நூல்கள்
வாசிப்போருக்கும், தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும் ஒரு இனிய செய்தி. ஆஸ்திரேலியாவில்
மெல்போர்னில் உள்ள ஆர்எம்ஐடி பல்கலைக்கழகத்தின்
உளவியல் மற்றும் வடிவமைப்புப் பிரிவின் ஆய்வாளர்கள் சான்ஸ் ஃபார்காட்டிகா (Sans Forgetica)
என்ற ஒரு புதிய ஆங்கில எழுத்துருவினை (font) உருவாக்கியுள்ளனர். வாசகர்கள் மனதில் எளிதாக
நினைவில் வைத்துக்கொள்ளவும், மாணவர்கள் நினைவாற்றலை தக்கவைத்துக்கொள்ளவும் இந்த புதிய
எழுத்துரு உதவும் என்று அவர்கள் கூறுகின்றார்கள்.
புதிய
எழுத்துருவினைக் கண்டுபிடிக்க இப்பல்கலைக்கழகம் 400 பல்கலைக்கழக மாணவர்களை வைத்து ஓர்
ஆய்வு மேற்கொண்டது. சாதாரண ஏரியல் எழுத்துருவில் 50 விழுக்காட்டினர் நினைவுவைத்துக்கொண்டபோது
புதிய எழுத்துருவான சான்ஸ் ஃபார்காட்டிகாட்டிகாவில் 57 விழுக்காட்டினர் நினைவில் வைத்துக்கொண்டிருந்ததை
ஆய்வின் முடிவில் காணமுடிந்தது.
இந்த எழுத்துருவினை
உருவாக்க ஆறு மாதங்கள் ஆகியுள்ளன. பரிசோதனையின்போது மூன்று வெவ்வேறு வகையான மாதிரிகள்
பயன்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து மெய்ப்பு வாசிப்பு உள்ளிட்ட பல நிலைகளில் இந்த எழுத்துரு
சோதிக்கப்படவுள்ளது.
தேர்வு எழுதவுள்ள
மாணவர்களை மனதில் வைத்தே இந்த எழுத்துரு உருவாக்கப்பட்டுள்ள போதிலும் அயலக மொழிகளைக்
கற்போருக்கும், நினைவாற்றல் இழந்த முதியோருக்கும் இது உதவும். இந்த எழுத்துருவானது
இடது புறத்தில் ஏழு டிகிரி பின்சாய்ந்த நிலையில், எழுத்துகளுக்கிடையே இடைவெளியுடன்
காணப்படுகிறது. பெரும்பாலான வாசகர்களுக்கு பிற்சாய்வுநிலை அமைப்பிலான எழுத்துரு புதிதாக
இருக்கும். ஏனென்றால் இது ஆறுகளைக் காண்பிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.
எழுத்துக்களின் ஆரம்பம் வடிவத்தை மனதில் தக்கவைத்துக்கொள்வதற்காக மூளையின் செயல்பாட்டை
சற்றே நிதானித்து செயல்படுத்தும் வகையில் உள்ளது. தன்னை சரியான நிலையில் தயார்படுத்திக்கொள்ள
மூளை தயாராகும்போது பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற ஏரியல், டைம்ஸ் நியூ ரோமன் எழுத்துருக்களைப்
பார்ப்பதைப் போலவே சான்ஸ்
ஃபார்காட்டிகா எழுத்துருவையும் பார்க்கும்.
மூளையில் தகவலை ஆழமாகப்
பதிய வைக்க இந்த எழுத்துரு உதவும். படிப்பதற்குச்
சிரமம் இருப்பது போலத் தெரியும். எழுத்துருவின் வடிவின் அடிப்படையில் படிக்கத் தாமதமாகும்போது
இயல்பாக நினைவாற்றல் அதிகமாகிறது. நினைவைத் தக்கவைத்துக்கொள்வதற்காக வேகத்தடுப்பு
என்பதானது சேர்க்கப்படுகிறது. வேகத்தடுப்பிற்கும் வாசிக்கப்படும் உரைக்கும் ஒரு சரியான சம நிலையை இந்த எழுத்துரு சிறப்பாகச் செய்கிறது.
அப்போது நினைவுத்திறன் மேம்படுகிறது.
மாணவர்கள் தேர்வுக்குப் படிக்கும்போது உதவுவதைப்
போல இந்த எழுத்துரு உதவுகிறது. ஒரு நூலினை இந்த எழுத்துருவில் ஒருவர் படிப்பதாக வைத்துக்கொள்வோம்.
இந்த எழுத்துருவில் ஒவ்வொரு சொல்லையும் வாசிக்க ஒரு வாசகர் அதிக நேரத்தைச் செலவழிக்கின்றார்.
செலவழிக்கப்படுகின்ற அந்த நேரத்தில் மூளையானது தகவலை தகவமைத்துக்கொள்வதற்கு வாய்ப்பு
தரப்படுகிறது. எழுதும்போது உரிய வடிவத்தை நிறைவு
செய்ய மனம் முயற்சிக்கும்போது வாசிப்பின் வேகம் குறைந்து நினைவாற்றலின் வேகம் அதிகரிக்கிறது.
இது மாயமல்ல. முயற்சியின்பாற்பட்ட அறிவியல் ஆகும். அவ்வாறே நாம்
குறிப்பெடுக்கும்போது, சில நிமிடங்களுக்கு முன்பாக என்ன எழுதினோம் என்பதை மறந்துவிடுவோம்.
ஆனால் இந்த எழுத்துருவானது நாம் எழுதும் குறிப்புகளை அதிக நேரம் நினைவில் வைத்துக்கொள்ள
உதவுகிறது.
இப்போதுதான் முதன்முறையாக குறிப்பிட்ட கொள்கையினைக்
கொண்ட வடிவக் கோட்பாட்டோடு உளவியல் கோட்பாடு இணைந்து ஒரு எழுத்துரு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த எழுத்துருவினை sansforgetica.rmit என்ற
பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வசதி உள்ளது. வழக்கமாக உள்ள
எழுத்துருக்களை எதிர்கொண்டு இந்த புதிய எழுத்துரு வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்து
பார்க்கவேண்டும்.
This line is typed in Sans Forgetica by Dr B Jambulingam என்று இந்த எழுத்துருவில் தட்டச்சு செய்தது |
துணை
நின்றவை