28 April 2023

தட்டச்சு ஒரு கலை

தட்டச்சு என்பது ஒரு கலை. தட்டச்சு கற்பது வளரும் தலைமுறையினருக்கு மிகவும் பயனளிக்கும். அதிக வேகம், அதே சமயம் நிதானம் போன்றவற்றை தட்டச்சுப்பயிற்சியில் பெறலாம். புதிய சொற்களைத் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். நினைவாற்றல் மேம்படும். மொழியறிவு வளரும். தட்டச்சுத் தேர்வினை எழுதிவிட்டு, கணினியில் தட்டச்சு செய்தால் இன்னும் பல உத்திகளைக் கைக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களும், பணிக்கு விண்ணப்பிப்போரும் தம் தகுதியை மேம்படுத்திக்கொள்ள தட்டச்சுப் பயிற்சியை மேற்கொள்ளலாம். இந்தக் கோடை விடுமுறையை நன்கு பயன்படுத்தும் விதமாக மாணவர்கள் தட்டச்சுப்பயிற்சியில் இப்போதே ஈடுபட ஆரம்பிக்கலாம்.

50 ஆண்டு கால தட்டச்சு இப்போது எனக்குத் தந்த ஓர் அனுபவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன். நான் தட்டச்சு பயின்ற கும்பகோணம் ஈஸ்வரன் தட்டெழுத்துப் பயிற்சி நிலையத்தையும், கும்பகோணம் பாரத் தட்டெழுத்துப் பயிற்சி நிலையத்தையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

சோழ நாட்டில் பௌத்தம் நூலின் மேலட்டை


2018இல் பாரத் தட்டெழுத்துப்பயிற்சி நிலையத்தில் நிறுவனர் திரு பாஸ்கரன் அவர்களுடன்

அண்மையில் என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் நூல் (புது எழுத்து, 2/203, அண்ணா நகர், காவேரிப்பட்டிணம் 635 112, செப்டம்பர் 2022, அலைபேசி: +91 9842647101, +91 6374230985, மின்னஞ்சல் : editorpudhuezuthu@gmail.com) வெளியானது. அந்நூலை ஆங்கிலத்தில் எழுதும் முயற்சியில் எதிர்கொண்ட அனுபவங்களில் ஒன்று தட்டச்சு தொடர்பானது.

ஆங்கில நூலுக்கான முதல் மெய்ப்பினை (ஒரு பகுதி மட்டும்/சுமார் 80 பக்கங்கள்/ஏ4 தாள்) திருத்தும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளேன். இதனை மொழிபெயர்த்துக் கணினித்தட்டச்சு செய்யும்போது நான் கூகுளையோ, ஸ்பெல்செக்கரையோ பயன்படுத்தவேயில்லை. முழுக்க முழுக்க நேரடியாக மொழிபெயர்த்துவருகிறேன். ஐயமேற்படும்போது அகராதிகளைத் துணைகொள்கிறேன். தேவைப்படும் இடங்களில் கூடுதலாகச் செய்தியைச் சேர்க்கிறேன். இவ்வாறாக 80 பக்கங்களின் மெய்ப்புத் திருத்தப்பணியை மேற்கொண்டபோது இரு இடங்களில் மட்டுமே தட்டச்சுப்பிழை (Only two words were found with spelling mistake) இருந்தது. இவ்விரு இடங்களைத் தவிர எங்கும் சொற்பிழை காணப்படவில்லை என்பதை எனக்கு வியப்பினைத் தந்தது. வந்த சொல் பலமுறை வருதல், கூறியது கூறல், சொற்கள் இடம் மாற்றம், சாய்வெழுத்து அமைப்பு, அடிக்கோடுடன் சொல் அமைப்பு, போன்றவற்றில் பல தவறுகளும், விடுபாடுகளும் காணப்பட்டாலும் மிகவும் குறைவான சொற்பிழையே இருந்தது. இதற்குக் காரணம் கடந்த 50 ஆண்டுகளாக நான் ஈடுபட்டுவரும் தட்டச்சுப்பணி அனுபவமே என நினைக்கிறேன்.

1970களின் இடையில் முதன்முதலாக ஆங்கிலத்தட்டச்சு சேர்ந்த காலகட்டத்திலேயே தட்டச்சுத்தேர்வுக்குத் தயாராகும்போது வைக்கப்படுகின்ற வகுப்புத்தேர்வில் பல முறை நான் பிழையே இன்றி தட்டச்சு (Typed matter with NIL mistake) செய்துள்ளேன். நான் தட்டச்சு செய்தவற்றில் எத்தனை பிழைகள் உள்ளன என்பதைக்கூட கூறிவிடுவேன். அப்போதெல்லாம் தட்டச்சு செய்யும்போதே எந்த இடத்தில் தவறு வருகிறது என்பதையும் மனதில் கொண்டு, தட்டச்சு செய்யப்பட்ட தாளில் இவ்வளவு எண்ணிக்கையில் தவறு உள்ளது என்று உறுதியாகக்கூறுவேன். நான் சொல்லுமளவிற்கு தட்டச்சுப்பிழையின் எண்ணிக்கை இருக்கும். அப்பழக்கம் என்னையும் அறியாமல் இன்னும் தொடர்கிறது.

7 comments:

  1. வியப்பு.  சிலருக்கே இந்தக் கலை நூறு சதவிகிதம் சரியாக வருகிறது.  நான் தமிழ், ஆங்கிலம் இரண்டும் முதல் வகுப்பில் தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் பிழைகள் நிறைய இருக்கும்!

    ReplyDelete
  2. தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    நான் தட்டச்சு செய்யும் மொழிகள் எல்லாமே முறையற்ற வகையில் நானே தட்டச்சு செய்து பழகிக் கொண்டேன்.

    எனக்கு குருநாதர் கிடையாது.

    ReplyDelete
  3. எனக்கும் தட்டச்சில் பிழை வராது, வெகு வேகமாகவும் தட்டச்சு செய்வேன். எனக்கு ஹை ஸ்பீட் டெஸ்டில் கலந்துகொள்ளணும் என்ற ஆவல் (அதிலும் முதல் வகுப்பு வாங்கவேண்டும் என்று) ஆனால் வாய்ப்பு வரவில்லை.

    என்னை முதல் முதலில் தட்டச்சு வகுப்புக்கு என் அப்பா போகச் சொன்னபோது (கல்லூரியில் படிக்கும்போது), நான் என்ன கிளார்க் வேலைக்கா போகப்போகிறேன், எனக்கு தட்டச்சு வேண்டாம் என்று சொன்னது நினைவுக்கு வந்தது. பிறகு போய், அதில் நன்றாகக் கற்றுக்கொண்டேன்.

    ReplyDelete
  4. தங்களது அபார் திற்மைக்கு வணங்குகின்றேன்..

    தன் முயற்சியால் உயர்ந்தோர்க்கு தாங்களே சிறந்த உதாரணம்..

    வாழ்க பல்லாண்டு..

    ReplyDelete
  5. உங்கள் திறைமை அபாரம். திறமைக்கு வாழ்த்துகள்! மிகச் சிறந்த விஷயம்.

    நானும் தட்டச்சு வெகு வேகமாப் பிழையின்றி அடித்ததுண்டு. ஆனால் தற்போது ஆங்கிலத்தில் பிழைகள் வருகின்றன. பெரும்பாலும் அடிக்கும் போதே கவனித்து அடித்துவிடுவதுண்டு என்றாலும் கூட..

    கீதா

    ReplyDelete