எங்கள்
50 ஆண்டு கால குடும்ப நண்பரும், அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியிலும், கும்பகோணம்
அரசு ஆடவர் கல்லூரியில் புகுமுக வகுப்பிலும் ஒன்றாகப் படித்தவரும் ஆன திரு எம்.செல்வம்
(தொழில்நுட்பப் பணியாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், மயிலாடுதுறை கிளை, பணி
நிறைவு) சிறுநீரகத்தொற்று காரணமாக 13 செப்டம்பர் 2020 அன்று இயற்கையெய்தினார் என்பதைக்
கனத்த மனத்துடன் பகிர்கிறேன்.
என்னை
‘டேய், ஜம்பு!’ என்று உரிமையோடு அழைக்கும் ஒரு சில கும்பகோணம் நண்பர்களில் அவரும் ஒருவர்.
அவருடைய பிரிவு என்னையும், எங்கள் குடும்பத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவருடைய
ஆத்தா, அக்கா, தங்கைகள் என்மீது பாசமாக இருப்பார்கள். அதைப்போலவே அவன் எங்கள் வீட்டில்
ஒரு குடும்ப உறுப்பினராகவே இருந்து வந்தார். திருமணத்திற்குப் பிறகு அவருடைய மனைவி,
மகன்கள், மருமகள்கள் என்ற வகையிலும் நட்பு தொடர்ந்தது. அவனுடைய மகன்கள் எங்களை மாமா
அத்தை என்றும், என்னுடைய மகன்கள் அவர்களை மாமா, அத்தை என்றும் அழைப்பர். அவனுடைய மருமகள்கள்
என்னை அப்பா என்று அழைக்கின்றனர்.
கும்பகோணத்தைவிட்டு
தஞ்சாவூர் வந்துவிட்டபோதும், ஒவ்வொரு முறை கும்பகோணம் செல்லும்போதும் என்னுடைய நண்பர்கள்
அனைவருடைய வீட்டிற்கும் சென்றுவருவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அந்த வகையில், கொரோனாவிற்கு
முன்பாக, 15 மார்ச் 2020அன்று எங்கள் பள்ளியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா தொடர்பான
கூட்டத்திற்குச் சென்றுவிட்டு அவரைப் பார்த்து சந்தித்து நெடுநேரம் பேசிவிட்டு வந்தேன்.
அவருடைய
இளைய மகன், அவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறியதையடுத்து, குடும்பத்துடன் பார்க்கச் சென்றோம். எங்களைப்பார்த்து
உணர்ந்துகொள்ளும் நிலையில் அவர் இல்லை. எப்படியும் இயல்புநிலைக்குத் திரும்பிவிடுவான்
என்று பேசிக்கொண்டு வீட்டிற்குத் திரும்பினோம். சிறிது நேரத்தில் அவர் இறந்த செய்தி
எங்களுக்கு வந்தது. அவனை இழந்து வாடும் அவன் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அந்த நாள் நினைவுகள்
எஸ்.எஸ்.எல்.சி.
(11ஆம் வகுப்பு) நிறைவு செய்தபின் விடுமுறையில் என் தாத்தா கும்பகோணம் பெரிய தெருவில்
இருளப்பன் மிளகாய் மண்டியில் வேலைக்கு சேர்த்துவிட்டார். எங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக
என் வீட்டார் என்னை கல்லூரியில் சேர்க்கவில்லை. அங்கு நான் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தேன். அவ்வப்போது செல்வம் வீட்டிற்குச் செல்வது வழக்கம்.
பள்ளிக்காலம் முடிந்து கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரிக்கு அவர் விண்ணப்பித்திருந்தார்.
விண்ணப்பம் வந்தபோது அவரும் நானும் இணைந்து அவருடைய விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்தோம்.
விண்ணப்பத்தில் அரசு ஆடவர் கல்லூரி என்றிருந்தது. அப்போது அவர் இனி நான் ஆடவர் என்று
கூறி சிரித்துக்கொண்டே பூர்த்தி செய்தது இன்னும் நினைவிருக்கிறது. (கல்லூரி தொடங்கி
நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், படிப்பின்மீதான அதீத ஆர்வம் காரணாக, வீட்டிற்குத்
தெரியாமல் நான் விண்ணப்பித்து அதே கல்லூரியில்
சேர்ந்தது தனிக்கதை).
கல்லூரியில்
புகுமுக (பி.யு.சி.) வகுப்பில் ஒவ்வொருவரும்
ஒவ்வொரு பாடத்தில் சேர்ந்தோம். நான், செல்வம், பதினாறுகட்டு ராஜசேகரன், பேட்டை பொன்னையா,
கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி மதியழகன், சிங்காரம் செட்டித்தெரு மோகன் என்று ஒரு பட்டியலே நீளும். பள்ளிக்குப் பின் பள்ளி
நண்பர்களான நாங்கள் கல்லூரி நண்பர்களாகி படித்தது பி.யு.சி. மட்டுமே.
அப்போது
பாபி (Bobby) என்ற இந்தித் திரைப்படம் வந்த காலகட்டம். செல்வம் ஆர்வத்தோடு அப்போது
பிரபல்யமான பாபி காலரை வைத்து சட்டை அணிந்தது இன்னும் நினைவில் உள்ளது. அவரைப் பார்த்து
இன்னும் சில நண்பர்கள் பாபி காலருடன் சட்டை போட ஆரம்பித்தனர். எங்கள் அனைவருக்கும்
பொது ஒற்றுமை அதிகமாக முடி வளர்த்திருந்தோம்.
அப்போது
காவிரியாற்றுக்கு செல்வம், பாஸ்கரன், நாகராஜன் உள்ளிட்ட நண்பர்கள் நீந்தச் செல்வார்கள்.
எனக்கும் ஆசை வந்து நீந்தச் சென்றேன். பாஸ்கரனும் பிற நண்பர்களும் எனக்கு நீந்த கற்றுத்
தர ஆரம்பித்தனர். நான் ஆற்றுக்குச் செல்வது வீட்டிற்குத் தெரிந்துவிட எங்கள் தாத்தா
ஆற்றில் சென்று நான் மூழ்விவிடுவேனோ என்ற பயத்தில் ஆற்றுப்பக்கமே போகக்கூடாது என்று
தடை விதித்துவிட்டார்.
கல்லூரிக்காலத்தில்,
சுமார் 10 பேராக, நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பார்த்த ஒரே படம் பாலசந்தரின் அபூர்வ
ராகங்கள். அப்போது நூர் மஹால் (பின்னர் செல்வம் தியேட்டர் என்றானது) தியேட்டரில் ஓடிய
திரைப்படத்தை அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பார்த்தோம். அதற்கு முன்னரோ பின்னரோ இவ்வளவு
பேராகச் சேர்ந்து நாங்கள் படம் பார்த்ததில்லை. அந்த வகையில் இந்த திரைப்படத்தை நாங்கள்
அடிக்கடி நினைவுகூர்வதுண்டு.
பி.யு.சி.யில் நான் மட்டுமே தேர்ச்சி பெற இளங்கலை பொருளாதாரத்தில் சேர்ந்து நிறைவு செய்தேன். அக்காலகட்டத்தில் நண்பர்கள் அனைவரும் திசைக்கு ஒருவராகப் பிரிந்தோம். இருந்தாலும் எங்களின் நட்பானது தொடர்ந்து கொண்டேயிருந்தது, தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. அவருடைய இளைய மகன் பாலாவிடம் தொலைபேசியில் பேசியபோது, “மாமா, எப்போது கும்பகோணம் வந்தாலும் அப்பாவைக் காண வருவீர்கள். இனியும் எப்போது கும்பகோணம் வந்தாலும் வழக்கம்போல நீங்கள் எங்கள் வீட்டிற்கு வந்துகொண்டேயிருங்கள்” என்று என்னிடம் பேசியது எங்கள் நண்பன் இன்னும் ஆத்மார்த்தமாக எங்களோடு இருக்கிறான் என்ற எண்ணத்தைத் தந்தது.