55 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவைப் பற்றிய
பல பதிவுகளை புகைப்படம் எடுத்துவருகின்ற புகைப்படக் கலைஞர் ரகு ராய், அன்னை தெரசா மற்றும்
சத்தியஜித் ரே தொடங்கி செஃல்பி மற்றும் இன்ஸ்டாகிராம் வரை விவாதிக்கிறார். டெலிகிராப்
இதழில் அபிஜித் மித்ராவிற்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து சிலவற்றைக் காண்போம்.
முன்னாள் பிரதமர்வாஜ்பாயியின் பாகிஸ்தான் பயணத்தின்போது |
நான் தொழில்நுட்பத்தை மாற்றிக்கொண்டேன்,
தொடர்பு சாதனம் ஒன்றே. ஆரம்ப காலத்தில் கருப்பு வெள்ளையில் புகைப்படம் எடுத்தேன், ஏனென்றால்
60களிலும், 70களிலும் கருப்பு வெள்ளையே இருந்தது. பிறகு வண்ண பிலிம் வர ஆரம்பித்தது.
அப்போது நாங்கள் இரு கேமராக்களை எடுத்துச்செல்ல ஆரம்பித்தோம். இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பம்
வந்துவிட்டது. இரு கேமராக்களைக் கொண்ட செல்லவேண்டிய அவசியம் இல்லை. ஒரு கேமராவில் புகைப்படம் எடுக்கின்றீர்கள், அது
வண்ணத்தில் சரியில்லை என்றால் கருப்பு வெள்ளைக்கு மாற்றிவிடுகின்றீர்கள். இங்கு டிஜிட்டல்
தொழில்நும்பம் உதவுகிறது. கேமராவை ஆட்டோ ஃபோகஸ் மற்றும் ஆட்டோ எக்ஸ்போசர் நிலையில்
வைத்து தெளிவான புகைப்படத்தை எடுக்க முடிகிறது. அதைப் பார்த்துவிட்டு ‘மிகவும் அருமை’
என்கின்றீர்கள். அங்கு ஆத்மா தொலைந்துவிடுவதை நீங்கள் உணர்வதில்லை.
தற்போது அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்ற
மொபைல் தொலைபேசி கேமராவை கற்பனாரீதியாக புகைப்படம் எடுக்க எவ்வாறு பயன்படுத்தலாம்?
புகைப்படம் எடுப்பதற்காகவென்றே செல்வது
என்பது ஒன்று. உணர்வுகளோடு மேற்கொள்வது என்பது மற்றொன்று. உங்கள் மனதைத் தொடும் சூழல்
அமையும்போது நீங்கள் மகிழ்ச்சியடைகின்றீர்கள். அந்தப் பதிவும் சிறப்பாக அமைகிறது. வலுக்கட்டாயமாக
புகைப்படமெடுக்கும்போது உங்களுக்கு சலிப்பு தட்டிவிட வாய்ப்புள்ளது.
மொபைல் போன் கேமராவில் புகைப்படம் எடுத்துவருவோருக்கு
நீங்கள் ஏதேனும் உத்திகளைக் கூறமுடியுமா?
உங்களால் ஒரு நல்ல கேமரா வாங்கும் வசதி
இருப்பின் நல்ல கேமராவினை வாங்குங்கள். தரம் என்பது சரியில்லாத நிலையில்….அவர்களால்
எப்படி புகைப்படம் எடுக்க முடியும்?
இங்கு தரம் என்று நீங்கள் எதனைக் குறிப்பிடுகின்றீர்கள்?
படத்தின் தரம், பிக்சல்ஸ் போன்றவை காட்சிப்படுத்தப்படுகின்ற
புகைப்படங்களுக்கோ பெரிய அளவிலான புகைப்படங்களுக்கோ சிறப்பானதாகப் பொருந்தியிராது.
உண்மையிலேயே சிறந்த புகைப்படக்கலைஞராக ஆக விரும்பினால் நீங்கள் மொபைல் போனில் புகைப்படம்
எடுக்க முடியாது. சில மொபைல் போன்கள் தரமான கேமராக்களைக் கொண்டுள்ளன, ஆனால் எப்படி?
இப்போதெல்லாம் மொபைல் போன்களைவிட கேமராக்களின் விலை குறைவாக உள்ளதே.
மொபைல் போனைக் கையாள்வது எளிது என்ற
நிலையில்கூட அது அமையலாம்.
தவம் முக்கியமா? வசதி முக்கியமா? தியானம் செய்கின்ற தபஸ்வியாக நீங்கள் இருக்க
விரும்புகின்றீர்களா? அல்லது அவ்வப்போது புகைப்படங்களை எடுத்த இன்ஸ்டாகிராமில் பதிவிட
விரும்புகின்றீர்களா? இன்ஸ்டாகிராம் என்பது ஒரு நோய்.
நீங்கள் இன்ஸ்டாகிராமில் உள்ளீர்களே?
பெரும்பாலான மக்கள் அதனைப் பயன்படுத்துகின்ற
வழிமுறை..சற்றொப்ப நோயைப் போலவே. சில சமயங்களில் என் மகள் நான் எடுத்த புகைப்படங்களை
இன்ஸ்டாகிராமில் பதிவிடுகிறாள். நான் அதில் தலையிடுவதில்லை. அதனைப் பார்ப்பதுகூட இல்லை.
செல்ஃபியைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
ஓ…இது ஒரு நோய். அனைவருமே செல்ஃபி எடுக்க
ஆரம்பித்துவிட்டார்கள். சமய நிகழ்வுகள், மங்களகரமான நிகழ்வுகள், அமங்கல நிகழ்வுகள்
என்று முக்கியமான இடங்களில்கூட செல்ஃபி எடுக்க ஆரம்பித்துவிடுகின்றார்கள், சுய மகிழ்ச்சியை
வெளிப்படுத்திக்காட்டுவதற்காக. போன்களில் உள்ள லென்ஸ்கள் அகல அளவுள்ளவையாகும். அவை
உங்களின் முகத்தைத் திரித்துக்காட்டிவிடும். உங்கள் கற்பனாசக்தியைப் பயன்படுத்தாவிட்டாலொழிய
அது நன்றாக அமையாது.
வாங்கக்கூடிய விலையில் டிஎஸ்எல்ஆர் கேமராக்கள்
இப்போது விலைக்குக் கிடைக்கின்றன. அதன் காரணமாக மக்கள் எடுக்கும் புகைப்படங்களின் தரத்தில்
ஏதேனும் மாற்றத்தைக் காணமுடிகிறதா?
அந்தப் படங்களின் தொழில்நுட்பத் தரம்
மிகவும் சிறப்பானது என்று கூற விரும்புகிறேன்.
அது சரி, ரசனை என்ற நோக்கில் பார்க்கும்போது?
மக்கள் அதில் சோதனை முயற்சியாக இறங்க
ஆரம்பித்துவிட்டனர். ஏனென்றால் பிலிமைவிட, டிஜிட்டல் தொழில்நுட்பம் அவர்களுக்கு அதிக
சுதந்திரத்தைத் தருகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கடலுக்கடியில் புகைப்படம் எடுக்கலாம்,
கும்மிருட்டில் தெருவின் விளக்குக் கம்பத்தின் அடியிலிருந்து புகைப்படம் எடுக்கலாம்.
அங்கு வெளிச்சம் என்பது பிரச்னையில்லை. உங்கள் வசதிக்குத் தக்கபடி வண்ணமேற்றிக்கொள்ளலாம்.
டிஜிட்டல் முறையில் பல உத்திகளை மேற்கொள்ளலாம். கணிப்பொறியில் செய்யும்போது மேலும்
சில நுட்பங்களைப் பயன்படுத்தலாம்.
நீங்கள் எடுத்த புகைப்படங்களில் மனதில்
நின்றது என்று எதைக் கூறுவீர்கள்?
நான் எடுக்கப்போகின்ற அடுத்த புகைப்படமே.
நான் உயிரற்று இருந்தாலோ, இறந்த காலத்தில் இருந்தாலோ என்னை இறந்தவனாகவே கருத முடியும்.
படைப்புத்திறன் என்றுமே பழமையானவற்றிற்கு பின்னோக்கி இழுத்துச்செல்லாது. இன்றும்கூட வாழ்க்கையிலும், இயற்கையிலும் பல ஆச்சர்யங்கள்
நமக்காகக் காத்திருக்கின்றன. அப்படி இல்லாவிடில் உங்களால் எழுதமுடியாது, புகைப்படம்
எடுக்க முடியாது, சிலர் இசையை உருவாக்க முடியாது. ஏனென்றால் இவையனைத்தும் செய்யப்பட்டுவிட்டன.
இருந்தாலும் இதற்கு முடிவில்லை. முடிவற்ற ஆதாரத்தோடு நீங்கள் இயல்பாக இணைந்துவிடுகின்றீர்கள்.
இப்போது என்ன புகைப்படமெடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்?
வாழ்வின் பொருள் கொண்ட அனைத்தையும் நான்
படம் பிடிக்கிறேன். படமெடுக்கப்பட்டபின் அது இறந்துவிடுகிறது. (சிரிக்கிறார்) ஆகாயம்,
குன்றுகள், நிர்வாணம், நிலப்பரப்பு என்று அனைத்தையும் படமெடுக்கிறேன்.
பல ஆண்டுகளாக நீங்கள் நிலப்பரப்பு, நகரங்கள்,
இயற்கை, மக்கள் என்று பலநிலைகளில் புகைப்படம் எடுத்துள்ளீர்கள். இதற்கெல்லாம் அப்பாற்பட்டு
இன்னும் நீங்கள் செய்ய விரும்புகின்றீர்களா..அதாவது நீங்கள் விடுபட்டது ஏதாவது உள்ளதா?
என்றுமே மாற்றம் கொண்டது வாழ்க்கை. வாழ்க்கையும்
இயற்கையும் மாறிவருவதோடு சவாலாக உள்ளனவாகும். மாற்றம் தவிர்க்கமுடியாதது. சவால் தொடர்ந்து
வருவது. இவ்வகையான சவால்களுக்கு முடிவேயில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
பல இதழ்களில் பணியாற்றியுள்ளீர்கள்.
அக்காலத்தில் உங்களின் அனுபவம் என்ன?
தலையங்கத் தேவைக்கான கட்டுப்பாட்டிற்குள்
நான் இருந்ததில்லை. அவர்கள் கூறும் சூழலுக்கேற்ப சமூக மற்றும் அரசியல் நிலைகளைப் புரிந்துகொள்வேன்.
யாருக்காகவும் எவ்வித திட்டத்தினையும் நான் மேற்கொண்டதில்லை. அதனால்தான் என் பணியில்
உங்களால் உண்மைத்தன்மையையும், ஒரு புதுவிதமான கண்டுபிடிப்பு நிலையையும் காணமுடியும்.
எந்த கட்டுப்பாட்டுக்குள்ளும் நான் ஆட்படாதததற்குக் காரணம் புகைப்படக்கலையின் நோக்கமானது
ஒரு பொருளின் உள்ளார்ந்த உண்மையை என்பதே. ஆகையால் தொழிலுக்காகச் செய்கின்றேனோ, எனக்காகச்
செய்கின்றேனோ செய்துகொண்டேயிருப்பேன்.
அன்னை தெரசாவை முதன்முதலாகச் சந்தித்தபோது
அவரை புகைப்படம் எடுத்துக்கொண்டேயிருந்தேன். எத்தனை முறை நீங்கள் புகைப்படமெடுப்பீர்கள்
என்று அவர் கேட்பதுபோலிருந்தது. “அன்னையே நீங்கள் எத்தனை முறை பிரார்த்தனை செய்துகொண்டேயிருப்பீர்கள்?
பிரார்த்தனை செய்வதற்கான மற்றும் வாழ்க்கையைக் கண்டுபிடிப்பதற்கான வழி இது” என்றேன்.
அவ்வாறாயின் சரி என்றார் அன்னை.
காலத்தால் பின்னோக்கிச் செல்வதாக வைத்துக்கொள்வோம்.
அச்சூழலில் நீங்கள் யாரை புகைப்படம் எடுக்க விரும்புவீர்கள்?
பண்டிதர் ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி,
ரவீந்திரநாத தாகூர் ஆகியோரைப் புகைப்படம் எடுக்க விரும்புகிறேன்.
முதன் முதலாக நீங்கள் பயன்படுத்திய கேமராவைப்
பற்றி நினைவிருக்கிறதா?
நன்றாக நினைவிருக்கிறது. என் சகோதரர்
எனக்குத் தந்த அக்பா சூப்பர் சில்லட். லென்ஸ் பொருத்தப்பட்ட சிறிய கேமரா. அவர் ஒரு
புகைப்படக் கலைஞர். அவரிடம், “அனைவரும் புகைப்படம் எடுக்கின்றார்கள். எனக்கொரு கேமரா
தாருங்கள், நானும் புகைப்படம் எடுக்கிறேன்” என்றேன். அவர் அதில் பிலிம் சுருளை வைத்து,
அதனை எப்படிக் கையாளுவது என்று கூறினார். கிராமத்துக்குச் சென்றேன். கழுதைக்குட்டி
ஒன்றை புகைப்படமெடுத்தேன். பிலிமை டெவலப் செய்தபோது என் சகோதரர் அதைப் பார்த்துவிட்டுக்
கூறினார்: “ஆகா.. மிக அருமையான படம்.” நான் கேட்டேன்: “உண்மையாகவா?” அப்படத்தினை அவர்
லண்டனிலிருந்து வெளிவருகின்ற தி டைம்ஸ் இதழுக்கு
அனுப்பினார். வார இறுதியில் அவ்விதழ் அரை பக்கத்திற்கு புகைப்படம் வெளியிடுவது வழக்கம்.
அவற்றில் சில வேடிக்கையானதாக இருக்கும், சில புதியனவாக இருக்கும், சில குறிப்பிடத்தக்கனவாக
இருக்கும். நான் எடுத்த முதல் புகைப்படம் தி
டைம்ஸ் இதழில் அரைப்பக்கத்தில் என்னுடைய பெயரோடு 1965வாக்கில் வெளியானது.
அனைவரும் என்னைப் பாராட்ட ஆரம்பித்தனர்:
“ரகு, பெரிய சாதனை.” பெரிய சாதனை என்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அப்போது
நான் தில்லியில் இருந்தேன். புகைப்படக்கலைஞராகும் எண்ணம் எனக்கு எழவில்லை. அனைவரும்
என் சகோதரிடம் இதனைப் பற்றிப் பேச ஆரம்பித்ததும், நான் என் சகோதரரிடம் கேட்டேன், ‘எனக்கு
ஒரு நல்ல கேமரா தாருங்கள்’. அவர் எனக்கு ஒரு நிக்கான் கேமரா வாங்கித்தந்தார். நிக்கான்
எப் கேமராவில் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தேன்.
கொல்கத்தாவில் இப்போது என்ன வகையான புகைப்படமெடுத்துக்
கொண்டிருக்கின்றீர்கள்?
55 ஆண்டுகளுக்கு மேலாக நான் புகைப்படமெடுத்து
வருகிறேன். இவ்விடத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு நான் நன்றி கூறவிரும்புகிறேன்.
நான் எடுத்த புகைப்படங்களில் முக்கியமானவற்றை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பாதுகாத்துவைக்க
ஆரம்பித்துள்ளேன். என் அடுத்த நூல் பூஜையைப் பற்றியதாகும்.
அன்னையைத் தவிர, நீங்கள் எடுத்த மனதில் நிற்பவரின் புகைப்படம் யாருடையது?
டாடு. ஓ. டாடு என்றால் புரியவில்லையா? (சிரிக்கிறார்) சத்யஜித் ரே. அவரை நாங்கள் மணிக்டா என்றே அழைப்போம். மக்கள் அவரை டாடா என்கிறார்கள். அவர் டாடா அல்ல, டாடு. பல டாடாக்கள் இருக்கலாம். ஒரு டாடுதான் இருக்கமுடியும், அதாவது மாமனிதர். அவர் ஒரு அதிசயிக்கத்தக்க மனிதர். மக்கள் பல திரைப்பட இயக்குநர்களைப் பற்றிப் பேசலாம். அவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரு படம் எடுத்தால்கூட டாடு எடுக்கின்ற திரைப்படத்திற்கு நிகராகாது. அவருடைய உணர்திறனும், நுண்ணறிவும் வியக்கத்தக்கன.
நன்றி : டெலிகிராப்
அவருடைய பேட்டியின் சில பகுதிகளே இதில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. முழுமையான மூலப்பேட்டியை பின்வரும் இணைப்பில் காணலாம்.
Instagram is a disease: Photographer Raghu Rai, Abhijit Mitra, Telegraph, 17 February 2019
புகைப்படக்கலைஞர் ரகு ராயைப் பற்றிய முந்தைய பதிவு:
இந்திரா காந்தி : ஒரு வாழும் மரபு
புகைப்படக்கலைஞர் ரகு ராயைப் பற்றிய முந்தைய பதிவு:
இந்திரா காந்தி : ஒரு வாழும் மரபு