பிராட்டிக்குக் கணவனான எம்பெருமானுடைய பொலிவை நன்றாகப் புகழச் சக்தியுடையவளோ? (அல்லள்)

அது நன்று, இது தீது, என்று ஐயப்படாதே,
மது நின்ற தண் துழாய் மார்வன் - பொதுநின்ற
பொன்னன் கழலே தொழுமின்; முழு வினைகள்
முன்னம் கழலும், முடிந்து. (2369)
'அது நல்லதோ இது கெட்டதோ?என்று சந்தேகப்பட்டுக் கொண்டிராமல் தண்துழாய் மாலையைத் திருமார்பிலணிந்த பெருமானுடைய சர்வ சாதாரணமான விரும்பத்தக்க அழகிய திருவடிகளையே தொழுங்கள். (அப்படித் தொழுதால்) முந்துறவே எலலா வினைகளும் உருமாய்ந்துவிட்டு நீங்கும்.

நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் : தொகுதி 3
உரையாசிரியர் :  முனைவர் இரா.வ.கமலக்கண்ணன்
வர்த்தமானன் பதிப்பகம், 21, இராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், 
சென்னை 600 017, முதற்பதிப்பு 2011
தொலைபேசி : 99418 63542, 90949 63125, 93806 30192, 2814 4995, 2814 0347,
43502995

இதற்கு முன்னர் நாம் வாசித்தது: இரண்டாம் திருவந்தாதி : பூதத்தாழ்வார்

18 August 2018

மண் வாசனை : ஜ. பாரத்

250 ஆவது பதிவு 
வலைப்பூவினைத் தொடர்ந்து வாசித்தும், கருத்து கூறியும் ஆதரவு தருகின்ற நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்கள் மகன் திரு ஜ.பாரத் (99620645436) எழுதியுள்ள மண் வாசனை நூல் 20 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பாகும். அவ்வப்போது வலைப்பூவில் எழுதி வந்ததை நூலாகக் கொணரும்படி அறிவுறுத்தியபோது மேலும் சிலவற்றைச் சேர்த்து நூல் வடிவமாகக் கொண்டு வந்துள்ளார்.


“இவ்வளவு சின்ன வயதில் சமூகத்தின்மீது அக்கறையும், பொறுப்பும் கொண்ட இந்த இளைஞனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இருபது தலைப்புகளில் சிறுகதைகளாக அமைந்திருந்தாலும் கூட்டுக்குடும்ப வாழ்க்கையை நிறைய கதைகள் வலியுறுத்திக் காட்டுகின்றன. இன்று அவற்றை எல்லாம் இழந்து நிற்கின்றோம்.” என்று திரு மணி. மாறன் தன்னுடைய அணிந்துரையில் குறிப்பிடுகின்றார்.  


எங்கள் இளைய மகன் சிவகுருவிடம் நூலைப் பெறல்
எங்கள் இளைய மகன் சிவகுருவிடம் நூலைப் பெறல்
பணமே உலகம் என்ற அடிப்படையில் வாழ்ந்துகொண்டு அன்பையும், பாசத்தையும், நேசத்தையும், நெருக்கத்தையும், குடும்பப் பிணைப்பையும், நட்பின் ஆழத்தையும் விட்டு பலர் விலகிச்செல்கின்றனர். கூட்டுக்குடும்பச் சிதைவு, தனிக்குடித்தன அதிகரிப்பு, தான் என்ற குணம் மேலோங்கி நிற்றல் போன்ற குணங்கள் இக்காலகட்டத்தில் அதிகமாகக் காணப்படுகின்றது. பிழைப்பினைத் தேடி வெளியே செல்லும்போதுதான் வாழ்க்கையின் உண்மையான பரிமாணங்களை உணர முடியும்.


இயல்பான வாழ்க்கையை விடுத்து, நடிப்பு வாழ்க்கை எங்கும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. உறவிலிருந்தும், நட்பிலிருந்தும் அந்நியப்பட்டு தமக்காகவே ஒரு எல்லைக்கோடு அமைத்துக்கொண்டு அதற்குள் வாழ்வோர் பலரை நம்மில் காணமுடிகிறது. அடிப்படைத்தேவைக்கு அப்பால் பொருள்களை வாங்க ஆரம்பித்தல், தன் நிலையை மேம்படுத்திக்கொள்வதாக நினைத்து ஏமாற்றிக்கொள்ளல், அண்டை வீட்டாரை ஒப்பு நோக்கி தம்மை உயர்த்துவதாக நினைத்துக்கொண்டு தன் நிலையிலிருந்து கீழே வர ஆரம்பித்தல், பெரியவர்களிடம் ஆலோசனை கேட்காமல் உடனடியாக முடிவெடுத்து பின் வருந்துதல், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று தன் கருத்தையே நிலைநிறுத்த வைத்தல், பிறருடைய அறிவுரைகளை கடைபிடிக்கத் தயங்குதல் போன்றவை பலருடைய வாழ்க்கையை திசை திருப்பிவிடுகின்றன.
பதிப்பாளர் காட்சிப்பேழையில் மண் வாசனை

இவ்வாறாக நாம் தொலைத்துக்கொண்டிருக்கும் அடையாளங்களை இனங்கண்டு அவற்றின் முக்கியமான கூறுகளை உள்வாங்கிக் கொண்டு அவற்றின் அடிப்படையில் சிறுகதைகளை வடித்துள்ள விதம் பாராட்டத்தக்கது. உறவுகள் பிரியும்போது மனதில் ஆழமாகப் பதிகின்ற வேதனை, பிரிந்த உறவுகள் சந்திக்கும்போது ஏற்படுகின்ற எல்லையற்ற மகிழ்ச்சி, தொலைத்துவிட்ட வாழ்க்கையை மனதில் கொண்டுவந்து உணரும்போது கிடைக்கின்ற அதீத சுகம் போன்றவற்றை அனுபவித்தவர்கள்தான் உணரமுடியும். அவற்றை சாதாரண சொற்களால் வெளிப்படுத்த முடியாது. ஆனால் அது போன்ற நிகழ்வுகளை நம் கண் முன் கொண்டு வந்து நம்மை அதில் லயிக்க வைத்த நூலாசிரியரின் முயற்சி பாராட்டத்தக்கது. அத்துடன் சமூகப்பிரக்ஞையை உணர்த்துகின்ற கதைகளும், வரலாற்று நிகழ்வினை கற்பனையாகக் கொண்ட பதிவும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. நூலை வாசிக்கவும், கருத்து கூறவும் அன்போடு அழைக்கிறேன்.
எங்கள் இல்ல நூலகத்தில் மண் வாசனை
நூல் தேவைக்குக் கீழ்க்கண்ட முகவரியைத் தொடர்புகொள்ள வேண்டுகிறேன்: ஜீவா படைப்பகம், 214, மூன்றாவது பிரதான சாலை, புவனேஸ்வரி நகர், வேளச்சேரி, சென்னை 600 042, jeevapataippagam@gmail.com, 9994220250, 9841300250, ஜுன் 2018, ரூ.150

11 August 2018

அயலக வாசிப்பு : ஜுலை 2018

ஜுலை 2018 அயலக வாசிப்பில் மதுரையைச் சேர்ந்த பேராசிரியரின் சாதனை, கேன்சரை எதிர்கொள்ள புதிய உத்தி, தாய்லாந்து குகையிலிருந்து மாணவர்கள் விடுவிப்பு, நெல்சன் மண்டேலா எழுதி இதுவரை வெளிவராமல் தற்போது வெளியாகியுள்ள கடிதங்கள்,  கடும் மழை மற்றும் கட்டுமானப்பணிகளின் காரணமாக சீனப்பெருஞ்சுவரின் ஒரு பகுதி இடிந்தமை உள்ளிட்ட பல செய்திகளைக் காணலாம். இவை கார்டியன், சன், யுஎஸ்ஏ டுடே, அப்சர்வல், டெலிகிராப் ஆகிய இதழ்களில் வெளிவந்தவையாகும்.

மதுரையைப் சேர்ந்த பேராசிரியரின் சாதனையைப் பற்றி, இன்றைய கார்டியன் இதழில் வெளியான கட்டுரை...இந்தியச்சாலைகளில் பழைய பிளாஸ்டிக்கினைக் கொண்டு சாலை போட வழிவகுக்கின்றார் இந்திய வேதியியல் பேராசிரியர். “பிளாஸ்டிக்கைத் தடை செய்தால் அது குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தினரின் வாழ்க்கைமுறையைப் பாதிக்கும். ஆனால் அதனை எரித்தாலோ, புதைத்தாலோ சுற்றுச்சூழலை மாசுபடுத்தும்.“ பிளாஸ்டிக், பிரச்னையே இல்லை என்று கூறும் முனைவர் ராஜகோபாலன் வாசுதேவன் (73), மதுரை தியாகராஜர் கல்லூரியின் வேதியியல் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியராவார். 2001வாக்கில் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஒரு பணிப்பட்டறையின் போது அவர் இந்தக் கருத்தினைத்  தெரிவித்துள்ளார்.  பிளாஸ்டிக் தடை செய்யப்படவேண்டும் என்ற கூக்குரல் தன்னை அதிகம் தொந்தரவுபடுத்தியது என்றும், பிளாஸ்டிக் ஏழை மக்களுக்கு மிகவும் முக்கியமானது என்று நம்புவதாகவும், அதனால் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ள ஒரு தீர்வு காணவும் விரும்பியுள்ளார்.பயனற்ற பிளாஸ்டிக்கை வழக்கத்திற்கு மாறான முறையில் மறுபடியும் பயன்படுத்தலாம் என்ற அவருடைய ஆய்விற்காக இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீவிருதினைப் பெற்றவர்.
  
கேன்சரையும், ஆல்கிமீர் நோயையும் எதிர்கொள்ளும் வகையில் விண்வெளியில் செடிகளை நடலாம் என்று அண்மை ஆய்வு கூறுகிறது. விண்வெளி ஆய்வு மைய விண்வெளி வீரர்களுடன் அறிவியலாளர்கள் இணைந்து சில மருந்துகளை கண்டுபிடிப்பதற்காக சிறப்பு நீர், மண் போன்றவற்றில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்கள். இதற்காக கேன்சரை எதிர்கொள்கின்ற சில விதைகள் அங்கு தற்போது அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த செய்தி. இம் முயற்சியில் ஈடுபட்ட அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்......தாய்லாந்தின் மலைக்குகைக்குள் 17 நாள்கள் சிக்கித்தவித்த 12 மாணவர்களும் ஒரு பயிற்சியாளரும் கொண்ட வைல்டு போர்ஸ் என்ற கால் பந்தாட்டக்குழுவினர் மீட்கப்பட்டனர். 11 முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பயிற்சியாளருடன் பயிற்சி முடிந்து செல்லும்போது லூவாங் குகையை அடைகின்றனர். உள்ளே நுழைந்த சில நிமிடங்களில் மழை பெய்ய ஆரம்பிக்கவே, அவர்கள் வெளியே வரமுடியாமல் உள்ளே சிக்கித் தவிக்கின்றனர். சிறப்புக் கடல் அதிரடிப்படையினருடன் பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளைக் கொண்ட மீட்புப்பணி வல்லுநர்கள் தம் நுணுக்கமான செயல்பாடுகளாலும், திட்டங்களாலும் அனைவரையும் காப்பாற்றுகின்றனர். கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக உலகமே அவர்கள் குகையிலிருந்து மீள வரவேண்டும் என்று ஒட்டுமொத்தமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் நல்ல செய்தி கிடைத்துள்ளது. இப்பணியில் ஈடுபட்டவர்களில் ஆக்சிசன் பற்றாக்குறையால் ஒருவர் இறந்தது அனைவருக்கும் சோகத்தைத் தந்தது.

சிறையிலிருந்தபோது நெல்சன் மண்டேலா தோழர்களுக்கும், உறவினர்களுக்கும் எழுதிய 250க்கும் மேற்பட்ட கடிதங்களில் பாதிக் கடிதங்கள் இதுவரை வெளிவராதவையாகும். 
வின்னி மண்டேலாவுக்கு அவர் எழுதுகிறார், “உண்மையில் சொல்லப்போனால் இந்தக் குறிப்பிட்ட கடிதம் உன் கைக்குக் கிடைக்கும் என்று என்னால் சொல்ல முடியாது. ஜுலை 18, ஆகஸ்டு 1, 18இல் எழுதியவைகூட உனக்குக் கிடைக்குமோ என்று சொல்லமுடியாது, கிடைத்தால்கூட எப்போது கிடைக்கும் என்று சொல்லமுடியாது…” [The Prison Letters of Nelson Mandela, edited by Sahm Venter, is published by Liveright (£25).]

மண்டேலாவின் நூறாவது பிறந்த நாளில் அவரைப் பற்றிய 100 அரிய செய்திகளை யுஎஸ்ஏடுடே இதழ் வெளியிட்டுள்ளது. அவரது பிறப்பு தொடங்கி, குடும்ப வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை உள்ளிட்ட நிகழ்வுகள் இதில் தரப்பட்டுள்ளன. 

சார்லஸ் பெட்டி 95 வயதில் டாக்டர் பட்டம் பெறுகிறார். பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றோரில் அதிக வயதானவர். இவரது ஆய்வேடு 48,000 சொற்களைக் கொண்டது. ஆய்வேட்டின் தலைப்பு Why elderly expats living in Spain return to the UK என்பதாகும். இது இவர் பெற்ற இரண்டாவது முனைவர் பட்டமாகும். மற்றொரு தலைப்பில் இவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். "அவருக்கு படிப்பதிலும் ஆய்வு செய்வதிலும் அதிக ஆர்வம் உள்ளது. இது பெரிய சாதனை. அவர் மேற்கொண்டு படித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை" என்று அவருடைய மனைவி பெருமையுடன் கூறினார்.  அவருடைய மகள் இது ஒரு கண்கவர் சாதனை என்றார்.

---------------------------------------------------------------------------------
தமிழக முன்னாள் முதல்வர் திரு மு.கருணாநிதி அவர்களின் மறைவையொட்டி, எங்கள் மூத்த மகன் ஜ.பாரத் எழுதிய கடிதம் The Hindu இதழில் 8 ஆகஸ்டு 2018 அன்று வெளியானது.
---------------------------------------------------------------------------------

04 August 2018

பெரிய எழுத்தின் பயன்பாடு (The usage of capital letters)

அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் அதிபர் ரூஹாணிக்கு அனுப்பியிருந்த டிவிட்டர் செய்தியில் “எச்சரிக்கையாக இருங்கள். இல்லாவிட்டால் வரலாறு காணாத பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று கூறியிருந்தார். பொதுவாக கோபத்தை வெளிக்காட்டும் விதமான பெரிய எழுத்துக்களில் (capital letters in English) அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது என்று அச்செய்தியில் காணமுடிந்தது. கோபத்தை வெளிக்காட்டும் விதம் என்ற சொற்றொடரைக் கண்டு வியப்புற்றேன். பொதுவாக பெரிய எழுத்துகளில் செய்தியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவும், அழுத்தம் தருவதற்காகவும் பெரிய எழுத்தினைப் பயன்படுத்தி எழுதுவதை நாளிதழ்களில் பல செய்திகளைப் பார்த்துள்ளேன்.
வழக்கத்திற்கு மாறாக டிரம்ப் பெரிய எழுத்தில் எழுதி வருவது மொழியியலாளர்கள் மற்றும் மொழி வல்லுநர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பெயர்ச்சொல்லாக இல்லாத சொற்களைக்கூட (“border”, “military”, “country”) அவர் பெரிய எழுத்தில் எழுதுகிறார். பணியிலிருந்து நீக்கல், கொள்கை முடிவுகளை அறிவித்தல், தன்னுடைய விரக்தியை வெளிப்படுத்துதல் மற்றும் எதிரிகளை அவமானப்படுத்துதல் போன்றவற்றின்போது அவர் பெரிய எழுத்தினைப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர். மின்னஞ்சல்களிலும் அலுவல்சாராக் கடிதங்களிலும் பெரும்பாலும் பெரிய எழுத்துகள் பயன்படுத்தப்படுவதில்லை. அலுவல்சார் கடிதங்களில் பெரிய எழுத்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
பொதுவாக டிரம்ப் கேபிடல் எழுத்துக்களை அரிதாகப் பயன்படுத்துவதாக அண்மையில் கூறியிருந்தார். அப்போது அவர் சில சொற்களை மட்டுமே அழுத்தம் தருவதற்காக பெரிய எழுத்தில் எழுதுவதாகக் கூறியிருந்தார்.  சில செய்திகளில் காணப்பட்டதுபோல அவர் கோபத்தை வெளிப்படுத்த பெரிய எழுத்துக்களைப் பயன்படுத்தியுள்ளார் என்பதற்கு மாற்றாக அழுத்தம் தருவதற்காக அவர் அவ்வாறு பயன்படுத்தியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. பல சூழல்களில் பல நாளிதழ்களில் பெரிய எழுத்துக்கள் இவ்வாறான பயன்பாட்டில் உள்ளதைக் காணலாம்.  

டிரம்பின் ஈரான் டிவிட்டும் அனைத்து எழுத்துக்களையும் பெரிய எழுத்துக்களில் தட்டச்சு செய்யும் வரலாறும் என்ற தலைப்பில் வெளியான செய்தியில் பெரிய  எழுத்துக்களைப் பயன்படுத்தும் முறையைப் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. டிரம்பின் டிவிட்டரைக் கிண்டலடித்து பலர் டிவிட்டரில் செய்திகளைப் பரிமாறியிருந்தனர். டிரம்ப் முக்கியத்துவத்திற்காகவே/அழுத்தம் தருவதற்காகவே தான் பெரிய எழுத்துக்களைப் பயன்படுத்துவதாக ஒரு டிவிட்டர் செய்தியில் கூறியிருந்தார்.


அமெரிக்காவில் தெருக்களின் பெயர்களில் பெரிய எழுத்து

டிரம்பின் பயன்பாட்டினை நோக்கும்போது 2010வாக்கில் நியூயார்க் நகரில் உள்ள தெருக்களின் பெயர்களின் எழுத்துருக்களில் மாற்றம் கொணர முடிவெடுக்கப்பட்டது நினைவிற்கு வந்தது. அதற்கு முன்னர் வரை தெருக்களின் பெயர்கள் முழுக்க முழுக்க பெரிய எழுத்துக்களில் இருந்தன. பெரிய எழுத்துக்கள் அபாயகரமானவை என்று அப்போது கூறப்பட்டது. "அனைத்துமே பெரிய எழுத்துக்களாக உள்ள சொற்களைப் படிப்பது சற்றே சிரமம் என்று ஓர் ஆய்வு கூறுவதாகவும், பெரிய எழுத்துக்களை உற்றுப்பார்க்கின்ற அதிகமான நேர இடைவெளியில் விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும், குறிப்பாக வயதான ஓட்டுநர்கள் இச்சிக்கலை எதிர்கொள்வதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது." என்றது நியூயார்க் போஸ்ட். அவ்வகையில் நியூயார்க் நகரில் 2,50,900 தெருப்பெயர்கள் மாற்றம் காணவுள்ளதாகவும் முதல் எழுத்து மட்டுமே பெரிய எழுத்தாக இனி அமையும் (உதாரணமாக BROADWAY என்பது Broadway) என்றும் கூறப்பட்டது. இவ்வகையில் வருடத்திற்கு 8,000 தெருப்பெயர்கள் மாற்றம் பெறுமென்று கூறப்பட்டது. இதற்காகவே Clearview என்ற புதிய எழுத்துரு அறிமுகப்படுத்தப்பட்டது.  பொதுமக்களில் மூவரில் இருவர் இந்த முறைக்கு ஆதரவினைத் தெரிவித்திருந்தனர். இந்த எழுத்துரு மாற்றம் கனிவான உணர்வினைத் தருமென்றும், பலரின் உயிரைக் காப்பாற்றும் என்றும் நகரின் டிரான்ஸ்போர்ட்டேஷன் கமிஷனர் கூறியிருந்தார்.


கார்டியன் 4 அக்டோபர் 2010
ஐக்கிய நாடுகளில் தெருவின் பெயர்களில் பெரிய எழுத்து

ஐக்கிய நாடுகளில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த முடிவின் எதிரொலியே நியூயார்க்கின் பெயர் மாற்றம் என்று கூறப்படுகிறது. சாலையின் பெயர்களில் உள்ள குழப்பத்தினைச் சரிசெய்யும் பொறுப்பினை ஏற்ற வடிவமைப்பாளர்கள் "வழக்கமாக அனைத்து எழுத்துக்களும் பெரிதாக இருக்கும் நிலைக்கு மாறாக பெரிய மற்றும் சிறிய எழுத்துக்கள் கலந்திருந்தால் படிக்க எளிதாக இருக்கும்" என்று கூறினர். அவர்கள் இதற்காகவே Transport என்ற புதிய எழுத்துருவினை அப்போது உருவாக்கினர்.  பிரிட்டிஷ் ஓட்டுநர்களுக்கு, அந்த எழுத்துக்கள் பார்ப்பதற்கு கண்களுக்கு இதமாக இருக்கும்படி அது அமைந்தது. அவ்வாறாக அப்போது அறிமுகப்படுத்தப்பட்ட அந்த எழுத்துருக்களைக் கொண்ட சாலையின் பெயர்கள்தான் இன்னும் பயன்பாட்டில் உள்ளன.

        Using Capital letters என்ற கட்டுரையில் In English, we do NOT use capital letters very much என்ற சொற்றொடரைக் காணமுடிந்தது. இவ்விடத்தில்  பொருண்மையின் முக்கியத்துவத்தைக் குறிக்க NOT என்ற சொல் பெரிய எழுத்துக்களில் குறிக்கப்பட்டிருந்தது. 

        Guardian மற்றும் Observer இதழ்களின் தளத்தில் Guardian and Observer style guide என்ற முதன்மைத்தலைப்பில் ஒவ்வொரு ஆங்கில எழுத்திற்கும் தனியாக (a முதல் z வரை) அவர்கள் பெரிய எழுத்தினைப் பயன்படுத்தும் விதியினைக் குறிப்பிட்டுள்ளனர். அதில் style guide c என்ற பிரிவில் capital letter பயன்படுத்துவதைப் பற்றி விளக்கமாகத் தந்துள்ளனர்.
கார்டியன் 23 டிசம்பர் 2015
பொதுவாக New York Times இதழில் வருகின்ற செய்தியின் தலைப்புகளில் ஒவ்வொரு முதல் எழுத்தும் பெரிய எழுத்தாக உள்ளதைக் காணமுடியும். இருப்பினும் connecting wordக்கு அவர்கள் பெரிய எழுத்தினைப் பயன்படுத்துவதில்லை.
நியூயார்க் டைம்ஸ் 4 ஜுலை 2018
Daily Mail மற்றும் Express போன்ற இதழ்களில் வெளிவருகின்ற செய்திகளில் அதனதன் முக்கியத்துவத்தைக் குறிக்கும்வகையில் ஒரு சொல் முழுமையாக பெரிய எழுத்துக்களில் காணப்படுகின்றன. Express இதழில் ஒரு செய்தியில் இரு சொல் இவ்வாறாக பெரிய எழுத்துகளில் வந்துள்ளதைக் காணமுடிகிறது. இந்த பெரிய எழுத்துக்கள் முக்கியத்துவம் என்பதுடன் தொடர்புடைய செய்தியில் காணப்படுகின்ற கோரம், ஆதங்கம், வருத்தம், தாக்கம், மன உறுதி போன்ற பல நிலைகளில் உணர்வு வெளிப்பாடுகளை வெளிப்படுத்துவதை அறியலாம்.
டெய்லி மெயில் 25 ஜுலை 2018

எக்ஸ்பிரஸ் 24 ஜுலை 2018

டெய்லி மெயில் 24 ஜுலை 2018


டெய்லி மெயில் 25 ஜுலை 2018


எக்ஸ்பிரஸ் 1 ஆகஸ்டு 2018

எக்ஸ்பிரஸ் 29 ஜனவரி 2017
நேற்று டிரம்ப் தன்னுடைய மகள் இவங்கா டிரம்ப் ஊடகங்கள் தொடர்பாக அளித்த பேட்டியின்போது கருத்தினைக் குறிப்பிட்டு, பெரிய எழுத்துக்களை பயன்படுத்தியிருந்தார். FAKE NEWS என்பதனை வலியுறுத்திக் கூறும் வகையில் அந்த இரு சொற்களை பெரிய எழுத்தில் பயன்படுத்தியுள்ளார். முக்கியத்துவம் மற்றும் வலியுறுத்திக்கூறல் என்ற வகையில் இது அமைகிறது.  முற்றிலும் பெரிய எழுத்துக்களைக் கொண்ட சொல் எதுவுமின்றிகூட டிரம்ப் டிவிட்டரில் பல செய்திகளைப் பகிர்கிறார்.



துணை நின்றவை
Trump has an unusual habit of capitalizing random words in his tweets writing experts take their best guesses why, Business Insider, 19 April 2018
Trump Uses Random Uppercase Letters, but Should You? An Issue of Capital Importance, The New York Times, 4 July 2018
Trump says Iran will ‘suffer consequences after speech by President Rouhani,Guardian, 23 July 2018
Trump, Iran, and the Dangers of Presidential Bluffing, The Atlantic, 23 July 2018

Trump’s Iran Tweet And THE LONG HISTORY OF TYPING IN ALL CAPS, NDTV,  24 July 2018

 Zach Braff, Papa Roach, and Jersey Shore’s Vinny troll the president with hilarious all-caps tweets addressed to Iranian President Rouhani after Trump posted an astonishing online rant, Daily Mail, 25 July 2018)

https://www.ndtv.com/world-news/donald-trumps-iran-tweet-and-the-long-history-of-typing-in-all-caps-1888459