07 September 2019

மாற்றத்திற்கான மங்கை கிரேட்டா தன்பர்க் : தினமணி

மாற்றத்திற்கான மங்கை கிரேட்டா தன்பர்க் என்ற என் கட்டுரை 4 செப்டம்பர் 2019 தினமணி இதழில் வெளியாகியுள்ளது. அதன் மேம்பட்ட வடிவத்தினைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவ்விதழுக்கு நன்றியுடன்.

நோபல் அமைதிப் பரிசுக்காக ஸ்வீடன் பாராளுமன்ற இரு உறுப்பினர்களும், நார்வே பாராளுமன்ற மூன்று உறுப்பினர்களும் அவரது பெயரை பரிந்துரைக்கின்றனர். அப்பரிசினை அவர் பெறுவாரேயானால் உலகில் மிக இளம் வயதில் அதைப் பெற்ற பெருமையை அடைவார் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பள்ளி மாணவியான கிரேட்டா தன்பர்க். தன் 15ஆம் வயதில், புவி வெப்பமயமாதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி ஸ்வீடன் பாராளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி உலகை தன் பக்கம் ஈர்த்தது முதல் பருவ நிலை ஆர்வலாகக் கருதப்படுகிறார்.

3 ஜனவரி 2003இல் பிறந்த அவர் 2018இன் உலகின் மிகச்சிறந்த 25 இளைஞர்களில் ஒருவர் (டைம், டிசம்பர் 2018), 2019இன் மிக முக்கியப் பெண்மணி (உலக மகளிர் தினம், ஸ்வீடன், 2019), 2019இன்  மிகப் பிரபலமான 100 பேரில் ஒருவர் (டைம், ஏப்ரல் 2019), அடுத்த தலைமுறைத்தலைவர்களில் ஒருவர் (16ஆவது வயதில் முகப்பட்டையில் புகைப்படம், டைம் இதழ், மே 2019) என்ற சிறப்புகளைப் பெற்றவர்.  பிரிட்டனிலிருந்து வெளிவரும் வோக் இதழின் செப்டம்பர் இதழ் முகப்பட்டையில் மாற்றத்திற்கான சக்திகள் என்ற தலைப்பில் இடம்பெறவுள்ள 15 நபர்களில் இவரும் ஒருவராவார்.
அடுத்த தலைமுறைத்தலைவர்களில் ஒருவர் (16ஆவது வயதில் முகப்பட்டையில் புகைப்படம், டைம் இதழ், மே 2019)

வோக் செப்டம்பர் இதழ் முகப்பட்டையில் மாற்றத்திற்கான சக்திகள் என்ற தலைப்பில் இடம்பெறவுள்ள 15 நபர்களில் ஒருவராக கிரேட்டா தன்பர்க்


  

அவர் இளைஞர்களுக்கான ஃப்ரைஷுசெட் மாதிரி விருது (ஸ்டாக்ஹோம், நவம்பர் 2018), ஜெர்மனின் கோல்டன் காமரா சிறப்பு பருவநிலை பாதுகாப்பு விருது (ஜெர்மனி, 31 மார்ச் 2019), 15 முதல் 25 வயது இளைஞருக்கான விடுதலை விருது (நார்மாண்டி, பிரான்ஸ், 1 ஏப்ரல் 2019), பேச்சு சுதந்திரத்திற்கான ஃப்ரிட் ஆர்ட் விருது (பிறிதொரு அமைப்புடன் இணைந்து, நார்வே, 12 ஏப்ரல் 2019), லாடாடோ சி விருது (மிலேரேப்பா பவுன்டேஷன், சிலி,  ஏப்ரல் 2019), மனசாட்சிக்கான தூதுவர் விருது (பன்னாட்டு மன்னிப்பு அவை, லண்டன், 7 ஜுன் 2019), மதிப்புறு முனைவர் பட்டம் (மோன்ஸ் பல்கலைக்கழகம், பெல்ஜியம், ஜுன் 2019), கெட்டிஸ் சுற்றுச்சூழல் விருது (ராயல் ஸ்காட்டிஷ் ஜியாபிரபிகல் சொசைட்டி, ஸ்காட்லாந்து, 12 ஜுலை 2019) உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

பிப்ரவரி 2018இல் அமெரிக்காவில் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டின்போது அவருக்கு பருவநிலையினைப் பாதுகாப்பதற்காகப் போராட்டம் மேற்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் உதயமானது. அதன் விளைவாக அப்போதே சில மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல மறுத்தனர். அதுமுதல் அவருடைய கவனம் பருவநிலையைக் காப்பாற்றுவதில் ஈடுபட்டது.

மே 2018இல் ஸ்வீடனின் ஸ்வென்ஸ்கா டாக்லாடெட் இதழ் நடத்திய கட்டுரைப் போட்டியில் வென்றவர்களில் இவரும் ஒருவர். கட்டுரை வெளியானபின் பருவநிலை மாற்றத்துக்காகப் பாடுபடும் குழுவினர் அவரோடு தொடர்புகொள்ளவே, அவர்களுடைய கூட்டங்களில் கலந்துகொண்டார். அவர்கள், பள்ளி மாணவர்கள் பருவநிலை மாற்றத்திற்காக போராட்டம் செய்யலாம் என்றபோது அவர் பலரை அம்முயற்சியில் ஈடுபடுத்த முயன்றார். எவரும் முன்வராத நிலையில் தானே களத்தில் இறங்கினார்.

20 ஆகஸ்டு 2018இல், ஒன்பதாம் வகுப்பு படித்தபோது அவருடைய தனிப்பட்ட ஈடுபாடு தொடங்கியது.  ஸ்வீடனில் தேர்தல் நடைபெறவிருந்த 9 செப்டம்பர் 2018 வரை பள்ளி செல்வதில்லை என முடிவெடுத்தார். அப்போது ஸ்வீடன் 262 ஆண்டுகளில் மிகக்கொடிய வெப்பத்தை எதிர்கொண்டது. அக்காலகட்டத்தில் பாராளுமன்றக்கட்டடத்தின் முன்பாக தனியாக, போராட்டத்தை ஆரம்பித்து, பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் குறிக்கப்பட்டுள்ள அளவு கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். மூன்று வாரங்கள் தினமும் பள்ளி நேரத்தில் பருவநிலையைக்காக்க பள்ளிப்போராட்டம் என்ற பதாகையுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

8 செப்டம்பர் 2018இல் ஏழு கண்டங்களில் 95 நாடுகளில் நடைபெற்றபோது புருஸ்ஸேல்சில், ஐரோப்பிய பாராளுமன்றத்தின்முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டார்.

31 அக்டோபர் 2018இல் லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில், காந்தி சிலையின் முன்பாக எக்ஸ்டின்சன் ரெபெல்லியன் அமைப்பு நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு “நம் தலைவர்கள் குழந்தைகளைப் போல நடந்துகொள்கின்றனர். நாம் விழிப்புணர்வினை உண்டாக்கி அனைத்தையும் மாற்றவேண்டும்” என்றார்.

24 நவம்பர் 2018இல் ஸ்டாக்ஹோமில் டெட் மாநாட்டில் பேசும்போது அவர், பருவநிலை மாற்றத்தைப் பற்றி முதன்முதலில் தன் எட்டு வயதில் கேள்விப்பட்டதாகவும், அதற்கு முக்கியத்துவம் தராப்படாததற்குக் காரணம் புரியவில்லை என்றும் கூறினார். 

டிசம்பர் 2018இல் போலந்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்ற மாநாட்டில், பள்ளியில் போராட்டம் ஆரம்பமானதற்கான காரணங்களைக் குறிப்பிட்டுப் பேசினார். அதே மாதத்தில் 270 நகரங்களைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இவ்வகையான போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்தனர்.

23 ஜனவரி 2019இல் டாவோஸில் உலகப்பொருளாதார மன்றத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு பேராளர்கள் 1500க்கும் மேற்பட்ட தனியார் சொந்த விமானங்களில் வந்தபோது அவர் 32 மணி நேர பயணித்து ரயிலில் வந்தார். கூட்டத்தில், "சில நபர்களும், சில நிறுவனங்களும், குறிப்பாக, கொள்கை முடிவு எடுப்போர் சிலரும் கற்பனைக் கெட்டாத அளவிலான பணத்தைச் சம்பாதிக்க விலைமதிக்க முடியாத பலவற்றை இழக்கிறார்கள். உங்களில் பலர் அவ்வகையினர் என நினைக்கிறேன்" என்றார்.

பிப்ரவரி 2019இல் 224 கல்வியாளர்கள் இணைந்து அவருடைய முயற்சியாலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் செயலாலும் கவரப்பட்டதாகவும், அவர்களுக்கு மரியாதை தரப்படவேண்டும் என்றும் கூறினர். 21 பிப்ரவரி 2019இல் ஐரோப்பிய பொருளாதார மற்றும் சமூகக்குழுவின் மாநாட்டிலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரிடமும் அவர், “பாரிஸ் பருவநிலை ஒப்பந்தப்படி உலக வெப்பமயமாதலை 2 டிகிரி செல்ஷியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்த  ஐரோப்பிய ஒன்றியம் கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வினை 2030க்குள் 80 விழுக்காட்டிற்கு அதாவது பாரிஸ் ஒப்பந்தத்தில் குறிக்கப்பட்ட இலக்கான 40 விழுக்காட்டின் இரு பங்காகக் குறைக்கவேண்டும். அதில் நாம் தவறினால் நம் அரசியல் தலைவர்களின் மரபார்ந்த கொள்கைகள் மனிதகுல வரலாற்றின் பெரும் தோல்வியாகக் கருதப்படும்” என்றார்.

மார்ச் 2019இல் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஸ்வீடன் பாராளுமன்றத்தின் முன் போராட்டத்தைத் தொடர்ந்தார். அவ்வப்போது சில மாணவர்கள் அவருடன் சேர்ந்துகொண்டனர்.

15 மார்ச் 2019இல்  112 நாடுகளைச் சேர்ந்த 1.4 மில்லியன் பள்ளி மாணவ மாணவியர்கள் பருவ நிலை மாற்றத்தைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி தம் வகுப்புகளைப் புறக்கணித்து அடையாளப் போராட்டம் நடத்தினர்.

மார்ச் 2019இல் பெர்லினில் பிரான்டென்போர்க் வாயிலின்முன் கூடியிருந்த 25,000 பேருக்குமுன் "எதிர்காலம் அழியப்படுவதை எதிர்ப்பதற்காக குழந்தைகள் தம் படிப்பையே தியாகம் செய்யவேண்டிய ஒரு வித்தியாசமான உலகில் வாழ்கிறோம்” என்று பேசினார். 

ஏப்ரல் 2019இல் ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில், “பிரிக்ஸிட்டுக்காக மூன்று அவசரக் கூட்டங்களைக் கூட்டுகின்றார்கள், ஆனால் பருவநிலை மாற்றத்தையும், சுற்றுச்சூழலையும் காப்பாற்ற எவ்வித அவசரக்கூட்டமும் கூட்டப்படவில்லை” என்று பேசினார்.

24 மே 2019இல் 125 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்ட போராட்டம் நடைபெற்றது.  மே 2019இல், பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தை துரிதப்படுத்த ஆஸ்திரியாவில் நடத்தப்பட்ட, 30 நாடுகளைச் சேர்ந்த 17,000 பேர் கலந்துகொண்ட மாநாட்டில் கால நிலை மாற்றம் தொடர்பான இடை அரசின் இடைக்கால அறிக்கையை மேற்கோள் காட்டிப் பேசும்போது, “தோராயமாக 2030க்குள் எதிர்பார்த்த மாற்றங்களைச் செய்யாவிடில், மனித சக்தியால் கட்டுப்படுத்த முடியாத பேரழிவினைச் சந்திக்கும் நிலைக்கு ஆளாவோம்" என்றார்.
ஆகஸ்டு 2019இல் ஜெர்மனியில் உள்ள ஹம்பாச் காடுகளுக்குப் பயணித்த அவர், நிலக்கரிச்சுரங்கத்திற்காக அங்கு மரங்கள் வெட்டப்பட்டு அக்காடு அழிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்று குரலெழுப்பினார்.


“2018வாக்கிலேயே நீங்கள் ஏன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தன் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் என்னை நோக்கிக் கேட்பர்” என்ற தன்பர்க், உரையின் நிறைவாக  “விதிமுறைகளுடன் விளையாடிக்கொண்டு நாம் உலகை மாற்றமுடியாது. ஏனென்றால் விதிகள் மாற்றப்படவேண்டும்” என்றார்.
“என் எதிர்ப்பைத் தெரிவிக்காவிட்டால் நான் இறந்துகொண்டிருப்பதாக உணர்கிறேன்” என்ற அவர் ஸ்வீடன் பாராளுமன்றத்தின் வெளியே துண்டறிக்கைகளை விநியோகித்தார். அதில் “நான் இதை ஏன் செய்கின்றேன் என்றால் பெரியவர்களாகிய நீங்கள் எங்களின் எதிர்காலத்தைப் பாழடித்துக்கொண்டிருக்கின்றீர்கள்”.
அவள் வகுப்பிற்குப் போகாமல் இருப்பதை அவளுடைய தந்தையார் விரும்பவில்லை. இருந்தாலும் அவளுடைய நிலைப்பாட்டை அவர் மதிக்கின்றார். அவள் வீட்டில் இருந்துகொண்டு மகிழ்ச்சியின்றி இருக்கலாம் அல்லது தன் எதிர்ப்பைத் தெரிவித்து மகிழ்ச்சியோடு இருக்கலாம். வீட்டிலுள்ளோர்  இறைச்சி உண்பதை விட்டுவிடவேண்டும் என்பதில் கவளமாக இருந்தாள். எங்களுடைய எதிர்காலத்தை அவர்கள் திருடிக்கொண்டிருக்கின்றார்கள் என்று கூறினாள். உலகளவில் அவளைப் பேசுவதற்கு அழைத்தபோதிலும் வெளிநாட்டிற்கு அவள் செல்லவில்லை.
அவள் வகுப்பினைத் தவிர்ப்பதை பற்றி அவளுடைய ஆசிரியர்கள் பலவாறான கருத்துகளைக் கூறுகின்றனர். "பொதுமக்கள் என்ற நிலையில் பார்க்கும்போது நான் செய்வது அவர்களுக்கு நல்லதாகத் தெரிகிறது. ஆசிரியர்கள் என்ற நிலையில் அவர்கள் என்னிடம் இதுபோன்றவற்றில் ஈடுபடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்". அவளுக்கு ஆதரவாகப் பேசும் ஆசிரியர் கூறுகிறார்: "கிரேட்டா தொந்தரவு தருபவளாகத் தெரிகிறாள். பெரியவர்கள் கூறுவதை அவள் கேட்பதில்லை. ஆனால் நாம் ஒரு பேரழிவினை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றோம் என்பதை உணரவேண்டும். அந்த வகையில்  சரியில்லாதது என நாம் நினைப்பதை சரி என்றே கொள்வோம். "


14 ஆகஸ்டு 2019இல் அமெரிக்காவிற்குப் படகில் புறப்பட்டார் கிரேட்டா தன்பர்க். 23 செப்டம்பர் 2019இல் நியூயார்க்கிலும், 2-13 டிசம்பர் 2019இல் சான்டியாகோவிலும் நடைபெறவுள்ள பருவநிலை மாநாடுகளில் கலந்துகொள்ள அமெரிக்கா பயணத்தை மேற்கொண்டார்.   

பயணித்துகொண்டிருக்கும்போதே தன் கடல் அனுபவங்களை டிவிட்டரில் பதிந்துகொண்டே வந்தார். தன் போராட்டம் தொடங்கி ஓராண்டு ஆனதையும் அதில் பதிந்திருந்தார்.  
விமானப்பயணத்தைத் தவிர்க்க படகில் பயணித்த அவர், 28 ஆகஸ்டு 2019 அன்று நியூயார்க் வந்தடைந்தார்.

30ஆகஸ்டு 2019இல் ஐ.நா.சபையின் முன்பாக போராட்டம்

மே 2019இல் பெங்குவின், கிரேட்டா தன்பர்க்கின் உரைகளைத் தொகுத்து No One Is Too Small to Make a Difference  நூலாக வெளியிட்டுள்ளது. கிரேட்டா தன்பர்க்கின் குடும்பக் கதை Scenes from the Heart என்ற தலைப்பில்  ஆங்கிலத்தில் 2019 இறுதிக்குள் வெளிவரவுள்ளது. 2018இல் ஸ்வீடிய மொழியில் தன்பர்க்கின் பெற்றோர், அவருடைய சகோதரி மற்றும் தன்பர்க்கால் எழுதப்பட்ட அந்நூலில் தன்பர்க்கின் தாயாரின் படம் இடம்பெற்றிருந்தது. ஜெர்மன் மொழியில் வெளியான நூலில் தன்பர்க்கின் புகைப்படம் அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.  மே 2019இல் ஓவியக்கலைஞர்  ஜோடி தாமஸ் பிரிஸ்டல் நகரில் தன்பர்க்கின் 50 அடி உயரமுள்ள ஓவியத்தினை வரைந்திருந்தார். அதில் அவருடைய பாதி முகம் கடல் அலையிலிருந்து எழுவதுபோல சித்தரிக்கப்பட்டிருந்தது.  மே 2019இல் வைஸ் அமைப்பு Make The World Greta Again  என்ற, ஐரோப்பாவின் இளம் போராட்டத் தலைவர்களின் பேட்டிகளைக்கொண்ட 30 நிமிட ஆவணப்படத்தை வெளியிட்டது. 


தன்பர்க்கும் அவளுடைய சகோதரியும் அஸ்பெர்கர் சின்ட்ரோமால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அவர்களுடைய தாயார் கூறியுள்ளார். இக்குறைபாடு உள்ளோர் மற்றவர்களை புரிந்து கொள்வதிலும் மற்றவர்களுடன் பேசுவதிலும் எதிர்வினையாற்றுவதிலும் துன்பமுறுவர் என்றும், தங்கள் செயல்களில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் இருப்பர் என்றும், இது ஓர் வளர்ச்சிக் குறைபாடே அன்றி நோயல்ல என்றும், இக்குறைபாடு உள்ளவர்களால் பின்னர் நண்பர்களை ஏற்படுத்திக்கொள்ளவும், பயனுள்ள பணிகளை ஆற்றவும் வெற்றிகரமான வாழ்க்கை மேற்கொள்ளவும் இயலும் என்றும் கூறுவர்.

நிறமற்றதையும், காற்றில் வெளிப்படுத்தப்படுகின்ற கண்ணுக்குப் புலனாகாத கார்பன் டை ஆக்ஸைடை கண்களால் காணும் அரிய சக்தி அவருக்குள்ளதாகவும், புகைபோக்கியிலிருந்து வெளியே வந்து அது சுற்றுச்சூழலை குப்பைமயமாக்குவதையும் அவளால் பார்க்க முடிவதாகவும், அதனால் அவர் பருவநிலைமாற்றத்திற்கு பங்களிக்கிறார் என்றும் அவருடைய தாயார் கூறுகிறார்.

பல பள்ளி மாணவர்கள் பருவநிலைப் போராளிகளாக ஆவதற்கு தூண்டுகோலாக அவர் ஏற்படுத்திய தாக்கத்தை, கிரேட்டா தன்பர்க் விளைவு என்று கூறுகின்றனர். பலவித சோதனைகளை எதிர்கொண்டு தன் பயணத்தை தொடர்கிறார்.

12 comments:

  1. பிரமிக்க வைக்கிறார்.  இவர்கள் எல்லாம் தேவ தூதர்கள் போல..

    ReplyDelete
  2. இந்த சிறு வயதிலேயே எத்தனை ஈடுபாடு. அவரைப் பற்றிய தகவல்கள் பிரமிக்க வைக்கின்றன.

    ReplyDelete
  3. மிக அருமையான மற்றும் புதுமையான தொடர். உடன் பயணிப்பது போன்ற உணர்வு.
    வெளி உலகிற்கு காட்டிய உமக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  4. TIME பத்திரிகை Nest Gerneration Leaders - என்று அட்டைப் படத்திலேயே போட்டிருக்கிறது.

    இருந்தும் தன்னை ஒரு எதிர்காலத் தலைவியாக கற்பனையிலும் எண்ணாத, தன் பணியைக் காலத்தின் கட்டாயமாக ஏற்றுக் கொண்ட அந்த இளம் பிஞ்சின் அறிவார்ந்த சிந்தனை தான் அவரின் வெற்றியின் ரகசியமாகத் தெரிகிறது.

    எந்தக் கட்சியின் பதாகையையும் தூக்காமல், எந்த அரசையும் இதற்காகத் தாக்கி அரசியல் லாபம் காண முயற்சிக்காமல் அவர் தனது இலட்சிய பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டது உலக வரலாற்றில் ஒப்பற்ற செயல்.

    'நீங்கள் ஏன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தன் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் என்னை நோக்கிக் கேட்பர்” என்ற குரலில் எவ்வளவு சத்தியம் பொதிந்துள்ளது என்பது திகைக்க வைக்கிறது.

    அஸ்பெர்கர் சிண்ட்ரோமால் அவர் பாதிக்கப்பட்டவர் என்ற மருத்துவ குறிப்பு கூட அவர் கூட வருகிறது..
    அப்படிப்பார்த்தால் நமக்கென்ன வந்தது என்ற வெகுஜனப் போக்கோடு தானும் போகாமல் வெகுஜன நலனுக்கு தன்னை ஆத்மார்த்தமாக அர்ப்பணித்துக் கொண்ட போராளிகள் அத்தனை பேருமே அஸ்பெர்கர் சின்றோமால் பாதிக்கப்பட்டவர்கள் தாம் போலிருக்கு!..

    மங்கை கிரேட்டா தன்பர்க் நம் எல்லோருக்கும் நெருக்கமானவர் என்ற உணர்வைத் தவிர்க்க முடியவில்லை..

    மிகச் சிறந்த கட்டுரையாக்கத்திற்கு வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  5. மிக அருமையான கட்டுரை. பாராட்டுகள் அவருக்கு.

    ReplyDelete
  6. நல்ல பதிவு.
    இளையோருக்கு ஒரு உந்துசக்தி .
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. சிறிய அகவையில் இத்தனை உயர்ந்த பொதுநலத் தொண்டுள்ளம் வாழ்த்துவோம்.

    ReplyDelete
  8. //தோராயமாக 2030க்குள் எதிர்பார்த்த மாற்றங்களைச் செய்யாவிடில், மனித சக்தியால் கட்டுப்படுத்த முடியாத பேரழிவினைச் சந்திக்கும் நிலைக்கு ஆளாவோம்" என்றார்.//


    கிரேட்டா தன்பர்க் விரும்பும் மாற்றங்கள் ஏற்பட்டு வருங்கால சந்ததியினர் நலமோடு வாழ வழி பிறக்க வேண்டும்.

    வாழ்த்துக்கள்.
    அருமையான கட்டுரை.

    ReplyDelete
  9. நல்ல தகவல்களைப் பகிர்வதற்கு நன்றிகள்

    ReplyDelete
  10. மிகச் சிறந்த கட்டுரை! அசத்தலான தகவல்! இத்தனை சிறிய வயதில் கிரேட்டா தன்பர்க் மனதில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு மற்றவர்கள் மனதில் பற்றிக்கொள்ளச்செய்யும் அவரின் துடிப்பு பிரமிக்க வைக்கிறது!

    ReplyDelete
  11. மிக சிறிய வயதிலேயே இவ்வ்ளவு பெரிய சமூக பொறுப்புணர்வா
    பிரம்மிக்க வைக்கிறார். தகவலுக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  12. உலகின் தலை சிறந்த குழந்தை, அவரைப் பற்றிய அற்புதமான கட்டுரை, அருமை ஜம்புலிங்கம் ....

    ReplyDelete